நாம் பொதுவா ஒன்றை அடையாளப்படுத்த தெரிந்த இன்னொன்றோடு ஒப்பீடு செய்வது வழக்கம்.. மனதின் ஆழத்தை கடலோடு, தோளின் உறுதியை மலையுடன், பெண்ணின் கண்களை மீன்களுடன்…
இப்படி ஒரு உவமையாகத்தான் கருணைக்கு உருவாக இதை படிக்க நேர்ந்தது
"கருணை முகிலே இராமானுஜா!!"
கருணைக்கு உவமையாக இராமானுஜரா….
அப்படி என்ன செய்தார் அவர்…
தீவிர சைவப்பிள்ளையான எனக்கு
அந்த சாதி இல்லைங்க😀 திருமணத்திற்கு முன் 48 சிவலிங்கங்களை வைத்து பூசித்தவள், பின்னர் அப்பனும் அம்மையும் என ஆகி, இப்போது ஈசனின் மைந்தன் முருகனின் சிலம்பணிந்த பாதத்தை சிக்கென பிடித்து, ..
இவரை பற்றி படிக்க ஆர்வ மூட்டியது.
கருணை என்றால்…கார்முகில்..போல என்று ஏன் சொல்கிறார்கள்?
எப்போது மழை பொழியும் எந்த இடத்தில் என்று யாரும் சரியாக சொல்லமுடியாது
ரமணன் கூட😃
அது போலத்தான் கருணையும்..
காட்டினால் துளியூண்டு என்று காட்ட முடியாது.கொட்டுகொட்டென்று பெய்து தீரத்துவிடும் மழை போல..
இந்த இடத்தில் வேண்டும். இங்கே வேண்டாம் என்ற வேறுபாடில்லாமல்…
இவரும் அப்படியா நடந்துக்கொண்டார்?!!
தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த குரு யாதவப்பிரகாசர், பின்னாளில் பொறாமை என்னும் நோயினால், காசியில் வைத்து, தன்னை கொல்லும் எண்ணத்தில் இருந்ததை தெரிந்து தப்பித்து வந்தாலும், அதை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்ததாகட்டும்..
மந்திர உபதேசம் வேண்டி திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 17 முறை தேடிப் போய் பார்த்தும் ‘எவரிடத்தும் சொல்வதற்கில்லை” என்று மறுத்து, கடைசியாய் தண்டும் பவித்ரமும் மட்டும் கொண்டு தனியே வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நம்பி வரச் சொல்ல, தன் பிரதான சீடர்களான கூரததாழ்வரையும் முதலியாண்டானையுமே தண்டும் பவித்ரமுமாக அடையாளப்படுத்தி, அவர்களுக்கும் அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுக்க வேண்டுவதாகட்டும்..
இந்த மந்திரத்தை வெளியில் சொன்னால் நரகம் புகுவீர் என்ற குருவின் சொல்லிற்கெதிராக திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தின் மீதேறி, மந்திரத்தை மக்களுக்கு உபதேசிக்க, இதை கேட்டு கோபமடைந்த நம்பி, "நீர் நரகம் புகுவீர்" என, "ஆயினும் இவர்களெல்லாம் சொர்க்கம் புகுவரே" என்ற தயாளம்…
இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே "எம்பெருமானார்" என்று மகிழ்ச்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார்.
பிறப்பினால் ஒருவன் குலப்பெருமை கொள்ளத் தேவையில்லை. என்றவர் அதை மதியாத மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், துறவறம் மேற்கொண்ட போதும், பின்னாளில், பெருமாளின் திருநாமங்களை தன் பிள்ளைகளுக்கு பேராய் வைத்த ஒரு சலைவைக்காரர், அவர்களை அழைத்து இவரின் பாதம் வீழ சொல்ல, அது போன்று தாமும் அரங்கனின் நாமங்களை வைக்கும் பேறு கிடைக்கவில்லையே என்று "கெட்டேனே நான் கெட்டேனே "என்று அழுது புலம்பும் அன்பு…
தயிர் சாதத்துடன் நாவல்பழ நைவேத்தியம் படைத்ததாலேயே அரங்கன் முகம் வாட்டமுற்று இருக்கிறது என்று கஷாயம் படைக்கச் செய்து, பச்சைக்கற்பூரம் குங்குமப்பூ கொண்டு அரங்கனின் திருமேனியில் பூசி உலகாள்பவனை தன் சின்ன குழந்தையாக சீராட்டிய "பாவனை" தான் என்ன..
பிட்சைக்கு போன சமயம், விஷமிட்ட உணவு படைத்ததை அறிந்து, அந்த அண்ணமிட்டவரை அரங்கன் தண்டித்துவிடக்கூடாது என்று தன் உடல் மெலிய, உண்ணா நோன்பிருந்ததென்ன..
டெல்லியில் அரங்கனின் விக்ரகம் இருப்பது அறிந்து, அதை கொண்டு வர செல்ல, பேரன்புடன் அதைக் கொண்டிருந்த சுல்தானின் மகளிடம் இருந்து அதை பெற, "என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே", என்று தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து, எந்தை வருக, ரகுநாயகா வருக, என்கண் வருக, எனது ஆருயிர் வருக! வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்...என்று அழைக்க....தானே நகர்ந்து அவர் மடிக்கு விக்ரகம் செல்வதென்ன..
அதைக் கண்டு அரண்டு பித்துப் பிடித்து, இறுதியில் பெருமாளிடம் ஐக்கியமானவளின் பெருமாள் ஈடுபாடு, ஈர்த்து விட., மேலக்கோட்டையூரில் தான் அமைத்த கோவிலில் இவளுக்கு என்று பல நியமங்களைக் கோவில் பூசைகளில் செய்து பீவி நாச்சியார் என்று வைத்ததென்ன..
ஸ்ரீரங்கத்தில், ஐந்தாம் பிரகாரத்துக்கு முன்பு, கிளி மண்டபம் அருகேயும் ,தனி சன்னிதி அமைத்து, பகல் பத்து உற்சவத்தின் போது,
பெருமாள் இவள் சன்னிதிக்கு, கைலி வஸ்திரம் (லுங்கி) அணிந்து வருவதாகவும்.
மூலவருக்கும் கூட லுங்கியால் அலங்காரம் செய்யப்பட்டு
வட இந்திய உணவான ரொட்டி, வெண்ணெய், பருப்புப் பொங்கல் நிவேதனம் செய்ய வைத்து, , மத நல்லிணக்கம் பேணியதென்ன..
தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கி,. திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டி,.அவர்களை ஆலயத்திற்குள் கூட்டி சென்று 800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே,
செயலில் செய்து காட்டிய தீரம் தான் என்ன..
அதே போல "கள்ளழகர் "என்று பெருமாளை முக்குலத்தோரிடமே சேர்ப்பித்தும் நாகப்பட்டினத்தில் மீனவர்களிடம் பெருமானை ஒப்படைத்து, திருவிழாக்கள் நடத்தும் வண்ணம் சாதி வேறுபாடு இல்லாத வைணவம் என்ற புரட்சி செய்ததென்ன..
இந்த வேதாந்தம் பேசுபவர்களை கேட்டால் நம்மை குழப்பி விடுவர்…
அத்வைதிகள் சொல்லும் பொருள் "ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று" என்பது. ஆனால் அத்வைதக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர "ஜீவாத்மா வேறு; பரமாத்மா வேறு" என்று சொல்லும் ராமானுஜர்!!!!
அவர் இறைவனை விடக் கருணை மிக்கவர் அதனால் தானே இறைவனின் அடி பற்றிட நமக்கு எளிய உபாயம் சொல்கிறார்…
எப்படி?
ஸ்ரீரங்கம் கோயிலேயே குடிகொண்ட இராமானுஜர் தன் சின்முத்திரையால், இதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், இங்கு மட்டும் சின்முத்திரையுடன் காணப்படுகிறார். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சின்முத்திரை என்றால் சுட்டுவிரல் பரமாத்மா; கட்டைவிரல் ஜீவாத்மா.
என்ன முயற்சி செய்தாலும் சுட்டு விரல் நிமிர்ந்திருக்கும்போது கட்டை விரலால் சுட்டுவிரலின் நுனியைத் தொட முடியாது. சுட்டு விரல் வளைந்து கொடுத்தால் தான் முடியும். அதாவது, பகவான் நம்மீது அருள்பாலித்தால் நாம் அவரை அடைய முடியும் என்று …
என்னே கருணை!!
நேரில் இவர் திருமேனி காண ஆவல் கொண்டு, தனிச்சந்நிதியில் இன்று ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பது போலவே தெரிகிறது.
பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மற்றும் அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப்பட்டதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சி தருகிறார்.
- இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இப்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். .
வரலாற்றை பார்க்கும் போது, சைவசமயமானது இஸ்லாம்,வைணவம் ஆகிய இரண்டுடன்,
மோதல் போக்கையே, கடைப்பிடித்து வந்துள்ளது, தன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், நிலை நிறுத்தவும், வேண்டி, போராடவேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டது! ஆனால் வைஷ்ணவம் மற்ற மதத்துடனும், சாதிகளுடனும் இணக்கமான நிலையே கொண்டிருந்தது..அதற்கு காரணமான இராமானுஜரைப் போண்ற ஒரூ புரட்சி துறவி, சைவத்திற்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எழுவதை தடுக்க முடியவில்லை.!!
கடமையை அன்புடன் செய்வதே 'கருணை' என்று உலகிற்கு எடுத்துக்காட்டியவர்.
காரே கருணை இராமானுஜா!!
திருத்தம்
நான் சைவ வழி பின்பற்றுபவள்.
சைவமா வைஷ்ணவமா எது பெரியது என்ற கேள்வியே கிடையாது..
பெருமாள் கோவிலில் திருவாய் மொழி திவ்ய பிரபந்தம் பாடுவது போல, தேவாரமும் திருவாசகமும் சிவன் கோயிலில் பாடுகிறார்களா. அது ஆகமத்திற்கு எதிர் என்று நீதிமண்றத்திற்கு போய் தடை வாங்கிவிட்டார்களே…ஆனால் இராமானுஜர் கொண்டு வந்த புரட்சியில், பெருமாள் கோவிலில் தமிழ் இசை உண்டே!! அதை தான் சொன்னேன்..
."மாற்றான் வீட்டு மல்லிக்கும் மணமுண்டு" என்றால் என் வீட்டு மல்லிக்கு மணம் இலலை என்று அர்த்தம் இல்லை.. அதனால் சைவ வழியை நான் குறையாக சொன்னதாக யாரும் கருத வேண்டாம்..மற்றவற்றில் உள்ள சிறப்பும் என் வழியில் வேண்டுமே என்கிற ஆதங்கத்தில் சொன்னது.
படித்தமைக்கு நன்றி
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக