உங்கள் பகுதியில் உள்ள விசேஷமான கோயில் ,அதன் சிறப்பு, தங்கள் அனுபவம் பற்றி கூறவும்?
இராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி கோவில்
என் சொந்த ஊர் இராமநாதபுரம் என்றாலும் எல்லோரும் சென்னையிலேயே குடி போனதால் எனக்கும் ஊருக்கும் தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு சொல்ற அளவில் தான் பந்தம்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனா பாருங்க தன்னோட மண்ணுனா எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது போலும். இல்லேன்னா . அப்பாவோட நினைவு நாள், இராமேஸ்வரம் போகனும்.பித்ரு கடனிருக்குன்னு சொன்னவுடனேயே பையை தூக்கிட்டு கிளம்பிட்டேனே ஊருக்கு..இத்தனை வருஷம் தோணாதது, இப்ப ஏனோ தோனிடிச்சு.. இராமேஷவரத்திலே கொரானா இல்லைன்னு சொன்னார்கள்.. இருந்தாலும் எல்லாம் அந்த இராமநாத ஸ்வாமி விட்ட வழி.
இராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி கோவில்
தல வரலாறு
இராமன், இராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட ப்ரஹ்மஹத்தி தோஷம் நீங்க சிவனை நோக்கி வேண்ட பெரிய லிங்கம் கொண்டு வருமாறு சொல்கிறார் அனுமனை.
நேரம் செல்லவே, சீதை அந்த கடல் மணலில் பிடித்து வைத்த லிங்கத்தை கொண்டு பூஜை செய்ததாகவும் அதுவே மூலவரான இராமாநாதசாமி என்பர்.
சற்று நேரத்தில் அனுமன் கைலாய மலையிலிருந்து இரண்டு லிங்கங்களை கொண்டு வந்து சேர, அவர் வருத்தத்தை கண்டு, அவற்றை மூலவர் இருக்கும் இடத்தில் இடது புறமாக வைக்க சொல்லி. . . ( அவ்வாறு நிறுவப்பட்டது தான் ஆத்ம லிங்கம்) அதோடு நில்லாமல், தான் வழிபட்ட மூல லிங்கத்தை யாரும் தரிசனம் செய்யும் முன், அந்த ஆத்ம லிங்கத்தையே முதலில் தரிசிக்க வேண்டுமென்றும் அருள் புரிந்தார்.
அதனால் மூலவர இராமநாத சாமியை தரிசிக்கும் முன் ஆத்ம லிங்கத்தை சேவிக்கவேண்டும்.
பேசிக்கிட்டே கோவிலோட சிறப்புகள் சொல்ல மறந்தேன் பாருங்க..
- இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் இராமேசுவரம் பழமையானது.
- 274 பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.
- அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் பாடிய தலங்களில் ஒன்று.
- . இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது.
- இந்துகளின் முக்கிய சமய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் காசி யாத்திரை காசியில் துவங்கி இராமேசுவரத்தில் இராமநாதசுவாமியை தரிசித்த பிறகு தான் நிறைவு பெறுகிறது.
- இந்தியத் திருநாட்டில் உள்ள நான்கு முக்கிய திருத்தலங்களான இராமேசுவரம், துவாரகா, பூரி மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு திருத்தலங்களில்
- இராமேசுவரம் மட்டும் தான் தெற்கில் உள்ளது.
- இராமேசுவரம் மட்டுமே சிவத்தலமாகும்,
- பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத்திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும்... தெற்கே உள்ள ஒரே ஜோதிர்லிங்கம் இது மட்டுமே.
நாம் கோவிலில் நுழையும் முன், முதலில் போக வேண்டியது அக்னி தீர்த்தம்.
தீர்த்தம் என்பது ஒரு சமஸ்கிருத சொல்.கடப்பது என்று பொருள்படும். புனிதமான ஆட்கள், புத்தகங்கள், இடங்கள் இவையெல்லாம் தீர்த்தம் எனப்படும்.
இந்த அக்கினி தீர்த்தத்தில் மூன்று முறையாவது முங்கி எழவேண்டும்.குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு அதிகம் வருவதை பார்க்கலாம்.பவுர்ணமியிலும் அமாவாசையிலும் வெகு விசேஷம்.
அங்கு முழுக்கு போட்டவுடன் கோவிலின் வளாகத்தில் உள்ள 22 கிணறுகளில் இருந்து நீர் தெளித்துக்கொண்டு பின்பு தான் சாமி தரிசனம்.தற்போது கொரானா காரணமா 22 கிணறுகளில் தண்ணீர் ஊற்றுவது கிடையாது ஈர ஆடையுடன் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது. அதை மாற்றுவதற்கான அறைகள் உள்ளன என்றாலும் நான் தங்கும் இடத்திற்கு வந்து மாற்றி விட்டு சென்றேன்.
அடுத்து கோவிலுக்குள் நுழையும்போது சேது மஹாராஜாவும் அவர் பரிவாரங்களும் நம்மை வரவேற்பது போல ஸ்வாமியை வணங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உருவ சிலைகளாக ஒவ்வொரு தூணிலும் வடிக்கப்பட்டிருக்கும்.
இந்த கோவிலின் பெரும்பான்மையான கட்டிடப் பணிகள் சேதுபதி மஹாராஜாவால் செய்யப்பட்டுள்ளது.. ஆனாலும் இலங்கையின் ராஜாக்கள் இந்த கோவிலின் பணிகளில் பெரும் பங்கு வகித்தனர்.
வலது புறமாக திரும்பினால், ஆஞ்சநேயரின் சந்நிதி. ஆஞ்சநேயர் கொண்டு வந்த இரண்டு லிங்கங்களில் ஒன்று சன்னிதியின் பின் உள்ளது ஆஞ்சநேயர் கடல் தண்ணீரில் நின்ற நிலையில் உள்ளார். அவர் பாதம் தண்ணீருக்கடியில் உள்ளதை சுற்றி வலம் வரும் வழியில் மரப்பலகை போட்டு அடைத்து வைத்த இடத்தில் பார்க்கலாம்.
அடுத்து நீண்ட தாழ்வாரங்களை கடக்கவேண்டும்.
- இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு நீண்ட நடை கொண்டது
1884ல் எடுக்கப்பட்ட புகைப்படம்
தற்போதைய நிலை
பற்பல வண்ணங்களில் காட்சியளிக்கும் தாழ்வாரம் எனக்கு ரசிக்கவில்லை. an antique piece is always to be left as it is!!
மூன்று கட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தாழ்வாரங்களை தாங்கிப் பிடிப்பவை 1212 கலைநயமிக்க தூண்கள்.நின்று பார்க்க நேரமும் மனதும் வேண்டும். கண் கொள்ளாக் காவியம்!! மிக பழமையான …கிட்டத்தட்ட 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உள்கட்டு தாழ்வாரத்தில் தான் இராமநாதசாமி அன்னை பர்வதவர்த்தினியுடன் வீற்றிருக்கிறார்.
வெளித் தாழ்வாரத்தின் வலது புறம் அமைதியாய் நடனம் புரிந்தபடி நடராஜர் சன்னிதி. இங்கு தான் சுமார் 1.5 லட்சம் ரூபாயில் ருத்ராட்ச அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஆனந்த நடனம் புரியும் ஈசனின் எழில் வடிவம் கண்டு கண்கள் மெய்மறக்கும் போது அர்ச்சகரின் புராணக்கதை கேட்டு செவியும் உவகை கொள்கிறது.
சந்நிதிக்கு பின்புறம் ஜீவசமாதி அடைந்த பதஞ்சலி முனிவர்..சுவரால் மறைக்கப்பட்டுள்ளது.. தன்னை நாடி வருபவரை என்றுமே ஏற்றுக்கொள்ளும் கருணாகரன்!!
கோவிலின் சந்நிதிகளை , பூஜைகளை, மஹாராஷ்டிரவை சேர்ந்த மராத்தி பிராமணர்கள் செய்கிறார்கள்.ஆதி சங்கரர் தான் அவர்களை அழைத்துவந்து அரசரிடம் சொல்லி வீடுகள் கட்டிக்கொடுத்து தங்க வைத்ததாகவும் அவர்கள் தொடர்ந்து பரம்பரையாக இருக்கின்றனர் என்றும் பேச்சு.
அடுத்து ஸ்வாமியின் சன்னிதி இருக்கும் பிரகாரம் அடைந்து முதலில் சந்நிதியின் முன்பு வலது இடதாக அமைந்துள்ள ஆத்ம லிங்கத்தையும் காசி விஸ்வநாதரையும் தரிசித்து பின்னர்
மூலவர் இராமநாதசாமியின் முன் நான்…சுற்றியுள்ள ஜனத்திரள் மறைய, நானும் ஈசனும் மட்டும் தனியே…
ஏகாந்தத்தில் உள்ளம் பூரிக்க, வலம் வருகையில் தட்சிணாமூர்த்தியாக எம் பெருமான் காட்சியளிப்பதையும் கண் குளிர கண்டேன். சந்தான கணபதி எங்கும் காணாத அதிசயமாய் இரட்டை கணபதியாய் குழந்தை வரம் கேட்டு வருவோருக்கு அருளை அள்ளி கொடுத்துக்கொண்டிருக்க சற்று தள்ளி சயன கோலத்தில் பெருமாள் சந்நிதி. ராமனும் நானே விஷ்ணுவும் நானே என்று, சராணாகதி அடைந்த நிலையில் ஓரமாய் நின்றபடி காட்சி தரும் விபீஷணனுக்கு மட்டுமா தரிசனம் கொடுத்தார்..அந்த உள்ளம் கவர் கள்வன்…நமக்கும் தானே?!!
தாயாரின் சந்நிதியில் தான் வெகு நேரம் மனம் லயிக்க நின்றேன். பின்னே..அப்பனுக்கு ஆயிரம் வேலை உண்டு..அம்மை தானே மகளின் மனம் அறிந்து, தந்தையிடம் தூது போகிறவள்!!
பிறந்த வீட்டிலிருந்து கிளம்பும் பெண் போல, மனமே இல்லாமல் தான் வெளிவருகிறேன்…
நேரமாகிறதே..ரயிலுக்கு…
என்னுடைய கடமை உந்தித்தள்ள, அகிலத்தின் அன்னையிடம் இருந்து விடை பெறுகிறேன்.. இல்லையில்லை..என்னுடன் அவளையும் என் மனதில் ஏந்தி வெளி வருகிறேன்..
அன்புடன்
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக