செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 26...ஜோதிடம் உங்கள் வாழ்வில் நடத்திய அற்புதங்கள் யாவை?

 நிறைய..

அற்புதம் என்றால்" மேஜிக்" தானே?!!

இப்படி சொன்னவுடன், ஏதோ அம்மன் படத்தில் வருவது போல, ஜிமிக்ஸ் நடந்தது என்று நினைக்க வேண்டாம்..

ஜோதிடம் பற்றி தெரிந்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து, என் வாழ்வின் பக்கங்களை புரட்டி பார்த்து ஒப்பீடு செய்யும் போது, புரியாத புதிராக நடந்த நிறைய சம்பவங்களுக்கு விடை கிடைத்தது. ஆச்சரியம், மகிழ்ச்சி, சோகம் இப்படி கலவையான உணர்வுகள் உண்டானது தான் உண்மை.

சிலவற்றை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் சிறு வயதில் டைபாய்டு ஜுரம் வந்து கிட்டத்தட்ட கெடு கூட வைத்துவிட்டார்களாம்.. "பிழைக்க மாட்டேன்" என்று இருந்த நிலையில், தெருவில் போகும் ஐஸ் வண்டியை பார்த்து, "ஐஸ் வேணும்"னு நான் அடம் பிடிக்க, காய்ச்சலில் கிடக்கும்போது வாங்கிக் கொடுக்க முடியாதுன்னு வீட்டில் சொல்ல, அப்போது வந்த டாக்டர், "போற புள்ளைக்கு ஆசைப்பட்டதை வாங்கிக்குடுங்க" ன்னு சொல்ல, என்ன ஆச்சர்யம். .வாங்கி சாப்பிட்ட நான் கல்லுக்குண்டாய்..☺️ அவரோ சிறிது காலத்தில்..

அவயோகியான புதன் தன் மாரகதிபதி பணியை செவ்வனே செய்திருக்கிறது!!

வெள்ளை கோட் போட ஆசைப்பட்ட நான் அடைக்கலம் ஆனது " கருப்பு கோட்டில்".

சனி அதி சுபத்துவம்!!

ஏற்கெனவே சுக்கிர தசை என் தந்தையை எடுத்துக்கொண்டு பணியை கொடுத்தது பற்றி சொல்லியிருக்கிறேன்.😫

அடுத்து வந்த தசை என் கணவரை என்னுடன் இணைய வைத்தது..அது என் வாழ்வில் நடந்த ஆச்சரியமான விஷயம். ஏனெனில் தந்தைக்கு பிறகு, திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்த எனக்கு அது ஒரு திருப்புமுனை.. 🙏

அதற்கு காரணம், தெய்வமாகிவிட்ட என் தந்தை தான் என்று நான் நம்புவதற்கு உறுதியாக அது நடந்தது பிதாகாரனாகிய சூரிய தசையில்…

மதி போன்ற முகம் கொண்ட என் மகளுக்கு " சந்திர ஒளி " என்ற பொருள் தரும் பெயரை வைத்தோம். இப்போது பார்த்தால், அவள் பிறந்தது சந்திர தசை, சந்திர புக்தியில்..😃 ஆச்சரியம்.

"Fairy Tales" ல் வருவது போல வந்த இரண்டு இளவரசிகளும், அவதரித்ததும் கனவுகளையும் கற்பனைகளையும் அள்ளித்தரும் சந்திரன் வரும் தசையில்.. 😃

ஆனாலும் கடந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில் , மகிழ்வான தருணங்கள் மட்டும் நினைவுக்கு வருவதில்லையே.. தொண்டையில் சிக்கிய முள்ளாய் உறுத்தும் சில நினைவுகள்..…

நம்பிக்கை துரோகங்கள், உறவுகள், பிரிவுகள் நிராசைகள்…உள்ளுக்குள் இருந்து வெந்நீராய் பீறிட்டு எழுந்து மனதை பொசுக்கும் …

நினைவுகள் என்றவுடன் என் எண்ண அலைகளோடு எப்போதும் ஒத்துப்போகும் மறைந்த கவிஞர் .முத்துக்குமாரை கொஞ்சம் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்…

வழக்கம் போல…

பால்யத்திற்குத் திரும்புதல்

"நினைவுகளின் வழியாகக் கூட

நீ உன் பால்யத்திற்குத்

திரும்பிச் செல்லாதே,

கிணற்றில் முங்கி எழுவதைப் போல

சுலபமில்லை அது.

தெருமுனைத் தேநீர்க் கடைக்கு

சென்று திரும்புவதைப் போல

இயல்பானதுமில்லை.

வயதென்னும் ரயில் வண்டி

முன்னேற முன்னேற

பின்னோக்கி நகரும் மரங்களின்

மாயத்தோற்றத்தில் மயங்கி

நீ உன் பால்யத்துக்குள்

நுழையத் துடிக்கிறாய்.

தெரிந்த துரோகத்தை;

தெரியாத காதலை;

முறிந்த உறவை;

முறியாத முட்காடுகளை;

மீண்டும் சென்று தொடுவதில்

என்ன கிடைத்துவிடப் போகிறது உனக்கு?

ஒரு வலியைத்

திரும்பத்திரும்பத தொடும் வலியில்

அப்படி என்ன சுகம்?

உன் துருப்பிடித்த சைக்கிளின்

செம்மண் தடங்களை

தார்ச்சாலைகள் மூடிவிட்டன.

நீ நடந்து சென்ற

மார்கழியின் வீதிகளும்

மாக்கோலமும்

காலப் புழுதியில்

கலைந்துவிட்டன.

உன் நூலில் பறந்த

பொன்வண்டுகள்

பெயர் தெரியா காட்டுக்குள்

தொலைந்துபோன முற்பகலும்

தூக்கம் இல்லா பின்னிரவும்

மறந்ததா மடநெஞ்சம்?

என் ப்ரிய நண்பா....

பிணத்தை எரித்துவிட்டு

சுடுகாட்டிலிருந்து

கிளம்புபவர்களிடம்

சொல்வதைப் போல சொல்கிறேன்;

'திரும்பிப் பார்க்காமல்

முன்னே நடந்து போ!'

உண்மை தான்.நாம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல..

ஆனாலும் இன்று, ஜோதிடத்தின் பூதக்கண்ணாடி வழியாக அவற்றை பார்க்கும் போது, ஒவ்வொன்றும் நடந்ததற்கும் பின்னால் உள்ள காரணம், அவை ஏற்கெணவே நிச்சயிக்கப்பட்டவை என்று உணரும் போது, வரும் நிம்மதியும் பெருமூச்சும் இருக்கிறதே..

அப்பாடா..!!

அதுவே தரும் நம்பிக்கை….

இனி போகும் பாதை இருட்டாய் இருக்காது என்று.

கூட உள்ளது " ஜோ திஷம்" அல்லவா??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக