நேற்று தான் காண்டேகர் எழுதிய ஞான பீட விருது பெற்ற "யயாதி" படித்து முடித்தேன்...இரண்டு பாகங்கள்.இரண்டே நாட்களில்..
எப்படி இத்தனை நாள் இதை பார்க்காமல் விட்டேன்… வியப்பு, .
படித்து முடித்ததும் நாயகன் மேல் ஏற்பட வேண்டிய வெறுப்பின்றி, அவன் மேல் பரிவு, பச்சாதாபம் தான் ஏற்படுகிறது..
உண்மையான அன்புக்கு ஏங்கி, எத்தனையோ வசதியிருந்தும் சுகம் காண முடியாத பரிதவிப்பு, அவனை கல்நாயக்"கிலிருந்து "நாயக்" ஆக்கிவிட்டுள்ளது!!
யயாதியின் கதை எல்லோருக்கும் மேலோட்டமாக தெரிந்திருக்கும். ..
அதிகார வெறியிலும், காமத்திலும் அவன் கொண்ட நாட்டம் முகம் சுளிக்க வைக்கக்கூடியது தான்…
ஆனால் அவனுக்குள்ளே நுழைந்து போகும் போது தான், அவன் எண்ணங்களோடு நம்மை அறியாமலேயே ஒத்திசைவு கொள்ள .ஆரம்பிக்கிறோம்..
சிறு வயதில் பூக்களை கசக்கி நுகர்ந்து பார்க்கும் அவன் வேட்கையிலிருந்து ஆரம்பிக்கும்போது, " என்ன இவன் இப்படி இருக்கிறானே" என்று நினைக்க தோன்றுகிறது..
அவன் அண்ணன் யதியை போல காணாமல் போய் விடுவானோ என்று, "வெற்றியில் மமதை கொள்வதே வீரம்" என்று அவனுக்கு கற்பிக்கப்படுவதாலேயே அது வருகிறது என்று சமாதானம் கொள்கிறோம்…
தனக்கு பாலூட்டிய பணிப்பெண்ணின் மீது காட்டும் அன்பு, ,அவள் பெண்ணிடம் பின்னாளில் தங்கையாக உறவாடிய போது அதை தவறாக புரிந்து, தாய் காட்டும் கோர முகம் கண்டு அதிர்வது, லட்சிய தம்பதியர் என்று அவன் தாய் தந்தையை நினைத்துக்கொண்டிருக்கும் போது, தந்தை இறந்த பின், தாய் அவர் மேல் கொண்ட வெறுப்பை உமிழும்போது ஏற்படும் அவன் திகைப்பு, தாயை வெறுப்பேற்றவென்று அந்தணர் குல தேவையானியை மணந்து , தெரியாமலேயே விதியின் கையில் வீழ்வது, அவள் தந்தை சுக்கிராச்சாரியார், மருமகன் என்ற முறையில், தன் குலத்திற்கு அகத்தியரால் ஏற்பட்ட சாபத்தை போக்குவார் என்று கனவு காண, அவரோ தன்னையும் தன் மகளை மட்டுமே அச்சாக வைத்து உலகம் இயங்குவது போல, கண்டும காணாதது போல இருத்தல் கண்டு ஏற்படும் தவிப்பு, தேவயானியின் மீது கொண்ட காதல், அவள் உதாசீனம் பொறுக்கமுடியாமல் மனமென்னும் ராஜபாட்டையில் ஒற்றையாய் திரிவது, அதை கண்டுக் கொண்டு, அவள் சினேகிதி சர்மிஷ்டை , "தன்னை பணிப்பெண்ணாக வாழ்நாள் முழுதும் நடத்த எண்ணிய" தேவையானிக்கு எதிராக அவள் கணவனையே கவர வழி தேட, அதை புறக்கணிக்க முடியாமல், தன் நெடுநாளைய தேடலில் கண்ட தோழியாக அவளை ஏற்றுக்கொண்டு, அதனால் சுக்ராச்சாரியாரியாரின். கோபத்துக்கு ஆளாகி, கிழ உருக் கொண்டு, தன் மைந்தர்களிடம் சாபம் நீங்கக் கேட்க, அவர்கள் மறுத்ததால் கோபத்தில் அவர்கள் வாழ்வு நாசமாக சாபமிட்டு, முன் வந்த கடைசி மகன் புருவின் இளமையை ஏற்று, இன்பம் துய்த்தாலும், குற்ற உணர்ச்சியால் தவித்து, கடைசியில் அங்கிரச முனிவர் சொன்னது போல "தியாகம் தான் சிறந்த மகிழ்ச்சி" என்று உணர்ந்து மகனிடம் இளமையைத் திரும்ப கொடுத்து விட்டு கானகம் செல்கிறான் யயாதி…
கதையில் வரும் தேவயானியும் சம்ரிஷ்டையும் இன்றும் நம் அக்கம்பக்கத்தில் காணும் பெண்களாகத் தான் தெரிகின்றனர்.
தன் கணவனை, அவனின் உள்ளத்தில் குடி கொண்டே ஆள முடியும் என்ற எளிய விஷயத்தை புரிந்துக்கொள்ளாமல், தன் அழகினால் அவனை அடிமைப்படுத்த எண்ணுவது, தன் தந்தை சுக்கிராச்சாரியாரின் பெருமையை பேசிக்கொண்டே, கணவனின் வீர தீரத்தை கேலி பேசி நோகடிப்பது என்று தன் வாழ்நாள் முழுதும் கணவன்,மக்கள் அன்பை பெறாமல் போகிறாள் தேவயானி…
இதை சொல்லும்போது, ஒரு அதிகாரி தன் மனைவி பற்றி வருத்தமாக சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.."அவள் ஆபீசுக்கு போகும் போது தன் உடை, அலங்காரத்தில் காட்டும் கவனத்தை வீட்டில் இருக்கும் போது காட்டுவதில்லை. .ஏனோ தானோவென்ற உடை, வாராத தலை, கழுவாத முகம் என்று பார்க்கவே சகிக்காத அளவிற்கு இருக்கும். அவளிடம்.கேட்க முடியாத கேள்வி ."யாருக்காக அவள் அலங்காரம் செய்கிறாள்?"
ரொம்ப ஞாயமான கேள்வி..இன்றும் பல கணவன்மார்கள், இல்லத்தரசியாய் இருக்கும் தன் மனைவியை பார்த்துக் கேட்க முடியா நிலையில் இருக்கிறார்கள் .யயாதி போல..😀
இதோ அவனே சொல்கிறானே அவன் தாபத்தை..
"ஒளிவு மறைவு இல்லாமல் பேசி பரிகாசம் செய்து, என் எண்ணங்களை வெளிப்படுத்தக் கூ டிய , என் துன்பங்களை லேசாக்க உதவும் தோழி எனக்கு தேவையாக இருந்தாள். அவள் மடியை தலையனை ஆக்கி நான் தூங்கிய பிறகு ,தன் காலில் தேள் கொட்டினாலும் , அசைந்தால் என் தூக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் அசையாது இருக்கவல்ல ஒரு தோழி எனக்கு தேவையாக இருந்தாள்..
எவளிடம் என் கனவுகளை எல்லாம் என்னால் சொல்ல முடியுமோ, நான் இழைத்த தவறுகள் எல்லாம் வெளியிட முடியுமோ, அத்தகைய தோழி எனக்கு தேவையாக இருந்தாள்..
மனித நாற்றமே இல்லாத இந்த தீவில் உண்ண எதுவும் கிடைக்காவிட்டாலும்
நாம் வாழ்வோம் என்று தன்னம்பிக்கை விளைவிக்கக்கூடிய தோழி எனக்கு தேவையாக இருந்தாள்.
எமன் என்னை அழைக்க வரும்பொழது எஎன் அன்பனுடன் என்னையும் அழைத்து செல் என்று சிரித்த முகத்துடன் சொல்லக்கடிய ஒரு தோழி எனக்கு தேவையாக . இருந்தாள்.
தேவயானி என்னுடைய இந்த பசியை தீர்க்க இயலாதவளாக இருந்தாள் ".
சம்ரிஷ்டை இதை அழகாக.கையாள்கிறாள்.அரசகுமாரியான தன்னை, தன்னுடைய வாழநாள் பணிப்பெண்ணாக மாற்றிய தேவையானியை வெற்றி கொள்ள நினைத்தாளோ?
தன் மாமனாருக்கு செய்துக் கொடுத்த வாக்கை சுட்டிக்காட்டி, மறுக்கும் யயாதியிடம் அவன் அரசு குல மரபை சுட்டிக்காட்டி அவளை ஏற்க சொல்கிறாள்…
அவளையும் தப்பர்த்தம் கொள்ள ,முடியாதபடி ஆசிரியர் அழகாக காட்டுகிறார்..
தன் தந்தை அசுர அரசன் விருஷபாவாவுக்கு ஏற்பட்ட சோதனையை தவிர்க்க தன் வாழ்க்கையை தியாகம் செய்பவளாக, தன் தோழிக்கு பணிப்பெண்ணாக மாறியவுடன் கடமையை சரியாக செய்வதாகட்டும், யயாதிக்கும் அவளுக்கும் உள்ள சச்சரவு நீங்க தூது போவதாகட்டும், தன் காதலை நாசுக்காக சொல்லி யயாதியை சம்மதிக்க வைப்பதாகட்டும், அவனுக்கு சிறந்த தோழியாக இருப்பதாகட்டும், தன் தந்தைக்கு தன் இளமையை தர முன்வந்த மகன் புருவை வளர்த்த பாங்காகட்டும், அவளை உயர்த்தியே காட்டுகிறார் ஆசிரியர்.
ஆனாலும் யயாதி தான் பாவம்…இரணடு பெண்களின் நடுவில் பகடையாய்…
கடைசி வரை காமத்திற்கும் தர்மத்திற்கும் நடுவே அவன் கொண்ட ஊசலாட்டத்தை அழகாக படம் பிடித்து காட்டுகிறார் ஆசிரியர்.. தன் .தந்தையால் குலத்திற்கு ஏற்பட்ட சாபத்தை போக்க அவன் முயன்றும் …
எத்தனை பராக்கிரமசாலியாய்த்தான் இருந்தால் என்ன.. விதியின் கையில் உள்ள ஓரு விளையாட்டு பொம்மையாய் தெரிகிறான் யயாதி.!!
ஆங்காங்கே வாழ்க்கையை குறித்த ஆசிரியர் கண்ணோட்டம் நம்மை தீவிர சிந்தனைக்கு இட்டு செல்கிறது.
காவியத்தை படித்து முடித்தும் யயாதி நம் கூடவே இருப்பது போன்றே தோன்றுகிறது.
நாமும் சற்று மேல் மனதை ஒழுங்கு ப்படுத்தி நம்முடன் பயணிக்கும் யயாதியையும் தேவயாணிகளையும் சர்மிஷ்டைகளையும் கூர்ந்து கவனிப்போமேயானால், அறத்தோடு வரும் பொருளும் இன்பமும் தான் உண்மையான மகிழ்ச்சியை தரும் என்பதை காணலாம்.
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா