வியாழன், 3 ஜூன், 2021

கடவுள் உள்ளார் என்று எடுத்துரைக்கும் சில சம்பவங்கள் பற்றி கூற முடியுமா?

நான் ரெண்டு விஷயங்களைத் தான் சொல்ல போறேன்.அதுவும் அறிவியல் பூர்வமா..

ரெண்டு நாள் முன்னாடி இந்த டிசம்பர் 21 சாயந்தரம் 6.30 மணி. நானும் என் கணவர், பிள்ளைகளோட மொட்டை மாடியில் இருக்கிறோம்…ஆளுக்கு ஒரு பூதக் கண்ணாடி, ..பைனாகுலர் சகிதம்..பக்கத்து வீட்டு மொட்டை மாடியெல்லாம் காலியாக் கிடக்கு.யாரையும் காணோம். ஓடிக்கிட்டுயிருக்கிற டிவி சத்தம் மட்டும் கேட்குது

என்ன யாருக்கும் இதை தெரிஞ்சிக்க ஆசையில்ல்லையா? கூகிளே குரு கிரகமும் சனி கிரகமும் ஒண்ணு சேருற அதிசயத்தை போடுது ..இங்கே என்னன்னா…

பனி படர்ந்து மேகக் கூட்டம் மேற்கு திசையை மறைக்க,…வானத்தையே பார்த்திக்கிட்டு யிருக்கேன்.

குருவும் சனியும் சேருற அதிசயத்தை பார்க்க முடியாட்டியும்

எதிர் பார்த்தது போலவே…

இந்த வானத்தை பார்க்கும் போது ஏற்படுற அதிசயம் இருக்கே..எப்போவும் விளங்க முடியாதது

படிமப்புரவு தமிழ் விக்கிப்பீடியா.

இந்த அதிக தெளிவுத்திறனுடைய படமானது, ஹபிள் விண்வெளி தொலைநோக்கி வழியாக எடுக்கப்பட்ட ஹபிள் நுண்ணிய தொலைவுப் பகுதி,

அந்த குட்டி குட்டி நட்சத்திரங்கள்…இல்லையில்லை நாம பார்க்கிறது அதுகளோட ஒளியைத்தானே….😀

நாம பார்க்கிற நட்சத்திரங்களின் ஒளி, மூணு லட்சம் ஒளி வருடங்களை தாண்டி வருதுல்லியா?…

இந்த நொடி அது இருக்கா இல்லையான்னு புரிஞ்சும் புரியாம…

இருந்தும் இல்லாம…ஒரு தத்துவம் மாதிரி இல்லே?

இந்த பூமி, பல கோடி நட்சத்திரங்கள், நிலா, வானம்சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள்,

இதை கலிலியோ டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிச்சிருக்கலாம். ஆனால் அதுக்கும் முன்னாலேயே நம் முன்னோர்கள் அதை கண்டுபிடிச்சாச்சு..

நவக்கிரகங்களும் சூரியனை சுற்றிவர்ற மாதிரி தானே இருக்கும்!!

விண்மீன்கள் இதெல்லாம் சேர்ந்த இந்த பால் வெளி..இதை போல உள்ள கணக்கில்லாத சூரியக் குடும்பங்கள் கொண்ட கணக்கில்லாத பால்வெளிகள்..

.அடேங்கப்பா இதைத்தானே ரத்தின சுருக்கமா "அண்டம்"ன்னு ஒரே சொல்லுக்குள்ள அடக்கிருக்கோம்.😀

இப்ப நமக்கு தெரிஞ்ச அண்டம் உண்மையான அண்டத்தை விட மிகச் சிறியதாக இருக்கும்ன்னு சொல்றாங்க. ஆனால், எவ்வளவு சிறியதாக இருக்கும்ன்னு இன்னும் தெரியலை.

அண்டத்தின் எல்லையை நம்மால் இதுவரைக்கும் காண முடியவில்லை. அப்படின்னா அண்டம் அந்தியில்லாதது…சரியா ?

இப்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத்தின் வயது சுமார் 13 பில்லியன் ஆண்டுகள்ன்னு கணக்கிட்டுருக்கிறாங்க.

அதுக்கும் முன்னாடி…?

அண்டம் எப்படி தோன்றியதுன்னு விளக்க முயற்சிக்கிறது தான் பெருவெடிப்புக் கோட்பாடுங்கிற "பிக் பாங் கோட்பாடு". .இதை தான் இன்றைய அறிவியல் ஓத்துக்கொண்டுள்ளது.

அண்டம் இதுக்கு முன்னால், ஒரு நுண்ணிய புள்ளியாக இருந்ததாகவும், பின் அது "ஒரு நாள்" திடுமென மிகப் பெரிய முழக்கத்தோடு வெடித்துச் சிதற, அதிலிருந்து இப்போது நாம் பார்க்கிற எல்லாப் பொருட்களும் (விண்மீன்கள், விண்மீன் குழுக்கள் ஆகியன) தோன்றியதென்றும் சொல்றாங்க தோன்றிய இந்த பொருட்கள் தான் எல்லா திசைகளிலும் சிதறிப் போய் இன்னும் இன்னும் தூரம் விலகிப் போய்கிட்டே இருக்காம்..😶 அன்னையிலே இருந்து , அண்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஊது பை (balloon) மாதிரி விரிவடைந்து கொண்டிருக்கிறதுன்னு பல செய்முறை ஆய்வுகள் உறுதி செய்கின்றன

இதுக்கு அண்டத்தில் மறைந்து கிடக்கும் ஒருவகையான dark energy எனப்படும் மறை ஆற்றல் (கருப்பு ஆற்றல்) காரணமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதைப் பற்றி சரிவரத் தெரியாததால், அண்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கு விரிவடைந்து கொண்டு போகும், இறுதியில் அதன் முடிவுதான் என்ன, என்பன போன்ற கேள்விகட்கு இன்னும் விடை கிடைக்காமலேயே இருக்கின்றது.

இது இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்கலோட அடிப்படையில் உருவானது.

  1. ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity) அதாவது எல்லாத்துக்கும் ஈர்ப்பு சக்தியால் ஒரு குறிப்பிட்ட விதத்தில், ஒரு ஒழுங்கோட இயங்குதுன்னு.
  2. அண்ட வியற் கொள்கை (Cosmological Principle) அண்ட வெளியில் உள்ள பொருள்கள் எல்லாமே வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்குன்னு சொல்வது இது.

ஒரு ஒழுங்கு முறையோடு இந்த ப்ரபஞ்சம இயங்குவதை பாருங்கள்…

இந்த ஒழுங்கை ஏற்படுத்தியது எது?..தெரியாது.

அண்டம் தோன்றிய போது அது மிகப் பெரிய ஆற்றலோடு (energy) தோன்றியது. அப்போதுதான் காலம் (time) என்ற ஒரு கோட்பாடே உருவாகியது; அதுவே காலத்தின் தொடக்கம்.

அதற்கு முன் ?

காலமே இல்லாத, அனைத்தும் ஒன்றாக இருந்த நிலை…

அந்த ஆதியும் தெரியாத, அந்தமும் தெரியாத அனைத்தையும் ஒரு ஒழுங்கோடு இயக்குகின்ற அந்த சக்தி… கடவுளா என்றால் விஞ்ஞானிகளும் "இருக்கலாம்" என்று சொல்லியுள்ளனர்..

அறிவியலே கடவுள் இருக்கலாம் என்று ஒத்துக்கொண்ட தருணம் இது.

இன்னொரு விஷயமும் சொல்லலாம்..

அறிவியலுக்கு தேவையானது கணிதம்.. அந்த கணிதத்தில் முதல் எண் எது? 1.. ?இல்லையில்லை 0.அப்படித்தானே?

ஓ….சரியா சொன்னீங்க…_1 _2 _3 இப்படி இந்த பக்கம் போய்க்கிட்டே இருக்கும்..அதுக்கு முடிவு இல்லைன்னு குறிக்கிறது தானே அந்த முடிவிலி.? அப்ப ஆரம்பம் ஒரு முடிவில்லாதது. ஆதியில்லாதது

அந்த பக்கமும் அப்படியே +1, +2 +3 போய்க்கிட்டே இருக்கும் அதுக்கும் முடிவு கிடையாது. அதையும் குறிக்கிறது இந்த முடிவிலி.. முடிவே இல்லாதது.அதாவது அந்தமில்லாதது

இந்த முடிவிலி என்பது என்ன,,?முடிவேயில்லாததுன்னு குறிப்பது.. அது ஒரு குறியீடு..ஒரு அடையாளம்…

இந்த "அண்டம்" என்பதன் ஆங்கில விளக்கமும் infinite தான்."கண்டம்" என்பது finite என்பது போல..அப்ப சரியாத் தான் பேர் வச்சிருக்கோம்..முடிவிலி என்று.பொருள் வருவது போல.😁

அதை தானே அந்த ஆதியும் அந்தமில்லாதவன்னு இறைவனை காட்டுறோம்?

அந்த இறைவனை எந்த குறியீடு கொண்டும் காட்டலாம்..ஈஸ்வரனாகவோ இராமனாகவோ, ஏசுவாகவோ அல்லாவாகவோ …

இப்ப சொல்லுங்க எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த கடவுளை பற்றி சொல்ல வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

அன்புடன்

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக