வியாழன், 3 ஜூன், 2021

உங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்?

1.. அம்மா பள்ளி ஆரம்ப படிப்பு மட்டுமே முடித்தவர்.அப்பா அந்த கால பி.யு.சி. அப்பா அப்பவே தாத்தாவோட பர்மாவுக்கெல்லாம் போய் பிசினஸ் பண்ணியிருக்காரு. ஆனால் அம்மா தான் அப்பாவிற்கு மதி மந்திரி.

  1. மனைவி சொல்லே மந்திரம்.😂 

இத்தனைக்கும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வயசு வித்யாசம் ரொம்ப இருக்கும்.ரெண்டு பேரும் சொந்தமகிறதுனாலே, அம்மா பிறந்தப்ப, அப்பா அவங்க அப்பாவோட வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போனாராம்😀

2. அம்மா நல்ல வெள்ளை. அப்பா மாநிறம் தான்.ஆனால் அம்மாவிற்கு அப்பா என்றால் கொள்ளை பிரியம்.இரவு அப்பா வீட்டிற்கு எத்தனை மணி லேட்டா வந்தாலும் காத்திருந்து, ரெண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிடுவாங்க.,ஸ்வீட் லவ் பேர்ட்ஸ்

3. அப்பா சின்ன வயசிலேயே தன் அம்மாவை பறிகொடுத்தவர். ஒரே பிள்ளை.தாத்தா மறுமணம் செய்து கொண்டார். சித்தி வந்தாலும், இவரிடம் ஒட்டாமலேயே இருந்தார். அம்மாவின் குடும்பம் ரொம்ப பெரிசு.அம்மாவின் தங்கை, தம்பி என்று கல்யாணத்திற்கு பிறகு, (தாத்தா இறந்துட்டதாலே) இங்கு தான் தங்கி படித்தார்கள்.அப்பா தான் எல்லாரையும் கவனித்து கொண்டார்.நாங்க கூட கிண்டல் பண்ணுவோம்..ஒரு கல்யாணத்தை பண்ணிவிட்டுட்டு ஊரே வந்து உட்கார்ந்துருச்சுன்னு..😃

4. அம்மா யாரிடமும் சட்டென்று வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசுற ரகம். ஆனால் அப்பா நேர் எதிர்.யார் என்ன கஷ்டமா பேசினாலும் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு நகர்ந்துருவார்.வார்த்தைகளே எண்ணி எண்ணி தான் பேசுவார். அவருடைய பொறுமை ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.

5. அப்பாவிற்கு தாத்தா அதான் அவங்க அப்பா மேல மட்டுமில்லே எங்க அம்மாவோட அப்பா, அம்மா மேலேயும் ரொம்ப மரியாதை. எங்க பாட்டி வீட்டுக்கு வரும்போது, இவர் அவங்க எதிரில் நின்னு கூட பேச மாட்டார்..அதே தான் அம்மாவும்…என் அப்பாவோட அப்பா தாத்தா எங்களை பார்க்க வரும்போது..அது நான் ரொம்ப சின்ன பிள்ளையா இருந்த போது, அம்மா அவங்க எதிரில் கூட வரமாட்டாங்க.

6. அப்பா உடம்பு சரியில்லாம தொழிலை கவனிக்க கஷ்டப்பட்டபோது, ரொம்ப படிக்காத அம்மா தான் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க.

7. அப்பா மூலமா படிச்சு நல்ல நிலைக்கு வந்த மாமாக்கள் அப்புறம் எங்களை மறந்து போனபோது, அம்மா தான் புலம்புவாங்களே தவிர, அப்பா வாயிலிருந்து ஒரு வார்த்தை அவங்களை பத்தி தப்பா வந்ததில்லை.

8. அப்பாவுக்கு பிள்ளைங்க மேல ரொம்ப பிரியம்.ஆனா அம்மா மாதிரி காட்டிக்க தெரியாது.அக்காவை கல்யாணம் பண்ணி அனுப்பிச்சு ஒரு வாரம் கழிச்சு குளிக்க வீட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்தவர் குலுங்கி குலுங்கிஅழுதது இன்னும் ஞாபகத்திலே இருக்கு😓

9. அப்பா கூட நான்லாம் பேசினதுன்னு யோசித்து பார்த்தா ரொம்ப கம்மின்னு தோணுது..அம்மாவும் அப்பாவும் எங்க முன்னாடி பேசுறது ரொம்ப அபூரவமா தான் இருக்கும்.ஆனால் அது எப்படின்னே தெரியாது..அம்மா மனசு நல்லா படிச்சவர் அப்பா மட்டும் தான்னு நினைப்பேன்.

10. அப்பாவுக்கு நிறைய கனவுகள் இருந்திருக்கு.அவர் இறந்ததுக்கு பிறகு …அப்ப நாங்க எல்லாம் ஸ்கூல் படிக்கிறோம்…அவர் பத்திரமா வச்சிருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து படிச்சு பார்த்தப்ப தான் அப்பா எழுதின கவிதை…அம்மாவை பத்தி தான்…அவர் எண்ணங்கள்ன்னு அவரை பத்தி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது. அப்பாங்கிற ஒரு மூடிய புத்தகத்தை நாங்க வேணும்னா சரியா படிக்காம போயிருக்கலாம்..ஆனால் அதிலே கோல்ட் மெடல் வாங்கினது அம்மா😀

அப்பா போனதுக்கப்புறம் அம்மா ரொம்பவே அப்பா மாதிரி ஆகிப் போனங்க. ரொம்ப பேச மாட்டாங்க..ஆனா எங்களுக்கு அப்பா இல்லாத குறை தெரியாம பார்த்துக்கிட்டாங்க…ஆனால் அப்பாவுக்கு அம்மா இல்லாம முடியாதே..அதான் அவரை பார்த்துக்க சீக்கிரமே போய்ட்டாங்க.

என்னாலே இப்பல்லாம் அப்பாவையும் சரி அம்மாவையும் வேறு வேறா வித்தியாசமா நினைக்கவே தோணலை. உங்களுக்கு வேணும்னா லைலா மஜ்நூ, ஷாஜஹான் மும்தாஜ் தான் தெரியும். எனக்கு தெரிஞ்ச காதலர்கள்னா என் அப்பா அம்மா தான்..பேருக்கு வேணும்னா அவங்களுக்கு இடையே இந்த வித்தியாசங்களை பட்டியல் போட்டுருக்கலாம். ஆனா, மனசாலே சேர்ந்து வாழ்ந்தவங்களுக்கு இடையிலே ஒரு வித்தியாசமும் கிடையாதுன்னு இப்ப தோணுது..

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக