கம்பபாரதி இலங்கை ஜெயராமன் அவர்கள் சொல்வார்.."உன் வாழ்வில் செய்ய வேண்டியதை கற்றுக்கொள்ள வேண்டுமா..இராமாயணம் படி.... செய்யக்கூடாததை தெரிந்துக்கொள்ள வேண்டுமா மஹாபாரதத்தை படி" ..
ஒரு நாட்டு அரசனுக்கும் பக்கத்து நாட்டு அரசனுக்கும் சண்டையை பற்றி சொல்வது இராமாயணம் என்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்குள் வரும் சண்டையை சொல்வது மஹாபாரதம். இரண்டிலும் காணப்படுவது மனித உறவுகளுக்குள் நடக்கும் போராட்டத்தை…
இராமாயணத்த்தில் இராமர் ஒரு உதார புருஷராக காட்டப்படுகிறார்..அவர் காட்டிய வாழ்க்கை நெறிமுறைகளை , நாம் கடைப்பிடிக்கும் அளவிற்கு உண்டு என்கிறார்களே என்று அவற்றை தெரிந்து கொள்ள நாம், வாலமீகி இராமாயணம் தான் பார்க்க வேண்டும். .
கம்பன் அதைத் தழுவி தானே எழுதினான்.. தன் கற்பனை திறனை சேர்த்துக் கொண்டு..
அதனால் மூலத்தை கொண்டு,,இராமனுக்கு இருப்பதாக சொல்லப்பட்ட "கல்யாண குணங்கள் " குறித்து எதைக் கொண்டு பார்க்கலாம்?
ரத்த உறவுகளுடனும், தன்னிடம் நட்பு, பகை பாரட்டியவருடன் அவன் கொண்ட உறவை ஆராய்வதை விட, அவனையே கண்டதும் காதலுற்று, கைபிடித்து வந்த மனையாளை எப்படி நடத்தினான் என்று தான் பார்க்க வேண்டும்.
வாங்க நாமும் கொஞ்சம் உள்ளே போவோம்..…
சீதா தேவி..
தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காக, அரசபதவியைத் துறந்து, இராமன் வனவாசம் போக கிளம்பியபோது, 'அவனை பிரியும் நிலையை காதால் கூட கேட்க மறுத்தவள்..
ராமன் இருக்கும் இடம் தான் தனக்கு அயோத்தி' என்று அவனை பின் தொடர்ந்து காட்டுக்கு போனவள்.
ஒரே ஒரு பொன் மானை கேட்டதற்காக அந்த பெண் மான் இழந்தது தான் எத்தனை?
அதற்கு இராமன் என்ன செய்தான்?
இராவணன் என்னும் கொடிய அரக்கனிடம் தன் மனைவி சிக்கியிருக்கிறாள். அவளுக்கும், அவள் கற்புக்கும் ஆபத்து என்று தெரிந்தும், ஓடிவந்து காப்பாற்றாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தானே..?இதை சீதையே அசோகவனத்தில் தன்னை வந்து சந்தித்த அனுமனிடம் கேட்டது..
கிஷ்கிந்தா காண்டத்தில், சீதையை பிரிந்ததால் தாங்கொண்ணா துயர் கொண்டதாக சொல்லப்படும் இராமன், அவளை மீட்கத் தான் இராவணனுடன் போர் புரிய செண்றதாக சொல்லப்படுபவன், போரில் ஜெயித்த போதும் , அவளைக் காண உடனே போகவில்லை. அனுமனை தான், தானும் தன் தோழர்களும் நலமாக இருப்பதாக சீதைக்கு சொல் என்று செய்தி சொல்லி அனுப்புகிறான். அதுவும் சீதையை அழைத்து வா என்றும் சொல்லவில்லை. . பிரிவு துயர் உள்ளவன் செய்யும் காரியமா இது?
எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போன சீதை தான், அனுமனிடம் தான் அவனை காணும் ஆவலில் இருப்பதை சொல்கிறாள்.
அதன்பிறகு அவளை சந்திப்பவன், அப்போதாவது அன்பு மொழியை பேசுகிறானா என்றால், அதுவும் இல்லை.
தன்னை சுற்றி புற்று வளரும் அளவிற்கு அசோகவனத்தில் தவக்கோலம் பூண்டு இருந்தவளை, அவனை எப்போது சந்திப்போமோ என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தவளை,.தனக்கு துன்பம் கொடுத்த அரக்கியரை கூட தண்டிக்க நினையாத மெல்லியலாளை, பார்த்து கடுஞ்சொற்களை வீசுகிறான்.
யுத்தகாண்டத்தின் 115வது சர்க்கத்தில்
“உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.” : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23)
இதை இப்படி சுருக்கமாக சொல்லாமல், இராமனின் கல்யாண குணங்களை தெரிந்துக்கொள்ள அவன் சொன்னதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..
கோபத்தில் இருக்கும் போது பேசுவதில் தானே ஒருவரின் எண்ணவோட்டம் தெரியும்!!
அருகில் (இருந்த) நெஞ்சிற்கு இனியவளான அவளைப் பார்த்தும், மக்களின் தூற்றத்தால் (நேரும்) அச்சத்தால் அரசர் இராமனுடைய நெஞ்சம் உடைந்தது. – 6.115.11
இந்த மானக் கேட்டினால் (ஏற்பட்ட) இழிவைத் துடைக்க, மனிதனால் எக்கடமை (செய்யப்பட) வேண்டுமோ, அது இராவணனைக் கொன்று என்னால் செய்யப்பட்டது – 6.115.13
போர் முயற்சி சிறப்பாக வீரமிக்க என் நண்பர்களின் உதவியுடன் என்னால் செய்யப்பட்டதோ, அது உன் பொருட்டு அல்ல என்று தெரிந்து கொள்). நீ நன்றாக இருப்பாயாக!
"நற்பெயருக்கு எல்லா இடத்திலிருந்தும் (வரும்) இழுக்கையும், புகழ்வாய்ந்த என் குலத்தின் (மீது ஏற்படும்) குற்றச்சாட்டையும் துடைத்தெறிய என்னால் காப்பாற்றிக் கொள்ளப்பட்டது."
"நடத்தையில் சந்தேகம் அடைந்தவளாக என் முன் நிற்கும் (நீ) கண் பார்வை அற்றவன் முன் இருக்கும் விளக்கைப் போல என் (மனதைப்) புண்படுத்துகிறாய்."
"ஜனகரின் மகளே! நல்லாளே! எனக்கு உன்னால் ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை. இப்பொழுது உன் விருப்பப்படி பத்துத் திசைகளில் எங்கும் செல்ல (உன்னை) அனுமதிக்கிறேன்."
அந்நியன் வீட்டில் இருந்த பெண்ணை நற்குலத்தில் பிறந்த உயர்ந்தவன் எவன் ஆவலுடன் திரும்ப ஏற்றுக்கொள்வான்? – 6.115.15-19.
…அத்தோடு விட்டானா..கோபமே தெரியாத குணக்குன்று எனப்படும் இராமன் இன்னும் சொல்கிறான்..
நல்லவளே! ஆகையால், தீர்மானமான நெஞ்சுடன் என்னால் இவ்விதம் விளக்கப்பட்டது. எது நலம் அளிக்குமோ, (அவ்வாறு) இலக்குவனையோ, பரதனையோ, உன் மனதில் கொள். – 6.115.22
…அடுத்து பேசுவது தான் உச்சக்கட்டம்…
“சத்ருக்னனையோ,சுக்ரீவனையோ, அரக்கன் விபீஷணனையோ, உன் மனத்திற்கு இசைந்தவனையோ, நீ கொள்ளலாம்; மனதுக்கு இனியவளாகவும், மிகுந்த அழகுடனும் உள்ள உன்னைத் தன்னிடத்தில் சிறை வைத்திருந்த இராவணன் உன் பிரிவை அதிக நாள் பொறுத்து இருந்திருக்கமாட்டான்.”
"என்னைத் தேடி இலங்கைக்கு அனுமனை அனுப்பினீரே, அப்பொழுதே என்னை விட்டுவிட்டதாக ஏன் தெரிவிக்கவில்லை. அப்படிச் செய்தி அனுப்பி இருந்தால், வானரர் தலைவனான அனுமனின் கண் எதிரே என் உயிரை விட்டிருப்பேனே, நீரும், உமது நண்பர்களும் உங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தேவையில்லாத போரை நடத்தி இருக்க வேண்டியதில்லையே"
எப்பொழுது என் இதயம் இராகவனிடமிருந்து அனுதினமும் நகர(பிரிய)வில்லையோ அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும். – 6.116.25
…இப்படிச் சொல்லிவிட்டு சீதை கொழுந்துவிட்டு எரியும் தீயில் புகுந்து விடுகிறாள். பின்னர் … சீதை அப்பழுக்கற்றவள் என்று அக்கினித் தேவன் எடுத்து சொல்ல, சீதையை அழைத்துக்கொண்டு அயோத்திக்கு திரும்புகிறான் இராமன்.
இராமனா அது.. இவ்வளவு கொடுஞ்சொல் சொல்லியுள்ளவன்…
"உதாரண புருஷன்" என்று இராமனை சொல்லும் கம்பர் இந்த இடத்தில் எப்படி விவரிக்கிறார்?
இராமன் கானகம் கிளம்பும் போது, "நீ இங்கேயே இரு" என்ற அர்த்தத்தில், "நீ வருந்தலை:நீங்குவன் யான் " என்று சொன்னதை கூட தாங்காமல், "வெஞ்சொல் செவிசுடத் தேம்பிய சீதை , "நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு"என்று உடன் வந்தவள் சீதை.
இராமன் விரும்புவான் என்று விபீஷணன் வற்புறுத்தியதால், இராமனை காணும் முன், தன் தவக்கோலத்தை களைந்து, அலங்கரித்து விட ஒப்புக்கொண்டு வந்த சீதையை பார்த்து,
" உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது.
ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.” என்கிறான்.
ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம்தீர்ந்து இவண்
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – 9.3954
“இறைச்சியின் சுவையை விரும்பினாய். (உன்) கற்புநெறி கெட்டபின்பும் (நீ) இறக்க வில்லை. நீதிநெறி தவறி (வாழ்ந்த) அரக்கனின் (இராவணன்) பெரிய நகரமான (இலங்கையில், அவனுக்கு) அடங்கி வாழ்ந்து வந்தாய். (அவன் அழிந்ததால்) பயம் நீங்கி எந்த நினைப்பில் இங்கு மீண்டும் வந்தாய்? (நான்) உன்னை விரும்பி ஏற்றுக்கொள்வேன் என்பதாலோ)
உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை
என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன். – 9.3955
“உன்னை மீட்டுச் செல்வதற்காக கடலின்மீது பாலம் கட்டி, மின்னலைப் போன்ற ஒளி பொருந்திய (வஜ்ராயுதத்தை உடைய இந்திரனை) தோற்கடித்த அரக்கனை (இந்திரஜித்தை) வேரோடு அழிக்கவில்லை. அப்படியானால் எதற்காக என்றால், என்மீது ஏற்பட்ட பழியைப் போக்குவதற்காகவே, இலங்கைக்கு வந்தேன்.
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே நறவு அமைய உண்டியே
இருந்தனையே இனி எமக்கு என்பன
விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – 9.3956
“(என்பால் கொண்டிருந்த) அன்பை நீக்கினாய். சுவர்க்கத்தின் அமுதை விடச் சிறந்தது என்று இவ்வுலகத்து உயிர்களின் சதையை (இறைச்சியை) உண்டாயே. மது அருந்தினாயே. இனிமேல் எனக்கு என்ன விருந்து படைக்கப் போகிறாய்? சொல்.
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால். – 9.3958
“பெண்ணாகப் பிறப்பதனால் உள்ள பெருமையும், கற்பு என்ற வலிமையையும், ஒழுக்கமும், தெளிந்த குணமும், புகழும், உண்மையாக (நடந்து கொள்ளுதலும்) (சீதை) என்ற நீ ஒருத்தி பிறந்ததால், வலிமை இல்லாத மன்னவனின் புகழ் மறைத்து போவது போல மறைத்து போய்விட்டன.
அடைப்பர் ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியாச்
சடைப் பரம் தகைந்ததூர் தகையின் மாதவம்
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது
துடைப்பார் தம் உயிரோடும் குலத்தின் தோகையார். – 9.3959
“நற்குலத்தில் பிறந்த மங்கையர் தனது ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்வார். கற்பொழுக்கம் சிதையா வண்ணம், தலை முடியை வாராது, சடையைத் திரித்து பெரிய தவத்தில் ஈடுபடுவர். இடையில் ஒரு பழி வந்து நேர்ந்தால் தமது உயிரைக் கொடுத்தாவது அதைப் போக்கிக் கொள்வார்கள்.
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
சாதிஆல் அன்று எனின் தக்கது ஓர் நெறி
போதிஆல் என்றனன் புலவர் புந்தியான். – 9.3960
“இனி நான் சொல்ல என்ன இருக்கிறது? உன்னுடைய (தீய)ஒழுக்கச் செயல் (என்) உள்ளத்தை ஈடு கட்டமுடியாத அளவுக்கு அறுத்துத் தள்ளுகிறது.. (நீ) சாவாயாக! இல்லாவிட்டால் உனக்கு எது நல்லது என்று படுகிறதோ, அங்கு போவாயாக!” என்று ஆன்றோர் நினைவில் (குடியிருக்கும் இராமன்) சொன்னான்.
…அதைக்கேட்ட அனைவரும் கதறி அழுதனர். தன் கணவருடன் சேரப் போகிறோம் என்ற ஆவலுடனும், மகிழ்ச்சியுடன் இருந்த சீதையின் கண்களில் கண்ணீர்..
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு
உற்றதால் இன்று அவம் என்றென்று ஓதுவாள். – 9.3964
எத் தவம் எந் நலம் என்ன கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய் அவம் பிழைத்ததாம் அன்றே
உத்தம நீ மனத்து உணர்ந்திலா மையால். – 9.3966
நான் (கற்புடன்) இருந்து பெற்ற பயன் இவ்வளவுதான். (அது) அழிந்தது போலும். இன்று எனக்கு பழி ஏற்பட்டது என்று (மேலும்) சொன்னாள்.
“உத்தமரே! இத்தனை காலமாக நான் மிகவும் வருத்தி எத்துணை தவம், எத்தனை நற்செயல்கள், சிறந்த கற்பறங்கள் செய்தும், உம மனம் அதை உணர்ந்து பார்க்க இயலாது போனதால், (அவை) பைத்தியக்கரச் செயல்கள் என்று ஆகிப் பயனின்றிப் போயினவே.
ஆதலின் புரத்தின் யாருக்காக என்
கோது அரு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே
வேத நின் பணி அது விதியும் என்றானள். – 9.3969
இளையவன்தனை அழைத்து இடுதி தீயென
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்
வால்மீகி, கம்பர் இருவருமே, இராமன் சீதையின் மீது வீசிய கடும் சொற்களை விவரித்ததைப் பார்க்கும் போது நமக்கே, உடலும் உள்ளமும் நடுங்குகிறது என்றால், சீதாதேவிக்கு எப்படி இருக்கும் ?
சீதை நினைத்திருந்தால், அனுமன் தன் தோள் மீதேறி உடன் வருமாறு அழைத்தபோதே இலங்கையிலிருந்து மீண்டிருக்கலாம். அவளே சொன்னது போல, "எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்: "என்றிருக்கலாம்.ஆனால் "அது, தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் "என்கிறாள்.ஆனால் அவள் கற்பு திறன் குறித்து அனுமன், கூட உயர்வாக நினைத்தபோது, குடிமக்கள் தவறாக பேசுவர் என்பதற்காக, அவள் கற்புத் திறனை சோதிக்க இராமன் அவளை அக்னி பிரவேசம் செய்யச் சொன்னான்..
சீதை தன் புனிதத்தன்மையை நிரூபித்தபின்பே, இராமன் மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போகிறான்.
கருவுற்ற சீதையை பற்றியும் தன்னைப்பற்றியும் மக்கள் அவதூறாக பேசுவதை ஒற்றர் மூலம் அறிந்தவன் என்ன செய்திருக்க கூடாதோ அதையே செய்கிறான்.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவளை உணவின்றி, இருக்க இடமின்றி, முன் தகவல் ஏதுமின்றி காட்டில் கொண்டுபோய் விட்டு விட செய்தான் என்பது கொடிதல்லவா?.
என்ன தான், தான் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்ளவில்லை என்று அவன் சொன்னாலும், அவன் உள்ளிருந்த எண்ணம், வாலமீகி இராமாயணத்தில் வெளிவருகிறது" தன் சகோதரகளிடம் தன் முடிவை சொல்கிறான் "சீதை மீது வதந்திகளைக் கிளப்புவதாகவும் என்னைப் பழிப்பதாகவும், எனக்கு அவமானம் ஏற்படும் வகையில் பேசுவதாகவும் அறிகிறேன். இத்தகைய இழிவினை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. மானம், கௌரவம் என்பது பெரும் சொத்து. கடவுள்கள் மற்றும் பெருமான்கள் எல்லாம் அத்தகைய மாண்பினைத் தக்கவைத்துக் கொள்ள பெரும்பாடு படுகின்றனர். இத்தகைய இழிவையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்ள என்னால் முடியவில்லை. அப்படிப்பட்ட இழிசொல் மற்றும் அவமானத்திலிருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள உங்களைத் துறந்திடவும் நான் தயாராய் இருக்கிறேன். சீதையை கைவிட்டு விட மாட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்” .
இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூடவில்லை. சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பேரும் புகழுமே பெரிதெனத் தோன்றியது. அரசாளும் மன்னன் என்ற முறையில், தன் மனைவிக்கும் தனக்கும் ஏற்பட்ட அவதூறை போக்கிட என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. யாரோ ஒரு சிலர் கிளப்பிவிட்ட வதந்திகளுக்கு ஒத்து போனான்.
இராமனின் சகோதரர்கள் எவரும் சீதைக்காகப் பரிந்து பேசக் கூடாது என்றும், அப்படி பேசினால் அவர்களை எதிரிகளாய்க் கருதுவேன் என்கிறான்..ராஜாராமனாக வாழ்வதா, சீதாராமனாக வாழ்வதா என்ற பிரச்சனையில் ராஜாராமனாகவே வாழ முடிவு செய்து சீதையைத் தியாகம் செய்தான்
சரி இது குறித்து சீதைக்கு சொன்னானா என்றால் அதுவும் இல்லை. லக்ஷ்மணனை தான் கூட்டி சென்று விடுமாறு சொல்கிறான்..இலட்சுமணன் சீதையை சந்தித்து, வனத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கிச் சில நாள் வாழ்ந்து திரும்பிட விரும்பியதாய் அவள் சொன்ன ஆசையை நினைவுபடுத்தி, அதை நிறைவேற்ற இராமன் தன்னை பணித்திருப்பதையும் சொல்லி, அழைத்து போய், கங்கை கரையின் மறுபக்கம் அடைந்து, சீதையின் கால்களில் விழுந்து உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கிறான்.
தனித்து காட்டில் விடப்பட்ட சீதை தானே, போய், வாலமீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்து, .லவகுசர்களை பெற்று, வளர்க்கிறாள்.
அந்த வாலமீகி தான் இயற்றிய இராமாயணத்தை அவர்களுக்கு கற்று கொடுக்கிறார்.
அப்போ ..அதில் சொல்வதை தானே அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்..
லவகுசர்,12 ஆண்டுகள் வளர்ந்து வரும் வால்மீகியின் ஆசிரமம் , இராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு ரொம்ப தூரத்தில் இல்லை. இந்த 12 ஆண்டுகளில் ஒரு தடவை கூட, இந்த உதாரண புருஷனான இராமன், சீதை என்னவானாள்--என்பதைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை.
தவறு செய்யாதவர்களே இவ்வுலகில் இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து, மனம் வருந்தி அதை திருத்திக்கொள்வதே சிறந்த மனிதனின் அடையாளம் .அதற்கு அடையாளமாக ஒரு தவறும் செய்யாத சீதையை காட்டிலிருந்து கூட்டி கொண்டு வர எந்த முயற்சியும் அவன் எடுக்கவில்லை.
இதற்கிடையில் யாகம் நடத்த எண்ணிய இராமன், மனைவி இன்றி நடத்த முடியாது என்று தெரிந்தும், அவளை கொண்டு வர முயலாமல், அவள் போன்ற உருவை செய்து, யாகம் நடத்த எண்ணுகிறான்.அந்த யாகத்தில் வாலமீகி லவகுசர்களுடன் கலந்து கொள்ளும்போது, கிளைமாக்ஸ் வருகிறது.
தன் பிள்ளைகள் தான் அவர்கள் என்று தெரிந்து கொண்ட இராமன், அவர்களை மட்டும் தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறான்.ஆனால் சீதையை விட்டு பிரிந்து வர அவர்கள் ஒப்பு கொள்ளவில்லை.அதனால் சீதை தன் புனிதத்தை நிரூபிக்க அங்குள்ள யாககுண்டத்தில் மீண்டும் அக்னிபிரவேசம் செய்யட வேண்டும் என்கிறான்.
ஏற்கெனவேஅக்நிதேவனே "ந்த (கற்பிற் சிறந்த சீதை) மனதில் (துன்பமடைந்து) சீற்றத்தில் சபித்தால், மழை பெய்யுமா? இந்த பூமி பிளந்து (எல்லாவற்றையம் விழுகி விடுவதைத் தவிர) வேறு எதையும் செய்யுமா? தர்மம் நன்னெறியில் செல்லுமா? உலகு உய்யுமா? தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம்மனும் இறந்துபடுவானே? என்று சீதையின் பெருமைகளையும், அவளது கற்பையும் புகழ்ந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி, அவளை இராமனின் அருகின் கொண்டு வந்து சேர்த்திருந்தான்… .
ஏன்…சீதையை காட்டிற்கு அனுப்புமுன், மீண்டும் சீதை அந்த சோதனையை செய்ய வேண்டுமென்று இராமன் சொல்லி இருக்கலாம்.
அப்படியே, சீதை தன்னுடைய தூய்மையைப் புலப்படுத்தினாலும்,, அதற்குப் பின் இந்தத் தடவையாவது இராமன் மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக்கொள்வான்-என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
இந்த சிக்கலை சீதையே தீர்க்கிறாள்."இராமனைத் தவிர வேறொரு ஆடவனை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை; அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய், நான் புதையுண்டு போகிறேன். என் சொல்லிலும் செயலிலும் நினைவிலும் கனவிலும் எப்போதும் நான் இராமனையே நேசிக்கிறேன்-அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய். நான் புதையுண்டு போகிறேன்’’ என்று. அவள் வார்த்தைகளை உதிர்க்கும்போதே பூமி பிளந்து; அவள் உட்புகுந்து, மறைந்து போனாள் என்றும் சீதை மீது வானவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.என்றும் முடியும்.
பின் இராமன் ஆற்றில் இறங்கி தற்கொலை செய்துக்கொண்டான் என முடியும். இவ்வளவு கொடுமைகள் மனைவிக்கு செய்தவன் இந்த நிலையை அடைவான் என்பது நீதியோ?
ஏன் மற்றவற்றில் கூட இராமன் என்ன செய்தான்?
போர் தர்மத்தை கடைபிடிப்பதாக, இராவணனுக்கு அங்கதனை தூது அனுப்பியவன், மறைந்திருந்து வாலியை கொன்று, போர் தர்மத்தை மீறினான்.
வாலமீகியும் கம்பரும் சீதையை விவரிக்கும்போது எப்படி மாறுபடுகின்றனர்?
சீதை மனம் சோர்வுற்று, நொந்துபோய், தனது கற்பும், ஒழுக்கமும், பித்துப்பிடித்த செயளுக்கு ஒப்பானது என்று வருந்தி, “நான் உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், என்னைச் சுட்டு எரிப்பாயாக!” என்று தீப் புகுவதாக கம்பர் பாடியிருப்பார்.
ஆனால். வால்மீகியின் சீதை,சதா சர்வகாலமும் தன் நினைப்பில் உள்ள தன் அன்புக் கணவரே, சொல்லத் தகாத சொற்களைக் சொல்லுகிறாயே என்று நிலை குலைந்து போகவில்லை, தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வீராங்கனையாகச் சீறி எழுகிறாள். .“வீரரே! இழிந்தவன் ஒருவன் இழிந்தவளிடம் பேசுவதைப் போல, கேட்பதற்குக்தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்? தீநடத்தை கொண்ட பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெண் குலத்தையே நீர் ஏன் நம்ப மறுக்கிறீர்!”
தன் கற்பைச் சந்தேகித்த கணவனையே “வலிமையற்றவன், பெண் குணம் கொண்டவன்” என்று சொற்கணைகளால் துளைத்து எடுத்து விடுகிறாள்.
கடைசியாக, தீப்புகும்போது, “என் இதயம் இராகவனிடமிருந்து என்றும் பிரியவில்லையோ, அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும்!”என்று தீக் கடவுளுக்கே சவால் விடுகிறாள்.
வால்மீகியின் இந்த சீதை உலகத்தின் எல்லாப் பெண்களுக்கும் இலக்கணமாக நிற்கிறாள். புதுமைப் பெண்ணாகவும், பழமையின் உயர்வைப் பறைசாற்றும்,, கற்பின் பெருமையை நிலைநாட்டும் வீரச் செல்வியாகவும் நிற்கிறாள்..
நான் பெரிதும் மதிக்கும் சுவாமி விவேகானந்தரிடம், "விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரலாற்று உண்மை உள்ளதா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர்,
"ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்... ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை..ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும்."என்றார்..
அந்த வகையில், காலம் காலமாக பெண்களுக்கு வரும் துன்பத்தை எதிர்த்து, மனத்தவமே கற்பு என்று, அறத்தின் வழியே நின்று, தனியே போராடி வாழ்ந்து, தன் காதல் கணவனே கொடுமைப்படுத்தினாலும் சகித்து கொண்டு அடிமையாக இராமல், சுய சிந்தனை உள்ளவளாக, நியாயம் கேட்டு போராடுதல் என சீதையை பெண்மைக் குறீயீடாகப் படைத்ததால், இராமனுக்காக இல்லாமல், சீதா தேவிக்காகவே இராமாயணம் என்னை கவர்ந்தது எனலாம்.
வாலமீகி கூட அதனால் தான் இதற்கு "இராமாயணம்" என்று பெயர் வைக்காமல், சீதசரிதம் என்றே பெயரிட்டார் என்பர்.