வியாழன், 3 ஜூன், 2021

சூரிய கிரகணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சூரிய கிரகணம் பற்றி யோசிக்கையிலே எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய கிரகணம் என்கிற சிறுகதைக்குத் தான். மனம் தாவுகிறது.

கதையில் வரும் சிறுமி பஸ்மினா ஒரு கற்பனை பாத்திரம் என்றே மனசு நினைக்க மறுக்கிறது. என்னையறியாமல் அதிலே வரும் சுகன்யாவின் இடத்தில் நான் போய் உட்கார்ந்துக் கொள்கிறேன். பஸ்மினாவுடன் நானும் சேர்ந்து விளையாடுகிறேன். அவளின் அந்த 10 வயது தாண்டிய புத்திக் கூர்மையானது கட்டுக்கடங்காத குதிரையைப் போல திமிறிக்கொண்டு ஓடும்போது, என் மனதும் அதன் பின்னாலேயே ஓடுகிறது.

இதோ பஸ்மினா சூரிய கிரகணத்தை பற்றி எழுதுகிறாள்…

"சூரிய கிரகணம் எனக்குப் பிடிப்பதில்லை. சில நிமிடங்கள் பூமியை அந்தகாரம் சூழ்ந்து கொள்கிறது. சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் புகுந்து சூரியனுடைய சக்தி வெள்ளத்தை ஏழரை நிமிடங்கள் தடுத்து விடுகிறது. இது இரவு வருவது போன்றதல்ல. எங்களுக்கு இரவு நடந்து கொண்டிருக்கும்போது இந்தப் பூமியின் இன்னொரு பகுதியை சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தாக்கிக் கொண்டிருக்கும். கிரகணத்தின்போதோ, அந்த ஏழரை நிமிடங்கள், சூரியனுடைய உயிரூட்டும் சக்தி பூமியை அடைவதேயில்லை! தடைபட்டு போகிறது. பூமி அந்த சக்தியை நிரந்தரமாக இழந்து விடுகிறது. அது ஈடு செய்யமுடியாத ஒரு நட்டம்."

படிமப்புரவு கூகிள்

இப்படி கிரகணத்தை பற்றி நான் யோசித்ததே இல்லை. வேறு யாராவது இப்படி யோசித்திருக்கிறார்களா? அட ….விஞ்ஞானிகள் கூட இந்த சூரியனின் ஏழரை நிமிட சக்தி இழப்பை பற்றி கவலைப்பட்டதாக தெரியலையே?

அதுவும் அந்த சின்ன வயதில் பஸ்மினாவுக்கு என்ன சூரியனின் சக்தி இழப்பை பற்றிய கவலை இருக்கும்?

யோசிக்கும் தான் ஞாபகம் வருகிறது. கிரகணம் பார்த்துட்டு எல்லோரும் திரும்பி வரும் போது அவள் அப்பா கொலையாகி கிடந்தார்….அதுவா இருக்குமோ?

இல்லை…அவளை மத்த சிறுவர் சிறுமிகளோடு மூன்று வருடங்களாக ஒரு வீட்டிலே பூட்டி வைக்கப்பட்டு மற்றப் பெண்களுடன் சேர்ந்து கம்பளம் நெய்து கொண்டு இருந்தாளாமே அவள்…சரியான சாப்பாடு இல்லாம…அங்கிருந்து தானே அவளோடு சேர்த்து எல்லோரையும் மீட்டார்கள்…

அவளே சொல்றாளே அந்த இருண்ட காலத்தை…

"எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் நினைப்பதெல்லாம் சாப்பாட்டைப் பற்றித்தான். இருட்டறையில் பூட்டி வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை செய்து வந்தேன். ஒருநாளா, இரண்டு நாளா? மூன்று நான்கு வருடங்கள். பகலும் தெரியாது, இரவும் தெரியாது. கைவிரல்கள் எல்லாம் வலியெடுத்துவிடும்; கண்கள் குத்திக்கொண்டே இருக்கும்: சாப்பிடக் கிடைப்பதுவோ உலர்ந்த ரொட்டியும் தேநீரும்தான். அதுவும் சீனி போடாத தேநீர். அதுகூட போதியது கிடைக்காது. விடிய சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மத்தியானச் சாப்பாட்டுக் கவலை வந்துவிடும். சாப்பாட்டு கிடைக்குமா என்ற கவலை. எவ்வளவு கிடைக்கும் என்ற கவலை. மத்தியானம் மறுபடியும் காய்ந்த ரொட்டித் துண்டும் பருப்பும் கொடுப்பார்கள்; வேலையில் பிழை விட்டால் அதுவும் கிடையாது. இரவு ஒன்றுமே இல்லை; தேநீர் மாத்திரம்தான்.

“உணவைப் பற்றிய ஸ்மரணைதான் எங்களுக்கு எந்த நேரமும். இந்த ஏக்கம்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏக்கம் மிகவும் முக்கியமானது. அந்த நரகத்தில் இருந்து என்னை மீட்டீர்கள்; ஆனால் பசியிலிருந்து மீட்கவில்லை.

“என் தகப்பனாருடன் நான் இரவு வீட்டுக்குப் போவேன். அங்கே என் தகப்பனாரும், மூன்று அண்ணன்மாரும், காக்காவும் (தகப்பனாரின் தம்பி) இருப்பார்கள். அம்மா சமைத்த உணவை அவர்களுக்கு போட்டு ஹுஸ்ராவுக்கு அனுப்பி விடுவாள். தானும் மற்ற அக்காமாரும்-எங்களில் எல்லாமாக ஆறு பெண் குழந்தைகள்-அம்மாவைச் சுற்றி உட்கார்ந்தபடியே காத்துக்கொண்டு இருப்போம். அவர்கள் சாப்பிட்டபிறகு மிஞ்சியிருப்பதை நாங்கள் பங்குபோட்டுக் கொள்வோம். கால் வயிற்றுக்கும் காணாது.

“சில வேளைகளில் எங்கள் தகப்பனார் சாப்பிட உட்காரும்போது யாராவது விருந்தினர்கள் வந்து விடுவார்கள். அவர்களும் சாப்பிட்டால் எங்களுக்கு மீதமிருக்காது. அன்று நாங்கள் எல்லாம் பட்டினிதான். தண்­ரைக் குடித்துவிட்டு படுத்து விடுவோம். அவர்கள் சாப்பிடக் குந்தியவுடன் நானும் என் அக்காமாரும் அல்லாவைப் பிரார்த்தித்தபடியே இருப்போம், யாராவது விருந்தினர்கள் அன்று வந்து விடக் கூடாதென்று.

“முதன்முறையாக என் வாழ்க்கையில் இப்பொழுதுதான் நான் பசியில்லாமல் இருக்கிறேன்; நம்ப முடியவில்லை, என்றாலும் எனக்கு பயமாயிருக்கு. மேசையில் குவித்து சாப்பாட்டைக் காணும் போதெல்லாம் ‘நாளைக்கு கிடைக்குமா?’ என்ற பயம் பிடித்துவிடும். எவ்வளவுதான் துரத்தினாலும் இந்தப் பயம் போவதில்லை. எப்படியும் சாப்பாட்டைத் திருடிக் கொண்டு வந்து வைத்து விடுகிறேன். நான் என்ன செய்வேன்” என்று விக்கினாள்.

என்ன தான் அவளுக்கு திருப்தி கிடைக்கும் வரையில் சாப்பாடு கொடுத்தாலும், உண்மையில் அந்த பயம் அவளுக்கு கடைசி வரை இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.

அவளுடைய கேள்விகள் எல்லாம் என்னை இன்னும் குடைஞ்சுகிட்டே தான் இருக்கு…

"தேவர்களும் அசுரர்களம் பாற்கடலைக் கடைந்தபோது மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் இழுத்தார்கள் அல்லவா? கடைசியில் ஆலகால விஷம் தோன்றிய போது எல்லோரும் அதன் உக்கிரம் தாங்காமல் பயத்தில் ஓடிவிட்டார்கள். அப்பொழுது சிவபெருமான் தேவர்களின் கஷ்டம் நீங்குவதற்காக அந்த விஷத்தை கையிலே எடுத்து உண்டார். அந்த விஷமும் சிவபெருமானுடைய கண்டத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டது; அவரும் நீலகண்டன் என்று பெயர் பெற்றார். சகல ஜ“வராசிகளும் ரட்சிக்கப்பெற்றன.

சிவபெருமான் அப்படி உண்ணும்போது ஒரு சிறுதுளி விஷம் தவறி பூமியிலே வந்து விழுந்தது. அதன் பிறகுதான் பாம்புகளுக்கு வாயிலே விஷம் வந்தது, இல்லையா?”

அப்படியானால் பாற்கடலை கடைந்தபோது ஆரம்பத்தில் வாசுகி வேதனை தாங்காமல் விஷம் கக்கியது என்று வருகிறதே! அது எப்படி?’ என்றாள்

அதற்கு முன் ஓரு தடவை , "பைபிள் வேகத்தில் கூறியதன்படி கடவுள் ஒளியை முதன் நாள் படைத்தார்; ஆனால் சூரியனையும் சந்திரனையும் நாலாம் நாள் தானே படைத்தார், இது எப்படி சாத்தியம்?” என்றாள்.

இவள் என்ன இப்படி யோசிக்கிறாள்? கடவுள் இவளுக்கு மட்டும் எப்படி இந்த திறமையை கொடுத்தார்?..

பதிலே இல்லாத கேள்விகள்…

உங்கள் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

அவள் கடைசியாக கம்ப்யூட்டரில் எழுதியிருந்த வாசகத்தைப் படிக்கிறேன்…

"உஃகாப் பறவையை எனக்குப் பிடிக்கும். அதன் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதன் நீண்ட சிறகுகளம், வளைந்த மூக்கும், கம்பீரமும் வேறு எந்தப் பறவைக்கும் வரும்? ஆகாயத்தில் புள்ளிபோல வட்டமிட்டுக் கொண்டு நின்று இரையைக் கண்டதும் இறஞ்சிக் கொண்டு சிறகைக் குவித்துக் கீழே விழுந்து, கூரிய நகங்களால் அதைப் பற்றி மேலெழும்பும் லாவகம் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் என்னைப் போலத்தால் அதற்கும் சூரியகிரகணம் பிடிப்பதில்லை. ஏனெனில்….”

இதென்ன….இப்படி பாதியில் விட்டுவிட்டு போய் விட்டாளே.. அவளுக்கும் உஃகாப் பறவைக்கும் என்ன தொடர்பு? ஏன் அதற்கும் சூரிய கிரகணத்தை பிடிக்கவில்லை?

வலைத்தளத்தில் தேடுகிறேன்.

நீங்கள் யாராவது உஃகாப் பறவையை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

ஒரு வேளை அந்த மூன்று வருடங்கள், காற்று வசதியில்லாமல் அடைத்து வைத்து சரியான சாப்பாடு இல்லாமல் நாள் முழுவதும் கம்பளி நெய்யும் வேலையில் வைக்கப்பட்டதால், அவள் இதயத்தில் சின்ன பழுது இருக்கிறதுன்னு சொன்னார்களே.. அதனால் தானே அவளும் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்தாள்.. அன்று இதை டைப் செய்த படியே விழுந்து இறந்து கிடந்தாளே…அதை தான் சொல்கிறாளா…?

அவள் வாழ்க்கையில் பிடித்த கிரகணம் அது தானா…? அவளுடைய ஒட்டுமொத்த சக்தியையும் அது எடுத்து போய் விட்டதா? அதே தானே வெளிச்சத்தை மட்டுமே நம்பி வாழும் உஃகாப் பறவைக்கும்.., ?இருவருக்கும் சூரியகிரகணம் பிடிக்காத காரணம் இது தானா?

கதையை படித்து முடித்த பின்னும், சூரியகிரகணத்தின் நிழல் போல பஸ்மினா என்னுடன் கூடவே வருவது போலிருக்கிறது..

அவளுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டுமே….

சூரியனை போல அறிவுச்சுடராய் ஒளி வீச வேண்டிய அவளும் அவளை போன்ற எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் கிரகணம் போல வருவது அவர்களை கட்டாயமாக செய்ய வைக்கும் இந்த கம்பளி நெய்யும் வேலை தானே?..

நான் ஒரு உறுதி எடுத்துக்கொண்டேன் …

இனி எக்காலத்திலும் கம்பளி வாங்கும்போது அவை குழந்தைகளால் நெய்யப்படவில்லை என்ற உறுதிமொழியை விற்பவரிடம் வாங்குவோம் என்று..

எனக்கு தெரியும் நீங்களும் அப்படி தான் இனி செய்வீர்கள் என்று…

இனி வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் வரும் சூரிய கிரகணத்தின் போதெல்லாம் பஸ்மினாவை போன்ற குழந்தை தொழிலாளர்கள் வாழ்வில் விழுந்த கிரகணம் தானே நினைவுக்கு வரும்? அப்போது அதை ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. இதற்கு நீங்கள் விடை சொல்வீர்களா ?

படித்ததற்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக