வியாழன், 3 ஜூன், 2021

தினமும் "உங்களுக்கு சோறு வேண்டுமா? ", "உங்களுக்கு சாப்பாடு வேண்டுமா?", என்று கேட்டுக் கொண்டே இருக்கும் மனைவிக்கு என்ன பதில் சொல்வது?

இந்த கேள்வியை பார்த்ததும் சமீபத்தில் படித்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் "ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. 1960களில் எழுதப்பட்டது இன்றும் வீடுகளில் நடக்கிறது என்பது தான், என்றும் ஜேகேவின் கதைகளை நினைவு கூறக் காரணம்.

கதையின் ஆரம்ப உரையாடலே மனைவி கணவனிடம் இப்படி கேட்பதாய் தான் ஆரம்பிக்கும்..

“பாருங்க, நான் இந்த மாசத்திலிருந்து சாப்பாட்டுக்காரியை ஏற்பாடு பண்ணப்போறேன். நீங்க காலையிலேயே சாப்பிட்டு போங்கன்னாலும் கேக்கறதில்லே . . .காலையிலே டிபன் சாப்பிட்டதோடப் போயி கண்ட ஓட்டல்லேயும் சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காகும்?..மதுரம்

சீதாராமன் ஏதோ ஞாபகமாய் "ம் . . நீ என்னமோ சொன்னியே. நான் கவனிக்கல்லே . ."என்பதற்கும் திரும்பவும் அவள் கேட்பாள்…

நீங்க எதுக்கு ஓட்டல்லெ சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கணும்னு நான் ஒரு சாப்பட்டுக்காரியை ஏற்பாடு பண்ணியிருக்கேன். நாளையிலிருந்து ஆபீசுக்கே சாப்பாடு வந்துடும் . . என்ன சரிதானே என் ஏற்பாடு?” –

அவனும் ரொம்ப அலட்சியமாக, “சாப்பாட்டுக்கு என்ன, ஏதாவது செய் . . ” என்று விட்டு வெறும் 50 ரூபாயை மட்டும் நீட்டும்போதும் "நூத்தி எழுவது ரூபாய் சம்பளத்தை இவர் என்னதான் பண்ணுகிறார்!’ என்ற நினைப்பு உள்ளே எழுந்தாலும், ‘ம், ஆண்பிள்ளைகளுக்கு எவ்வளவோ செலவு, போகட்டும்’ என்று அவன் முகத்தில் தெரியும் புன்னகையிலேயே எல்லாவற்றையும் மறந்துவிட்டு மதுரம் மீண்டும் கேட்பாள்..

இதுக்குத்தான் சொல்றேன் – காசுக்குக் காசும் செலவு; ஒடம்பும் கெட்டுப் போகும். மத்தியான சாப்பாடு நீங்க வெளியே சாப்பிட ஆரம்பிச்சதிலிருந்து உடம்பே பாதியா போச்சு – நாளையிலிருந்து சாப்பாட்டுக்காரியை நான் ஏற்பாடு பண்ணிடறேன் . . ” என்று

அவள் திரும்பத் திரும்ப அந்த விஷயத்தையே கூறுவதைக் கேட்டதும் சலிப்புற்ற அவன், திடீரெனப் பொறுமை இழந்து கத்தினான்!
“சரி, சரி, சரி! . . . அதுதான் ஒரு தடவை சொன்னியே . . . நீ அனுப்பறதையே திங்கறேன்; இனிமே ஓட்டலுக்குப் போயித் தின்னு தொலையலே – சரிதானே – ” என்றுக் கத்திக்கொண்டே புறப்பட்டான் சீதாராமன்.

இது வெறும் உணவு சம்பந்தப்பட்டது கிடையாது. முகத்தில் அடித்தார் போல இது உணர்த்தும் உண்மை ..இது தான்... .

இதோ எழுத்தாளரின் வார்தையிலேயே சொல்லலாம்..

இந்த அளவிற்கு ஓவ்வொரு நாளும் பூரிப்பும் பெருமிதமும் கொண்டு அவன் காரியங்களை யெல்லாம் செய்வதற்கே தவம் கிடந்து வந்தவள் போல் தொடர்ந்து பணிவிடை புரிகிறாளே இதன் ரகசியம்தான் என்ன? இரண்டு உள்ளங்களுக்குத் தெரிந்த எந்த விஷயமும் ஒரு ரகஸியமாகாது. ஆகவே அது அவளுக்கு மட்டும்தான் தெரியும்! ஆம், அவனுக்குக் கூட தெரியுமா என்பது சந்தேகம்தான். அதுபற்றிய ஞானமோ சிந்தனையோ இருந்தால், தன்னருகே நின்று பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போகும் அவளது உழைப்பையும் பணிவிடைகளையும் பெற்றுக்கொண்டு தன் போக்கில் போய்க்கொண்டிருக்க முடியுமா அவனால்?

ஹீரோ சீதாராமனை’ப் பொருத்தவரை வாழ்க்கையும் உத்தியோகமும், குடும்பமும் மனைவியும் – எல்லாமே ரொம்ப அலட்சியமாகத்தான் இருக்கின்றன . .

அவன் கண்களில் எதைப்பற்றியுமே-சதா ஒர் அலட்சிய பாவமே மின்னிக்கொண்டிருக்கும்.

அவனே “மது . . . நாடகத்திலே அவள் எனக்கு ஹீரோயின் . . . வாழ்க்கையிலே எனக்கு நிஜமான ஹீரோயின் நீ தானே?” என்று சினிமா பாணி ஒத்திகையாகத்தான் அந்த டயலாக் சொல்லியிருப்பான்....

அந்த இன்னொரு ஹீரோயின் கமலாவே அவன் உருவத்தை மனத்தில் நினைக்கும்போது தோன்றும் அந்த அலட்சிய உணர்ச்சி மிகுந்த கண்கள் என்ன சொல்கின்றன? என்று இப்போது அவளுக்குப் புரிந்தது.என்கிறாள்…
இவ்வளவு நல்ல மனைவியை, இவள் உழைப்பை, இவள் அன்பை, இவள் பெருந்தன்மையை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு அவன் என்ன காரியம் செய்திருக்கிறான் – என்று ஒரு மூன்றாவது மனுஷியாகவே நின்று பார்க்கையில் அவன்மீது அவளுக்கு திடீரென்று ஒரு வெறுப்பே உண்டாயிற்று! அந்த வெறுப்பு விஷம்போல் ஏறி வளர்ந்தது."

ஆனால் அவனது போக்கை அலட்சியம் என்று கருதமாட்டாள் மதுரம். அவன் எப்பொழுதுமே அப்படித்தானாம். அவனது நடை, பேச்சு, பார்வை, தோரணை – எல்லாமே மிடுக்காக, கம்பீரமாக இருப்பதால் ஒரு அலட்சியம் போல் தோன்றுமாம்! . . அவனைப்பற்றி அவளுக்கு ரொம்பத் தெரியுமாம் . .. .

எழுத்தாளர் ஜேகே, இந்த கதையில் வரும் மதுரம், தன் கணவன் சீதாராமனுக்காக (பெயரை பார்?!) முகமலர்ச்சியோடு செய்யும் வேலைகளோடு மைனர் கணக்காய் தன்னை நினைத்து கொண்டு அவன் செய்யும் அலங்காரங்களையும், ஹீரோவாக பாவித்து செய்யும் அலட்டல்களைகளையும் ரசிப்பதாக இப்படி சொல்வார்…

வாழ்க்கை முழுவதும் அவனைப் பற்றிய நினைவில் அவள் தன்னை மறந்திருந்தாள். அவன் அலங்காரம் செய்துகொண்டு இளமையோடு திகழ்வதைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றபோதே, தான் முதுமையடைந்து கொண்டிருப்பதை அவள் அறியாமல் போனாள்."

அப்பேற்பட்ட அவளுடைய மெல்லியல்புகள் எப்படி வன்மையாக மாறுகிறது என்று அந்த ஒரு நாள் .விவரிப்பிலேயே நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவார்..

இது ஒன்றும் புதிது அல்ல எழுத்தாளருக்கு. அவருடைய பெண் கதாபாத்திரங்கள்

  • எப்போதுமே துரக்கை, நரசிம்மர் போன்று உக்கிரமாக தங்கள் கோபத்தை காட்டுவர். ஆனால் அதில் வெறி இருக்காது.
  • அதே சமயம் எதிராளியும் ஏற்றுக்கொள்ளும் பண்பும் இருக்கும்.

இதோ …மதுரத்தின் வாழ்வில் பங்கு கேட்டு வந்த கமலாவிற்கே, தான் நினைத்து எதிர்ப்பார்த்ததுபோல் அவள் ஆத்திரமோ வெறுப்போ கொண்டு தன்னைத் தூஷிக்கவோ, சபிக்கவோ செய்யாததால் – இந்த நல்லவளின் இதயத்தை நொறுக்கிவிட்ட, குற்றம் புரிந்துவிட்ட உணர்ச்சியில் அவளுக்குக் குமுறிக் குமுறி அழுகை வருகிறது...

  • கதையின் நாயகி எவ்வளவு படிக்காதவளாய் இருந்தாலும் மற்றவருக்கு பாடம் சொல்லித்தருபவளாக மாறியிருப்பாள்.

கமலாவே நினைக்கிறாளே…

  • "இந்த ஹீரோயின் கதை முடிஞ்சுது; அந்தக் கெட்ட சொப்பனம் தீர்ந்தது’ என்று இவ்வளவு வைராக்கியத்தோடு அவனை நிராகரித்துவிட்ட மதுரத்தை அவள் எண்ணிப் பார்த்தாள். ‘ஆ! இவளல்லவோ பெண்’ என்று கமலாவின் ஹிருதயம் விம்மிற்று. அந்த உறுதியைக் கண்ட பிறகுதான், தான் ஒரு அனாதையுமல்ல, யாரிடமும் போய் எதையும் யாசிக்கவேண்டிய நிலையிலும் தான் இல்லை என்பதை உணர்ந்து தன்னம்பிக்கை கொண்டாள்.
  • "மதுரம் நல்லாச் சொன்னாங்க ஒரு வார்த்தை- எவ்வளவு மோசமான சுரண்டல்!வாழ்ந்ததை நெனைச்சா குடலைப் புரட்டரதேடி, அம்மா. . . என்று."’ அந்த வார்த்தைகளின் ஆழமும் அர்த்தமும் உணர்ந்து யோசிக்கையில் தனக்கும் கண்கள் திறந்ததுபோல் இருந்தது கமலாவுக்கு.

மதுரம் மட்டும் என்ன …

  • தன் புருஷன் விவகாரமாகட்டும், வீட்டுப் பிரச்னையாகட்டும், குழந்தைகளின் தொல்லையாகட்டும் – எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு சமாதானம் தேடிக்கொள்ளும் சுபாவம் ஆகட்டும்
  • தன் தாய் மூலமாக வந்த வீட்டின் ஒரு பகுதியைத் தங்களுக்கு வைத்துகொண்டு பின்கட்டு முழுவதையும் மூன்று போர்ஷன்களாக்கி வாடகைக்கு விட்டு, இரண்டு மாடுகள் வைத்து குடித்தனகாரர்களுக்கு வாடிக்கைப் பால் அளப்பதையும் சொல்லி. தன் இரண்டு குழந்தைகளையும் இந்தப் புருஷனையும் வைத்துப் போஷிக்க அவள்படும் கஷ்டங்களையெல்லாம் கஷ்டமாகவே நினைக்காதது ஆகட்டும்...
  • திரும்ப திரும்ப கமலாவிற்கு அவள் ஒரு உதவி செய்யவேண்டும் என்று கணவன் கேட்கும்போதும் தப்பாக நினைக்காமல் அன்று நாடகத்தில் சீதாராமனின் ஹீரோயினாக நடித்த கமலாவின் குழந்தை முகத்தை மட்டுமே நினைப்புதாகட்டும்.. . . .
  • இவருக்கு ஏன் இவளுக்கு கடன் கொடுக்க இவ்வளவு கரிசனை என்ற கேள்விக்கு எழுந்த பதில்களை யெல்லாம் எண்ணி ‘சீ, சீ! நான் எவ்வளவு மோசமாக ஒரு பெண்ணைப்பற்றி நினைக்கிறேன்’ என்று தன்னைத் தானே கண்டித்துக் கொள்வதாகட்டும்...
  • அவள் மாலை அலங்காரம் செய்துகொண்டு நிற்கும்போது அவன் பல சமயங்களில் அவளைக் கவனிக்காமலேயே போவதையோ; அந்த அலட்சியத்தையோ பொருட்படுத்தாமல் இருப்பதாகட்டும்
  • குடும்பத்தின் சுமையெல்லாம் நான் சுமந்துகொண்டால் ஏன் தலை நரைக்காது? என்று வருந்துவிட்டு கமலாவை பார்த்ததும் பெண்களுக்கே உரிய இயல்புடன் தன் நரைமுடியை முதலில் மறைக்க நினைப்பவள், பிறகு "ஏன்? இவள் பார்த்தால் என்ன? எதற்கு இவள் எனது நரையைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன் . . .’.

. . . . அந்த ஹீரோவுக்குப் பொருத்தமான ஹீரோயினாய் மேடையில் தோன்றிய கமலா, வாழ்க்கையில் இப்படிப் பொருத்தமில்லாத ஒரு ஹீரோயினோடு அவன் வாழ்கிறான் என்று நினைத்துவிடக் கூடாது என்ற அச்சத்தினாலா? . . . .
என்று யதார்த்தத்திற்கு திரும்புவதாகட்டும்

அவ்வளவு வெகுளியாய் இருக்கும் மதுரம்,.. ஒரு ஆதரவுமில்லாத எனக்கு எல்லாவிதமான உதவியும் செய்யறதுக்கு அன்பா, ஆதரவா இருக்கிறவர் ஆபீஸிலேயே இவர் – மிஸ்டர் சீதாராமன் – ஒருத்தர்தான் . . .” என்று கமலா கூறி நிறுத்தியதும் உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று உரைக்க அவளை ஊடுருவி பார்த்துக் கொண்டிருக்கும் போது…

அவளிடம் வாழ்வு கேட்டு கமலா யாசகம் செய்யும் போது, செருகிய வாளை உருவி, மீண்டும் பாய்ச்சியது போல, தன் மனோபலம் முழுவதையும் திரட்டி, பல்லைக் கடித்துக் கண்களை மூடித் தாங்கிக்கொள்கிறாள்.

அதன் பிறகு அவள் எடுக்கும் முடிவிற்கு வலிமை சேர்ப்பவை அவளுடைய எண்ணங்கள்…

அவரைப்போல் ஒரு கவலையும் இல்லாமல் இருந்தேனா? எல்லாவற்றுக்கும் குறுக்கே நின்று நான் பாதுகாத்தால் அவர் என்றைக்குமே ஹீரோவாக இருக்க மாட்டாரா என்ன? . .

…எனக்குத்தான் என் நினைவேயில்லை; எனக்கு அவர் நினைவே போதும். அவருக்கு அப்படியா? அவர் நினைவுக்கு நான் போதுமா? .

இவள் அவருக்குப் பொருத்தம்! நான்தான் கிழடாகிவிட்டேன்! . . . அது எப்படி? அவரைவிட வயசு குறைந்த நான் எப்படி அவரைவிடக் கிழமானேன்? ஆமாம்; என் கிழவியானது முதுமையினால் அல்ல; என் மூடத்தனத்தால் . . . அறிவில்லாத, புத்தியில்லாத ‘ — என்று நொந்துகொள்வாள்.

ஆனால் அது தன் புருஷனை வேறு ஒருத்தி அபகரித்துக்கொண்டாளே என்பதால் அல்ல.

தான் எவ்வளவு ஏமாளியாய் ஒரு பொய்யை நம்பி, வாழ்க்கையின் இனிய பகுதிகளையெல்லாம் வீணாயும் விழலுக்குழைத்த வேதனையாகவும் மாற்றிக்கொண்டோம் என்ற கசப்பான உண்மை அவளை ஒரு வெறிச்சியைப் போல் விழிக்க வைத்தது.

அவள் கமலாவிடம் சொல்கிறாள் "நீ என் வாழ்க்கையிலே பங்கு கேக்கறே! நான் வாழ்ந்தேனா என்ன? நான் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறேன் – தயவு செய்து முழுக்க எடுத்துக்கோ! பதினைஞ்சு வருஷம் நான் அவரோட வாழ்ந்தவ. இந்தப் பெரிய கணக்குக்கு விடை – பூஜ்யம்னு இப்பத்தான் தெரிஞ்சிருக்கு .

துரோகத்தை அனுபவிக்கிறதுகூடக் கஷ்டமில்லேம்மா . . துரோகியின் சிரிப்பைச் சந்திக்கிறது ரொம்பக் கொடுமை!

இந்த ஹீரோயின் கதை முடிஞ்சுது – அவருக்கு இன்னொரு ஹீரோயின் வேண்டாமா என்ன?” என்றாலும் அந்த இரண்டாவது ஹீரோயின் கதையும் முடிந்தது அவளுக்கு தெரியாது.

ஆமாம்.. இந்த சீதாரமனுக்கு ஏன் இந்த புத்தி இல்லாமல் போனது?…

  • தான் ஒரு குமாஸ்தாவாக இருப்பதில் தன்னால் ஆபீசுக்கே ஒரு பெருமை என்ற தோரணையுடன் வேலை ஏதும் செய்யாமல் அவுட்டுச் சிரிப்பும் அட்டகாசப் பேச்சுமாய் அரட்டை பேசிக்கொண்டிருக்கும் அவன் –
  • சீதாராமன் மகா அதிர்ஷ்டசாலி” என்று அவன் ஆபீசில் வேலை செய்கிறவர்கள் கூறுவது, அவர்களுக்குத் தெரியுமோ
    ‘கலியாணமாகாத தனிக் கட்டைகள்கூட – இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனும் கிட்டத்தட்ட நாற்பது வயதானவனுமான சீதாராமனைப் போல் உடையணிந்துகொள்ளவும், சினிமா பார்க்கவும், செலவுகள் செய்யவும் முடியவில்லையே என்று பொருமுவது … இவன் இப்படியெல்லாம் இருப்பதற்குக் காரணமே –
    • இரண்டு குழந்தைக்களுக்குத் தகப்பனாகவும், மதுரத்தைப் போன்ற ஒருத்திக்குக் கணவனாகவும் அவன் இருப்பதனால்தான் என்று . . .?அவர்கள் அதை உணரவேண்டிய அவசியமுமில்லை; உணராதிருந்தால் ஒரு பொருட்டுமில்லை. ஆனால் மதுரத்தைப் பொருத்தவரை அவன் கூட அவற்றை உணரவேண்டிய அவசியமோ அவன் உணராதிருந்தால் ஒரு பொருட்டோ அல்லதான்; எனினும் அவனைப் பொருத்தவரை-அவனது ஆத்ம உயர்வுக்கு அவன் அதை உணர்ந்திருக்க வேண்டாமா?
  • அவன் காலையில் அலங்காரம் செய்துகொண்டு போகும்போது பரட்டைத் தலையும் அழுக்குத் துணியுமாய் நின்று கொண்டிருந்தாளே, ‘அவள் தானா இவள் ‘ என்று மாலை வீட்டுக்குள் நுழைந்தவுடன் அலங்காரத்துடன் இருக்கும் அவளை, ஒரு விநாடி நின்று அவன் பார்க்க வேண்டாமா? சில சமயங்களில் அவளது அலங்காரத்தைக் கண்டு அவன் கேலியாக சிரிப்பானே; அதைக் கூட அவள் புரிந்துகொள்ள மாட்டாள்.
  • மதுரமே சொல்வது போல "நானும் என் குழந்தைகளும் யாரையும் நம்பி இல்லேன்னு நீயும் புரிஞ்சுக்கோ! ஆமா, இந்தப் பதினைஞ்சு வருஷமா அவர் மேலே இருந்த நம்பிக்கையிலே நான் வாழ்ந்திருக்கலாம்; ஆனா அவரை நம்பி இங்கே யாரும் வாழலே, வாழ முடியாது . . . அவர் அப்படி! என்று ஏன் ஆகிப் போனான்?
  • கமலாவிடம் உள்ள தொடர்பை பற்றி கூட ஒப்புக்கொள்ளாமல், "ஒண்ணுமில்லெ . . . நான் ரொம்ப யோசிச்சுப் பார்த்துத் தான் . . . . அதனாலெ உனக்கும்கூட நல்லதுதான்" என்கிறான்.நீ ஒரு உதவி செய்யணும் . . உதவின்னா அது எனக்குச் செய்யற உதவி மட்டும் இல்லெ; அதனாலேதான் தயக்கமா இருக்கு . . . உனக்குத்தான் தெரியுமெ – எங்க ஆபீஸ் டைபிஸ்ட் கமலா இல்லெ, கமலா . . .” . நீயே அவள் கேட்கிற உதவியை தாராள மனத்தோட செய்யணும் . . . எனக்காகச் செய்வியா? அவள் உன்னைத்தான் நம்பியிருக்கா, அந்த உதவிக்குத் தகுந்த மாதிரி உன்கிட்டெ அவ நடந்துக்குவா . . . பாவம், அவ ரொம்ப நல்லவ . . . அவளுக்கு யாருமில்லெ . .என்று கூசாமல் தன் மேல் பழி வராதது பேசுகிறானே..
  • கமலாவுக்கு கூட அவன் மீது விருப்பம் கொள்வதற்குத் தான் காரணமில்லை, அது ஒரு பலஹீனம் . . . அவனை வெறுப்பதற்கு நினைத்து நினைத்துப் பார்க்க ஆயிரம் காரணங்கள் – இந்த சில மாதப் பழக்கத்திலேயே – அவளுக்கு ஏற்பட்டிருந்தன.
  • வாழ்க்கையில் வெற்றிகளைத் தவிர வேறெதுவும் தனக்கு ஏற்படப் போவதில்லை என்ற உறுதியான அசட்டு நம்பிக்கையுடன் இருப்பவனாகையால், இந்த விஷயத்திலும் அவன் பூரண நம்பிக்கையுடன், சம்பாதிக்க ஒரு மனைவி, பணிவிடை செய்ய ஒரு மனைவி’ என்ற சுயநலம் நிறைவேறப் போகிற அசட்டு மகிழ்ச்சியில் எப்படி இருந்தான்?
  • ஏன். மதுரம் அவனை பார்க்க மறுத்து வீட்டை விட்டு போக சொல்லும்போது அவனுக்குக் கோபமும் வந்து.
    “என்னடீ பேசறே? . . போகல்லேனா என்ன செய்வே?” என்று கதவை எட்டி உதைத்தவன், அவள் ஒன்று நீ உயிருடன் இருக்கவேண்டும் அல்லது நான் என்று கத்தும்போது, இதோ நான் போயிடறேன் . . ” என்று சீதாராமன்.அலறுவதற்குக் காரணம் தன் மீது கொண்ட பாசமல்ல; இந்த இரண்டு குழந்தைகளின் சுமையும் தன் தலையில் விடியுமே என்ற கோழைத்தனம்தான்’ என்ற அவனது பலஹீனத்தைப் பச்சையாய் – அவள் புரிந்துக் கொண்டாளே.

சீதாராமனின் கண்களில் – சதா ஒர் அலட்சியமே மின்னி அந்த அலட்சியத்தையே ஒரு அணியாக அணிந்து அதுவே ஒர் அழகாக அமைந்து பலர் நடுவே அவனை ஹீரோவாக்கிய அதே கண்களில்தான் – குளமாய் கண்ணீர் நிறைந்தது என்று எழுத்தாளர் கதையை முடித்திருப்பார்.

அது தான் அவரின் ஆளுமை…ஞானபீட விருது பெற்ற அவரே ஒரு பீடமாய் ஆனது அப்படித்தான்…அது உருவாக்கியது அல்ல…..

கதையில் கதாநாயகனின் பார்வையில் சதா காலமும் தெரியும் அலட்சியம் கடைசியில் காணாமல் போயிருக்கும்…

எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு வருகிறது.. "அதிர்ஷ்டமுள்ளவன் என்று உணர்ந்துக் கொள்வதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும்" என்று…

படித்ததற்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக