வெள்ளி, 4 ஜூன், 2021

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் 

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் வலது புறத்தில் உள்ள திருப்பட்டூர். சின்ன ஊர். நுழைந்தவுடன் பார்க்கலாம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் முகப்பை.

பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றிய இடம் என்பர்.

ஐந்து முகனாக இருந்த பிரம்மன் அது குறித்த கர்வம் கொண்டதால் ,கோபம் கொண்ட சிவன், அந்த ஐந்தாவது தலையை கிள்ளி ஏறிய, பிரம்மன் சிவனை நோக்கி தவம் இருந்து அவன் அருள் பெற்றதாக வரலாறு.

கோவில் வளாகத்தில் உள்ள 12 சிவலிங்கங்களை கொண்டு பிரம்மன் வழிபட்டதால், ஆனந்தம் அடைந்த பார்வதி தாயார் இறைவனிடம் "ரெகமெண்ட்" செய்ய, அங்கிருக்கும் மகிழ மரத்தடியில் ஈசன் பிரம்மனுக்கு சாப விமோசனம் கொடுத்து படைக்கும் தொழிலை மீண்டும் அளித்து, இங்கு வேண்டி வரும் பக்தருக்கு அருள் புரிய செய்தார் எனபது தலவரலாறு.

பிரம்மனின் தலையெழுத்தே மாற்றப்பட்ட இடம் என்பதால் இங்கு வீற்றிருக்கும் ப்ரம்மபுரீஸ்வரை தரிசித்து, பின் பிரம்மனை தரிசிக்க, .அங்கு செல்லும் முன் உங்கள் ஜாதகத்தை கொண்டு போய் பிரம்மனின் இடத்தில் வைத்து வேண்டினால் நம் தலையெழுத்தே மாறும் என்பர்.

ஆனால் சிலர் மற்றவருக்கு கெடுதல் வர வேண்டியதால் அவருடைய விதி மோசமானது என்பர்.

அதே போல திருப்தியான வாழ்வு உள்ளவர் மேலும் வேண்டி சென்றால், அவரை பிரமன் தண்டிப்பான் என்ற கருத்தும் நிலவுகிறது..

முதலில் பிரம்ம புரீஸ்வரர் தரிசனம் பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி. தரிசித்து முடிந்ததும் செல்லவேண்டியது. பிரம்மனுக்கு அருள் புரிந்த பிரம்மநாயகி .தாயார் சன்னிதி..நந்தவனத்திற்கு செல்லும் முன்பு தனியாக வீற்றிருக்கும் பிரம்மநாயகி தாயாரின் எழில் உருவம் கண்ணில் நிறையும். தலவிருட்சம் மகிழ மரம்.

அதை ஒட்டி உள்ள நந்தவனத்தின் முகப்பில் உள்ளது பிரம்மதீர்த்தம். இது அம்மனின் ஆலயத்தின் வடப்புறம், நான்கு படித்துறைகளுடன் உள்ளது.

இப்போதும் வற்றாத நன்னிர இருக்கிறது., இத்தீர்த்ததினால் தான் பிரம்மன் அருள்மிகு ஈஸ்வரனை அர்ச்சித்ததால் தான் இதற்கு "பிரம்மதீர்த்தம் என பெயர் வந்ததாம்.-

அருமையாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த நந்தவனமும் பிரம்மன் வழிபட்ட ஈஸ்வரனின் 12 லிங்க வடிவங்களும் தனி மண்டபமும் பிரமாண்டமான நந்தீஸ்வரரும் ஆன்மீக மயக்கம் கொள்ள வைக்கும்.

விலகி வெளியே வந்து, தனி சந்நிதியில் உள்ள பிரம்மனின் தரிசனம்.

தாண்டி வந்தால் அங்கு முக்தி பெற்ற பதஞ்சலி முனிவரின் தியான மண்டபம்..அங்கு அமர்ந்து கண்ணை மூடி த்யானம் செய்ய முயலும்போது, எந்தவித ப்ரயாசையும் இல்லாமல் …மனதின் உள்ளே உள்ளே..போக முடிகிறது.கண்ணை திறக்கும்போது, எதிரிலிருக்கும் பதஞ்சலி சித்தரின் உருவம் நிஜம் போல் தோன்றி, அவர் ஆசி கிட்டிய தோற்றம் கொடுக்கும்.

இங்கு இவர் மட்டுமல்ல வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோரும் சிவனை தரிசித்து முக்தி அடைந்தர் என்பர்.

வியாகிரபாதர் ஜீவ சமாதியடைந்த சிவன் கோவில் சற்று அருகிலேயே உள்ளது. இவர் கால்கள் புலியின் கால்கள் போல இருக்குமாம்.அதனால் இவருக்கு புலிக்கால் முனிவர் என்றும் பெயர். இந்து தொன்மவியலின் அடிப்படையில் மத்யந்தனர் என்பவரின் மகனும், சிறந்த சிவ பக்தனும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் இந்த பெயர் வந்த காரணம்…

சிவபெருமானுக்கு தூய மலர்களால் அர்ச்சனை செய்ய விரும்பிய மழன், மரத்திலிருந்து கீழே விழும் மலர்களையும், வண்டு போன்ற உயிரினங்களால் நுகரப்பட்ட மலர்களையும் ஏற்க மறுத்தார். அதனால் அதிகாலையிலேயே மரத்தில் ஏறி அர்சனைப் பூக்களை சேகரிக்க எத்தனித்தார். இரவு நேரத்தில் கண்களுக்கு போதிய வெளிச்சம் இல்லாமையாலும், மரத்தில் ஏறுவதற்கு வசதியான உடலமைப்பு இல்லாமையாலும் மிகுந்த கவலையுற்றார். அதனை தீர்க்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து இரவில் தெரியும் பார்வையும், புலிக்கால் மற்றும் புலி நகங்களையும் பெற்றார்.

சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பது புலியைக் குறிப்பதனால் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். இதற்கு புலிக்கால்களை உடையவர் என்று பொருளாகும். தமிழில் புலிக்கால் முனிவர் என்றும் அறியப்படுகிறார். அதேபோல அந்த கோவிலின் பின்பு உள்ள நீரோடை அவரே தன் புலிகால்களால் நிலத்தை கீறி உருவாக்கியதாம்.ஒருமுறை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வான்வழியே நீரெடுத்து சென்ற ஐராவத யானையை இவர் கேட்டு, இந்திரனுக்கு கொண்டு செல்வதால், அது தர மறுத்ததாகவும் அதனால் இவரே இந்த நீரோட்டத்தை உருவாக்கினார் என்று தல வரலாறு சொல்கிறது.

அந்த கோவிலின் முகப்பிலேயே வியாகிரபாதர் சிவனை வழிபடும் சிற்பம் இருக்கும்.

திரும்ப பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் திரும்புவோம்.இந்த கோவில் வளாகத்திலேயே தனியாக பழமையான சிவன் கோயில் உள்ளது.இது ப்ரம்மபுரீஸவரர் கோவிலுக்கும் காலத்தால் முற்பட்ட கற்றளியாகும். அழகே உருவான இக்கோயிலின் ஆதிதளம் காந்தார அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆதிதளத்தின் ஒவ்வொரு சுவரும் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டு, ஒடுக்கங்களுடன் உள்ளது.அதன் இடைப்பட்ட குறுகிய பாதையில் சுற்றி வந்து இறைவனை தரிசிக்கலாம்.நான் இரண்டாவதாக சென்ற போது புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதோ இது தான்👇

கோவிலை வலம் வந்து 36 நெய் தீபம் ஏற்றவேண்டும்.தற்போது தீபம் எதுவும் ஏற்ற அனுமதி இல்லை என்பதால் கோவிலுக்கு நெய் வாங்கி கொடுக்கலாம்.

மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே ஒருவர் இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று நம்பபடுகிறது

நீங்களும் முயற்சித்து பாருங்களேன் இறைவனின் அருளால் தலைவிதி மாறுமா என்று..

நன்றி

ஸ்ரீஜா.

படிமப்புரவு கூகிள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக