வியாழன், 17 ஜூன், 2021

எந்த ஒரு விஷயத்திலும் குறை கண்டுபிடிப்பவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

 எந்த ஒரு விஷயத்திலும் குறை கண்டுபிடிப்பவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

நாம என்ன செய்தாலும், அது ஆபீஸோ இல்லே உறவுகளிடமோ, குற்றம் குறை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பாங்க சிலர்.

உறவுகள்ன்னு எடுத்துகிட்டா, பெண்களை பொறுத்துவரையில், புகுந்த வீட்டு உறவுகளோட வரும் அனுபவமே சொல்லி மாளாது!!

இப்படித்தான்  கல்யாணம் ஆன புதுசில, , ஊருக்கு போகும்போதெல்லாம், என் நாத்தனார், ஓரகத்திகளுக்கு, புதுப் புடவை எடுத்துக்கிட்டு போய் குடுத்துக்கிட்டு இருந்தேன்..

நம்ம முன்னாடி ஒன்னும் பேசாம வாங்கிக்கிறவங்க, அதுக்கப்புறம் அதை பத்தி  குறை சொல்லி பேசுனது, அப்டியே நம்ம காதுக்கு வரும்..

சரின்னு புடவையை விட்டுட்டு, ஏதாவது வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்கிட்டு போவேன்.அதுக்கும் பின்னாடியே குறை தான்.பிறகு சென்னையிலேயிருந்து ஸ்ரீ மிட்டாய் ஸ்வீட்ஸ் கொண்டு போனோம்..இப்பல்லாம் அங்கே போய் பழங்கள் வாங்கி குடுத்துடறது..ஆனாலும்..😃

"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை"னு ஒவ்வையார் சொன்னது அவங்களுக்கு மட்டும் பொருந்தாதான்னு சில சமயம் தோணும்..

எதுக்கு இவங்களுக்கு எல்லாம் செய்யணும்ன்னு எரிச்சல் ஏற்படும் போது எல்லாம் , மஹாபார்தத்துலே வந்த ஒரு கதையை நினைச்சுக்குவேன்..

தேவ்ரத் என்கிற பீஷ்மரை பத்தி நமக்கு தெரியும்..தந்தைக்காக, கல்யாணமே செய்துக்காம, சந்திர குலம் அரியணையில் இருக்க, தன் வாழ்நாள் முழுசும் துணை இருப்பேன்ன்னு சபதமே எடுத்துகிட்டவர்!!

இப்படி ஒரு பிள்ளை, தன் அப்பாவையே பிள்ளையா பார்த்து, அவர் ஆசைக்காக, தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர் வேறு யாரும் இதுவரைக்கும்.நாம் கேள்வி கூட பட்டுரிக்க மாட்டோம்.

ஆனால், அவர் தன் அப்பா ஆசைப்பட்ட சத்யவதியை திருமணம் செய்துக்க உதவி செய்றார்.. ஆனா விதி பாருங்க..சத்யவதி தன் பிள்ளைகள் அரசாளனும்னு சத்தியம் வாங்கியும், ஒருவன் இறந்து போறான்.இன்னொரு மகன் விசித்திர வீரியன், பேருக்கேத்த மாதிரி, எழுந்து நிற்கக்கூட வீரியம் இல்லாதவன்னா இருக்கான்.பட்டத்துக்கு வரணும்னா கல்யாணம் ஆகணும்..ஆனா யாரு இவனுக்கு பொண்ணு குடுப்பா?

கடைசியா, ராஜமாதா கேட்டுகிட்டாங்கன்னு, பீஷ்மர் காசியில் நடக்கும் அரசக்குமரிகள் சுயம்வரத்துக்கு, தம்பிக்கு பெண் கொண்டு வர போறார்..இளவரசிகள் அம்பா, அம்பாலிகா, அம்பிகாவின் சுயம்வரத்தில் நுழைந்து, அவர்களை கவர்ந்து கொண்டு கிளம்புறார். இது பொறுக்க முடியாம, தன் தங்கைகள் அழுது கொண்டிருக்கும் போது, அம்பா மட்டும் பீஷ்மரை வழியிலே நிறுத்தி கேள்வி கேட்கிறாள்.அவரால் தன் காதலனுக்கு மாலை போட முடியாததை சொல்ல, அவரும் அவளை அவன் நாட்டிற்கு திருப்பி அனுப்புறார்.அவள் கதை தனி டிராக்..

இங்கே ஹஸ்தினாபுரத்தில் எல்லோரும் மணப்பெண்களை வரவேற்க காத்திருக்கிறார்கள்..விசித்திர வீரியன் தன் அறையில், இருக்கிறான்.தேர் அரண்மனை வாசலில் வந்து நிற்க, ஆரத்தி எடுக்க வேண்டி, ராஜ மாதா முன்னே வருகிறாள்.விசித்திர வீரியனும், எழுந்து நிற்க முடியாமல், மற்றவர் கைத்தாங்களாக பிடித்து நடத்தி வர, ஜன்னல் அருகில் சென்று, தேரில் இருந்து இறங்கும் இலவரசிகளை பார்க்கிறான்.அதற்கு பிறகு, திரும்பி, மற்றவரிடம் என்ன சொன்னான் தெரியுமா?

தன் அண்ணன், தனக்காக காசிக்கு போய், சுயம்வரம் தடுத்து, மணப்பெண்களை அழைத்து வந்திருக்கிறான்னு அண்ணனை பாராட்டினான்"ன்னு தானே இருக்கும்ன்னு நினைச்சா ஏமாந்து போவீங்க!!

அவன் கேட்டது "மூன்று இலவரசிகளை கூட்டி வருவதாக சொன்னார்கள்..ஆனால் இரண்டு பேர் தானே வந்திருக்கிறார்கள். அந்த இன்னொருவர் எங்கே?"

உடனே உங்களுக்கு ரஜினி சந்திரமுகி படத்திலே வடிவேலுக்கிட்டே சொன்னது ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்பில்லே!!

சோ.. சிலரோட இயல்பே அது தான்.குறை கண்டுக்கிட்டே இருப்பாங்க!!

சுற்றத்தாரிடம் குற்றமே பார்க்கக் கூடாதுன்னு ஒவ்வையார் சொல்லியிருக்கும் போது, குறையை?!!

அதுக்காக, சட்டம் ஒத்துகாத குற்றத்தை செய்துட்டு வந்தாலும் சுற்றத்தை ஏத்துக்கனும்னு அர்த்தம் இல்லே...உடனே போலீஸ்கிட்டே ரிப்போர்ட் பண்ணனும்!!

கட்டுப்படுத்துவதா ??

சர்க்கரை வியாதி ஒரு குறை தான்.அதை கட்டுப்படுத்தலாம்ன்னு டாக்டர் சொன்னதை வச்சு, அப்டியே இதையும் கட்டுப்படுத்தலாம்ன்னு நினைசீங்களா?

அப்ப தான் அதிகம் ஆகும்.

அப்படியே கண்டுக்காம விடுங்க.. இன்னொருத்தரோட சுபாவத்தை நாம மாற்ற நினைப்பதை விட, தாண்டி போறது நல்லது..அதே சமயம், செய்துக்கிட்டு இருக்கிற நம்ம சுபாவத்தை விட்டுறவும் கூடாது..பீஷ்மரை போல!!

ஏனென்றால், நம்முடைய குறைகளை கண்டும் காணாமல் இருன்னு கடவுளையே கேட்கிறவங்க தானே நாம!!

"எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்

பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக