வெள்ளி, 4 ஜூன், 2021

"என் முகத்தை பார்த்தால் அப்படி தெரியுதா" என்ற கேள்வியை யாரிடம் எதற்காக கேட்டீர்கள்? ஏன்?

நான் முது நிலை பட்டப்படிப்பு படித்துவிட்டு பணி செய்ய ஆரம்பித்து சில ஆண்டுகள் ஆன காலம்..

அது ஒரு இனிய காலை பொழுது!!

இப்டிலாம் சொன்னா தான் எனக்கு கதை சொல்லும் மூட் வரும் 😄

வழக்கமாக போகும் பேருந்தில் கடைசி மகளிர் வரிசைக்கு முன் இருக்கும் இருக்கையில் தான் எப்போதும் உட்காருவேன். அது டெப்போவில் இருந்து கிளம்பும் பஸ் என்பதால், காலியாக கிளம்பும் . சிறிது நேரத்தில் அது ஒரு பெண்கள் கல்லூரியையும், பிறகு ஒரு ஆண்கள் கல்லூரியை தாண்டும் போது கூட்டமாகிவிடும் . அதனால் யாரும் அவர்கள் பையை வைத்து கொள்ள கொடுத்தால், வாங்கிக் கொள்வேன்.

அன்றும் அப்படித்தான் .

ரொம்ப ஆர்வமாகி..சீட் நுனிக்கு வந்துட்டீங்க போல !!😉

யாரோ கொடுத்த புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டேன்…சிறிது நேரத்தில், இறங்கும் இடம் வந்து விட்டது என்று ஒரு கை நீள, நான் புத்தகங்களை கொடுத்த போது, அவன் கேட்டான் " நீங்க எந்த காலேஜிலே படிக்கிறீங்க?"

எனக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை.. நான் "காலேஜா.. நானா.." என்றேன்.. அதற்குள் கூட்டம் நெட்டித்தள்ள எல்லோரும் இறங்கி போய் விட்டார்கள்..

அந்த முகத்தை வேற சரியாவே பார்க்கலை.😣

அப்புறம் எனக்கு நினைத்து நினைத்து சிரிப்பு தான் வந்தது!!

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கேட்டதை , "என் முகத்தை பார்த்தால் அப்படி தெரியுதா"ன்னு சிரித்துக்கொண்டே, அன்று எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

"நானா …காலேஜா"ன்னு நான் சொன்னது, அப்ப வந்த சந்தூர் சோப்பின் விளம்பரப் படத்தில் வரும் டயலாக்..!!

அதிலே இதே போல வரும் பெண்ணனை நீங்கள் எந்த காலேஜ்?"ன்னு ஒருவர் கேட்க, விளம்பர பெண் "நானா…காலேஜா!!"ன்னு கேட்பார்..

அப்ப பின்னால் இருந்து ஒரு குழந்தை "மம்மி"சொல்லிகிக்கிட்டே ஓடி வரும்!!😃

அந்த சோப் உபயோகித்தால் வயதே தெரியாதாம்!!

நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு சீனியர்,

அவருக்கு காலேஜ் போகும் பெண் உண்டு

சொன்னார் பாருங்க!!

"நான் மட்டும் அங்கே இருந்திருந்தா…"மம்மி"ன்னு சொல்லி குரல் குடுத்துக்கிட்டே ஓடி வந்துருப்பேன்"🤣😃😂

சிரிப்பு சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆச்சுன்னு சொல்லவும் வேண்டுமா!!

மேலே கேட்ட கேள்வியை நான் அவர் கிட்டே கேட்கவேயில்லை.!!😃


என்ன எழுதினாலும் பார்வையிட்டுக்கொண்டே ஆதரவு ஓட்டை போடாமல் போடும் சகோதர சகோதரிகளே..மாமா மாமிகளே..😃

2 கருத்துகள்: