திங்கள், 6 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 20 ...தனுசு ராசியின் சிறப்பு என்ன?

நான் பார்த்த வரையில்,  பன்னிரண்டு  ராசிகளில்,  "எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே.  ரொம்ப நல்லவனப்பா " என்று  சொல்லக்கூடிய நபர்கள் எல்லாம் இந்த இலக்கின/ ராசிக்காரர்களாகத தான்  இருப்பார்கள் !!


  • எவ்வளவு கெடுதல் மற்றவர் செய்தாலும், கடவுள் இருக்கார்,பார்த்துக்  கொள்வார்"  என்பவர்கள்.  ஆனால் பாருங்கள் , இந்த ராசி பஞ்ச பூதங்களில் முக்கியமானதான நெருப்பு ராசி.
நெருப்பு ராசி என்றால்  வீரம், தைரியம், வேகம் என்றெல்லாம் பார்த்த நமக்கு இவ்வளவு அமைதியான  குணம் படைத்தவர்கள் நெருப்பு ராசி என்பதே ஆச்சரியம் அளிக்கும்.  ஆனால் மற்ற நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம் இவற்றோடு ஒப்பிடும்போது மேஷத்தின் நெருப்பு காட்டு தீ போல  என்றால் சிம்மத்தினுடையது  சமையலுக்கு பயன்படும் நெருப்பு என்று சொல்லலாம். .  ஆனால் தனுசுவின் நெருப்பு என்பது கோவிலில் உள்ள  விளக்கில் உள்ள நெருப்பு போல குளுமையானது, மனதுக்கு இதம் கொடுக்க கூடியது!!

  • புத்திசாலித்தனம், ஒழுக்கம், தவறு செய்ய அஞ்சுதல், இன்னொருவர் தனக்கு தீங்கு  செய்தாலும், பழி வாங்க நினைக்காமல், கடவுளிடம் விட்டுவிட்டு நகர்பவர்கள் எல்லாம் இந்த இலக்கினத்தை சேர்ந்தவர்கள் தான்.  கால புருஷனின் ஒன்பதாவது வீடு. சர ராசி,  ஆண் ராசி என்று எவ்வளவு இந்த இலக்கினத்தின் குணம் பற்றி சொன்னாலும் முக்கியமாக சொல்ல வேண்டியது இவர்கள் மென்மையான தன்மை கொண்டவர்கள் என்பது தான். 

  • வேத சாஸ்திரம்,  உலக ஞானம், அறிந்தவர்கள்.    குருவின் இரண்டு வீடுகளில் இதற்கு மட்டும் என்ன தனி சிறப்பு என்றால்,  இன்னொரு வீடான மீனத்தில்  சுக்கிரன் உச்சத்தில் இருப்பார் என்பதாலும்,  கால புருஷனின் இறுதி இடமான படுக்கை அறையை குறிப்பது மீனம் என்றால் தனுசு இராசி/இலக்கினத்தை  கோயில் என்று சொல்லலாம்!!  
 


  • அதே போல இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.  அதனால் தானோ என்னவோ இரவில் வெகு நேரம் விழித்து வேலை செய்யக்  கூடியவர்கள். 
  • எந்த ஒளிவு மறைவின்றி மற்றவரை மனம் திறந்து பாராட்டக் கூடிய மனம் படைத்தவர்கள். 
  • முகத்தில் அமைதியும் பிரியமும்,  கனிவும் நிரம்பிய தோற்றம் கொண்டவர்கள்.  சமயோசித புத்திக்  கூர்மை உள்ளவர்கள். ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர்கள். அன்புக்கு மட்டுமே அடிபணிய கூடியவர்கள். தனக்கு பிரியமானவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் தன மதிநுட்பத்தால்  அவர்களுக்கு உதவி செய்து கைதூக்கி விடக்கூடியவர்கள். மற்றவருக்கு வழிகாட்டக்\கூடிய தொழிலில் தனுசு இலக்கினக்காரர்களை அதிகம் பார்க்கலாம்.   
  • தெய்வ பக்தி கொண்டவர்கள். மனமறிந்து தவறு செய்ய அஞ்சுபவர்கள்.  மற்றவர் தன்னை பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சுபவர்கள். 
  • குருவை அதிபதியாக கொண்ட இவர்களுக்கு வசதி வாய்ப்பிற்கு குறைவு இருக்காது என்றாலும், சொகுசு வாழ்க்கைக்கு காரகனான சுக்கிரன் இந்த லக்கினத்திற்கு பகை என்பதால் அந்த கிரகம் 3, 11 போன்ற மறைவு ஸ்தானங்களில் நட்பு நிலையில் இருந்தால் யோகம் தரக்கூடியது .
  •  பூர்வீக சொத்து ஏதும் இல்லையென்றாலும், தன்னுடைய உழைப்பினாலேயே வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள கூடியவர்கள்.  அதற்காக முனைபவர்கள். சுதந்திரம், சாகசம் மற்றும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். தனுசுவின் சின்னமே சொல்லுமே அதை பற்றி!!
  • இயற்கையாகவே உற்சாகம், ஆர்வம், நேர்மறை சிந்தனை மற்றும் ஆற்றல் மிக்கவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத, மகிழ்ச்சிக்கான தொடர் தேடலில் இருப்பவர்கள். அமைதியான, நம்பிக்கையான மனநிலையில் இருப்பது இவர்களின் குணம். நகைச்சுவையான   இயல்புடன் இருப்பார்கள். தங்களை பற்றி ஒரு இமேஜ் வைத்திருப்பதால், மிகவும் நெருங்கியவர்களிடமே தங்களின் மனம் திறந்து பேசுவார்கள். உள்ளுணர்வு திறன் கொண்டவர்கள்.  
இந்த இலக்கினத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை, பார்வை மற்றும் வர்கோத்தமம் அடைந்த கிரகங்களின் தன்மையை கொண்டு இவர்களின் குணத்தில் மாற்றம் ஏற்படலாம்.  

  • எந்த சுக்கிரன் தசை நடந்தால் யோகம் என்பார்களோ, அந்த சுக்கிரன் இந்த இலக்கினக்காரர்களுக்கு அவயோகர்.  அதே போல புத்திக்காரகனான புதனும்.  சனி  தேய்பிறை சந்திரன், ஆகிய பாபர்களும் இவர்களுக்கு  அவயோகர்கள் தான் என்றாலும் எல்லோரையும் கெடுக்கும் சனி சற்று சாந்தமடைவது குருவோடு இருக்கும்போது  அல்லது  பார்க்கும்போது!! 
  • இந்த லக்கினத்தில் உள்ள எந்த கிரகத்திற்கும், பகை, நீச்சம் என்ற அமைப்பு இல்லை. 
அதுவே மிதுன லக்கினக்காரர்களுக்கும். 
  • இந்த லக்கினத்தில் உள்ள இராகுவிற்கு தான் "கோதண்ட இராகு" என்ற பெயர். ஏன்  தெரியுமா? "தனுசு " என்றால் வில்", " கோதண்டம்" . அதைக் கொண்டு இராமர் இராவணனை வதம் செய்ய போர் புரிந்தபோது அந்த தனுசில் இருந்த இராகு தான் இராமர் வெற்றி பெற்ற உதவினார் என்பதால் அந்த பெயர் வந்தது.
பொதுவாக ராகு எந்த வீட்டில் நிற்கிறாரோ அந்த வீட்டின் பலனை வழங்குவார் இல்லையா?? லக்னம் எதுவானாலும் தனுசுவில் உள்ள ராகுவால் கெடுபலன் அதிகமில்லை, நற்பலனே அதிகம் தருவார், அதுவும் குரு நல்ல நிலையில் இருந்துவிட்டால் யோகப்பலனைக்கூட வாரி தந்துவிடும், அதுவும் கோதண்ட ராகு இழந்ததையெல்லாம் திரும்ப பெற வைத்து விடும்!!

 இதற்கு நேர் எதிர்..சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்தில் உள்ள இராகு. சுக்கிரனின் ஆதிபத்தியத்தை அப்படியே எடுத்து தனுசு லக்கினக்காரர்களுக்கு வைத்து செய்து விடுவார்!!!😀😀😀😀

  •  ஆனால் ஒன்று ..ஒரு கெட்டவன் நல்லது செய்யும் ஒரேயொரு - சந்தர்ப்பம் கிடைத்து செய்தால் அவன் நல்லவனாக மாறிவிடுவானா என்று சொல்லமுடியாது.  ஆனால், ஒரு நல்லவன் தவறு செய்யும் ஒரேயொரு சூழல் அமைந்து, அவனும் அதை செய்துவிட்டால், பிறகு திருத்தவே முடியாத குற்றம் செய்யக்கூடியவனாகிறான். 

"ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல "!!.    வழிதவறி போன நிறைய நேர்மையான அரசு அதிகாரிகளை இது போல பார்த்திருக்கிறேன். 

என்ன..தாங்கள் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பிக்கவும், தப்பை  திருத்தமாக செய்யவும் பழகிப் போவார்கள்!!  அவர்கள் ஜாதகத்தை பார்த்தால் தெரியும் பாபத்துவமான சனி இருப்பதை!!

  • உபய  இராசிக்காரர்களாகிய இவர்களுக்கு மாரகாதிபதியாக 7 ம் பாவ அதிபதியும்  11 பாவ அதிபதியும்  வருவார்கள். அதுவும் இதே 7ம பாவ அதிபதிதான் பாதகாதிபதியும் கூட.   ஏழாம் பாவம் என்பது இவருடைய வாழ்க்கை துனையை, நண்பர்களை குறிப்பது. அதனால் தன்னுடைய வாழ்க்கை துணையால் துன்பமும் தொல்லையும் அனுபவிப்பவர்கள்.  அதுவும் இவர்களின் துணைக்கும் ஆண் ராசியாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்!! இவர்களை அத்காரம் செய்ய அவர்கள் முயல்வதும், அதற்கு அடிபணிய மறுக்கும் இவர்களுக்கும் ஒரு பனிப்போர் நடுவில் இருந்துக் கொண்டே இருக்கும். 
ஆனால் தனுசு இலக்கின ஆண்கள் . பெண்களை மதிப்பவர்களாகவும் , பொதுவாகவே யார் இவர்களுக்கு தீங்கு செய்தாலும், ஒதுங்கிப்  போபவர்கள் என்பதால், இவர்கள் இல் வாழ்க்கையில் பெரிதாக பிரச்சினை ஏதும் இருக்காது. வெகு அரிதாகத்  தான் இவர்கள் மணவிலக்கு பெறுபவர்களாக இருப்பார்கள். இரண்டு தனுசு ராசியினர் அல்லது ததுசு-சிம்ம ராசியினர்,  அற்புதமான  காதல் ஜோடிகள். இருப்பினும், இந்த இரட்டையர்கள் ஒருவர் மற்றொருவர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் உரசல்கள் அதிகம் ஏற்படும்!!

  • ஊருக்கே குளுமை தரும் நிலவு இவர்களுக்கு எட்டாம் பாவ அதிபதியாக வருகிறார்.  அதுவும் சந்திரன் இவருக்கு நண்பர்!!  இருந்தாலும் கடமையை செய்யாமல் விட்டுவிடுவாரா??  அவரிடம் என்ன உள்ளதோ அதை தப்பாமல் தனுசு இலக்கினக்காரகளுக்கு செய்வார். ஆனாலும் கடவுள் எவ்வளவு கருணை உள்ளவர் பாருங்கள்..குரு உச்சம் அடைவது  சந்திரன் ஆட்சி செய்யும் கடகத்தில் தான்!! 
இன்றும்  நீதிடா, நேர்மை டா, நியாயம்டா என்று பேசும் தனுசு லக்கினக்காரர்கள் என்றும் என் மனம் கவர்நதவர்கள்!




 





1 கருத்து:

  1. பெயரில்லா9 மே, 2022 அன்று 12:08 PM

    மேடம் நீங்கள் ஜாதகம் பார்த்து கூறுவீர்களா? இப்பொழுது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையில் உள்ளேன். அடுத்து என்ன நடக்குமோ என்ற பெருங்குழப்பம். கப்பல் போன்ற காரில் சென்றுகொண்டு இருந்தவன் இப்பொழுது ரேஷன் அரிசி சாப்பிடும் சூழ்நிலையில் உள்ளேன். இந்த வாழ்க்கை வாழ்வதற்கு மரணமே மேல் என்னும் சூழ்நிலை. உதவி செய்வீர்களா?

    பதிலளிநீக்கு