ஆருத்ரா " என்றால் "ஆதிரை" என்று பொருள். இது ஒரு நட்சத்திரத்தின் பெயரும் கூட.
இருக்கும் 27 நட்சத்திரங்களில் "திருவோணம் "மற்றும் "திருவாதிரை" என்று இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே "திரு" என்ற அடைமொழி கொண்ட பெருமை கொண்டது.
ஏன்.
."திருவோணம் "பெருமாளுக்கு உரியது என்றால்,"திருவாதிரை" சர்வேஸ்ரனுக்கு உரியது. உடன் கேள்வி எழுமே…ஆதியும் அந்தமும் இல்லாதவனுக்கு எப்படி இது மட்டும் உகந்தது ?
பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும் ஈசன், நெருப்பு கோளமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது இன்று தான்.
"கர்மாவே பெரிது, கடவுளே இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன், தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் தான் மார்கழித் திருவாதிரை.
வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும்
இவர்களை பற்றி ஏற்கெனவே சொல்லியுள்ளேன்
சிவ பெருமானின் திருநடனத்தை பார்க்க விரும்பி, ஈசனை வேண்டிய போது, . அவர்களுக்காக தில்லையில் இந்த பணி சூழ்ந்த மார்கழித் திருவாதிரை நட்சத்திரத்தில் "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அழகு திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது..
அதுவும் எப்படிபட்ட நடனம் ?
ஆனந்தம் ..பேரானந்தம்……காமேஸ்வரியின் கடைக் கண்களின் வழியாகவும், காமேஸ்வரரின் தூக்கிய திருவடியின் வழியாகவும் பக்குவான்மாக்களுக்கு வெளிப்படுகின்றது.
நடராஜரின் இந்த திருநடனக் கோலத்தை சேக்கிழார் பெரிய புராணத்த்தில் இப்படி விவரிக்கிறார்…
“உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு வாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்”
இதில் "மலர் சிலம்படி " என்று எதை சொல்கிறார்?
உற்று பார்த்தால் விளங்கும். .
சிவன் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாரே.. இடது பாகத்தை உமை அம்மைக்கு கொடுத்த பின்னே, அந்த இடது கால், காமேஸ்வரியுடையதல்லவா? அப்படியாயின் ஆடுவது அம்மையல்லவா? பின் ஏன் ஈசன் ஆடுகிறான் என்கின்றனர்?
நடனக் கலைஞர்களுக்கு தெரியும்..
.என் பெண் நடனம் பயின்றவள் என்பதால் அதை அருகிருந்து காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு காலை தரையில் ஊன்றி இன்னொரு காலை தூக்கி நிற்பது சில நிமிடங்களே முடியும் அவர்களுக்கு… அவர்களுடைய இன்னொரு காலால் தரையில் ஊன்றி பாலன்ஸ் பண்ணுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல…
அப்படி ஒருவர் செய்யவே திணரும்போது, ஈசன், தன் ஒரு காலால் ஊன்றி நின்று தாண்டவ சிவமாக, அந்த காமேஸ்வரி நடனம் புரிய உருவத் திருமேனி கொண்டு இணைந்திருக்கின்றனர். மனைவி மேல் கொண்ட பாசத்தை அப்பன் உலகுக்கு காட்டும் நடராஜ கோலம் இது….😂
அது சரி…கனக சபை என்னும் இந்த தில்லையில் மட்டும் ஏன் ஆனந்த தாண்டவம் புரியும் கோலம் ?
கோயில் என்றால் இன்னின்ன ஊரில் உள்ள கோயில், இதற்கு பெயர் பெற்ற தலம் என்பர். ஆனால் அப்படி எதுவுமே சொல்லாமல், எந்த ஊர் பெயரையும் குறிப்பிடாமல், வெறும் "கோயில் " என்றாலே தில்லையைத் தான் சுட்டிக்காட்டுகின்றனர்..
ஐம்பூதத்தில் ஒன்றான ஆகாய வடிவில் அங்கு இறைவன் இருக்கிறான் என்றா?
சிவத் தொண்டர்களைப் பற்றி பாட எண்ணிய சேக்கிழாருக்கு, தில்லையில் வைத்து "உலகெலாம்" என்று ஈசனே அடி எடுத்து கொடுத்ததாலா?
அப்படி என்ன சிதம்பரத்திற்கு மட்டும் சிறப்பு?
63 நாயன்மார்களில் ஒருவரான விறன்மிண்ட நாயனார், சற்று கோபக்காரர். திருவாரூரில் சிவனடியார்களெல்லாம் அவர் தலைமையில் கூடி சிவனின் அரும் பெருமைகளை பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
எப்போதும் நல்லவர்கள் கூடி பேசினால் நன்மையே..இதுவே தீயவர் கூடினால்…
.அப்போது சுந்தரர் அங்கு வருகிறார்.அவர் யார் தெரியுமல்லவா…சிவனே சுந்தரரின் காதலுக்கு தூது போனவர்.☺️
மற்றவரெல்லாம் ஈசனுக்கு தொண்டனாக, பிள்ளையாக பக்தனாக வழிபட்டபோது, இவர் மட்டும் ஈசனை நண்பராக நடத்தியவர்!!☺️
யார் எப்படி இறைவனை காண்கின்றனரோ அப்படியே அவன் காட்சியளிப்பான் அல்லவா?
அப்படிப்பட்ட சுந்தரர் வருகிறார்..நாமெல்லாம் என்ன செய்வோம்..நாம் வணங்கும் ஈசனின் நண்பர் என்று, அவருக்கு பணிவிடை செய்வோம்…
ஆனால் சிவத்தொண்டர்கள் ஈசனை துதிப்பதிலேயே இருக்கின்றனர். சுந்தரரும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றெண்ணி கோயிலுக்குள் செல்கிறார். அப்போது அங்கிருந்த அடியார் ஒருவர், விறன்மிண்டரிடம் வத்தி வைக்கிறார்…
இது இங்கே மட்டுமில்லை.. 😁சிவனடியார்களிடமும் உண்டு😀கலகம் மூட்டவென்றே சிலர் இங்கும் அங்கும் ஓடி ஓடி போய்…😉
"பாருங்கள் சுந்தரர் சிவனடியார்களை கண்டும் தொழாமல் சென்றுவிட்டார் " என்று…
விறன்மிண்டர் கோபக்காரர் இல்லையா…அவர் சொன்னார்… "இந்த சிவத்தொண்டர்களை மதியாது சென்ற சுந்தரரை இந்த சைவத்திலிருந்தே விலக்கி வைக்கிறேன்" என்று..
அந்த சிவனடியார் விடவில்லை…"அத்தோடு எப்படி முடியும்? இவ்வாறு மதியாது சென்ற சுந்தரரை அந்த சிவன் ஏற்றுக்கொண்டாரே , அது சரியா?" என்று கேள்வி கேட்கிறார்..விறன்மிண்டருக்கும் அது சரியென்று பட்டது.உடன் சொன்னார்.."சிவத்தொண்டர்களை மதியாத சுந்தரரை ஏற்றுக்கொள்ளும் சிவனையும் இந்த சைவ சமயத்திலிருந்து விளக்கி வைக்கிறேன்" என்று😂
எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா…ஒரு தெய்வத்தை வழிபடும் அடியார்கள், அந்த தெய்வதையே விலக்கி வைப்பதாவது..🤣
அந்த ஈசன் ..பாவம்.அடியார்களுக்கு அவன் அடியாரல்லவா,!! சிவனடியார்களுக்கு உரிய மரியாதை செய்யுமாறு சுந்தரரை அவன் பணிக்க, அப்போது சுந்தரர் பாடியது தான்
"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;" என்று ஆரம்பிக்கும் திருத்தொண்டத் தகை..
அதன் பிறகு பாடப்பட்டது தான் பெரிய புராணம்..அதற்கு சேக்கிழார் வைத்த பெயரோ "திருத்தொண்டர் புராணம்"..
சிவபுராணம் பாட வந்தவர் கதாநாயகனை விட்டு விட்டு, அவன் அடியாரை ஏன் பாடினார்?
ஒரு சினிமாவில் கதாநாயகன் என்றால் நல்லவன். என்றும் அவனுக்கு தொல்லை கொடுக்கும் வில்லன் கெட்டவனாகவும் இருப்பர்.
ஆனால், சைவத்தில் என்ன நடக்கிறது? சிவன் அவன் அடியார்களுக்கு தான் ஏகப்பட்ட தொல்லை கொடுக்கிறான்.
ஒருவரிடம் கண்ணை கேட்டான்.மற்றவரிடம் பிள்ளையை…இப்படி.
அப்படியெனில் சிவபுரணத்தில் சிவன் தான் வில்லனா? 😁
அவனுடைய திருவிளையாடலில் தங்களையே தொலைத்த அடியார்களை தான் முன்னிலையாக்கி, ,"நாயன்மார்கள்" என்று பட்டம் கொடுத்து தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான்.
அது மட்டுமா..
தன் மனைவியர்களுக்குள் பாரபட்சம் காட்டி சாபம் பெற்ற சந்திரனுக்கும் விமோசனம் கொடுத்து தன் தலையில் சூடிக்கொண்டான்!!
பகீரதனின் வரத்தினால் கோபமுற்று, ஆகாச கங்கையாக பிரவாகமாக பூமிக்கு பாய்ந்த, தலைக்கனம் பிடித்த கங்கையை தன் சடைமுடியில் கட்டிக்கொண்டான்!! என்னே அவன் கருணை!!
இப்படி தொண்டருக்கு அடித்தொண்டனாக, கேட்கும் வரம் கொடுக்கும் சங்கரனாக இருப்பதால் தானே அவனை "பித்தா " என்கின்றனர்!!
படிமப்புரவு கூகிள்
எப்பேறு பெற்றது சிவத்தொண்டர் என்ற நிலை…
அவனுடைய இந்த ஆனந்த வெள்ளத்தையே ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள கரணங்கள் எல்லாம் சிந்தையேயாகத் திளைத்து, ஆளுடைய நம்பிகளாகிய சுந்தரர் பெருமான். மூர்த்தியையும், கீர்த்தியையுங்கொண்டு உண்மை ஞானத்தை உணர்தலே சிறந்த ஞானம். அதுவே மோக்ஷவாயில்.
பக்குவமில்லாத பசுக்கள் தங்கள் பசுபோத ஞானத்தால் வாய்க்கு வந்த வண்ணம் பேசத் தொடங்கும் போது . அவைகளுக்கு வழிகாட்டியாகவும் பக்குவான்மாக்களுக்கு மேல்வரிச் சட்டமாகவும் தத்துவமார்க்கத்தையும் காட்டி சிற்றம்பலத்தில் நடனம் செய்பவனின் மலர் போன்ற சிலம்பணிந்த திருவடிகளை வணங்குவோம்.
திருச்சிற்றம்பலம்.
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக