"உன் குழந்தை ஒரு பிரீசியஸ் பேபி..தை ஒழுஙகாய் பெற்றெடுக்கும் நினைப்பு உனக்கு இருக்கிறதா இல்லையா?"
எப்போதும் மெதுவாக பேசும் டாக்டரின் குரல் அன்று மட்டும் ஏன் அப்படியில்லை?
எனக்கு மட்டும் ஆசையில்லையா?
ஆனால், நான் என்ன செய்வது?
இத்தனை மாதம் இவரிடம் பார்த்தாகிவிட்டது..திடீரென வேறு ஊரில் உள்ள டாக்டரிடம் காட்டு " என்றால் என்ன சொல்ல?
வேண்டுமானால் பிரசவத்திற்கு முன் வந்து அட்மிட் ஆகி கொள்ளவாமாம். அதுவரை நான் வேலை செய்யும் ஊரிலேயே இருந்துக் கொள்ளனுமாம்..
தினசரி நான் மெட்ரோ பிடித்து போவதை நிறுத்திக்கொள்ளனுமாம்.
எல்லாம் சரி தான் ..அங்கேயிருக்கும் வீடு பூட்டியே தான் கிடக்கிறது..போய் தங்குவது என்று நினைத்தால் தான் ….நினைக்கவே முடியலை..🙄
வீட்டிற்கு திரும்பியதும் இவர் தெளிவா சொல்லிட்டார். நான் பெட்டி படுக்கையை கட்டணுமாம்…இராத்திரி எல்லாம் தூக்கமேயில்லை. இவங்கலாம் ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க? குழந்தை நல்லபடியா பிறக்கணும் தான்.ஆனால் உயிருடன் இருக்கணுமே!!
ஆமாங்க..அந்த ஏரியா முழுக்க பாம்பு நடமாட்டம் இருக்கும்.அதுவும் அந்த வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஓடையில் தான்…அய்யோ நினைக்கவே குலை நடுங்குது..
அதை பத்தி நினைக்கும் போதே இப்படி இருக்கே..நேரிலே வேறு பார்க்க நேர்ந்தால்??
ரொம்ப நேரம் தூங்கலை. .
அப்படியே நடந்து போய்க்கிட்டேயிருக்கேன்.. பாதையெல்லாம் இருட்டு.கண்ணு இருட்டுக்கு பழகி நடப்பது தெரியும்போது, ஒரு நீளமான தாழ்வாரத்தில் தான் நடந்துகொண்டிருந்தேன்..அதன் முடிவில் இரும்பு கம்பிகள் போட்ட கிராதி..
இங்கே என்ன இருக்கு? ன்னு நினைச்சுக்கிட்டே கிட்டே நெருங்கினால்,…"சரேலென்று உள்ளிருந்து ஒரு ஐந்து தலை நாகம்..
"அய்யோ.." நான் பயத்தில் பின்வாங்கிவிட்டேன்.கிழே விழப்போனவள் காதில் கேட்டது அந்த குரல்
"சே. என்னை பார்த்தா நீ பயப்படுறே..ஒன் கண் முன்னாலேயே வரமாட்டேன்"
நிமிர்ந்து பார்த்தால்…நன்றாக விடிந்து விட்டிருந்தது. "அப்பாடி.கனவா!" ன்னு இருந்தாலும் ஒரே குழப்பம்..
சரி ஒரு நடை போயிட்டு வரலாம்னு வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
இப்போது தான் குடி வந்ததால் பழக்கமில்லா பாதைகள்.... நடந்தே ஒரு சந்தை உள்ள இடத்திற்கு வந்துவிட்டேன் போல…. வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தால் ..
கனவில் பார்த்த பாம்பே எனக்கு முன்னால் ..
அட …கோவில்.. தானாகவே கால் உள்ளே போயிற்று..
ப்ரகாரத்திற்கு பின்னே மரத்தடியில் ஏகாந்தமான அதன் இடம்
விக்ரகத்திற்கு அப்போது தான் பூஜை செய்யப்பட்டிருந்தது. என்னையறியாமலேயே கையிரண்டும் குவிந்து இருந்தது..என்ன வேண்டுவது?
"குழந்தை நன்றாக இருக்கவேண்டும்"
சுற்றி முடித்து வெளியே வரும்போது, பூசாரியை பார்த்தேன். கனவை பற்றி சொல்லி விளக்கம் கேட்டேன்..48 நாள் முட்டையும் பாலும் கொண்டு வந்து ஊற்ற சொன்னார்.பாம்பு பால் குடிக்குமானு ஆராய்ச்சியேதும் செய்யிற மனசா அப்ப? அப்டியே வச்சாலும் பூசாரிக்காவது பயன்படட்டும்ன்னு நினைச்சுகிட்டேன்.
வீட்டிற்கு திரும்பி, வேலைக்கு கிளம்ப தயாரானேன்.
இந்த திருவுளச் சீட்டு என்பார்களே..அப்படி போட்டுப் பார்க்கலாமா?
என்ன என்னவோ தோணுது..சரி அதையும் தான் செஞ்சு பார்த்திடுவோமே..
அந்த வீட்டிற்கு "போகவேண்டும்" , "போக வேண்டாம்'" ரெண்டு சீட்டில் எழுதி குலுக்கி போட்டு, சாமியை கும்பிட்டுக்கொண்டே, நானே(சின்ன குழந்தைக்கு எங்கு போறது?!☺️) எடுத்துப் பார்த்தால்…
"போக வேண்டும்"
திரும்பவும் போட்டுப் பார்க்கலாமா?? வேண்டாம் வேண்டாம் ..சாமி ஒத்துக்காது. அதுப்படியே செய்வோம்..என்ன மிஞ்சி போனால், நானோ குழந்தையோ கடிபட்டு கிடக்கிறோம்° ன்னு ஏதேதோ நினைக்கிறேன்.அழுகை வரது. சாப்பிடவே தோணலை..அப்படியே தூங்கிப் போயிட்டேன்.
வீட்டிற்கு வந்த இவர், நான் போகாமல் இருக்க ஏதோ டிராமா செய்றேன்னு என்ன நான் சொன்னாலும் கேட்காமல் ..
அடுத்து.வந்த நாட்களில் வேகமாய் வேலை நடந்து, இதோ அந்த வீட்டிற்கே வந்துவிட்டேன்..
தனிமை நன்றாக தான் இருக்கிறது…தினசரி, விடிகாலையில் தனியே நடைப்பயிற்சி செய்கிறேன்.என் வேலைகளை நானே செய்கிறேன்.
வீட்டு வேலைக்கு ஆள் வைத்ததாகிவிட்டது. ஒரு வயசான அம்மா..நன்றாக தான் சமைக்கிறார்..ஆனாலும் எனக்கு தான் எதிலும்…
ஒரு நாள் கண் விழித்து பார்க்கும்போது, அந்த அம்மாள் என்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.முகமெல்லாம் வேர்த்திருந்தது.பக்கத்தில் அவர் பை..
சரியாக தூங்கலையா?"
"என்னாச்சு?"
"ஊருக்கு போறேன்.கொஞ்சம் அவசரம்"
"எப்போ வருவீங்க ?"
"ஒரு வாரம்"
ஒரு வாரம் கழித்து தகவல் தான் வந்தது..இந்த வீட்டில், நடு இரவில், பாத்ரூமிற்கு போனவர், எதேச்சையாக மேலே பார்த்தால், ஒரு பாம்பு சாளரத்தில் இருந்து தொங்கிக்கொண்டு இருந்ததாம்.!! அன்றில் இருந்து காய்ச்சலாம்..
"என்ன.. ? நான் வந்து இத்தனை நாளில் அப்டியேதும் பார்க்கலையே?"
அப்புறமும் ஆட்கள் வந்தார்கள் போனார்கள். யார் வாயிலும் இந்த பேச்சு இல்லை.
ஆச்சு.. நாட்கள் நெருங்கி விட்டன.பிரசவத்திற்கு ஊருக்கு கிளம்ப வேண்டும். ரயிலில் அவர் கிளம்பிவிட்டார்., வரும் வழியில் உள்ள இந்த ரயில்வே ஸ்டேஷனில், நான் ஏறிக்கொள்ளவேண்டும். வீட்டில் இருந்து கிளம்பும் கடைசி நேர அவசரத்தில் இருந்தேன்.எல்லோரிடமும் சொல்லிக்கொண்டாயிற்று..வீட்டிற்குள் உள்ள பையை மட்டும் எடுத்துக்கொண்டு பூட்டிவிட்டு கிளம்ப வேண்டும்.
உள்ளே நுழையும்போது தான் கவனித்தேன்.
வீட்டிற்கு தலைவாசல் அடுத்து உள்ள அலுவலக நுழைவாயிலில் வழியாக ஒரு கருப்பு பாம்பு மெதுமெதுவாக வீட்டிற்கு உள்ளே போய் கொண்டிருந்தது!!
(நாளை தொடர்வேன்)
.நேற்றைய தொடர்ச்சி:
பார்த்தவுடன் மூச்சே நின்று போனது போல ஒரு உணர்வு....இது ....இது..... ...
சற்றென்று அறைக் கதவை தாளிட்டுவிட்டேன். வெளியே ஓடிப் போய் எல்லோரையும் கூப்பிட, , கூட்டம் சேர்ந்துவிட்டது. விளக்கி சொல்லியாகிவிட்டது. இந்த இருட்டில் அதை எப்படி தேடுவது ? நேரம் வேறு அதிகமாகி விட்டது. நான் கிளம்ப வேண்டும். ஒருவழியாக , சாவியை அவர்களிடம் கொடுத்து அதை பிடிக்க ஏற்பாடு செய்யசொல்லிவிட்டு கிளம்பி விட்டேன்.
நன்றாக நினைவு இருக்கிறது. அன்று சித்ரா பவுர்ணமி. போகும் வழியில் பார்த்த ஒரு அம்மன் கோவிலில் கும்பிட்டுவிட்டு கிளம்பினேன்.
ஊர் போய் சேர்ந்தாயிற்று. விடிந்தும் விடியாமல் போன் செய்து அவர்களை தொல்லை செய்தாயிற்று. பாம்பாட்டியை கூட்டிக்கொண்டு போவதாக சொன்னார்கள். நானும் அங்கு இருந்த கோவிலில் இருந்த புற்றுக்கு பால், முட்டை கொடுக்க கிளம்பினேன்.
மாலை வரை எந்த தகவலும் இல்லை. திரும்ப போன்.
"என்ன பாம்பு எதுவும் இல்லையா? அதெப்படி.. நான் தான் பார்த்தேனே?"
.................
"வெளியே போக வழியேயில்லை. சாளரம் முதற்கொண்டு எல்லா இண்டு இடுக்குகளையும் அடைத்தாயிற்று. அதுவும் வேறு அது கொஞ்சம் பெரிதாக இருந்தது. எந்த சின்ன ஓட்டை வழியாகவும் போயிருக்க முடியாது."
..................
"பாம்பாட்டியும் இல்லைன்னு சொன்னானா....எதுக்கும் திரும்ப தேடி பார்க்க சொல்லுங்க...உள்ளேயே தான் ஒளிஞ்சிருக்கும்"
அடுத்த நாளும் அதே பதில் தான் வந்தது..
"என்ன இப்படி சொல்றீங்க. நான் வர்றதுக்குள்ளே அது குட்டி போட்டுற போவுது. சின்ன குழந்தையோட எப்படி அங்கே வருவேன்...எப்படியாது பிடிங்க"
தொடர்ந்து வந்த நாட்களில் 'இல்லை என்ற பதில் தான் வந்தது.
கணவரோ பாம்பு பற்றிய பயத்திலேயே நான் இருந்ததால் எனக்கு அது போன்ற பிரமை ஏற்பட்டிருக்கும் என்றார்.
தோழியோ, " பாம்பு வாக்கு கொடுத்தால் மாறாது. அதனால் அது வந்திருக்காது." என்றாள்.
ஐயோ ..இதை நம்புறதா வேண்டாமான்னே தெரியலையே.....
இது போன்ற விஷயங்களில் நமக்கு தெளிவான பதில் கிடைப்பது கஷ்டம். அறிவு பூர்வமான தேடல் என்றால் கூகிள் இருக்கும். இது நம்பிக்கை சார்ந்தது...என்ன செய்ய?
எனக்கு அங்கே நிம்மதியாய் இருக்க முடியவில்லை. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே வீட்டிற்கு திரும்பினேன். எதுவானாலும் பார்த்துகொள்ளலாம்..😫..
ஒன்றும் வித்யாசமாக எதுவும் வீட்டில் உணரவில்லை.
வீட்டை ஒட்டி இருந்த மரத்தின் கிளைகளை கணவர் வெட்டி போட்டார். அது வழியாக கூட வந்து விடக்கூடாதே....காவல் இரட்டிப்பாக்கப்பட்டது..
ஒரு நாள், அக்கம் பக்கத்து ஆட்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். என்னவென்று மெதுவாக போய் கேட்டேன். இதோ இங்கே தான் சாரையும் நல்லனும் ஆடிக்கொண்டிருந்தார்கள்" என்றார்கள்.. ஆனால் அவை போய்விட்டுருந்தன....
பார்த்தால் மட்டும்?? நான் என்ன ஆவேன்னே தெரியாது!!🤣
சரி நமக்கு தான் வாக்கு (!!) கொடுத்திருக்கிறதே.. அதனால் நம் கண்ணில் படாது.அதுவரைக்கும் நாம் பிழைத்தோம் என்று நினைத்துக் கொண்டேன்.
இன்னொரு நாள்... எதிர் வீட்டில் உள்ள பெண், குளித்துக் கொண்டிருக்கும்போது, உள்ளே வந்துவிட்டதாம். ஒரே களேபரம்....😩
விடுப்பு முடிந்து வேலைக்கு போகும்போது குழந்தையும் என்னுடன் பயணித்தாள். நடந்துப் போகக்கூடிய தூரம் தான். இருந்தாலும், தனியே விட்டுவிட்டு போக முடியாது என்று மறுத்துவிட்டேன்..வீட்டிற்கு திரும்பியவுடன், நானும் குழந்தையும் வீட்டிற்குள்.. வெளியே காவலுக்கு ஆட்கள்....கல் உப்பு வட்டம், வீடு சுற்றிலும் தினமும் போடப்பட்டன...
ஒரு விடுமுறையின் போது, குழந்தையை வழக்கம் போல வெளி வாசலுக்கு அருகில் உள்ள தாழ்வாரத்தில் கிடத்திவிட்டு, உள்ளே வேலையில் இருந்தேன். முடித்துவிட்டு, வாசலுக்கு வந்து, குழந்தைக்கு அருகில் அமர்ந்தேன். எதிர் வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்மணி அப்போது தான் வெளியே வந்தார். எனக்கு அவ்வப்போது சின்ன சின்ன உதவிகள் செய்பவர். அங்கே வேலை செய்துகொண்டே,, என்னை பார்த்து
'அம்மா..இப்ப தான் குட்டி ராஜா இந்த பக்கமா போனார்" என்றார்..
"எந்த ராஜா? "
"அது தானம்மா. நல்ல பாம்புக்குட்டி. உங்க வீட்டு வெளிவாசலுக்கு பக்கம் இருந்து வந்தது " என்றாரே பார்க்கணும் !!
பாய்ந்து போய் குழந்தையை வாரிக் கொண்டேன்.
"என்ன சொல்றே... பாம்பா ..?"
"ஆமாம்மா...அது குழந்தை கிட்டேயெல்லாம் போகலை ...அப்படியே வந்து இப்படியே போனது" என்று கையை காட்டினார்.
எனக்கு பயத்தில் பேச்சே வரவில்லை.
என்ன மடத்தனம் செய்து விட்டேன் நான். குழந்தையை தனியாக விட்டுவிட்டு போகலாமா?
அதன்பிறகு இன்னும் காவல் அதிகமானது..
அப்போது வீட்டில் சமையலுக்கு இருந்த பெண், பக்கத்து ஊர் தான். பெரிய குங்குமப் பொட்டு... மஞ்சள் நிற சேலை, சிவப்பு சேலை என்று ஆளைப் பார்த்தாலே மாரியம்மன் கோயிலுக்கு போய்விட்டு நேராக வருபவர் போல இருக்கும்...அதிகம் பேச மாட்டார். சமைத்து விட்டு கிளம்பிவிடுவார்..
ஒரு நாள் நான் பூஜை செய்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு என்னவோ ஆகிவிட்டது. எனக்கு சற்று தள்ளி நின்று கொண்டு, சாமி ஆடத் தொடங்கி விட்டார்.
'இந்த வீட்டிலே தான் சாமி இருக்குமா. அது உனக்கு துனையாதான் இருக்கு"
இதுக்கு என்ன சொல்ல.?!!
நானும் "ஆமாம் சாமி என்னுடன் தான் இருக்கிறது இதிலென்ன சந்தேகம் " என்றேன்.
ஆடிக் கொண்டிருந்து அப்படி மெதுமெதுவாக உட்கார்ந்து விட்டார். அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தாயிற்று. அடுத்த வந்த நாளில் நடந்தது எதுவும் தனக்கு தெரியாது என்றார்.
ஆயிற்று..எட்டு மாதங்கள்... குழந்தையும் வளர்ந்து தவழ ஆரம்பித்து விட்டாள். பணி மாற்றல் வந்து விட்டது. கிளம்ப வேண்டும். வீட்டின் சாமான்கள் எல்லாம் ஏற்றியாகிவிட்டது. எங்கள் காருக்கு பின் வண்டி கிளம்பவேண்டும். இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.
எல்லோரிடமும் விடை பெற்றாகி விட்டது. வீட்டை எத்தனை முறை பார்த்தாலும் மறக்க முடியுமா..அலுத்து தான் போகுமா...
காரில் ஏறிய நான் ஏதோ ஒரு எண்ணத்தில் திரும்பவும் வீட்டிற்குள் நுழைந்தேன்... முன்னறை, கூடம், ஒவ்வொன்றாக பார்த்து விட்டு சமையல் அறையில் நுழைந்தேன்.
எத்தனை நாள், அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுவிட்டு, புழக்கடை பக்கம் உள்ள கறிவேப்பிலை செடியில் உள்ள இலையை பறித்துக்கொண்டு வந்து போட்டிருக்கிறேன்... எலுமிச்சையை பறித்து வந்து சாறு பிழிந்து குடித்திருக்கிறேன். இதோ ...இங்கே வளர்ந்த கீரை தான் எத்தனை நாள் உணவாகியிருக்கிறது என்று நினைத்தபடியே புழக்கடைப் பக்கம் போக திரும்பினேன்...அப்போது…
சமையல் அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தின் வழியாக புழக்கடையை நோக்கி ஒரு வெள்ளை நிற மெலிதான பாம்பு நகர்ந்து வெளியே போய்க் கொண்டிருந்தது....
இது என் வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வு... இத்தனை வருடம் ஆகியும் இன்றைக்கும் இதைப் பற்றி பேசும்போதும் எழுதும்போதும் ஏற்படும் சிலிர்ப்பு தாங்கவில்லை.
நான் கண்ட இரண்டுமே என் பிரமையாக இருக்கலாம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், எனக்கு கொடுத்த வாக்கிற்காகவே என் வீட்டிலேயே தங்கி என் கண்ணிலும் படாமல், எனக்கும் என் குழந்தைக்கும் காவலாக இருந்து நாங்கள் கிளம்பியவுடன் அவை கிளம்பிவிட்டது என்றும் தாங்கள் அங்கு வந்ததையும் போனதையும் எனக்கு மட்டும் சூட்சமமாக உணர்த்தினார்கள் என்றும் தான் இன்றும் நம்புகிறேன்.
அதே போல இன்று வரை நான் கண்ணார எந்த அரவத்தையும் கண்டதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக