பிருந்தாவனத்துக்கு போன மீரா அங்கிருந்த தலைவர் ஜீவா கொசைன் என்பவரை பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. தன்னுடைய இடத்திற்கு எந்த ஒரு பெண்ணையும் அனுமதிப்பதில்லை என்று மீராவிற்கு பதில் வந்தது. கோபத்தில் மீரா, “கண்ணனின் அடிமைகள் அனைவரும் பெண்களே. கிரிதரனான கோபாலன் மட்டுமே புண்ணிய புருஷன். அவனைத் தவிற, இன்னொரு கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருப்பது எனக்கு இன்றுதான் தெரியும் "என்று” பதிலளித்தாளாம். ஜீவா கொசைன் தன் செய்கைக்காக வெட்கப்பட்டு, நீயே என் குரு" என்று வனங்கியதாக புராணம் சொல்லும்.
மீரா மட்டுமா இப்படி சொன்னாள்.. அப்பர், சுந்தரர். என்று கடவுளை பாட வந்த பெரியவங்க எல்லாம் கூட தன்னை பெண்ணாய் நினைச்சு தான் பாடி இருக்காங்க..என்னன்னா பெண்ணுக்கு தான் மற்றவரை காதலிக்க, அன்பு செய்ய முடியுமாம்..
பெண்களாக மாறி பாடி உருகும் போது தான் ஆண்டவனே இரங்கி வருவான்ங்கிற போது, இது மிகப் பெரிய பாதிப்பு இல்லையா ஆணுக்கு?
சரி..அவர்களால் தன்னை பெண்ணா கற்பனை செய்து பார்க்க முடியும்போது, நாமும் தான் மனசளவில் ஆணாக கொஞ்சம் நினைச்சுப் பார்ப்போம்..
அப்படி ஆண்களுக்கு இந்த பெண்களால் ஏற்படும் பாதிப்பு தான் என்னென்ன?
ஒண்ணா ரெண்டா எக்கச்சக்கம்..இல்லையா?!
என்ன பிறந்தப்ப, அப்பா "எனக்கு பையன் பிறந்துட்டான்"னு பெருமையடிச்சிரூப்பார்..ஆனால் உண்மையிலே தனியே கஷ்டப்படுற தனக்கு ஒரு கூட்டாளி கிடைச்சுட்டான்னு தான் சந்தோஷப்பட்டிருப்பார்ன்னு நினைக்கிறேன்.
இந்த பொண்ணுங்க கூட வந்த போட்டி, படிக்கிற காலத்திலேயே ஆரம்பிச்சுருச்சு..இத்தனைக்கும் இவங்களாம் படிக்க ஆரம்பிச்சதே இந்த இருநூறு வருஷமாத்தான்..
எப்படி அப்படி சொல்லலாம். ஒவ்வையார் இல்லையா காரைக்கால் அம்மையார் இல்லையா ஆண்டாள் இல்லையா? எவ்ளோ சங்க பெண் புலவர்கள் இருந்துருக்காங்கன்னு கேட்கலாம்.
சங்க கால அவ்வை 2ம் நூற்றாண்டில் இருந்தார்ன்னு சொல்றாங்க..அந்த சங்க காலத்து பெண் புலவர்கள் 41 பேர்ன்னு பெரியவர் ஒவ்வை நடராஜன் ஆய்வு செஞ்சு சொல்லியிருக்கார்.
அப்புறம் பார்த்தா பெரிய..இடைவெளி..
பின்னர் காரைக்கால் அம்மையார் வரும் போது.3ம் நூற்றாண்டு பிற்பகுதி..அப்புறம் பெயர் சொல்லும் வண்ணம் வந்த புலவர்னா ஆண்டாள் தான்.அது 8ம் நூற்றாண்டு..
நடுவிலே எத்தனையோ ஆண் புலவர்கள் வந்து போயிருக்காங்க..ஆனா ஏன் பெண் புலவர்கள் அவ்வளவாக இல்லை? இல்லே சுத்தமாவே இல்லையா? ன்னு கேள்வி வருது இல்லையா? சங்க கால பெண் புலவர்கள் 41னு இருந்தது எப்படி மாறிப் போனது?
பெருங் காப்பியம் ஆன சிலப்பதிகாரமும் அதே 8.ம்.நூற்றாண்டு தான்.அதுலே கண்ணகிக்கு திருமணம் 12 வயதில் ஆகுதுன்னு சொல்ற இளங்கோவடிகள் அவள் படிச்சதா சொல்லலை..ஆனா மாதவி படிச்சிருக்கான்னு தெரியுது..அதான் கோவலனுக்கு லெட்டர் குடுத்து அனுப்புறாளே..!!
கலையும் கல்வியும் குல மகளிருக்கு இல்லைன்னு ஆகிப் போன காலம் அதுன்னு தெரியுது..
இப்படி 200 வருஷத்துக்கு முன்னாடி தான் படிக்க ஆரம்பிச்சுட்டு, இந்த பெண்கள் போடுற போட்டி இருக்கே..எல்லா பாடத்திலும் அவங்க தான் முதல்..நல்ல வேளை இந்த கோரானா காலத்தில் தான் அது இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருக்கு இல்லையா?!!
சரி அங்கே முடிச்சு வேலைக்கு போனா, அங்கியும் போட்டி..கம்மியா சம்பளம் குடுத்து நிறைய வேலை வாங்கினாலும் கேள்வி கேட்காம செய்வாங்கன்னு, சித்தாள் வேலையிலேயிருந்து ceo வரைக்கும் வரைக்கும் அவங்களுக்கு தான் டிமாண்ட்..இதுலே அவங்களுக்குண்ணு இட ஒதுக்கீடு..
போதாக்குறைக்கு இனிமே பெண்கள் பள்ளினா பெண்கள் தான் ஆசிரியராம்..அட.. பெண் போலீஸுன்னா கூட தனி சலுகை..கேட்டா அரசியல் அமைப்பு சட்டத்திலேயே பெண்களுக்கு சலுகை குடுத்து, அவர்கள் நலம் காக்க, தனி சட்டம் இயற்றச்சொல்லி இருக்குன்னு கை காட்டுறாங்க..!!
சரி..எப்பிடியோ 'தம்' பிடிச்சு வேலைக்கு சேர்ந்தா, வீட்டிலே கல்யாண பேச்சு ஆரம்பிக்கும்..
ஐய்யயோ ..எங்க அப்பா தாத்தா காலத்திலே பொண்ணு பார்க்க போறோம்ன்னு அவங்க அடிச்ச லூட்டியை எல்லாம்..இப்போ இவங்க பண்றாங்க…இன்னும் கொஞ்ச காலத்திலெ 'மஞ்சு'வை விரட்டினது போய், 'மஞ்சுவிரட்டிலே' ஜெயிக்கறவனுக்கு தான் பொண்ணுன்னு திரும்ப வந்தாலும் வரும்..ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
அப்படியே வீட்டுக்கு மனைவியை கூட்டிட்டு வந்துட்டா, வீடே மாறிப் போகுது..அப்பா, அம்மாலாம் ரொம்ப பேச முடியலை..முதலேயே தனிக்குடித்தனம் வச்சுட்டு டீசண்டா நகர்ந்துக்கிறாங்க
நம்ம பாடு தான் மோசம் . அது தான் அவங்களுக்கு துணையா தான் சட்டங்கள் இருக்கு.,மகளிர் நீதிமன்றம், இருக்கே..ஆண்கள் நீதிமன்றம் இருக்கா?.
என்ன முnனாடியெல்லாம் மனுவோட சட்ட திட்டம்ன்னு இருந்தது. எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். அது இல்லாம நம்ம கூட வச்சிக்கலாம்.இல்லே அவளை கூட்டிட்டு தனியா போய் வாழலாம்..யாரும் எதுவும் கேட்க முடியாது..ஆனா நம்ம சொத்துண்ணு நம்ம மனைவி வீட்டிலே பத்திரமா இருப்பா..
கண்ணகி கூட, திரும்பி வந்த கோவலனை பார்த்து, இன்னொருத்தி கூட குடித்தனம் பண்ணிட்டு, இப்ப அன்னக்காவடியா வந்து நிற்கிறியேன்னு சண்டை போடலைஅ. வன் பிரிந்து சென்ற காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினரை போற்ற முடியவில்லையே என்று தான் வருந்தினாலாம்.அப்பேற்பட்ட கணவனை கொன்றதற்கு தான், அவளுக்கு கோபம் வந்தது..கற்புக்கரசியானாள்!!
அதாவது கணவன் தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தினாலும் அதை ஒரு பெண் குற்றம் சுமத்தி, கேள்வி கேட்கக் கூட தோன்றாத நிலையில்தான் இருந்திருக்கிறாள்..ஆனால் இப்போ..அவனை மாதிரியே மனைவியும் தொடர்பு வச்சிக்கிட்டா குற்றமில்லைன்னு கோர்ட்டு சொல்லிடுச்சு..இதை எங்கே போய் சொல்லி அழுவ?
அதே போல, முன்னெல்லாம், கோபம் வந்து, கணவன், மனைவிக்குள் சண்டை வந்து, அவளை ரெண்டு தட்டு தட்டினா கூட, யாரும் குறுக்க வரமாட்டாங்க..அவன் பொண்டாட்டி அவன் அடிக்கிறான்னு போயிடுவாங்க..
ஆனால் இப்போ குடும்ப வன்முறை தடுப்பு சட்டமாம். பத்து ஊரு தாண்டி இருக்கிற பத்மாக்காவையும் சேர்த்து 'உள்ளே' போடுறாங்க.அதுவும் இந்த மகளிர் போலீஸ் ஸ்டேஸன் இருக்கே..ஸ்ஸ்ஸ்..மாட்டினா குஷ்டம்டா சாமி..
சரி..நம்ம ஏரியா "தலை"யை பார்த்து நம்ம கஸ்டத்தை சொல்லி ஹெல்ப் கேட்கலாம்னா,இது ரிசர்வ் தொகுயில்லே..அதுவும் பொண்ணு தான்!!
குழந்தைகள்ன்னு பார்த்தால், "ஈன்று புறம் தள்ளுதல்" தான் அவள் கடமையாம்...சான்றோன் ஆக்குவது தந்தையின் கடனையாம்.
ஆசைக்கு பொண்ணு, ஆஸ்திக்கு ஒரு புள்ளைன்னு சொன்னதும் போச்சு!! பொம்பளை புள்ளைக்கும் ஆஸ்தியிலே பங்கு குடுக்கணுமாம். அதுவும் அவளுக்கு நகை, நட்டு போட்டு கல்யாணம் பண்ணிக் குடுத்தும்!!
எப்படி பார்த்தாலும் பெண் இம்சை(அது சநதோஷமோ கஷ்டமோ) கொடுக்கிறவளா தான் இருக்கிறா..ஆனா அவள் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியலை..
இவளை நினைச்சு படுற கஷ்டத்தில் உடம்பு கெட்டு போறதை பைபிளும் சொல்லுதே!!
Drooping hands and week knees are caused by the wife who does not make her husband Happy's
..Sirach 26:23
இவள் பிரியமும் ஆபத்துன்னு தானேஇந்த ஷேக்ஸ்பியர் கிண்டல் செய்றார்..
"a light wife doth make a heavy husband" சொல்றாரே!!☺️
பின்னே "ஏறு போல பீடு நடை" கலோகியலா சொல்லனும்னா. "சிங்க நடை போட்டு சிகர்த்தில் ஏறணும்"னா, அதுக்கு நல்ல மனைவி வேணும்னு சொல்லிட்டார் தாடிக்காரர்..அதாங்க திருவள்ளுவர்
ஒரு பெண் தான் "சக்தி"ன்னு சொல்லாம, சொல்ற மாதிரி, சாமியே கூட தன் இதயத்தில் வச்சிருக்க, இன்னொருத்தர்தன் மனைவியை தன் பாதியா வச்சிக்கிட்டார்.. அதுவும் பத்தலைன்னு, தலைக்கு மேல ஒருத்தி!!
ஆனா இந்த பெண்களை பார்த்து ஏன் ஆண்களுக்கு பயம் ஏற்படுதுன்னு கூர்ந்து பார்த்தா தெரியும் அவர்கள் காட்டும் "அந்நியோனியம்"
இதோ ஓஷோ சொல்கிறார்
"அந்நியோன்யம் குறித்து அனைவருக்கும் பயம், அனைவருக்கும் அந்நியோன்யம் தேவைப்படுவதால் இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலானதாக மாறுகிறது. அனைவருக்கும் அந்நியோன்யம் தேவைப்படுகிறது, ஏனென்றால், அது இல்லையெனில், இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் தன்னந்தனியாக - ஒரு நண்பர் இன்றி, ஒரு காதலர் இன்றி, நீங்கள் நம்பிக்கையுணர்வு கொள்ளக்கூடிய ஒருவரும் இன்றி, உங்களுடைய காயங்களையெல்லாம் வெளிப்படுத்தக்கூடிய ஒருவரும் இன்றி இருக்கிறீர்கள். காயங்கள் திறந்த நிலையில் இருந்தால் அன்றி அவற்றினால் குணமடைய முடியாது. நீங்கள் அவற்றை எவ்வளவு அதிகமாக மறைக்கிறீர்களோ, அவ்வளவு ஆபத்தானவையாக அவை மாறுகின்றன. அவை புற்றுநோய் தன்மையுடையவையாக மாறிவிடக்கூடும்.
ஒரு விதத்தில் பார்த்தால் அந்நியோன்யம் ஒரு அத்தியாவசியத் தேவை. அதனால் அனைவரும் அதற்காக ஏங்குகின்றனர். அடுத்தவர் அந்நியோன்யமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். அவர் தன்னுடைய தற்காப்பு ஏற்பாடுகளையெல்லாம் விட்டுவிட்டு பாதுகாப்பின்றி இருக்க வேண்டும். தன்னுடைய காயங்களையெல்லாம் வெளிப்படுத்த வேண்டும், தன்னுடைய முகத்திரைகளை மற்றும்
பொய்யான முகங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும், உள்ளபடியே எதையும் மறைக்காமல் உங்களிடம் முழுவதும் வெளிப்படையாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் மற்றொருவிதத்தில் பார்த்தால், அனைவருக்கும் அந்நியோன்யம் குறித்து பயம் - நீங்கள் அடுத்தவருடன் அந்நியோன்யமாக இருக்க விரும்புகிறீர்கள், ஆனால், உங்களுடைய தற்காப்பு நடவடிக்கைகளை நீங்கள் விடுவதில்லை. நண்பர்களிடையே, காதலர்களிடையே உள்ள போராட்டங்களுள் இது ஒன்றாகும்: யாருக்கும் தன்னுடைய தற்காப்பு நடவடிக்கைகளை விட்டுவிட விருப்பமில்லை, யாருக்கும் முற்றிலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், திறந்த இதயத்துடனும் இருப்பதற்கு விருப்பமில்லை இருப்பினும் இருவருக்கும் அந்நியோன்யம் தேவைப்படுகிறது.
உங்களுடைய மதங்கள், உங்களுடைய கலாச்சாரங்கள், உங்களுடைய சமுதாயங்கள், உங்களுடைய பெற்றோர், உங்களுடைய கல்வி - இவையெல்லாம் உங்களுக்கு அன்பளிப்பாக அளித்துள்ள கட்டுப்பாடுகளையும், உணர்ச்சிகளை அடக்கி உங்களால் வைக்கின்ற உங்களுடைய தன்மையையும் நீங்கள் விடாதவரையில் எப்பொழுதும் வேறொருவருடன் அந்நியோன்யமாக இருக்க முடியாது. மேலும், அதற்கு நீங்கள் தான் முன்முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் உணர்ச்சிகள் எதையும் நீங்கள் கட்டுப்படுத்தவில்லை அல்லது அடக்கவில்லை என்றால், அப்பொழுது உங்களிடம் காயங்கள் எதுவும் இருக்காது.
நீங்கள் ஒரு எளிமையான, இயற்கையான வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அந்நியோன்யம் குறித்து எந்த பயமும் இருக்காது - இரு ஒளிச்சுடர்கள் கிட்டத்தட்ட ஒரே சுடராகி விடுமளவு மிகவும் நெருங்கி வருகின்ற மிகப்பெரிய ஆனந்தம் மட்டுமே இருக்கும். அந்த சந்திப்பு மிகப்பெரிய திருப்தியை, மகிழ்ச்சியை, நிறைவை அளிப்பதாக இருக்கும்"
ஆனால், நீங்கள் அந்நியோன்யமாக இருப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்னால், நீங்கள் உங்களுடைய இல்லத்தை முழுவதும் துாய்மைப்படுத்த வேண்டும்."
அப்போ தவறு நம் மீது தான் இருக்கிறதா?
நம் மன வீட்டை சுத்தம் செய்யாமலா, மற்றவரை குறை காண்கிறோம்..
இருக்கட்டும்..
காரணம் தெரிந்தபிறகு, களைவது..எளிதல்லவா?!!
தவறுகள் குற்றங்கள் ஆகாது!!
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக