அது பள்ளிப்படிக்கும் காலம்..
வீட்டில் எல்லோரும் இரவில் ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக தூங்கி எழுந்து, நாங்கள் எல்லாம் பள்ளிக்கு ஓட, அப்பாவும் அம்மாவும் நடத்தும் தொழில் நிறுவனத்துக்கு செல்ல தயாராக என்று வீடே அமளியாக இருக்கும்.
அந்த சமயம் தான் 1983 ல் மகிழ்ச்சிக்கு மகுடம் போல வந்தது அக்காவின் திருமணம்..அக்கா வீட்டில் எல்லோருக்கும் மூத்தவள்.வீட்டில் நடக்கும் முதல் விசேஷம்.அம்மாவுக்கு பிடித்து போய் நிச்சயம் செய்த மாப்பிள்ளை..அப்பாவுக்கு பிடிக்கவில்லை எண்றாலும் மறுக்கவில்லை..
ஆனால் அந்த சம்பந்தத்தால் வீட்டில் நிம்மதி தான் போனது..அக்காவின் மாமனார் எப்போது வீட்டிற்குள் நுழைந்து, சத்தம் போடுவார் என்றே தெரியாது..அப்பாவிற்கு ஏகப்பட்ட மனஉளைச்சலோடு உடல்நலம் சீர்கேட ஆரம்பித்தது ..
கடை வாடகைக்கு விட்டது வழக்கில் போய் நின்றது..
எல்லாவிதத்திலும் தொல்லை.. மருத்துவமனையில் அட்மிட் ஆனால் நாங்கள் பயந்து போவோம் என்று அப்பா எங்களிடம் கூட சொல்லாமல் வெறும் வெளி நோயாளி சிகிச்சை மட்டுமே எடுத்திருக்கிறார். சரியான தூக்கம், ஆகாரம் நேரத்திற்கு எடுத்துக்கொள்ளாது விட்டது, அதிக பின்விளைவு கொண்ட மருந்துகளை கண்மூடித்தனமாக மருத்துவர் பரிந்துரை செய்து, அதை உண்டு அல்சர் ..குணப்படுத்த முடியாமல் சீரியசாக மருத்துவமனையில் 1985 டிசம்பரில் சேர்க்கப்பட்டு, 16 ந் தேதி இறந்தார்.
அது தான் நான் என் அப்பாவை பிரிந்த முதலும் கடைசியுமான தருணம்.
இப்போது ஜாதகத்தை கொண்டு கணக்கு போட்டு பார்க்கும்போது, சனி சுக்கிரன் சேர்க்கை.. .தந்தைக்கு ஆபத்து..
முதலிலேயே கட்டியம் கூறிவிடுகிறது.
சரியாக சுக்கிர தசை ஆரம்பித்து ஜூலை 1983ல் சூரியன் புக்தி தொடங்கும்போது, அதற்கான மேலே சொன்ன ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது..
அடுத்து 1984ல் ஜூலையில் தொடங்கிய சந்திர புக்தி, மார்ச் 1986ல் முடியும் போது தந்தை உடன் இல்லை…
இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த இரவில், மொட்டை மாடியில் வீசும் காற்று கூட சுகம் தரவில்லை..கண் முன்னர் தெரியும் சந்திரனை பார்க்கும்போது..
சரியாக சுக்கிரன் தசை, சந்திரன் புக்தியில், சுக்கிரன் அந்தரம் சந்திரன் சூட்சமத்தில், சரியாக பிராண அந்திரமாக சூரியன் இருந்த சில மணித்துளிகளில், டிசம்பர் 16ல் காலமானார்.
படம்..என் கைப்பேசி
கையறும் நிலையில் பாரியின் மகள் பாடிய பாட்டு தானே உடன் நினைவுக்கு வருகிறது!
"அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
ஆண்டாண்டு அழுது புலம்பினாலும், மாண்டார் திரும்பி வரப்போவதில்லை தான்!!
என் தகப்பனை பறித்ததற்கு மாதாகாரனாகிய இந்த சந்திரனே துணை போயிற்றே என்று தோன்றினாலும், எல்லாமே இங்கு ஒரு நியதிப்படி தான் இயங்குகிறது..
சனி தன்னுடன் இணைந்திருந்த தன் நட்பு கிரகம் சுக்கிரனின் தசையில், சரியாக சூரியன் புக்தியில் தந்தையின் உடல் சீர்கேட வைத்து, அடுத்து வந்த சந்திர புக்தியில், தந்தைக்கு காரகத்துவமான சூரியனின் பிராண அந்திர காலத்தில் என் தகப்பனை பிரித்து விட்டார்..
"குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்றார்களே அது இது தானா!!
ஜோதிடம் எப்படியொரு சூட்சமமான ரகசியத்தை உள்ளடக்கியிருக்கிறது. ஜாதகத்தை ஒன்பது, அதற்குள் ஒன்பது, அதுற்குள்ளும் ஒன்பது என்று போய்க்கொண்டே இருக்கும் போது, இதுவரை நம் வாழ்வில் நடந்த எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு, அது அதன் காலத்தில், நமக்கு இயல்பாக நடப்பது போல நடந்தேறுகிறது.என்பதை உணர முடிகிறது..
"சுக்கிர தசை எல்லோருக்கும் கொட்டிக் கொடுக்கும் என்பார்களே, உனக்கு ஒன்றும் செய்யவில்லையா? என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது..
"சுக்கிரனை போல கொடுப்பவரும் இல்லை..சுக்கிரனை போல கெடுப்பாரும் இல்லை"ன்னு சொல்லக் கேள்வி என்று சொல்லமாட்டேன். .அனுபவத்தில் உணர்தே விட்டேன் என்றும் சொல்லலாம்.
எந்த சுக்கிர தசை தன் ஆரம்பித்த காலத்தில், என் அப்பாவை என்னிடம் இருந்து பிரித்ததோ, அதே தசை, தன் இறுதி நிலையில், ஞானத்தை கொடுக்கும் கேதுவின் புக்தியில், யாருக்காக பறித்ததோ அதே சனியின் பிராண அந்தரத்தில் என்னை நிலையாக உட்காரவைத்தது…
"சுக்கிரன் கெடுத்து கொடுப்பார்" என்பதும் இதுதானோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக