பம்பரத்தை சாட்டையால் சுற்றி விளையாடி இருக்கிறீர்களா?.
சின்ன வயதில் எங்கள் தெருவில் உள்ள சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து பம்பரம் சுற்றி விளையாடுவார்கள். நானும் சில நாள் அவர்களோடு சேர்ந்து விளையாடியிருக்கிறேன்.
ஒரு பம்பரத்தில் சாட்டையை சுற்றி, ஒரு வேகத்தோடு தரையில் விட்டால் அழகாக வேகவேகமாக பெரிய ஒரு வட்டமாக சுற்றி, அடுத்து அதற்கு உள்வட்ட சுற்று போட்டு, அதற்கு அடுத்த உள்சுற்று என்று போய் சிறிது சிறிதாக வேகம் குறைந்து, சுற்றின் நடுவில் போய் சரிந்து விழும்.
ஒரே பம்பரம் தான். ஆனால் சுற்றும் சாட்டையின் வகை பொறுத்தும், தரையில் விடும் வேகம் பொறுத்தும் அதன் சுற்று மாறுபடும்.
அதே சமயம் தரையின் சமநிலையும் முக்கியம். மேடு பள்ளமாக இருக்கும் தரையில், உடன் சரிந்து விழுந்து விடும்.
ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா….பெண்ணும் ஒரு வகையில் பம்பரமே.!!
- அவளுடைய இயக்கம், அந்த சாட்டையைப் போல இயக்குபவர்களுக்கு ஏற்ப மாறுகிறது..பெற்றோர், சுற்றத்தார், தோழிகள், ஆசிரியர், கணவன், அவன் சுற்றம், பிள்ளைகள் இப்படி ஒவ்வொரு சாட்டையின் வீச்சுக்கேற்ப அவள் வேகம் இருக்கும்.
- சுற்றி விடுபவருக்கேற்ப, பெரிய சுற்றத்தை(உறவுகளை) கவனித்து எடுத்து, அதற்கு அடுத்த உள் சுற்றம், அதற்கும் உள் என்று உள்நோக்கியே இயங்கி, தன் சக்தி முழுதும் இழக்கும் வரை வேலை செய்து இறுதியில் அவனிடமே சரண் அடைபவள் !!
- அவள் இயங்கும் இடமும் அவளுக்கு இசைவாக இருந்தால் அவள் வேகம் கட்டுப்பாடின்றி இருக்கும்.ஆனால் தரையை பள்ளமாக்கி வைத்துக்கொண்டு, அவள் தடுமாறி விழுவதை குறை சொல்லலாமோ?!
- சில சமயம் அதிவேக பம்பரம் என்று அவள் வேகம் குறைக்கப்படுகிறது. அதுவே மிதவேக பம்பரம் என்றால் ஒதுக்கப்படுகிறது..
- சாட்டையின் தாக்கம், அதன் தேவைக்கேற்ப அவள் பம்பரமாக சுழற்றப்படுகிறாள்.
- அவளுடைய ஓட்டத்தை தீர்மானிக்கும் சாட்டை சரியில்லையெனில் அவள் ஆட்டமும் நின்றுவிடுகிறது.
இப்போதைய காலக்கட்டத்தில், பெர்ற கல்வி, வாழ்க்கை தர முன்னேற்றதால், அவளே சாட்டையாக மாறி , மற்றவரை பம்பரமாக சுற்ற விடுகிறாள். 😀
சாட்டையின் வகை தெரிந்தவளாயிற்றே…..😄
எந்த வகை பம்பரமும் அவள் சுற்றும் சாட்டையில் சோடை போவதில்லை..
ஆனால் சுற்ற மட்டுமே தெரிந்த சாட்டை, திடீரென பம்பரமாக இடம் பெயர்ந்ததால், நிலை தடுமாறி தலை குப்புற விழுகிறது… 😯
தன்னை பிறர் சுற்றுவதோ, தான் பிறரை சுற்றவைப்பதோ தேவையில்லாத சாட்டைகள் என்று தெரியும் அவளுக்கு…
நவீன காலத்திற்கேற்ற சாட்டை தேவையில்லாத பம்பரமாக அவள் மாறி இயங்கத் தயார் தான்…
ஆனால் சாட்டை சுற்றும் அளவிற்கோ தரையில் வீசும் அளவிற்கோ, அந்த பம்பரத்திற்கு சாவி கொடுக்கும் வலு உள்ளதா?
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக