வெள்ளி, 4 ஜூன், 2021

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் பற்றி உங்கள் பார்வை என்ன?

நேற்று தான் , இந்திய சிறையில் நிலவி வரும் சாதி பிரிவினைகளும், அதன் அடிப்படையில் அவர்களுக்கு வேலை கொடுப்பதாக சொன்ன ஒரு ஆய்வு பற்றி பார்த்தேன். அதற்கு பிறகு சற்று ரிலாக்ஸ் செய்யப் பார்த்த இந்த "தி க்ரெட் இந்தியன் கிச்சன்", நம் வீட்டிலேயே காலம்காலமாக படுக்கையறை சமையல் அறை, வீட்டு நிர்வாகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் வேரபாட்டு அவலட்சணத்தை சுளீரென்று உரைக்க வைத்தது..

இந்த ஸ்டில் பார்த்ததும், ஒரு வசதியான வீட்டிலிருந்து, இன்னொரு வசதியான வீட்டிற்கு, திருமணம் செய்துக்்கொண்டு போகும் பெண் தானே..இவளுக்கு சமையல் கட்டிலே பெரிசா என்ன கஷ்டம் இருந்துட போகுது??ன்னு தான் நினைச்சேன்..

ஆனா மலையாள படங்கள் என்றாலே அவை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் தான்....

வீட்டிலே சும்மா தான் பெண்கள் இருக்காங்கன்னு சொல்லியே, அவர்கள் செய்யும் வீட்டு வேலைக்கு மதிப்பு குடுக்காம ஒதுக்கி தள்ளும் ஆணுலகத்தில் இருந்து, ஒருவர் வந்து, எப்படி ஒரு பெண்ணோட முழு நேரத்தையும் வீட்டு வேலை ஆக்ரமிக்குதுன்னு விஷுவலா காட்டுறார்.அதுக்காக டைரக்டருக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்..

முதலில் இதை வெளியிட எல்லா ott பிளாட்பாரத்திலும் முயற்சி செஞ்சு," இதுக்கு போயா?"ன்னு குடுக்காம, ஒரு வழியா வெளியிட்டுருக்காங்க..அதுக்கப்புறம் பறந்தது பாருங்க பார்வைகள் மில்லியன் கணக்கில்..அதுவே சொல்லும் அத்தனை மனங்களின் ஏக்கங்களை!!

படம் ஆரம்பத்தில், வழக்கமான நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், இயல்பா வர்ற தயக்கம் தான் புதுசா கல்யாணம் ஆனா சூரஜ் நிமிஷாக்குன்னு பார்த்தா அவங்க பேசிக்கிறதே மணிரத்னம் படம் போல இருக்கு..

படத்தில் வார்தைகள் அதிகம் இல்லாமல் சமையல் கட்டில் இருந்து வரும் சத்தம் தான் முக்கியமான பின்னணி இசை. நிமிஷா செய்யும் வீட்டு வேலைகள்…நீண்டுக் கொண்டே இருக்கின்றன..

இதையே காட்டிட்டு இருக்காங்களேன்னு ஒருத்தர் கேட்டார்..உங்களுக்கு ஒரு தடவை பார்க்கவே போர் அடிக்குதே..இதையே தினமும் செய்றவங்களுக்கு?!!

அந்த வகையில், அந்தப் பெண்ணின் வலியை, வாய் வார்த்தைகளில் இல்லாமல் படக் காட்சிளில் சொல்லி இருக்கிறது.

மற்றபடி .சமையல் செய்வதை சாதாரணமான விஷயம்ன்னு எள்ளி நகையாடும் ஆண்கள் பல பேருக்கு, அதை செய்யத் தெரியாது..ஆனால் குறை சொல்ல மட்டும் தெரியும்..!!

என்ன இருந்தாலும் "எங்க அம்மா சமைச்சசது போல வருமா?" என்று கேட்கும் தமிழ்நாட்டு கணவனின் டிப்பிக்கில் முகம் சூரஜ் இல்லை..ஆனாலும், படத்தில் அந்த மாமனார் பேசும்போது தோணுகிறது.

."அம்மியில் வச்சு அரச்சா தான் நல்லா இருக்கும்", "சோறு வடிச்சுத் தான் சாப்பிடனும்", ரெண்டு வகை சட்டினி வேணும்" ங்கிறதெல்காம் எங்க வீட்டிலேயே நான் பின்பற்றுவது.

ஆனால் அதை நாமா செய்யும்போது தெரியாது…இன்னொருவர் அதை குறையா, இப்படி இப்படி தான் எனக்கு வக்கனையா வேனும்ன்னு சொல்லும் போது தான், கோபம் வரும்..அதுவும் அந்த மாமனார் சரியான கள்ளுணிமங்குனி. முகத்திலே சிரிப்பை வச்சிக்கிட்டே வேலையை ஏவுறதும், குறை சொல்றதும்..அப்பா...நிறைய வீட்டிலே இப்படி பார்க்கலாம்.!!

ஆனால் இந்த உருட்டல் எல்லாம் மருமகள் கிட்டே தான் காட்டுவாங்க. மகள் கிட்டே மூச்..

ஆனால் இதுக்கெல்லாம் காரணம், அந்த மாமியார் தான்.. டூத் பிரஷை கூட இன்னொருத்தர்தான் எடுத்துக் குடுக்கணும்னு சொல்ற அளவுக்கு சோம்பேறியா ஆக்கினது போதாதுன்னு அதே போல தறுதலையா பிள்ளையையும் வளர்த்து விட்டுருக்கு..

ஒரு பெண் தன் கணவனையும், பிள்ளையையும் ஒரு ஒழுங்கோட வீட்டில் கவனிக்கலேன்னா இன்னொரு பெண்ணோட வாழ்க்கை தான் வீணா போகும்.!!.

அதுக்கு தான், இங்கே பெண்கள் எல்லாம், வீட்டிலே ஒரு ஒழுங்கு வேணும்னு சொல்றது!!

அதுவும் சொல்ல முடியாது..நிமிஷாவுக்கு அப்புறம் வர்ற இன்னொரு பெண் நல்லா தானே இருக்கானு சொல்லுவாங்க.. அது மாமியாருக்கேற்ற மருமகள்..ஜாடிக்கேற்ற மூடி!!

ஆனா இந்த கணவனாகப்பட்டவன் இருக்கான் பாருங்க. சூரஜ்..

இத்தனைக்கும் அவன் ஒரு வாத்தியார். சொல்லிக்குடுகிறது குடும்பத்தின் மதிப்பு பத்தி....ஆனா "ஊருக்கு தான் உபதேசம்."

.வீட்டிலே கட்டுன மனைவி தனியா கிச்சனில் மல்லுக்கட்டிட்டு இருக்கும்போது, வெட்டியா பொழுது போக்கிக்கிட்டு இருப்பானா..

ஆனா அந்த விதத்தில், நம் வீட்டு ஆண்கள் தேவலாம்..நிறைய வீட்டில், இந்த கொரானா புண்ணியத்தில், ஒரு சாப்பாடு கடையை திறக்கிற அளவுக்கு எக்ஸ்பேர்ட் ஆயிட்டாங்க..!!

ஆனா. இந்த களேபரம் முடிஞ்சசதுக்கப்புறம் அந்த சமையல் கட்டு இருக்கும் பாருங்க.

படத்திலேயேயும் வந்த விருந்தாளி கூட சேர்ந்து இது மாதிரி செய்றாங்க தான்.

ஆனா நிமிஷா தான் தன்னந்தனியா அதை க்ளீன் செய்றா..

நம்ம ஆளுகளாம் கூடவே வந்து ஹெல்ப் பண்ணுவாங்க..!!

ஆனா சூரஜ்க்கும் இவர்களுக்கும் இருக்கிற ஒருமித்த விஷயம் என்னன்னா..

இவங்ளுக்கு இந்த லவ் மேக்கிங் தான் சரியா வராது..பாவம்..அலுத்து களைச்சு ரூமுக்கு உள்ளே நுழையுற அவள்கிட்டே, அவன் ஆரம்பிக்க, "கொஞ்சம் லவ் மேக்கிங்கும் பண்ணுங்க " ன்னு இவள் சொன்னதுக்கு, சொல்றான் பாருங்க.."ஓ..உனக்கு அதெல்லாம்.தெரிஞ்சிருக்கா"!!"

அந்த விஷயத்தில் தனக்கு பிடிச்ச மாதிரி நடக்கும் கணவர்கள் தான் அதிகம்..அதை பற்றி கேட்கும் மனைவியை தப்பாக பார்ப்பது.. இது நிறைய வீட்டிலே மாறலை..

இது தான் கடைசியில் கோர்ட்டு வாசலில் நிற்க வச்சுடுது!!

அந்த நேரத்தில், அவளுக்கு தோணுவது எல்லாம்..சமையற்கட்டின் அந்த கெட்டுப்போன உணவு ..அதுவும், தன் கையில் அந்த வாடை தான் தெரியுற மாதிரி இருக்கும்…எவ்வளவு கொடுமையானது!!

எழுத்தாளர் அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை"படிச்சுருக்கீங்களா?அதுலே வர்ற 70 வயது மூதாட்டியின் கையில் அத்தனை வருடம் அவர் பொங்கிய சோற்றின் மணம் வீசியது""ன்னு எழுதியிருப்பார்!!

ஒரு வேளை புருஷன் அனுசரணையா இருந்துட்டுருந்தா நிமிஷாவோட மண வாழ்க்கை தொடர்ந்திருக்குமோ என்னவோ..

ஆனா அவன் தான் இங்கிதம்னா என்னனே தெரியாமலே  இருக்கானே..வீட்டிலே தான் நீட்டா சாப்பிடத் தெரியல.ஹோட்டலில் கூடவா..?

ஆனா அதை சத்தமா சொல்லி திருத்துற மனைவிகளைப் பார்த்திருக்கேன். பாவம்..நிமிஷா.. அதே போல சொல்லப் போக..அவன் காட்டுற ரியாக்ஷன் இருக்கே…ஓ...

நிறைய கணவர்களுக்கு, மனைவி என்ன சொல்றது..நாம என்ன கேட்டுக்குறது..ன்னு ஈகோ இருக்கும்..அதை சூரஜ் நல்லா வெளிப்படுத்திறார்..நிமிஷா மன்னிப்பு கேட்கிற வரைக்கும் விடலையே..

இதுக்கு விதிவிலக்குகள் இருக்கலாம்..ஆனால் பொதுவானதை தானே விதின்னு சொல்ல முடியும்.

"ஏன் அவள் மன்னிப்பு கேட்கணும், முதலே எல்லா வேலையையும் தலை குனிஞ்சு செஞ்சிட்டு அப்புறம் முடியாதுன்னு சொன்னா, இப்படி தானே ஆகும்ன்னு கேட்கலாம்..

நம்மை இப்படித் தானே வளர்த்திருக்காங்க."புதுசா போற வீட்டிலே, கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிட்டு இரு"ன்னு நமக்கு தான் உபதேசம் நடக்கும்..யாரும் புதுசா வர்ற பெண்ணுக்கு ஏற்ற மாதிரி, நாம கொஞ்ச்ம மாறுவோம்னு நினைக்கிறதில்லை.. எவ்ளோ படிச்சுருந்தாலும் , இதை தான் சமூகம் நம்ம கிட்டே எதிர்பார்க்குது.

இதுவே போன ஒரு வாரத்துக்குள்ளே அவங்க சொன்னதுக்கு எதிர்பேச்சு பேசி நிமிஷா திரும்பி வந்திருந்தா, அவள் பிறந்த வீட்டிலேயே கூட ஏற்றுககிட்டு இருக்கமாட்டாங்க..ஏன் அவங்க அம்மாவே, இவ்வளவு பொறுமையா நிமிஷா இருந்தும் சமாளிக்க முடியாம புலம்புற பொண்ணுக்கிட்டே, "இதெல்லாம் ஒரு விஷயமா"னு தானே சொல்றாங்க!!

இந்த மாதவிலக்கு வந்து தனியா இருக்கிறது, இன்னும் கூட நிறைய வீடுகளில் இருக்கு..

நான் பள்ளியில் படிக்கும்போது, வீட்டிற்கு திரும்பி வரும் சிலசமயம் நடந்து வர்றதுண்டு..அப்போ, திருவல்லிக்கேணி தெருக்களில் நடக்கும்போது, வீட்டின் ஒதுக்குபுறத்தில் இருக்கும் வராந்தாக்களில் உட்கார்ந்திருக்கும் அக்காக்களை பார்த்ததுண்டு!!அங்கே உட்கார்ந்து இருக்கிறத பார்த்தாலே, அவங்களுக்கு "அது"தானேன்னு எல்லோருக்கும் தெரிந்துவிடும்,  அது அவங்களுக்கு எவ்ளோ அவமானமா இருக்குன்னு யாருமே யோசித்துப் பார்த்ததில்லை ?!!

ஆனா அக்கா தங்கையோட பிறந்த ஆணுக்கு, அதைப் பற்றி புரிதல் இருக்கிறதுனால, தன் மனைவிக்கு இவ்ளோ கெடுபிடி செய்யமாட்டாங்க..

சூரஜ் ஒரே பிள்ளைங்கறதுனால அதை பற்றி புரியாம இருக்கலாம்..

உண்மையா இந்த "ஒரே பிள்ளை"யுடன் வாழ்பவருக்கு தெரியும் அந்த சோதனை!!

ஆனா, ஒரு படிச்ச, பிறருக்கு போதிக்கும் இடத்தில் இருக்கிறவங்களும் இப்படித் தான் இருக்காங்கன்னு காட்டுது..சூரஜ் நடந்துக்கொள்வது!!

சென்னை இந்திரா நகர் பிரேமா கொலை, எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?!!. மாதவிலக்கு என்று வீட்டிலிருந்து வெளியே தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டவள், கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள. அது துப்பு துலக்காமலேயே போனது!!

அந்த நேரத்தில் அவளுக்கு ஓய்வு தேவை தான்..ஆனால் அந்த நாளில் மட்டும் அவள் தீண்டத்தகாதவள் ஆவது சரியல்லவே..

ஆனால் அதுக்காக "ஹாப்பி ப்ளீடிங்"ன்னு பொது இடங்களை நாசப்படுத்துவதும் சரியில்லை..அது ஒரு "டாபூ "இல்லைன்னு புரிஞ்சுக்கணும்!!.

மொத்தத்தில் அவளின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் பொருந்தாத, ஒரு வீட்டிற்கு, அவள் திருமணம் ஆகிப்போவது தான், "முதல் கோணல் முற்றும் கோணலாகிறது"..

இப்படி மெதுவா போற படம், கடைசி 10 நிமிஷத்திலே, நிமிஷா செய்ற காரியதால நிமிஷமா ஓடுது..

அந்த கழிவு நீர் பைப்பை சரி செய்ய பிளம்பரை கூப்பிட வீட்டுக்கு புதிதான அவளுக்கு தெரியாதே..அதுவும் அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் இருக்கும் போது..

உணர்ச்சி கொந்தளிப்பில், கையறு நிலையில், அவள் அந்த தண்ணீரை எடுத்து அவர்கள் முகத்தில் வீசிவிட்டு, கிளம்புவதை பார்க்கும் போது, அவள் கையில் சிலம்பு மட்டும் தான் இல்லை!!

லாஜிக் இடிக்கிதுன்னு சொல்லக்கூடாது!!

எப்டியோ , முதல் சீனில் பார்த்த நிமிஷா கடைசி சீனில் வந்து விடுகிறாள்..

அந்த குண்டு முகத்தில் தெரியும் சிரிப்பு, அப்பாடா,, எது அவளுக்கு உண்மையான வாழ்க்கைன்னு புரிஞ்சிக்கிட்டாளேன்னு தோணிச்சு!!

ஒரு பெண்ணின் இயல்பு புரிஞ்சு அவளுக்கு தாங்கள் பார்க்கும் மணமகள் ஒத்துவருவானா, அவன் குடும்பம் எப்படின்னு அவங்க வீட்டுக்கு போய் பார்த்து பின்னர் தான் முடிவு செய்யனும்னு பெற்றோருக்கு சொல்லுது.

ஆண்களுக்கு வீட்டு வேலையில் உள்ள கஷ்ட நஷ்டத்தையுயும் புரிய வைக்குது!!

அதே போல, மனைவியின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க சொல்லுது..

மொத்தத்தில் ஓரு முறையாவது எல்லோரும் பார்க்க வேண்டிய படம்..

https://youtu.be/k_E6ctiFn6I?t=29

வீட்டில் இருக்கும்போது, சமையற் கட்டின் சத்தத்தை விடுங்கள்..

என்றைக்காவது, வேலை செய்துக்கொண்டிருக்கும் உங்கள் மனைவியின் வளையல் சத்தம், கால் கொலுசின் சத்தம், அவள் தலையில் வைத்திருக்கும் அந்த பூவின் வாசம் , இதையெல்லாம் கண் மூடி அனுபவித்திருக்கிறீர்களா? செய்யவில்லையா. ..செய்துப் பாருங்கள்..அவளிடம் காதல் கூடும்!!

இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தும் போது, உள்ளிருந்து வேலை செய்யும் சாராதா தேவியின் வளையல் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்குமாம்…அவர் கருத்தில் ஏதேனும் அவர் உடன்பட வில்லையென்றால், அந்த வளையல் சத்தம் நின்று விடுமாம்..அவர் உள்ளே சென்று அதன் காரணம் தெரிந்து வருவாராம்..

அந்த தெய்வீக தம்பதி போல கூட வேண்டாம்..

நம்மின் சரி பாதி என்ற விதத்திலாவது அவளிடம் அன்பு பூணுவோம்..

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக