வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு என்று நான்கு திசைகள் சொல்லப் பட்டாலும், ஒரு விதத்தில் வடக்கிற்கு அதிக முக்கியத்துவம் எல்லா விதத்திலும் கிடைத்திருப்பதாகத்தான் நான் நினைக்கிறன். என்ன காரணம்?
- எப்போதும் நிலப்படங்களை வரையும்போது அதன் மேற் பகுதியை வடக்குத் திசையாக இருக்கும்படி வரைவது தான் நம் வழக்கம்.
- ஒரு மனிதனுக்கு முக்கியமானது வீடு நிலம் போன்ற சொத்து அமைதல் போன்றவையே. ..வடக்கு நோக்கிய வீடு அல்லது மனை தான், வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே சிறந்ததாக சொல்லப்படுகிறது. ஏன்? வடக்கு ஜோதிடத்தில் புதனுக்கு உரிய திசையாக சொல்லப்படுகிறது. மேலும் அனுநேரமும் நின்று பக்தர்களிடம் வசூலித்து தன கடனை கட்டிக்கொண்டேயிருந்தும் அதிலிருந்து மீளமுடியாமல் இருக்கும் வேங்கடாசலபதிக்கு கடன் கொடுத்த குபேரன் ஆதிக்கம் செய்யும் திசையும் அது தான் என்பர் . அதனால் வடக்கு பார்த்த மனையில் செல்வம் நிலைத்து இருக்கும் என்றும் வடக்கு பார்த்து வாசல் வைத்து கட்டப்படும் வீட்டில் செல்வம் பெருகும் என்றும் சொல்வார்கள். இதில் நம்பிக்கை இல்லாதவர் கூட, வடக்கு திசை கொண்ட மனையை தேர்ந்தெடுப்பதையே பார்த்திருக்கிறேன். .
- ஆனால் வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்றும் அந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பதன் உள்ளார்ந்த பொருள் என்ன?கொஞ்சம் அறிவியல்பூர்வமாக பார்ப்போமேயானால். பூமிக்கு உள்ள வடதுருவம் தென் துருவம் என்ற இரண்டு முக்கிய பகுதிகளில், அந்த வடக்கு தெற்காக தான் காந்தப் பாதை செல்கின்றது. ஆனால் சூரியனி பாதையோ கிழக்கு மேற்காக போவதாக சொல்கிறோம். பூமி ஒரு மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் தன்மையே, ஓத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் இல்லையா?? .நம் உடலில் சிரசை வடக்கு என்றும் பாதத்தை தெற்கு என்றும் வகுத்த முன்னோர், வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது என்பதை கண்டறிந்ததாலேயே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்றனர். வடக்கில் தலை வைத்து படுப்பவர்களுக்கும, அந்த திசை நோக்கி அமர்ந்து உணவு உண்பவருக்கும் மூளை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
- அடுத்து இந்த பிரபஞ்ச நாயகனான சூரியன் தன்னுடைய ஒளியை உச்சத்தில் வெளிப்படுத்துவது அது வடக்கு நோக்கி பயணப்படும போது தான். அந்த வடக்கு நோக்கிய பயணம் தான் உத்தராயணம் எனப்படுகிறது. உண்மையில் சூரியன ஒரே நிலையில் தான் உள்ளது அது எங்கும் பயணப்படுவதில்லை. பூமி தான் தன சுற்றும் திசையை மாற்றி சூரியனுக்கு தெற்கு திசை நோக்கி பயணப்படுகிறது.. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும் நம் பார்வையில் சூரியன் இடம் மாறி பயணம் செய்வது போலத் தோன்றும் என்பதால் அவ்வாறு சொல்லப்படுகிறது. இந்த உத்தராயன காலமான மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி ஆகிய ஆறு மாதங்களில் தான் சூரியனுடைய ஒளி வெள்ளத்தை அதிக அளவில் மற்ற கிரகங்கள் அடையும்.
- அதே போல இந்த கிரக யுத்தம் பற்றி கேள்விப்பட்டிருகிறீர்களா? வானவெளியில். தன் சுற்றுப் பாதையில் உள்ள கிரகம் ஒன்று, இன்னொரு கிரகத்தின் அருகில் வரும்போது ஒவ்வொன்றின் ஈர்ப்பு விசையின் அடிப்படையில் இரண்டுக்கு இடையே ஏற்படும் எதிர்ப்பு விசையின் தாக்கத்தில் ஏற்படுவது தான் கிரக யுத்தம். அந்த இடத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து விடும் கிரகமே அந்த கிரக யுத்தத்தில் வென்றதாக கொள்ளப்படும். அதாவது அதிக பாகை பெற்ற கிரகமே வென்றதாக கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக, ஒரு கிரகம் யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்து 22 டிகிரியும் மற்றொன்று 20 டிகிரியும் வடக்கு நோக்கி முன்னேறியிருந்தால் 22 டிகிரி முன்னேறிய கிரகமே ஜெயித்ததாக கொள்ளப்படும். வடக்கில் முன்னேறிய கிரகத்திற்கு தான் அதிக வலு கொண்டதாக கணக்கிடப்படும்.
- அந்த காலத்தில் போரில் தோல்வியுற்ற மன்னன், வடக்கு நோக்கி உண்ணா நோம்பு இருந்து உயிர் துறப்பது ஒரு வழக்கமாக இருந்தது.அதே போல வடக்கிருந்து உன்னாநோம்பிருந்து கோப்பெருஞ் சோழன் மற்றும் அவருடன் உடன் நோன்பிருந்து உயிர் துறந்த பிசிராந்தையார் நட்பு பற்றி படித்திருக்கிறோம்.
- இந்த உண்ணாநோம்பு இருந்து உயிர் துறத்தல் வயதான காலத்தில், சமண மதத்தினரிடையே உள்ள ஒரு வழக்கம். இதை, தற்கொலை என , ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்து, இ.பி.கோ 309 மற்றும் 306 – தற்கொலை, மற்றும் அதைத் தூண்டிவிடுதல் போன்ற பிரிவுகளின் படி, குற்றம் எனத் தீர்ப்பளித்து இருக்கிறது.
- இந்துக்கள் வட திசையை புனித திசையாக போற்றுவதன் . காரணம்? இமயமலையும், அதில் சிவனுறை கயிலாயமும், புனித கங்கையும் இருக்கும் திசை வடதிசை. இதனால்தான் செங்குட்டுவனும் அவனுடைய அம்மாவுக்காக கல் எடுக்க ஒரு முறையும் கண்ணகிக்காக கல் எடுத்துக் கங்கையில் அக்கல்லைக் குளிப்பாட்ட ஒருமுறையும் ஆக மொத்தம் இரண்டு முறை இமய மலைக்குச் சென்றான்.பாண்டவர்கள் ஒரு நாயை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக இறந்து விழுந்த கதை மஹாபாரதத்தின் 18ஆவது பர்வத்தில் உள்ளது. பரீக்ஷித் மன்னன் பாகவத புராணம் கேட்டுக்கொண்டே உண்ணவிரதம் இருந்தது பாகவத புராணத்தில் இருக்கிறது. இந்த பிராயோபவேசம் என்னும் வழக்கத்தை ராமாயண, மஹாபாரத இதிஹாசங்கள் குறிக்கின்றன. சமணர்களும் இப்படிச் செய்வர். குமரி முதல்—இமயம் வரை உள்ள இவ்வழக்கத்தைப் புற நானூறும் குறிப்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக