வெள்ளி, 4 ஜூன், 2021

தாய்ப் பாசம் எப்படிப்பட்டது?

 அம்மா என்று

அழைக்காத உயிர்
இல்லையே
அம்மாவை வணங்காமல்
உயர்வில்லையே'

மேலை நாடுகளின் பார்வையில் பெண் ஒருவனின் மனைவி மட்டுமே.. ஆனால் கிழக்கில் தான் அவள் எப்போதும் தாயாக போற்றப்படுகிறாள்.

உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட, எந்த நிலையிலும் தாயின் உறவை துறக்க முடியாது.

பற்றுகளிலிருந்து விடுபட்ட துறவிகளுக்குப் பூர்வாசிரமம் இல்லை என்கிறது சனாதன தர்மம்.

சரி தானே?

ஒரு துறவியை, அவர் தந்தை பார்க்கும்போது, தந்தை தான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் அதுவே தாய் என்றால் , அவள் பாதத்தில் துறவி விழுந்து வணங்க வேண்டும். தந்தைக்கு இல்லாத மதிப்பை இந்து தர்மம் தாய்க்குத் தந்திருக்கிறது.

தன் அம்மாவிற்கு இறுதிக்கடன் முடிக்க சங்கரர் முடிவெடுத்தபோது வராத ஏச்சு பேச்சா.. '..

துறவிக்கு ஏது உறவு?' 'சந்நியாசம் வாங்கியவன் பிரேத சம்ஸ்காரம் செய்ய முடியாது' 'தர்மத்தை மீறினால் தள்ளி வைத்துவிடுவோம்' என்று எப்படியெல்லாம் மிரட்டல்… அவர் அசைந்து கொடுக்க வில்லையே….

தாய்க்கு உரிய ஈம சடங்குகளை செய்த அவர், உருகி உருகி, அந்த ஐந்து பாடல்கள 'மாத்ருகா பஞ்சகம்' மூலம் தன் சோகம் முழுவதையும் இறக்கிவைத்தார்..

உறவுகளை ஒரே நொடியில் உதறித் தள்ளிய பட்டினத்தாராலும் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. தாயின் தியாகத்தை விளக்கும் அவரின் பத்துப் பாடல்களுக்கு இணை ஏதும் உண்டா ?.

இயேசு கிறிஸ்து, உடற் கூட்டிலிருந்து உயிர்ப் பறவை பறக்கும் அந்தக் கடைசி நொடியில் கூட ஒவ்வொருவர் நெஞ்சிலும் தாயின் நினைவே வேண்டும் என்பத்ற்காக, சிலுவையில் அறையப்பட்ட தன்னுடைய மரணப் பொழுதில் அவர் தாயை நினைத்தாராம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேசுவரம் காளி கோயிலில் அம்பிகை தரிசனத்தில் ஆழ்ந்து கிடந்தாலும், பெற்ற தாயை இறுதிவரை பராமரிக்க மறக்கவில்லை. அவருடைய ஆன்மிகச் சீடர் விவேகானந்தர் வேதாந்த சிகரத்தில் நின்ராலும், தாயின் விருப்பத்தை நிறைவேற்ற, தனக்கு நம்பிக்கை இல்லாதபோதும் கங்கையில் நீராடி, ஈர உடையுடன் காளி கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தார்..

கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில் கூட இறுதிவரை தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர், தன் மார்பில் தாயின் படத்தை தழுவியபடி நாற்காலியில் சரிந்து கிடந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம் இது. தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றும் பெரும்பாலோனோர் இன்பங்களைப் பட்டியலிட்டு அனுபவிக்கும் அவசரத்தில், பெற்றோரைப் புறக்கணித்துவிடுகின்றனர்.

வெளிநாட்டில் உல்லாசப் பயணம் போனோம் என்று தன் கணவர், மனைவி, குழந்தை என்று தங்கள் குடும்ப புகைப்படஙகள் வெளியிடும்போது,…..

இந்த இளைஞர் தன் அம்மாவுடன் உலக சுற்றுப்பயணம் சென்றதாக தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த புகைப்படங்கள், அவர் தன் தாய் மீது கொண்ட பாசத்தை மட்டும் காட்டவில்லை. இது போன்ற தாய்க்கு மரியாதை காட்டும் இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று நமக்கு உணர்த்துகிறது!!

பெயர் தெரியாத சகோதரனே உனக்கு என் வந்தனம் !!

நன்றி.

ஸ்ரீஜா.

1 கருத்து: