என் பெற்றோர் இவ்வுலகை விட்டு போன பின் திருமணம். மாமியாரும் இல்லை என்ற போது பிரியம் காட்ட கணவரை தவிர்த்து யாரும் இல்லை என்ற நிலைக்கு போனேன்.ஆனால் அவருக்கும் வார இறுதியில் மட்டுமே வீட்டிற்கு வர முடியும் என்ற நிலையில் பணி..
தனிமை மிகக் கொடுமை என்று உணர்ந்த தருணம் அது.பெரிய குடும்பத்தில் பிறந்து, யாரும் இன்றி வேறு ஒரு ஊரில் தனியாக வாழ்வது எவ்வளவு கொடுமை. வாசிப்பை தீவிரமாய் ஆட்கொண்ட தருணம்.அது..
இறைவன் கருணையுள்ளவன். திருமணம் ஆன ஒரே வருடத்தில் குழந்தை. .என் தனிமை போனது. என் மகளே எனக்கு தோழியானாள்!!.😂
ஆனால் எண்ணி மூன்று மாதம் தான் விடுப்பு. நீடிப்பு கேட்டு அனுப்பிய கடிதம் கையிலேயே திரும்ப கிடைத்தது.வேறு வழியில்லை….
கைக்குழந்தையோடு வேலைக்கு திரும்பியாயிற்று..ஒரு பை நிறைய குழந்தை துணிகள், இன்னொன்றில் உணவு , அடுத்ததில் விளையாட்டு சாமான்கள்… இப்படி தான் தினம் கிளம்புவேன்..குழந்தை டைப்ரைட்டர் சத்தத்தில் தூங்க பழகி கொண்டாள். அவள் எழும் நேரம் அலுவலக உதவியாளர் தொட்டில் ஆட்டி தூங்க வைக்க, மற்ற நேரம் பெண் ஊழியர்கள் பார்த்துக் கொள்ள அவளும் நானும் என் வாசிப்பும் இணைபிரியாமல் இருந்தோம்.
அதுவும் ஆறு மாதம் தான்.பிறகு அப்படி கொண்டு போக முடியவில்லை. உணவு இடைவெளியில் ஓடி வருவேன்.வேலை முடித்து வரும்போது மகள் தூங்கியிருப்பாள். எனக்கு தூக்கம் வர ஆரம்பிக்கும் போது எழுந்துக் கொள்வாள்.
சரியான தூக்கம் இல்லாமல் குழந்தை, வேலை உடல் அசதி என்று எனக்குள் போராடிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டாவதாக நான் தாயானபோது அந்த நான்கு மாத விடுப்பிறகுத்தான் ஏங்கியிருந்தேன் என்பது தான் உண்மை. நாங்கள் மூவரானோம்.. 😁😄
கிடைத்த சின்ன சின்ன கால இடைவெளியில் எங்களின் பிணைப்பை உறுதிசெய்து கொண்டோம். குழந்தைகள் இருவரையும் கவனிக்க ஆளில்லாமல் பெரியவளை ப்ளே ஸ்கூலிலும் சின்னவளை க்ரேஷிலும் விட்டுவிட்டு ஓடி……ஓடி…இரண்டு வருடங்கள்.. இப்போது கணவருடன் ஒரே இடத்தில் குடிபோனோம்.. ஒரே சின்ன மாற்றம்… காலை போனால் இரவு தான் சந்திப்பு…
அடுத்து வந்தது எனக்கு வெளியூர் வாசம். வார இறுதியில் குழந்தைகளை பார்க்க வரும் விருந்தாளியாக நான் ..
குழந்தை பிறந்த நாளுக்கு கூட வர முடியாமல், எப்படியும் அன்று நாள் முடிவதற்குள் வர வேண்டும் என்று வேலை முடிந்ததும் பயணித்து, இரவு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் பக்கமாக பரிசுப்பொருளை வைத்து விட்டு நெஞ்சு கனத்து நின்ற தருணம் …உண்டு..😥
யாருக்காக ஓடி ஓடி வேலை செய்கிறோம்? என் குழந்தைகள் முதல் முதலில் தவழ ஆரம்பித்த தருணம், எழுந்து நிற்க ஆரம்பித்தது எதுவும் பார்த்தது கிடையாது…என்ன ஒரு வாழ்க்கை என்று மனசு சலிக்க ஆரம்பித்த போது தான் வந்தது கொரானா. …
ஊரெல்லாம் திமிலோகப்பட்டிருக்க, என் குடும்பத்துடன் நான் உடன் இருக்கும் இந்த தருணம்..என்ன ஒரு மகிழ்ச்சி..🤣
எந்தவித பரபரப்பு இல்லை. பணியும் இல்லை.பள்ளியும் இல்லை. இப்போது ஆன்லைனோ ஆப் லைனோ வேலை செய்தாலும் நானும் என் கணவர் குழந்தைகள் என்று ஒன்றாக சேர்ந்து இருக்கும் இந்த நிலை. ..இனி எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது
கிடைத்த இந்த நேரத்தில் தான் கோராவில் எழுத ஆரம்பித்தேன். நான் ரொம்ப நேசிக்கும் வாசிப்பு எனக்கு கை கொடுத்தது. கோராவின் தயவில் நானும் எழுத்தாளரானேன்.😂 உறவுகளை தொலைத்த எனக்கு ஆயிரம் புது உறவுகள் கிடைத்தது இங்கு…. சாரி 2000துக்கும் மேற்பட்டவை..😄
பழகலாம் வாங்க !! களத்தின் உறவுகளை சொன்னேன்!!🤣🙏
இதோ ஒரு மில்லியன் தாண்டிய பார்வைகள்.. 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவு வாக்குகள்..என்னை எழுத்தாளியாகவும் ஏற்றுக்கொண்ட அன்பு கோரா சொந்தங்கள்..நன்றி..😂😀🙏🙏
வரவிருக்கும் புத்தாண்டில் அவர்களும் பள்ளிக்கு போக ஆரம்பிக்கலாம். . எங்களின் கூடும் நேரம் குறையலாம்..பணி சுமையால் கோராவில் எழுதும் என் நேரம் மாறலாம்.😦
ஆனால் இப்போதுள்ள இந்த மகிழ்ச்சியான தருணங்கள் கோராவும் கொரானாவும் 2020ல் எனக்கு கொடுத்தது, சொல்லில் விவரிக்க முடியாதவை. என் வாழ்வில் மறக்க முடியாதவை.
என்றென்றும் நன்றியுடன் 🙏🙏🙏
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக