திங்கள், 31 மே, 2021

மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தா அம்மாவை பற்றி கூற முடியுமா?

 




டாக்டர் சாந்தா அம்மா …😥😥 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை, மாரடைப்பால், தனது 93 வயதில் காலமானார்.

புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்த டாக்டர் சாந்தா அம்மாவிற்கு இந்தியாவின் விஞ்ஞானிகள், புற்றுநோயியல் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல மக்களாகிய நாமும் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம்.

நான் முதன்முதலில் அடையார் புற்றுநோய் நிறுவனத்தை பார்வையிட்ட போது, . அதன் தனித்துவமான தன்மையை என்னால் உடனடியாக உணர முடிந்தது. சாதாரண பின்னணியில் இருந்து வந்த பல நோயாளிகள் அங்கு இருந்தனர்; மருத்துவ ஊழியர்கள், அதிக நேரம் வேலை செய்தாலும், அதிநவீன தொழில்நுட்பத்தில் திறமையானவர்கள் என்றாலும் நோயாளிகளிடம் அனுதாபம் கொண்டவர்களாக இருந்தனர்; பராமரிப்பு வசதிகள் எளிமையாகவும் போதுமானதாகவும் இருந்தது. கிராமப்புற நோயாளிகளுடன் உறவினர்கள் விசாலமான மைதானத்தில் குழுமியிருக்க, ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறார்கள். நீண்ட வரிசைகள் இருந்த்தாலும், அனைத்து நோயாளிகளுக்கும் அதே நாளில் பரிசோதனைப் பணி தொடங்கப்படுகிறது..

வேலை. வருமான அடிப்படையிலான வேறுபாடுகளின்படி கட்டணம் செலுத்தும் முறை இருக்கிறது. என்றாலும். மருத்துவ சிகிச்சையில் நோயாளிகளுக்குள் வேறுபாடு இல்லாதது: எந்த விதத்திளாவது உயிரைக் காப்பாற்றுவதற்கான முன்னுரிமை, கொடுக்கப்படுவது; முக்கிய சிகிச்சைக்கான மேம்பட்ட தொழில்நுட்பம் : ஒட்டுமொத்தமாக ஒரு அரசு மருத்துவமனை போன்ற உணர்வும் கொடுக்கவில்லை.தனியார் மருத்துவமனையில் உள்ளது போன்றும் தோன்றவில்லை.. ஒரு தன்னாரவுள்ள தொண்டுள்ளத்துடன் , அங்குள்ள ஒவ்வொரு ஊழியரும் செயல்படுவது தெரிந்தது.

அந்த உணர்வு தான், என்னையும் ஈர்த்து, அங்கு தனியே அமைந்திருந்த குழந்தைகள் பிரிவுக்கு வார இறுதியில் சென்று, கதை படித்துக் காட்டவும், பாடம் சொல்லிக் கொடுக்கவும் செல்ல வைத்தது. அப்படி சென்ற வகையில் கொடுத்தது தான் தலைமுடி தானம். அது குறித்து என் பதிவு[1]

.1954 இந்தியா எப்படி இருந்தது என்று நமக்கு தெரிந்திருக்கும். .-பெரும் வறுமை, கொடிய தொற்று நோய்கள், அண்டை நாடுகளுடனான பிராந்திய பதட்டங்கள், கல்வியறிவின்மை மற்றும் அப்போது தான் கிடைத்திருந்த ஒரு புதிய சுதந்திரம் ஆகியவற்றை அடக்கியிருந்தது.

அந்த சமயம், டாக்டர் சாந்தா அம்மா, அடையார் புற்றுநோய் நிலையத்தில் மருத்துவராக சேர்ந்த போது அங்கு இருந்தது அவரோடு சேர்த்து இரண்டு மருத்துவர்கள் தான்.12 படுக்கைகள் மட்டுமே..

ஆரம்ப காலத்திலிருந்தே அடையார் புற்றுநோய் நிறுவனம், "கர்ம நோய்"என்றும் இதற்கு "மரணம் மட்டுமே தீர்வு" என்பதை போக்கி, புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்று மக்களிடையே விழிப்புணர்வு கொண்டு வருவதிலும் முனைப்பு காட்டியது. பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் குறித்த விரிவான பதிவுகள் பராமரிக்கப்பட்டன; திரும்ப சிகிச்சைக்கு வராத கிராமப்புற நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்களை அனுப்பி வரவழைத்த சம்பவங்களும் உண்டு !!

..அந்த நிறுவனத்தை தொடங்கியது டாக்டர் முத்துலட்சமி ஆயிற்றே…அவரின் வீச்சு இவரை தொற்றாதோ!!

1964 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த தேசிய புற்றுநோய் மாநாட்டு அமர்வில் டாக்டர் சாந்தா அம்மா (முன் வரிசை, வலது மூலையில்), உலகம் முழுவதிலுமிருந்து இந்த துறையில் அறியப்பட்ட பெயர்களில் கலந்து கொண்டார். மாநாட்டின் இடமாக ஒரு மாணவர்களின் வகுப்பறை அந்தக் காலத்தின் கருத்தியல் உணர்வை எடுத்துக்காட்டுகிறது

டாக்டர் சாந்தா அம்மாவே சொல்வது போல " "தனது நோயாளிகளில் 60% நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது அதிக மானிய விலையில் சிகிச்சை அளிக்கும் புற்றுநோய் நிறுவனத்தின்" தலைவராக, டாக்டர் சாந்தா அம்மா ஆன போது புற்றுநோய் ஒரு மோசமான விலையுயர்ந்த நோயாக இருந்தது,

1961 ஆம் ஆண்டு டாக்டர் சாந்தா அம்மாவும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் நேருவை அழைத்து வந்தபோது, குணப்படுத்தப்பட்ட நோயாளிகள் வரிசையில் நின்று அவரை வரவேற்றனர்.

அவர் வாழ்நாள் சாதனைகள்

  • இந்தியாவில் மலிவு விலையில் புற்றுநோயை சிகிச்சையைத் தொடங்கினார்.
  • இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு மலிவு, சான்றுகள் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையின் முதல் முயற்சிகளில் ஒன்றைத் தொடங்கிய பெருமை டாக்டர் சாந்தா அம்மாவுக்கு உண்டு. இந்த குழுக்களுக்கு நிலையான கவனிப்புடன் சிகிச்சையளிப்பதற்கான அவரது முயற்சிகள் இன்றுவரை தொடர்கின்றன.
  • புற்றுநோயியல் நிபுணரான அவர் பலவற்றில் முதல்வராக இருந்தார் -
    • முதல் குழந்தை புற்றுநோயியல் கிளினிக்கைத் தொடங்கினார்,
    • முதலில் இந்தியாவில் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்தை நிறுவினார்,
    • முதலில் புற்றுநோயியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
    • இந்தியாவில் முதல் பரம்பரை புற்றுநோய் கிளினிக் திறக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். -
    • இந்தியாவின் முதல் பெரிய புற்றுநோய் கணக்கெடுப்புகளில் ஒன்றை நடத்தியது.
    • புற்றுநோயியல் நிபுணராக இருந்ததோடு மட்டுமல்லாமல், கூடுதலாக, டாக்டர் சாந்தா ஒரு ஆராய்ச்சியாளராகவும் இருந்தார். வாய்வழி புற்றுநோய்க்கான சிகிச்சையில் கதிர்வீச்சு மற்றும் ப்ளியோமைசின் (ஒரு கீமோ மருந்து) ஆகியவற்றின் விளைவுகளை ஒப்பிட்டு, இந்தியாவில் முதல் சேர்க்கை கீமோதெரபி சோதனைகளில் ஒன்றை அவர் நடத்தினார்.
    • அவரது பிற்கால வாழ்க்கையில், அவரது ஆராய்ச்சி பெரும்பாலும் இந்தியாவில் புற்றுநோய் தொற்றுநோயியல் மீது …வயிற்று புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள் முதல் குழந்தை பருவ புற்றுநோய்கள் வரையிலான ஆய்வுகள், இந்திய ஆண்களில் வாய்வழி மற்றும் ஓசோஃபேஜியல் புற்றுநோய்களின் அபாயத்துடன் தொடர்புடைய புகையிலை மெல்லும் ஆபத்துகள் குறித்த உறுதியான அறிக்கை வரை கவனம் செலுத்தியது - .
    • இப்போது இன்றியமையாததாகக் கருதப்படும். புற்றுநோய் சிகிச்சையில் மிக முக்கியமான கருவியாக மரபணு விவரக்குறிப்பைப் பயன்படுத்தி புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தார்.

அவர் வகித்த பதவிகள்

  • இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் (1988-1990) தலைவராக பணியாற்றினார்
  • 2005 வரை WHO ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.
  • ஒரு தேசிய மருத்துவ அறிவியல் அகாடமி (இந்தியா) சக உறுப்பினராகவும் இருந்தார்.

அவர் பெற்ற பட்டங்கள்

  • புற்றுநோய் சிகிச்சை வக்காலத்து மற்றும் ஆராய்ச்சியில் அவர் பணியாற்றியதற்காக, பத்மஸ்ரீ, பத்மா உட்பட பல விருதுகளைப் பெற்றார்.
  • 2006 இல் பூஷன்
  • 2016 இல் பத்ம விபூஷன் மற்றும் ரமோன் மாக்சேசே விருது.

சி.வி. ராமன் முதல் சுப்ரமண்யன் சந்திரசேகர் வரை யுள்ள ஒரு வலுவான கல்வி வம்சாவளியை கொண்ட அவர் குடும்பம் தான் டாக்டர் சாந்தா அம்மாவை மருத்துவ புற்றுநோயியல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி என்று பெரிதும் அறியப்படாத துறையில் நுழையத தூண்டி இருக்கும் . என்று நினைக்கிறேன்.

இன்றைய மருத்துவர்களின் கவனிப்பு குறித்து கேட்டபோது, டாக்டர் அம்மா கூறியது "நான் இது குறித்து பேச தயங்குகிறேன், ஏனென்றால் நான் அதைப் பற்றி மகிழ்ச்சியடையவில்லை. இப்போது நோயாளி _-மருத்துவர் உறவு இல்லை. பச்சாத்தாபம் இல்லை. இரக்கம் இல்லை. அவர்கள் நோயாளிகளை ஒரு நுகர்வோர் பொருள் போலவே நடத்துகிறார்கள் ... தங்கள் குடும்பத்திற்கு நேரம் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆம், குடும்ப நேரம் கட்டாயமாகும். ஆனால் நான் சொல்கிறேன், 24 மணி நேரத்தில், நீங்கள் நேரத்தை உருவாக்க முடியும், நீங்கள் எப்போதும் நேரத்தைக் காணலாம். ”

"உங்கள் கைகளின் அதிர்வு அவர்களுக்கு செல்ல வேண்டும். நீங்கள் அவர்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…" என்று மருத்துவர்களை பார்த்து அவர் சொல்லும் போது தான், நம்மிடம் தொலைந்து போன "குடும்ப மருத்துவரின்" முக்கியத்துவம் புரிகிறது.

புற்றுநோய் நோயாளிகள் குறித்து அவர் சொன்ன வார்த்தைகள் சத்தியமானவை "இறக்கும் போது, ​​மக்கள் எதையும் விரும்புவதில்லை. அங்குள்ள ஒருவர் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வளவு நோய்வாய்ப்படாத போது, ​​அதற்காக மெதுவாக அவர்களை தயார் செய்ய வேண்டும். நம்பிக்கை இல்லாதபோதும், அவற்றைத் தக்கவைக்க நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். இது ஒரு கடினமான விஷயம்"

அம்மாவின் கனிவு ததும்பு கவனிப்பே, நோயாளிகளை குணப்படுத்த முக்கிய காரணி. அவர் கோவிலுக்கு போனதில்லை. .நேரம் இல்லை என்பது மட்டுமல்ல.. தன் இருப்பிடத்தையே கோயிலாக்கி கொண்டதால்…

பொதுவாக எல்லாத் தாய்மாரிடமும் ஒரு குறையை பார்க்கலாம்…ஒளி வீசும் மெழுகுவர்த்திக்கு கீழே இருக்கும் இருட்டு போல….தன் குழந்தைக்கு மட்டும் தனிப் பிரியம் காட்டுவாள். .

அவளே தெய்வ நிலைக்கு வைக்கப்படும் போது, ..

அந்த இருள் கூட அறியாத இந்த தெய்வத்தை..இழந்த அந்த கோயில்….!!

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக