பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூன், 2021

தாய்ப் பாசம் எப்படிப்பட்டது?

 அம்மா என்று

அழைக்காத உயிர்
இல்லையே
அம்மாவை வணங்காமல்
உயர்வில்லையே'

மேலை நாடுகளின் பார்வையில் பெண் ஒருவனின் மனைவி மட்டுமே.. ஆனால் கிழக்கில் தான் அவள் எப்போதும் தாயாக போற்றப்படுகிறாள்.

உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட, எந்த நிலையிலும் தாயின் உறவை துறக்க முடியாது.

பற்றுகளிலிருந்து விடுபட்ட துறவிகளுக்குப் பூர்வாசிரமம் இல்லை என்கிறது சனாதன தர்மம்.

சரி தானே?

ஒரு துறவியை, அவர் தந்தை பார்க்கும்போது, தந்தை தான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் அதுவே தாய் என்றால் , அவள் பாதத்தில் துறவி விழுந்து வணங்க வேண்டும். தந்தைக்கு இல்லாத மதிப்பை இந்து தர்மம் தாய்க்குத் தந்திருக்கிறது.

தன் அம்மாவிற்கு இறுதிக்கடன் முடிக்க சங்கரர் முடிவெடுத்தபோது வராத ஏச்சு பேச்சா.. '..

துறவிக்கு ஏது உறவு?' 'சந்நியாசம் வாங்கியவன் பிரேத சம்ஸ்காரம் செய்ய முடியாது' 'தர்மத்தை மீறினால் தள்ளி வைத்துவிடுவோம்' என்று எப்படியெல்லாம் மிரட்டல்… அவர் அசைந்து கொடுக்க வில்லையே….

தாய்க்கு உரிய ஈம சடங்குகளை செய்த அவர், உருகி உருகி, அந்த ஐந்து பாடல்கள 'மாத்ருகா பஞ்சகம்' மூலம் தன் சோகம் முழுவதையும் இறக்கிவைத்தார்..

உறவுகளை ஒரே நொடியில் உதறித் தள்ளிய பட்டினத்தாராலும் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. தாயின் தியாகத்தை விளக்கும் அவரின் பத்துப் பாடல்களுக்கு இணை ஏதும் உண்டா ?.

இயேசு கிறிஸ்து, உடற் கூட்டிலிருந்து உயிர்ப் பறவை பறக்கும் அந்தக் கடைசி நொடியில் கூட ஒவ்வொருவர் நெஞ்சிலும் தாயின் நினைவே வேண்டும் என்பத்ற்காக, சிலுவையில் அறையப்பட்ட தன்னுடைய மரணப் பொழுதில் அவர் தாயை நினைத்தாராம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேசுவரம் காளி கோயிலில் அம்பிகை தரிசனத்தில் ஆழ்ந்து கிடந்தாலும், பெற்ற தாயை இறுதிவரை பராமரிக்க மறக்கவில்லை. அவருடைய ஆன்மிகச் சீடர் விவேகானந்தர் வேதாந்த சிகரத்தில் நின்ராலும், தாயின் விருப்பத்தை நிறைவேற்ற, தனக்கு நம்பிக்கை இல்லாதபோதும் கங்கையில் நீராடி, ஈர உடையுடன் காளி கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தார்..

கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில் கூட இறுதிவரை தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர், தன் மார்பில் தாயின் படத்தை தழுவியபடி நாற்காலியில் சரிந்து கிடந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம் இது. தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றும் பெரும்பாலோனோர் இன்பங்களைப் பட்டியலிட்டு அனுபவிக்கும் அவசரத்தில், பெற்றோரைப் புறக்கணித்துவிடுகின்றனர்.

வெளிநாட்டில் உல்லாசப் பயணம் போனோம் என்று தன் கணவர், மனைவி, குழந்தை என்று தங்கள் குடும்ப புகைப்படஙகள் வெளியிடும்போது,…..

இந்த இளைஞர் தன் அம்மாவுடன் உலக சுற்றுப்பயணம் சென்றதாக தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த புகைப்படங்கள், அவர் தன் தாய் மீது கொண்ட பாசத்தை மட்டும் காட்டவில்லை. இது போன்ற தாய்க்கு மரியாதை காட்டும் இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று நமக்கு உணர்த்துகிறது!!

பெயர் தெரியாத சகோதரனே உனக்கு என் வந்தனம் !!

நன்றி.

ஸ்ரீஜா.

வியாழன், 3 ஜூன், 2021

உங்கள் பெற்றோர் செய்த எந்த விஷயத்தை நீங்கள் ஒரு பெற்றோர் ஆகும்போது ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்?

  1. எங்கள் வீட்டில் ஆண்பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியும் பெண்பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியும் நடத்தப்பட்டனர். அது சாப்பாடு, துணிமணி, படிப்பு என்று எல்லாவிதத்திலும் இருந்தது.
  2. ஆண்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆன பெண்பிள்ளைகளுக்கும் மட்டுமே வீட்டு விஷயங்களில் கருத்து சொல்ல முடியும்.
  3. பெண்பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில்லை.

இதில் என் பெற்றோரை குறை சொல்லமுடியாது. இது காலம்காலமாக வந்த பழக்கம்.


இப்போது எங்கள் தலைமுறையில் மாற்றி விட்டோம்.😁🙏

(நாங்கள் தான் எங்கள் வழியில் முதல் தலைமுறை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள்., என்பதால்…என் தம்பியெல்லாம் வீட்டில் உயர்படிப்பு படிக்க வைத்தபோது, நான் அரசின் உபகார சம்பளத்தில் பட்டமும் பிறகு வேலை செய்துக்கொண்டே முதுநிலை பட்டமும் பெற்றேன்)

இப்பொது இராமேஸ்வரம் போய் என் சகோதரர்கள் செய்யாமல் விட்ட பித்ரு கடனையும் செய்து விட்டு வந்தேன்.

என் பெற்றோரின் ஆசி எப்போதும் எனக்கு உண்டு…

அன்புடன்

ஸ்ரீஜா.

உங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்?

1.. அம்மா பள்ளி ஆரம்ப படிப்பு மட்டுமே முடித்தவர்.அப்பா அந்த கால பி.யு.சி. அப்பா அப்பவே தாத்தாவோட பர்மாவுக்கெல்லாம் போய் பிசினஸ் பண்ணியிருக்காரு. ஆனால் அம்மா தான் அப்பாவிற்கு மதி மந்திரி.

  1. மனைவி சொல்லே மந்திரம்.😂 

இத்தனைக்கும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வயசு வித்யாசம் ரொம்ப இருக்கும்.ரெண்டு பேரும் சொந்தமகிறதுனாலே, அம்மா பிறந்தப்ப, அப்பா அவங்க அப்பாவோட வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போனாராம்😀

2. அம்மா நல்ல வெள்ளை. அப்பா மாநிறம் தான்.ஆனால் அம்மாவிற்கு அப்பா என்றால் கொள்ளை பிரியம்.இரவு அப்பா வீட்டிற்கு எத்தனை மணி லேட்டா வந்தாலும் காத்திருந்து, ரெண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிடுவாங்க.,ஸ்வீட் லவ் பேர்ட்ஸ்

3. அப்பா சின்ன வயசிலேயே தன் அம்மாவை பறிகொடுத்தவர். ஒரே பிள்ளை.தாத்தா மறுமணம் செய்து கொண்டார். சித்தி வந்தாலும், இவரிடம் ஒட்டாமலேயே இருந்தார். அம்மாவின் குடும்பம் ரொம்ப பெரிசு.அம்மாவின் தங்கை, தம்பி என்று கல்யாணத்திற்கு பிறகு, (தாத்தா இறந்துட்டதாலே) இங்கு தான் தங்கி படித்தார்கள்.அப்பா தான் எல்லாரையும் கவனித்து கொண்டார்.நாங்க கூட கிண்டல் பண்ணுவோம்..ஒரு கல்யாணத்தை பண்ணிவிட்டுட்டு ஊரே வந்து உட்கார்ந்துருச்சுன்னு..😃

4. அம்மா யாரிடமும் சட்டென்று வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசுற ரகம். ஆனால் அப்பா நேர் எதிர்.யார் என்ன கஷ்டமா பேசினாலும் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு நகர்ந்துருவார்.வார்த்தைகளே எண்ணி எண்ணி தான் பேசுவார். அவருடைய பொறுமை ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.

5. அப்பாவிற்கு தாத்தா அதான் அவங்க அப்பா மேல மட்டுமில்லே எங்க அம்மாவோட அப்பா, அம்மா மேலேயும் ரொம்ப மரியாதை. எங்க பாட்டி வீட்டுக்கு வரும்போது, இவர் அவங்க எதிரில் நின்னு கூட பேச மாட்டார்..அதே தான் அம்மாவும்…என் அப்பாவோட அப்பா தாத்தா எங்களை பார்க்க வரும்போது..அது நான் ரொம்ப சின்ன பிள்ளையா இருந்த போது, அம்மா அவங்க எதிரில் கூட வரமாட்டாங்க.

6. அப்பா உடம்பு சரியில்லாம தொழிலை கவனிக்க கஷ்டப்பட்டபோது, ரொம்ப படிக்காத அம்மா தான் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க.

7. அப்பா மூலமா படிச்சு நல்ல நிலைக்கு வந்த மாமாக்கள் அப்புறம் எங்களை மறந்து போனபோது, அம்மா தான் புலம்புவாங்களே தவிர, அப்பா வாயிலிருந்து ஒரு வார்த்தை அவங்களை பத்தி தப்பா வந்ததில்லை.

8. அப்பாவுக்கு பிள்ளைங்க மேல ரொம்ப பிரியம்.ஆனா அம்மா மாதிரி காட்டிக்க தெரியாது.அக்காவை கல்யாணம் பண்ணி அனுப்பிச்சு ஒரு வாரம் கழிச்சு குளிக்க வீட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்தவர் குலுங்கி குலுங்கிஅழுதது இன்னும் ஞாபகத்திலே இருக்கு😓

9. அப்பா கூட நான்லாம் பேசினதுன்னு யோசித்து பார்த்தா ரொம்ப கம்மின்னு தோணுது..அம்மாவும் அப்பாவும் எங்க முன்னாடி பேசுறது ரொம்ப அபூரவமா தான் இருக்கும்.ஆனால் அது எப்படின்னே தெரியாது..அம்மா மனசு நல்லா படிச்சவர் அப்பா மட்டும் தான்னு நினைப்பேன்.

10. அப்பாவுக்கு நிறைய கனவுகள் இருந்திருக்கு.அவர் இறந்ததுக்கு பிறகு …அப்ப நாங்க எல்லாம் ஸ்கூல் படிக்கிறோம்…அவர் பத்திரமா வச்சிருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து படிச்சு பார்த்தப்ப தான் அப்பா எழுதின கவிதை…அம்மாவை பத்தி தான்…அவர் எண்ணங்கள்ன்னு அவரை பத்தி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது. அப்பாங்கிற ஒரு மூடிய புத்தகத்தை நாங்க வேணும்னா சரியா படிக்காம போயிருக்கலாம்..ஆனால் அதிலே கோல்ட் மெடல் வாங்கினது அம்மா😀

அப்பா போனதுக்கப்புறம் அம்மா ரொம்பவே அப்பா மாதிரி ஆகிப் போனங்க. ரொம்ப பேச மாட்டாங்க..ஆனா எங்களுக்கு அப்பா இல்லாத குறை தெரியாம பார்த்துக்கிட்டாங்க…ஆனால் அப்பாவுக்கு அம்மா இல்லாம முடியாதே..அதான் அவரை பார்த்துக்க சீக்கிரமே போய்ட்டாங்க.

என்னாலே இப்பல்லாம் அப்பாவையும் சரி அம்மாவையும் வேறு வேறா வித்தியாசமா நினைக்கவே தோணலை. உங்களுக்கு வேணும்னா லைலா மஜ்நூ, ஷாஜஹான் மும்தாஜ் தான் தெரியும். எனக்கு தெரிஞ்ச காதலர்கள்னா என் அப்பா அம்மா தான்..பேருக்கு வேணும்னா அவங்களுக்கு இடையே இந்த வித்தியாசங்களை பட்டியல் போட்டுருக்கலாம். ஆனா, மனசாலே சேர்ந்து வாழ்ந்தவங்களுக்கு இடையிலே ஒரு வித்தியாசமும் கிடையாதுன்னு இப்ப தோணுது..

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

ஞாயிறு, 9 மே, 2021

அன்னையர் தினத்தில், நம் தாய்மார்களை எவ்வாறு கௌரவப்படுத்த முடியும்?

 தாய் என்றாலே கருணை, அன்பு, பாசம் கொண்டவள் என்பதே அவள் பொது இயல்பு இல்லையா..

ஆனால் உண்மையை சொல்லுவோம்.. பெண்களுக்கு கர்வம் உண்டு தானே😃..

என்ன ..ஆண்களை விடக் கொஞ்சமே கொஞ்சம் கூட.😉

.அன்பு உள்ள இடத்தில் கர்வம் இருக்குமா?

கர்வம் கொண்டவள் அன்புள்ளவளாக இருக்க முடியுமா?

கர்வம் கொண்டவன்/கொண்டவள் என்பதற்கு என்ன சொல்வோம்.."அவனுக்கு/அவளுக்கு கொழுப்பு அதிகம்" என்று சொல்வதில்லையா?

"கொழுத்து போன தவளை வலையில் தங்காது' என்று பேச்சு வழக்கும் உண்டே..

ஏன் கொழுப்பு அதிகம் உள்ள மீன்கள் தான் துள்ளி குதித்து விளையாடும்!!

அப்படியெனில்.."கொழுப்பு" என்பது எதை காட்டுகிறது?

"சக்தி"யைத் தானே!!

சரி.. கர்வம் ஏற்படுவது எப்போது?

மற்றவரிடம் உள்ளதை விட தன்னிடம் சிறப்பானது இருக்கும்போது....

பெண்ணுக்கு கர்வம் ஏற்படுவது, அவள் கணவன் போன்ற சிறந்தவன் வேறு யாரும் இல்லை என்னும் போது!!

நாமே பார்த்திருக்கிறோம்..தன் கணவன் பெரிய வேலையில் இருக்கிறார் என்று சொல்லும்போது அவள் குரலில் தெரியும் கர்வத்தை!!

பெரிய பதவியில் இருப்பவர் அந்த சுகத்தை அனுபவிப்பதை விட, அவர் மனைவி தானே அதை அனுபவிப்பது!!😍

மேடம் ஜஸ்டிஸ். மேடம் கலெக்டர் என்று அவர் மனைவி என்பதாலேயே அந்த பெருமை அவளுக்கு சேர்கிறது இல்லையா?

"மகாராஜன் உலகை ஆளுவார்.அந்த மகாராணி அவனை ஆளுவாள்"என்று கவியரசர் பாடவில்லையா?!!

ஆனா..சொல்றதுக்கு இந்த மனுஷன் கிட்டே என்ன இருக்குன்னு…

"நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு"ன்னு

இதில் எத்தனை பேர் ஒத்துக்கொள்வர் என்று தெரியாது!!😄😅

ஆனால் அது வெறும் இரவல் பெருமை அல்லவா?!

அவ்ளுடையது என்று அவள் பெருமை கொள்ள, கர்வம் கொள்ள பொதுவான காரணமமாக அது இருக்க முடியாது..

அப்ப என்ன தான் காரணம்.. சொல்லி முடிங்கிறீங்க!!☺️

பாரதி தான் சொல்றாரே…கர்வம் எப்ப வரும்ன்னு..

"உச்சி தனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி!!

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!!"

தன் மக்கள் அறிவு, அழகு, திறனுடன் வளர்வதை கண்டு தான் பெண் "கர்வம்" கொள்கிறாள்!!💐

அதனால் தான் , உலகத்துக்கே அன்னையாக இருக்கும் லலிதையை,, நம் போன்ற பக்தியுள்ள சிறந்த மக்களை கொண்டதனால் கர்வம் கொண்டவளாக, "அதிகர்வினி" என்ற நாமத்தில் துதிக்கிறோம்!!

அப்படி ஒவ்வொருவரும் அவர் தன் அன்னை "கர்வம்" கொள்ளுமாறு நடந்துக் கொள்வதே அவளை கவுரவப்படுத்துவதாகும்!!

நம் முதல்வர் "முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்" ஆகிய நான்' என்று சொல்வதில் எப்படி பெருமை கொண்டாரோ, அது போலவே, "தயாளு ஸ்டாலின் ஆகிய நான்" என்று பெருமை கொண்டு சொல்லும் நாள் விரைவில் வரட்டும்!!

https://youtube.com/watch?v=xO4qeA8F7K8&fbclid=IwAR2PhI_PNsBV0n6VSD81zk7s_p8ZYTTwmOF7xVrbbNQZriQeVzxtbMb751Q

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

படித்தமைக்கு நன்றி!!

ஸ்ரீஜா.

நன்றி: சுகி சிவம் அய்யா!!