பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டை முதலில் சுமத்தியது யார்?
அந்த பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகள்!!
அவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியாது.. அதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ தேவையோ யாருக்கும் கிடையாது..
தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து, அதுவும் தங்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியரே செய்வது குறித்து அவர்கள் தெரிவித்த ஆதாரபூர்வமான தகவல்கள், தான் , திசைமாறி "இனத் துவேஷம்" என்று போயுள்ளது.
நம்மவர்கள் , பொதுவாக, பெண்பிள்ளைகளை ஆண்கள் பாலியல் ரீதியான சீண்டுவதை ஒரு "ஹீரோயிசமாக "ஆதரிக்கும் கூட்டம்..
"அது யாரோ ஒருவர் வீட்டு பெண் தானே!!
எழுத்தாளரூம் கவிஞருமான பெருந்தேவி அவர்கள் "பெண், பால், பொருள்" என்று ஆராய்ச்சி செய்து ஒரு நூல் எழுதியுள்ளார்…
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் என்று அவர் பட்டியலிட்டிருக்கும் சில செயல்களையெல்லாம் முன்னர் சினிமாக்களில் வில்லன் தான் செய்வார்.!!. ஆனால் இன்று..அதை ஒட்டுமொத்தமாக செய்பவன் தான் ஹீரோவாம்!!
"மின்னலே" என்று ஒரு தமிழ்படம் வந்ததே ஞாபகம் இருக்கா..மாதவன் நடித்தது..
நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தனக்கு பிடித்தது என்பதற்காக ஆள்மாறாட்டம் செய்து, அவருடன் பழகுவார் ..பின்னர் உண்மை தெரிய வரும்போது, அவர் அந்த பெண்ணின் வீட்டில் செய்யும் அட்டகாசங்கள்… தாங்கமுடியாதவை..
அந்த படம் ஓஹோ வென்று ஓடியது!! ஆனால் அது கற்பித்த நீதி??
நிஜத்தில், இந்த பாலியல் ரீதியான தாக்குதல்கள், அதிகம் நடந்தாலும், பெரும்பாலும் பெண்கள் வெளியே சொல்லத் தயங்கியது, சீண்டுபவருக்கு கிடைத்த வசதி!!
அதை முறியடிக்கும் விதமாக வந்தது தான் "மீ டூ"!!
ஆனால் பெண் பிள்ளைகள் அது போல சொல்ல முன்வருவது மிகவும் அரிது..
https://www.facebook.com/story.php?story_fbid=3769741983153301&id=423238587803674&scmts=scwspsddஅதுவும் சில மாணவர்கள், மாணவிகளிடம் பாலியல் ரீதியான சீண்டல்கள் செய்தாலும், "நமக்கு மட்டும் தான் இது நடக்கிறதா?, வெளியே சொன்னால், படிப்பு நின்றுவிடுமோ, நம்மை தான் எல்லோரும் அசிங்கமாக பேசுவார்களோ, ஸ்கூலில் மற்ற டீச்சர்கள் என்ன சொல்வார்களா? ..இப்படி ஆயிரம் யோசனை வந்து, வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் தான் அதிகம்..
இதிலே பாடம் நடத்தும் ஆசிரியர் என்றால் கேட்கவே வேண்டாம்..!!
இதையெல்லாம் மீறி வெளியே சொல்ல துணிந்தார்கள் என்றால், எவ்வளவு சகித்திருப்பார்கள்!!
அதுவும் ஆன்லைன் வகுப்புகள் என்பதால் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடிந்தது. இதுவே offline ல நடந்து கொண்டிருந்த போது ஆதாரங்கள் சிக்கியிருக்கும் வாய்ப்பு இல்லை அல்லது குறைவு..சிக்கியிருந்தாலும் பள்ளி சூழல் ஏற்படுத்தும் மிரட்சியில் வெளி வந்திருக்காது. பாலியல் சீண்டல்களுக்கு எல்லாம் ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் நிகழவில்லை என்றாகி விடாது. ஆதாரங்கள் இல்லாமல் எந்த குற்றசாட்டும் நிரூபிக்க முடியாது என்பதும் இல்லை. உண்மையை வெளிக்கொணர, ஆதாரங்களை திரட்ட புலன் விசாரணை மூலமும் முடியும்..ஆனால் அதற்குள் அவர்கள் படும் வேதனை?
ஒரு ஆசிரியர் எப்படி உடை உடுத்திக்கொண்டு வந்து பாடம் நடத்தவேண்டும் என்று அரசு விதிகள் வகுக்கிறது என்பது எவ்வளவு கேவலம்!!
அதுவும் "ஆச்சார்ய தேவோ பவ"என்று கற்று கொடுபவர்களே அந்த கேவளத்தை செய்யும்போது!! செய்த்ததாக குற்றம் சாட்டப்படும்போது!!
இந்து தர்மத்தை போதிப்பதாக, வேதம், ஒழுக்கம் கற்பிப்பதாக சொல்லும் பள்ளியில் இந்த குற்றம் நடந்ததாக சொல்லும்போது, அதன் நிர்வாகத்தை கேள்வி கேட்பது சரியே!!
அதற்கு உடன் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி, அந்த பிரச்சினைக்கு, இனரீதியான சாயம் பூசுவது, சரியல்லவே!!
இன்னொரு பள்ளியின் ஆசிரியர் மீதும் இதே மாதிரியான குற்றச்சாட்டு வந்தபோது, அவர்கள் உடன் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தனர். பெற்றோர்களுக்கும் செய்தி அனுப்பினர்!
இதை தான் சமூகம் எதிர்பார்க்கிறது..
தங்கள் இனம் செய்தால் மட்டும் பெரிது படுத்தப்படுகிறது என்கின்றனர்..
ஆம்..உண்மை தான்..
ஏனென்றால், தங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள், மூளை திறன் உடையவர்கள் என்று மற்ற சமயங்களில் சொல்லிக்கொண்டு திரிபவர்கள், ஒழுக்கக்கேடான காரியங்களை செய்யும்போது, "நீங்களா இப்படி? என்று கேள்விக்கணை பாய்வது இயல்பு தானே?
இன்னொன்றும் சொல்ல வேண்டும்.
ஆதி சங்கரர் தன்னுடைய அத்வைத தத்துவத்தில் புத்த, சமண தத்துவத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இன்று ஆய்வுகளும் அதை தான் காட்டுகிறது.. அதன்படி
"பிராமன " என்பது ஆதியில் ஒரு இனக்குழுவினர் பெயர் அல்ல. அது வெறும் ஒரு மனநிலை. என்பதும், சமண மதங்களின் பயிற்சி முறையில் "எவர் தன்னலம் மறந்து வெறும் ஞானத்தேடலை குறிக்கோளாக கொள்கிறோரோ- அவரே பிராமன நிலை பெற்றவர்"என்றும் . தம்மபதம் இதை பற்றி "பிராம்மனவாகா" என்கிற தனி ஒழுக்க விதிகளை குறிப்பிடுகிறது.என்றும், பின்னாளில் தான் ஏதோ மாற்றம் நடந்துள்ளது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.!!
அதன்படி பார்த்தாலும்…
ஆதி சங்கரர் மண்டன மிஷ்ரருடன் நடத்திய வாதப்போர் பற்றி நான் கேட்டதும், படித்ததும் நினைவுக்கு வருகிறது.
கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வருகிறார் மண்டன மிஸ்ரர். அவரது மனைவி சரஸவாணி , அன்னை சரஸ்வதியின் பூரண அருளை பெற்றவர்.அவர் முன்னிலையில் இருவரும் வாதம் செய்கின்றனர்.சரசவாணி தான் அதற்கு நீதிபதி என்பதிலிருந்து அவரின் நடுநிலைமை தெரியும்.!!
போட்டி விதி என்னவென்றால், யார் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை வாடுகிறதோ, அவர் தோற்றவர் ஆவார் "இது சற்று வித்தியாசமாக உள்ளதா? இதன் பின்னே ஒரு நுட்பம் உள்ளது..
யார் என்ன வாதம் எடுத்து வைத்தாலும், அல்லது எதிர்வாதம் செய்தாலும், அதன் உண்மைத்தன்மை அவருடைய மனதுக்கு தெரியும்..அதனால் குரலில் உஷ்ணம் வரும்..உடலிலும்…அதுவே மலர் மாலையை சீக்கிரம் வாடா செய்யும்"
வழக்கம் போல, சங்கரர்.தான் வெற்றி பெருகிறார்.. சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.என்பது வரலாறு!!
தன்னுடைய வாதத்தில் உண்மை ஏதும் இல்லாதவர் தான் அதிகமாக கூக்குரலிடுவர் என்பதை தான் இது நினைவுபடுத்துகிறது.
அவர்கள் செய்த போது கேட்டிர்களா? இவர்கள் செய்தபோது கேட்பீர்களா? என்கிறார்கள். இன்னொருவர் தவறு செய்தால், நீங்களும் தவறு செய்யலாம் என்கிறீர்களா? அதுவும் ஒழுக்கத்தை வருங்கால சமுதாயத்திற்கு கற்றுக்கொடுபவர்கள்?
பாதிக்கப்பட்டவர் எங்கள் இனம் என்றால் நடவடிக்கை இல்லையா? என்பவரே பாடகி சின்மயி, எந்த காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கவில்லை எனும்போது நடவடிக்கை எப்படி எடுப்பர்?
வளர்ந்த, விவேகமுள்ள ஒரு பெண்ணின் குற்றச்சாட்டுடன், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளின் குற்றச்சாட்டை எப்படி ஒன்றாக பார்ப்பது?
அதுவும். பாதிக்கப்பட்டவள் என்னும் அவரே..இதே போன்ற மனவேதனையில் உள்ள அந்த குழந்தைகளுக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?
முன்னாள் அமைச்சர் அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்… பாலியல் குற்றல்சாடு கொடுத்த போது, அவர் தான் ஒரு மைனாரிட்டி வகுப்பை சேர்ந்தவன் என்று சொல்லவில்லையே? விசாரணை நடந்து அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததே!!
இதே போன்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் மற்ற பள்ளிகள் போல ஏன் நீங்கள் அமைதி காக்கவில்லை?
குற்றம் சாட்டபட்டவருக்கு ஆதரவாக அந்த இனத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடி இப்படி மிரட்டுவது எந்த வகை?
சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று ஏன் ஒதுங்கவில்லை?!!
. .சரி.. எங்கேயும் தானே பாலியல் சீண்டல் நடக்கிறது..எங்களை மட்டுமே ஏன் குறை சொல்கிறீர்கள்? என்கிறார்கள்...
ஏனென்றால் எல்லோர் வீட்டிலும் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள் உள்ளனர்..
இந்த தவறை கேள்வி கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்று, அவர்களும் படித்திருக்கிறார்கள்..
உலகப்போருக்கு பிறகு, ஜெர்மானியர்களின் கோழைத்தனத்தை வெட்கி ஒப்புதல் வாக்குமூலம் போல, மார்ட்டின் நியோமேலாரால் எழுதப்பட்ட இந்த புகழ்பெற்ற கவிதையை....
(அதன் தமிழாக்கத்தில்..)
"முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளுக்காக வந்தார்கள், நான் பேசவில்லை-ஏனென்றால் நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள், நான் பேசவில்லை-
ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல.
பின்னர் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள், நான் பேசவில்லை
ஏனென்றால் நான் ஒரு யூதர் அல்ல.
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள் - எனக்காக பேச யாரும் இல்லை."
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.