மனதில் நின்றவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனதில் நின்றவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

யாதும் ஆகி நின்றாய் காளி... பாரதியார்

 


யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீநி றைந்தாய்;தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;

பூத மைந்தும் ஆனாய்-காளி!-
பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-
பொறியை விஞ்சி நின்றாய் 

இன்ப மாகி விட்டாய்-காளி!-
என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-
பிறிது நானும் உண்டோ?

அன்ப ளித்து விட்டாய்-காளி!-
ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-
தொல்லை போக்கிவிட்டாய் 


காளி ஸ்தோத்திரம் 

யாதுமாகி நின்றாய்-காளி!-
எங்கும் நீநி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-
செயல்க ளன்றி யில்லை.

போதும் இங்கு மாந்தர்-வாழும்-
பொய்மை வாழ்க்கை யெல்லாம் ஆதிசக்தி,  தாயே!-என் மீதருள் புரிந்து காப்பாய். 

எந்த நாளும் நின்மேல்-தாயே!
இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!
கருணை வெள்ள மானாய்!

மந்த மாரு தத்தில்-வானில்-
மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும் அங்குன்-
செம்மை தோன்று மன்றே 

கர்ம் யோக மொன்றே-உலகில்-
காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-
தவற லென்ப தின்றி,

மர்ம மான பொருளாம்-நின்தன்-
மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-
தேசு கூட வேண்டும். 

என்த னுள்ள வெளியில்-ஞானத்-
திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும்-மேருக்-
கோல மொத்த வடிவும்,

நன்றை நாடு மனமும்-நீயெந்-
நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-
உழலும் நெஞ்சம் வேண்டா. 

வான கத்தி னொளியைக்-கண்டே-
மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-
எந்த நாளும் வாழ்வேன்;

ஞான மொத்த தம்மா!-உவமை-
நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின்-அழகை-
வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம்-தருமோர்-
நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை-எவரே-
தேடி யோத வல்லார்?


வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-
மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால்-ஆங்கே-
நெஞ்சி ளக்க மெய்தும். 

காளி மீது நெஞ்சம்-என்றும்-
கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும், பாரில்-
வேந்த ரேத்து புகழும்,

யாளி யொத்த வலியும்-என்றும்-
இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!
வாழ்க நின்தன் அருளே!

வெள்ளி, 4 ஜூன், 2021

2020 ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணம் எது?

என் பெற்றோர் இவ்வுலகை விட்டு போன பின் திருமணம். மாமியாரும் இல்லை என்ற போது பிரியம் காட்ட கணவரை தவிர்த்து யாரும் இல்லை என்ற நிலைக்கு போனேன்.ஆனால் அவருக்கும் வார இறுதியில் மட்டுமே வீட்டிற்கு வர முடியும் என்ற நிலையில் பணி..

தனிமை மிகக் கொடுமை என்று உணர்ந்த தருணம் அது.பெரிய குடும்பத்தில் பிறந்து, யாரும் இன்றி வேறு ஒரு ஊரில் தனியாக வாழ்வது எவ்வளவு கொடுமை. வாசிப்பை தீவிரமாய் ஆட்கொண்ட தருணம்.அது..

இறைவன் கருணையுள்ளவன். திருமணம் ஆன ஒரே வருடத்தில் குழந்தை. .என் தனிமை போனது. என் மகளே எனக்கு தோழியானாள்!!.😂

ஆனால் எண்ணி மூன்று மாதம் தான் விடுப்பு. நீடிப்பு கேட்டு அனுப்பிய கடிதம் கையிலேயே திரும்ப கிடைத்தது.வேறு வழியில்லை….

கைக்குழந்தையோடு வேலைக்கு திரும்பியாயிற்று..ஒரு பை நிறைய குழந்தை துணிகள், இன்னொன்றில் உணவு , அடுத்ததில் விளையாட்டு சாமான்கள்… இப்படி தான் தினம் கிளம்புவேன்..குழந்தை டைப்ரைட்டர் சத்தத்தில் தூங்க பழகி கொண்டாள். அவள் எழும் நேரம் அலுவலக உதவியாளர் தொட்டில் ஆட்டி தூங்க வைக்க, மற்ற நேரம் பெண் ஊழியர்கள் பார்த்துக் கொள்ள அவளும் நானும் என் வாசிப்பும் இணைபிரியாமல் இருந்தோம்.

அதுவும் ஆறு மாதம் தான்.பிறகு அப்படி கொண்டு போக முடியவில்லை. உணவு இடைவெளியில் ஓடி வருவேன்.வேலை முடித்து வரும்போது மகள் தூங்கியிருப்பாள். எனக்கு தூக்கம் வர ஆரம்பிக்கும் போது எழுந்துக் கொள்வாள்.

சரியான தூக்கம் இல்லாமல் குழந்தை, வேலை உடல் அசதி என்று எனக்குள் போராடிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டாவதாக நான் தாயானபோது அந்த நான்கு மாத விடுப்பிறகுத்தான் ஏங்கியிருந்தேன் என்பது தான் உண்மை. நாங்கள் மூவரானோம்.. 😁😄

கிடைத்த சின்ன சின்ன கால இடைவெளியில் எங்களின் பிணைப்பை உறுதிசெய்து கொண்டோம். குழந்தைகள் இருவரையும் கவனிக்க ஆளில்லாமல் பெரியவளை ப்ளே ஸ்கூலிலும் சின்னவளை க்ரேஷிலும் விட்டுவிட்டு ஓடி……ஓடி…இரண்டு வருடங்கள்.. இப்போது கணவருடன் ஒரே இடத்தில் குடிபோனோம்.. ஒரே சின்ன மாற்றம்… காலை போனால் இரவு தான் சந்திப்பு…

அடுத்து வந்தது எனக்கு வெளியூர் வாசம். வார இறுதியில் குழந்தைகளை பார்க்க வரும் விருந்தாளியாக நான் ..

குழந்தை பிறந்த நாளுக்கு கூட வர முடியாமல், எப்படியும் அன்று நாள் முடிவதற்குள் வர வேண்டும் என்று வேலை முடிந்ததும் பயணித்து, இரவு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் பக்கமாக பரிசுப்பொருளை வைத்து விட்டு நெஞ்சு கனத்து நின்ற தருணம் …உண்டு..😥

யாருக்காக ஓடி ஓடி வேலை செய்கிறோம்? என் குழந்தைகள் முதல் முதலில் தவழ ஆரம்பித்த தருணம், எழுந்து நிற்க ஆரம்பித்தது எதுவும் பார்த்தது கிடையாது…என்ன ஒரு வாழ்க்கை என்று மனசு சலிக்க ஆரம்பித்த போது தான் வந்தது கொரானா. …

ஊரெல்லாம் திமிலோகப்பட்டிருக்க, என் குடும்பத்துடன் நான் உடன் இருக்கும் இந்த தருணம்..என்ன ஒரு மகிழ்ச்சி..🤣

எந்தவித பரபரப்பு இல்லை. பணியும் இல்லை.பள்ளியும் இல்லை. இப்போது ஆன்லைனோ ஆப் லைனோ வேலை செய்தாலும் நானும் என் கணவர் குழந்தைகள் என்று ஒன்றாக சேர்ந்து இருக்கும் இந்த நிலை. ..இனி எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது

கிடைத்த இந்த நேரத்தில் தான் கோராவில் எழுத ஆரம்பித்தேன். நான் ரொம்ப நேசிக்கும் வாசிப்பு எனக்கு கை கொடுத்தது. கோராவின் தயவில் நானும் எழுத்தாளரானேன்.😂 உறவுகளை தொலைத்த எனக்கு ஆயிரம் புது உறவுகள் கிடைத்தது இங்கு…. சாரி 2000துக்கும் மேற்பட்டவை..😄

பழகலாம் வாங்க !! களத்தின் உறவுகளை சொன்னேன்!!🤣🙏

இதோ ஒரு மில்லியன் தாண்டிய பார்வைகள்.. 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவு வாக்குகள்..என்னை எழுத்தாளியாகவும் ஏற்றுக்கொண்ட அன்பு கோரா சொந்தங்கள்..நன்றி..😂😀🙏🙏

வரவிருக்கும் புத்தாண்டில் அவர்களும் பள்ளிக்கு போக ஆரம்பிக்கலாம். . எங்களின் கூடும் நேரம் குறையலாம்..பணி சுமையால் கோராவில் எழுதும் என் நேரம் மாறலாம்.😦

ஆனால் இப்போதுள்ள இந்த மகிழ்ச்சியான தருணங்கள் கோராவும் கொரானாவும் 2020ல் எனக்கு கொடுத்தது, சொல்லில் விவரிக்க முடியாதவை. என் வாழ்வில் மறக்க முடியாதவை.

என்றென்றும் நன்றியுடன் 🙏🙏🙏

ஸ்ரீஜா.


திங்கள், 31 மே, 2021

மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தா அம்மாவை பற்றி கூற முடியுமா?

 




டாக்டர் சாந்தா அம்மா …😥😥 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை, மாரடைப்பால், தனது 93 வயதில் காலமானார்.

புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்த டாக்டர் சாந்தா அம்மாவிற்கு இந்தியாவின் விஞ்ஞானிகள், புற்றுநோயியல் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல மக்களாகிய நாமும் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம்.

நான் முதன்முதலில் அடையார் புற்றுநோய் நிறுவனத்தை பார்வையிட்ட போது, . அதன் தனித்துவமான தன்மையை என்னால் உடனடியாக உணர முடிந்தது. சாதாரண பின்னணியில் இருந்து வந்த பல நோயாளிகள் அங்கு இருந்தனர்; மருத்துவ ஊழியர்கள், அதிக நேரம் வேலை செய்தாலும், அதிநவீன தொழில்நுட்பத்தில் திறமையானவர்கள் என்றாலும் நோயாளிகளிடம் அனுதாபம் கொண்டவர்களாக இருந்தனர்; பராமரிப்பு வசதிகள் எளிமையாகவும் போதுமானதாகவும் இருந்தது. கிராமப்புற நோயாளிகளுடன் உறவினர்கள் விசாலமான மைதானத்தில் குழுமியிருக்க, ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறார்கள். நீண்ட வரிசைகள் இருந்த்தாலும், அனைத்து நோயாளிகளுக்கும் அதே நாளில் பரிசோதனைப் பணி தொடங்கப்படுகிறது..

வேலை. வருமான அடிப்படையிலான வேறுபாடுகளின்படி கட்டணம் செலுத்தும் முறை இருக்கிறது. என்றாலும். மருத்துவ சிகிச்சையில் நோயாளிகளுக்குள் வேறுபாடு இல்லாதது: எந்த விதத்திளாவது உயிரைக் காப்பாற்றுவதற்கான முன்னுரிமை, கொடுக்கப்படுவது; முக்கிய சிகிச்சைக்கான மேம்பட்ட தொழில்நுட்பம் : ஒட்டுமொத்தமாக ஒரு அரசு மருத்துவமனை போன்ற உணர்வும் கொடுக்கவில்லை.தனியார் மருத்துவமனையில் உள்ளது போன்றும் தோன்றவில்லை.. ஒரு தன்னாரவுள்ள தொண்டுள்ளத்துடன் , அங்குள்ள ஒவ்வொரு ஊழியரும் செயல்படுவது தெரிந்தது.

அந்த உணர்வு தான், என்னையும் ஈர்த்து, அங்கு தனியே அமைந்திருந்த குழந்தைகள் பிரிவுக்கு வார இறுதியில் சென்று, கதை படித்துக் காட்டவும், பாடம் சொல்லிக் கொடுக்கவும் செல்ல வைத்தது. அப்படி சென்ற வகையில் கொடுத்தது தான் தலைமுடி தானம். அது குறித்து என் பதிவு[1]

.1954 இந்தியா எப்படி இருந்தது என்று நமக்கு தெரிந்திருக்கும். .-பெரும் வறுமை, கொடிய தொற்று நோய்கள், அண்டை நாடுகளுடனான பிராந்திய பதட்டங்கள், கல்வியறிவின்மை மற்றும் அப்போது தான் கிடைத்திருந்த ஒரு புதிய சுதந்திரம் ஆகியவற்றை அடக்கியிருந்தது.

அந்த சமயம், டாக்டர் சாந்தா அம்மா, அடையார் புற்றுநோய் நிலையத்தில் மருத்துவராக சேர்ந்த போது அங்கு இருந்தது அவரோடு சேர்த்து இரண்டு மருத்துவர்கள் தான்.12 படுக்கைகள் மட்டுமே..

ஆரம்ப காலத்திலிருந்தே அடையார் புற்றுநோய் நிறுவனம், "கர்ம நோய்"என்றும் இதற்கு "மரணம் மட்டுமே தீர்வு" என்பதை போக்கி, புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்று மக்களிடையே விழிப்புணர்வு கொண்டு வருவதிலும் முனைப்பு காட்டியது. பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் குறித்த விரிவான பதிவுகள் பராமரிக்கப்பட்டன; திரும்ப சிகிச்சைக்கு வராத கிராமப்புற நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்களை அனுப்பி வரவழைத்த சம்பவங்களும் உண்டு !!

..அந்த நிறுவனத்தை தொடங்கியது டாக்டர் முத்துலட்சமி ஆயிற்றே…அவரின் வீச்சு இவரை தொற்றாதோ!!

1964 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த தேசிய புற்றுநோய் மாநாட்டு அமர்வில் டாக்டர் சாந்தா அம்மா (முன் வரிசை, வலது மூலையில்), உலகம் முழுவதிலுமிருந்து இந்த துறையில் அறியப்பட்ட பெயர்களில் கலந்து கொண்டார். மாநாட்டின் இடமாக ஒரு மாணவர்களின் வகுப்பறை அந்தக் காலத்தின் கருத்தியல் உணர்வை எடுத்துக்காட்டுகிறது

டாக்டர் சாந்தா அம்மாவே சொல்வது போல " "தனது நோயாளிகளில் 60% நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது அதிக மானிய விலையில் சிகிச்சை அளிக்கும் புற்றுநோய் நிறுவனத்தின்" தலைவராக, டாக்டர் சாந்தா அம்மா ஆன போது புற்றுநோய் ஒரு மோசமான விலையுயர்ந்த நோயாக இருந்தது,

1961 ஆம் ஆண்டு டாக்டர் சாந்தா அம்மாவும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் நேருவை அழைத்து வந்தபோது, குணப்படுத்தப்பட்ட நோயாளிகள் வரிசையில் நின்று அவரை வரவேற்றனர்.

அவர் வாழ்நாள் சாதனைகள்

  • இந்தியாவில் மலிவு விலையில் புற்றுநோயை சிகிச்சையைத் தொடங்கினார்.
  • இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு மலிவு, சான்றுகள் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையின் முதல் முயற்சிகளில் ஒன்றைத் தொடங்கிய பெருமை டாக்டர் சாந்தா அம்மாவுக்கு உண்டு. இந்த குழுக்களுக்கு நிலையான கவனிப்புடன் சிகிச்சையளிப்பதற்கான அவரது முயற்சிகள் இன்றுவரை தொடர்கின்றன.
  • புற்றுநோயியல் நிபுணரான அவர் பலவற்றில் முதல்வராக இருந்தார் -
    • முதல் குழந்தை புற்றுநோயியல் கிளினிக்கைத் தொடங்கினார்,
    • முதலில் இந்தியாவில் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்தை நிறுவினார்,
    • முதலில் புற்றுநோயியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
    • இந்தியாவில் முதல் பரம்பரை புற்றுநோய் கிளினிக் திறக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். -
    • இந்தியாவின் முதல் பெரிய புற்றுநோய் கணக்கெடுப்புகளில் ஒன்றை நடத்தியது.
    • புற்றுநோயியல் நிபுணராக இருந்ததோடு மட்டுமல்லாமல், கூடுதலாக, டாக்டர் சாந்தா ஒரு ஆராய்ச்சியாளராகவும் இருந்தார். வாய்வழி புற்றுநோய்க்கான சிகிச்சையில் கதிர்வீச்சு மற்றும் ப்ளியோமைசின் (ஒரு கீமோ மருந்து) ஆகியவற்றின் விளைவுகளை ஒப்பிட்டு, இந்தியாவில் முதல் சேர்க்கை கீமோதெரபி சோதனைகளில் ஒன்றை அவர் நடத்தினார்.
    • அவரது பிற்கால வாழ்க்கையில், அவரது ஆராய்ச்சி பெரும்பாலும் இந்தியாவில் புற்றுநோய் தொற்றுநோயியல் மீது …வயிற்று புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள் முதல் குழந்தை பருவ புற்றுநோய்கள் வரையிலான ஆய்வுகள், இந்திய ஆண்களில் வாய்வழி மற்றும் ஓசோஃபேஜியல் புற்றுநோய்களின் அபாயத்துடன் தொடர்புடைய புகையிலை மெல்லும் ஆபத்துகள் குறித்த உறுதியான அறிக்கை வரை கவனம் செலுத்தியது - .
    • இப்போது இன்றியமையாததாகக் கருதப்படும். புற்றுநோய் சிகிச்சையில் மிக முக்கியமான கருவியாக மரபணு விவரக்குறிப்பைப் பயன்படுத்தி புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தார்.

அவர் வகித்த பதவிகள்

  • இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் (1988-1990) தலைவராக பணியாற்றினார்
  • 2005 வரை WHO ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.
  • ஒரு தேசிய மருத்துவ அறிவியல் அகாடமி (இந்தியா) சக உறுப்பினராகவும் இருந்தார்.

அவர் பெற்ற பட்டங்கள்

  • புற்றுநோய் சிகிச்சை வக்காலத்து மற்றும் ஆராய்ச்சியில் அவர் பணியாற்றியதற்காக, பத்மஸ்ரீ, பத்மா உட்பட பல விருதுகளைப் பெற்றார்.
  • 2006 இல் பூஷன்
  • 2016 இல் பத்ம விபூஷன் மற்றும் ரமோன் மாக்சேசே விருது.

சி.வி. ராமன் முதல் சுப்ரமண்யன் சந்திரசேகர் வரை யுள்ள ஒரு வலுவான கல்வி வம்சாவளியை கொண்ட அவர் குடும்பம் தான் டாக்டர் சாந்தா அம்மாவை மருத்துவ புற்றுநோயியல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி என்று பெரிதும் அறியப்படாத துறையில் நுழையத தூண்டி இருக்கும் . என்று நினைக்கிறேன்.

இன்றைய மருத்துவர்களின் கவனிப்பு குறித்து கேட்டபோது, டாக்டர் அம்மா கூறியது "நான் இது குறித்து பேச தயங்குகிறேன், ஏனென்றால் நான் அதைப் பற்றி மகிழ்ச்சியடையவில்லை. இப்போது நோயாளி _-மருத்துவர் உறவு இல்லை. பச்சாத்தாபம் இல்லை. இரக்கம் இல்லை. அவர்கள் நோயாளிகளை ஒரு நுகர்வோர் பொருள் போலவே நடத்துகிறார்கள் ... தங்கள் குடும்பத்திற்கு நேரம் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆம், குடும்ப நேரம் கட்டாயமாகும். ஆனால் நான் சொல்கிறேன், 24 மணி நேரத்தில், நீங்கள் நேரத்தை உருவாக்க முடியும், நீங்கள் எப்போதும் நேரத்தைக் காணலாம். ”

"உங்கள் கைகளின் அதிர்வு அவர்களுக்கு செல்ல வேண்டும். நீங்கள் அவர்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…" என்று மருத்துவர்களை பார்த்து அவர் சொல்லும் போது தான், நம்மிடம் தொலைந்து போன "குடும்ப மருத்துவரின்" முக்கியத்துவம் புரிகிறது.

புற்றுநோய் நோயாளிகள் குறித்து அவர் சொன்ன வார்த்தைகள் சத்தியமானவை "இறக்கும் போது, ​​மக்கள் எதையும் விரும்புவதில்லை. அங்குள்ள ஒருவர் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வளவு நோய்வாய்ப்படாத போது, ​​அதற்காக மெதுவாக அவர்களை தயார் செய்ய வேண்டும். நம்பிக்கை இல்லாதபோதும், அவற்றைத் தக்கவைக்க நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். இது ஒரு கடினமான விஷயம்"

அம்மாவின் கனிவு ததும்பு கவனிப்பே, நோயாளிகளை குணப்படுத்த முக்கிய காரணி. அவர் கோவிலுக்கு போனதில்லை. .நேரம் இல்லை என்பது மட்டுமல்ல.. தன் இருப்பிடத்தையே கோயிலாக்கி கொண்டதால்…

பொதுவாக எல்லாத் தாய்மாரிடமும் ஒரு குறையை பார்க்கலாம்…ஒளி வீசும் மெழுகுவர்த்திக்கு கீழே இருக்கும் இருட்டு போல….தன் குழந்தைக்கு மட்டும் தனிப் பிரியம் காட்டுவாள். .

அவளே தெய்வ நிலைக்கு வைக்கப்படும் போது, ..

அந்த இருள் கூட அறியாத இந்த தெய்வத்தை..இழந்த அந்த கோயில்….!!

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.


வெள்ளி, 28 மே, 2021

மே18 நாளின் முக்கியத்துவம் என்ன?

 




பிறந்த தேதி: 26 நவம்பர், 1954

பிறந்த இடம்: வல்வெட்டித்துறை, இலங்கை

இறந்த தேதி: 18 மே, 2009

இறந்த இடம்: முல்லைத்தீவு, இலங்கை

ஈழத்தீவு, தமிழர்களின் பூர்விக நிலம் என்னும்போது, அங்கு சிங்களவர்கள் இனம் குடியேறியதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் அனைத்தும் சிங்களவர்களின் கைக்குப் போனதோடு அல்லாமல், தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்க ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்து பன்னெடுங்காலம் அரசை எதிர்த்து, ஈழ மக்களை திரட்டி, உரிமைப் போர் நடத்தியவர். தமிழ் நாடும் அவர்களுக்கு துணை நின்றது என்றும் சொல்லலாம்.

"ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." என்றவர் பிரபாகரன்.

அவர் எடுத்த ஒரு தவறான முடிவு. நம் .நாட்டையே உலுக்க, ஆனாலஅதை "ஒரு துன்பியல் சம்பவம்" என்று சாதாரணமாக அவர் புறந்தள்ளிப் போனது தான், இந்திய மக்களை, அவர் படையின் மீது கொண்ட நேசத்தை பிரித்தது என நினைக்கிறேன்.

ஏனெனில் இந்திய அமைதி படை, இலங்கைக்கு போன போது, தமிழ்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஓரளவு அறிவேன்.

அது குறித்து புரியாத வயது எனக்கு. இருந்தும் ஆர்வ மிகுதியால், அண்டை நாட்டிற்கு, நம் இராணுவம், நம் இந மக்களுக்கு எதிராக போர் புரிய போகலாமா? என்று கேள்வி கேட்டு அப்போது பிரதமராயிருந்த ராஜீவ் காந்திக்கு நான் கடிதம் ஒன்று எழுதினேன்.

ஆச்சரியத்தில் ஆச்சரியமாக அதற்கு அவர் கையெழுத்திட்ட பதில் கடிதம் வந்தது!!

அதை இன்றும் பொக்கிஷமாக வைத்துள்ளேன்.

"பக்கத்து வீட்டில் தீ பிடித்தால் பார்த்துக்கொண்டிருப்போமா? நல்லெண்ணத்தின் அடிப்படையில், அங்கு அமைதி கொண்டு வரவே அனுப்பப்பட்டது" என்றது அந்த கடிதம்..

அந்த கடிதம் அப்போது என்னை சுற்று வட்டாரத்தில்,பிரபலமாக்கியது எனலாம்.

ஆனால்..நடந்தது விதி…அதை நடத்தியது அவர் மதி…

யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரம்…

அதற்கு அவர் கொடுத்த விலை தான் அதிகம். சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டது..அதுவும் அந்த பச்சை மண்ணும் முடிக்கப்பட்டது,

ஜீரணிக்க முடியாத "துன்பியல் சம்பவங்கள்

அனைவருக்குமான கல்வியை கொடுத்த மெக்காலேயை பார்ப்பனர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

 மெக்காலே யார்?

அவருக்கு ஏன் இந்திய கல்வி முறையில் திருத்தம் செய்யும் எண்ணம் ஏற்பட்டது? என்று தெரிந்துக் கொண்டால் தால் அவர் கொண்டு வந்த கல்விமுறையை பற்றி பேச முடியும். அவர் ஹீரோவா வில்லனா என்று தெரிந்து போகும்.

இது பற்றி டாக்டர் ஷாலினி எழுதிய "மறைக்கப்பட்ட இந்து மதம்". தொகுப்பிலிருந்து;

அதற்கு சற்று பின்னோக்கி வரலாறை பார்த்தால், வணிக நோக்கில் வந்த இந்த கிழக்கிந்திய கம்பனி, அப்போதிருந்த டெல்லி பேரரசுக்கு வருடம் தோறும் பணம் கட்டியது.

1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி,இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று? என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை

அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி, சமஸ்கிரிதம் வளர்க்கவும், மதராசாவில் அரபிக் கற்பிக்கவும் தான் செலவாயிற்று என தெரிய வந்தபோது அது பிரிட்டிஷ்ஷாருக்கு அதிருப்தியை தந்தது.

காரணம் பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது. எல்லா மனிதருக்கும் பொதுவானது. முக்கியமாய் பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப் பட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பெண்களை விடுங்கள், பிராமணரை தவிற வேறு எந்த வர்ணத்தை சேர்ந்த ஆண்களுமே கல்விகற்கவே கூடாது என்கிற விதி இருந்தது.

மனுஸ்மிரிதி!!

இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்கலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

யார் இந்த தாமஸ் மெக்கலே?

அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தளர், பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி.

இந்த லார்ட் மெக்கலே இந்தியாவிற்கு விஜயம் செய்தார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார். அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் அத்துப்படி என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் என்பதால் அதுவும் கற்றார்.

பிறகு அவர் வெளியிட்ட குறிப்புகள் Minute on indian Education எனும் உரை, பிறகு Macaulay's Minutes என்று பிரசித்தி பெற்றது.

அதில் மெக்காலே சொன்னது என்னவென்றால்?

1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளைஅனைத்தையும் ஒன்று திரட்டிப்பார்த்தாலும், அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி நூல்களை விட குறைவான தகவலே கொண்டுள்ளன.

2. இந்தியாவில் இது வரை சமஸ்கிருதத்திலும் அரபிக்கிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்ததாக இல்லை

3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான,காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்

4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு. அது அனைவருக்கும் போய் சேரவில்லை.

மெக்காலேவின் எண்ணம் எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

இந்தியர்கள் அனைவரும் வெளிதோற்றத்தில் பழுப்பு நிறத்தவராய் இருந்தாலும், எண்ணத்திலும் நாகரீகத்திலும், நேர்த்தியிலும், ரசனையிலும் பிரிட்டிஷாரை போல முற்போக்காய் இருக்க வேண்டும். சமத்துவ நிலையை அடைய வேண்டும். அதற்கு ஆகும் செலவை மனிதாபிமான அடிப்படையில் பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு என்றே அவர்கள் நினைத்தார்கள். ஆனால் தாம்ஸ் மெக்கலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர். மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்கமுடியவில்லை.

இதற்கு இடையில் 1833ரில் இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது வரை சில பிரெசிடென்சிகளை மட்டுமே ஆண்டுவந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பை ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டது. லார்ட் வில்லியம் பெண்டிங் ஒருகிணைந்த இந்திய பிரதேசத்தின் முதல் கவர்னர் ஜெனரலான பொருப்பேற்றார்.

அவர் பொருப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்: பெங்கால் சதி தடை சட்டம்.

ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது "சதி ஏறுதல்" எனும் மிகவும் கொடூரமான சம்ப்ரதாயம்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால், மனைவி விரும்பினால் மறுமணம் செய்துக்கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.

ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால், அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின்சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.

பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அந்த பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம்! அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம். இதை விட்டுவிட்டு ஆரோகியமான ஓர் இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்! என்ன லாபம் தெரியுமா?

கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய், அடுத்த ஜென்மத்தில் புனித க்ஷேத்ரமான காசியில், புனித நதியான கங்கையின் கரையில், புனியாத்மாவான பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான். அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!

அந்த பெண்ணுக்கு வலிக்குமே?

ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது!

எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம்! அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!..... என்று சொல்லி, அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரைநிர்வானமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல, கற்புக்கரசிக்கான போட்டி- கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டிவிட்டார்கள்கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள். உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை. பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிற வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறசீற்றம் பீரிட்டது. அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை, காசி புனித தளம் இல்லை, ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை. பிராமணர் உயர்ந்தவர் என்றோ, பிராமணருக்கு தக்ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த அப்பட்டமான சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது. இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற காட்டம்! சதியை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்கலேவின் அறிவுரையின்படி, அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்: இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க,ஆங்கிலமே கல்விக்கான மொழி! ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை, எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது.

இதனோடு, நீதி துறையின் அலுவல் மொழியாக அது வரை இருந்த அரபிக்கை நீக்கி, ஆங்கிலத்தையே சட்ட துறையின் அலுவல் மொழியாக அறிவித்தார்.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும் மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷ் காசு செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாய், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது. 1835தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி, அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம், 1847ழில் ருர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி. 1848ல் கல்கத்தாவில் பெண்களுகாண பிரத்தியேக தனிப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுந்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே?

அதனால் 1858டில் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவக்கப்பட்டன......

இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது.

இப்போது சொல்லுங்கள், இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் மெக்காலே ஹீரோவா வில்லனா?!

நன்றி டாக்டர் ஷாலினி!!

கேள்விக்கான விடை கிடைத்துருக்குமே!!