சென்னை அண்ணாபல்கலைக்கழகம் அருகேயும் ராஜ் பவன் அருகிலும்" இங்கு மான்கள் கடக்குமிடம். பார்த்து வண்டியோட்டவும்" என்ற அறிவிப்பு பலகை உள்ளதை பார்த்திருக்கிறீர்களா?
கிண்டி உயிரியல் பூங்காவில் இருந்து வெளியே வந்துவிடும் மான்களை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு!!
இந்த "ஜீப்ரா கிராசிங் " கை பார்க்கும் போதெல்லாம் எனக்கு, zebraa எனும் வரிக்குதிரைகள் அல்ல.. அந்த மான்கள் நினைவு தான் வரும்..
எத்தனை அறிவிப்பு பலகை இருந்தும் என்ன? சீறி வரும் வண்டிகளின் நடுவே அகப்பட்டு, அடிபட்டு இறக்கும் மான்கள் அதிகம்!!
இதே போலத் தான் சாலையை கடப்பவைகள்/கடப்பவர்கள் இடத்துக்கு, அந்த அற்புதமான கோடிட்ட விலங்கான. வரிக்குதிரையின் பெயரை இட்டு "வரிக்குதிரை கடப்பு "என்கிறார்களோ?
அந்த பெயர் ஏன் வந்தது? என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் பள்ளிக்காலத்திலேயே இதன் விடையை தேடியிருக்கிறோம்.
சாலைகளில், குறிப்பாக போக்குவரத்து சிக்னல்களில் உள்ள வெள்ளைக் கோடுகளைக் குறிக்கும் இது, . பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க செய்யப்பட்ட ஏற்பாடு..
இந்த யோசனை எங்கிருந்து வந்தது? என்று சரித்திரத்தை புரட்டினால், அதன் ஆரம்பம் லண்டலிருந்து துவங்குகிறது...
1930களில், லண்டனின் போக்குவரத்து மிகவும் குழப்பமாக இருந்ததாலும், மக்கள் கடந்து செல்வதற்கு முறையான வழியோ இடமோ இல்லாததாலும், பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதற்கு இங்கிலாந்தில் இது ஒரு பரிசோதனை முயற்சியாக , செய்தார்கள்.
ஆரம்பத்தில், கருப்பு தார் சாலைகளில் வரையப்பட்ட இந்த அப்பட்டமான வெள்ளை கோடுகள் "ஜீப்ரா கிராசிங்குகள்" என்று அழைக்கப்படவில்லை.
ஒரு நாள், ஒரு ட்ரையல் கிராசிங்கிற்குச் சென்ற பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், தன்னிச்சையாக அவர்களை ‘ஜீப்ரா கிராசிங்’ என்று அழைத்தார் என்பதால், அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டது!!!
ஜீப்ரா கிராசிங்குகள் இன்று உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போக்குவரத்து சிக்னலாக, மற்ற கிராசிங்குகளுக்கு ஊக்கமளித்துள்ளது..
ஆஸ்திரேலியாவில், ஒரு தட்டையான கூம்பின் மேல் வரிக்குதிரை கடப்பது "வொம்பாட் கிராசிங்ஸ்" என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளை கருப்பு கோடிட்ட புலிகள் உள்ளபோது, "புலி குறுக்குவெட்டு"
அது தான் சரியான தமிழ் சொல் இல்லையா?
என்று ஏன் சொல்வதில்லை? என்று சிலர் கேட்கலாம்.
ஏனெனில் வெள்ளை புலி இனம் ஒரு அரிய வகை . வங்காளத்தில் மட்டுமே இது காணப்படுகிறது. அது மட்டுமல்ல, அது அசல் இனம் அல்ல, ஒரு கலப்பு வகை!!
ஆனாலும், மஞ்சள் கருப்பு வரிகள் கொண்ட புலியையும் இதில் புகுத்தி, ஹாங்காங்கில், மஞ்சள் மற்றும் கருப்பு வடிவமானது "புலி குறுக்குவெட்டு" என்று அழைக்கப்படுகிறது !!
நியாயமாக பார்த்தால், புலி நம் தேசிய விலங்கு என்பதால், இங்கும் அப்படி செய்திருக்க வேண்டும்!☺️
பசுக்கள் கடப்பதற்கு கூட கிராசிங் உள்ளதே.
.
அடிக்கடி தலைப்பு செய்தியில் வரும் "பெகாசஸ்" பெயரில் கூட கிராசிங் உள்ளது!!
ஆனாலும் இதன் ஆரம்பகர்த்தாவான இங்கிலாந்தில், இப்போது இந்த வார்த்தை பிரயோகம் பெரும்பாலும் இல்லையென்றாலும், இந்தியாவில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது.
தூரத்தில் இருந்து வரும்போதே வண்டியோட்டிகளின் கவனத்தை ஈர்த்து சாலையை கடப்பவர்கள் கடந்து முடிக்கும் வரை, வண்டியை நிறுத்திவைக்க, இந்த வெள்ளை கருப்பு கோடுகள் உதவுகிறது.
வரிக்குதிரைகளுக்கு உள்ள வரிகள் ஜெனெட்டிகலாக வந்தது ஏன்? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போது தான், இதிலுள்ள சுவாரசியமான தகவல் தெரிந்தது.
இது வேட்டையாடுபவர்களுக்கு தெரிந்திருக்கும்..
வரிக்குதிரையின் வாழ்விடத்தில் அவற்றை தொந்தரவு செய்யும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ள, இந்த மாதிரியை அவை ஜெனெட்டிகலாக உருவாக்கின என்று கருதுகின்றனர். அதற்காக நடத்திய ஆய்வில், குதிரைகளை வரிக்குதிரையின் வரிகள் போன்ற ஒரு துணியால் மூடி வைத்தபோது, குதிரை அருகில் ஈக்கள் வந்தாலும், கருப்பு-வெள்ளை கோடுகள் அவர்களை குழப்பியதனால் ஈக்கள் குதிரை உடலில் படவே இல்லையாம். அதற்கு பதிலாக மறைவில் மோதினவாம்.!!
இந்த வரிகள் பூச்சிகளை குழப்ப இயற்கையாகவே அவர்களுக்கு கிடைத்த ஒரு அணி!!
மேலும் இவை கூட்டமாக மேயும் போது, அதன் எதிரிகளான சிங்கம், புலி இந்த மொத்த வரிகளை ஒரேயிடத்தில் பார்க்கும்போது குழம்பி விடுமாம்.!!அத்தோடு "விடு ஜுட்" தான்!!
இந்த மின்னல் வேகமுள்ள வரிக்குதிரை பெயரில் உள்ள ஜீப்ரா கிராசிங், போக்குவரத்தை நிறுத்தி மக்கள் சாலையை கடக்க ஏற்ற பகுதிகளாக இருக்கலாம் தான்…. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த விதியை நாம் சரியாக பின்பற்றுவதில்லை..!!
முறுக்கிக் கொண்டிருக்கும் ஆக்சிலேட்டர்களின் சத்தம், சீறிப் பாய துடித்துக் கொண்டிருக்கும் வேகம், சாலையை கடந்துக் கொண்டிருக்கும் பாதசாரிக்கு உள்ளே ஒரு அச்சத்தையே எப்போதும் கொடுகும்.
இது அதன் நோக்கமில்லையே?!
கடப்பது பாதசாரிகளா அல்லது அந்த வண்டிகளா..இல்லையில்லை …அந்த வண்டியோட்டிகளா என்று நினைக்க வைக்கும்.!!
ஆஹ்..சொல்ல மறந்துவிட்டேனே..
வரிக்குதிரைகளின் இயல்புகளில் முக்கியானவை என்ன தெரியுமா?
- மற்ற குதிரை, கழுதையை போல வீட்டின் வளர்ப்பு ப்பிராணியாக இருக்காது.
அதனால் தான் இந்த வரிக்குதிரைக்கும் குதிரை, கழுதையுடன் கலப்பினம் செய்கிறார்கள் இப்போது!!
- நெடும் தூரம் சலிப்பில்லாமல் ஓடக்கூடியது
- எப்போதும் கவனமாக இருப்பது..மின்னல் வேக பாய்க்ச்லில் தன்னுடைய இன விலங்கு ஒன்றுக்கு துன்பம் என்றாலும் நிற்காமல், தன் நலம் ஒன்றே கருத்தாக சிதறி ஓடுவது!!
நேற்று ஒரு காணொளியை காண நேர்ந்தது.நெரிசல் மிகுந்த அண்ணாசாலையில், நடந்த வாகன விபத்து குறித்தது..
இதை பார்க்கும்போது தெரிந்தது
- வண்டியோட்டிகளின் அதீத வேகம்,
- சாலையில் உள்ள பள்ளத்தில் வண்டியொட்டி ஒருவர் சிக்கி விபத்து ஏற்பட்டது அறிந்தும் தாங்கள் "அலெர்ட்"டாக அந்த இடத்தில் இருந்து விலகி, விரைவது,
- எத்தனை தடவை விதிகள் சொல்லிக்கொடுத்து, மீறினால் தண்டித்து.. என்றாலும் கட்டுக்குள் அடங்காத தன்மை.
இதில் வீட்டு வளர்ப்பு பிராணியாய் இருந்தும் என்ன பயன்?
மேலே சொன்ன வரிக்குதிரை குணத்தோடு பொருந்தி போகிறதா?
அப்படியானால்…
அந்த zeebraa crossing பாதசாரி கடக்க இல்லையா?😐