சனி, 29 மே, 2021

உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி எது? ஏன் அப்படி?

 ஓஷோ சொன்ன கதை இது.

போதிதர்மரை சீனாவுக்கு அவருடைய குருவாகிய பிரயக்தாரா அனுப்பிய போது ஏற்கனவே, சீனாவில் புத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டு இருந்தது அங்கு கிட்டத்தட்ட 200000 புத்த பிட்சுகளும் புத்த மத கோவில்களும் இருந்தன

அப்போதைய சீன பேரரசர் யூ என்பவர் தன்னுடைய செல்வங்களையெல்லாம் புத்தமதத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக செலவழித்துக் கொண்டிருந்தார்

போதிதர்மர் சீனாவை அடைவதற்கு முன்பே அவருடைய புகழ் பேரரசின் காதிற்கு ஏட்டியிருந்ததால், அவரை வரவேற்க வந்து காத்திருந்தார்

இவரைப் பார்த்தவுடன் , அரசரின் உள்ளத்திலே ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட்டு விட்டது மென்மையான மனது கொண்டவராக போதி தர்மர் இருந்தாலும் , இரண்டு பெரிய கண்களையும், , பார்ப்பதற்கு அச்சம் ஊட்டக்கூடிய அளவிற்கு முகத்தை கொண்டவராகவும் இருந்தார்

பேரரசர், போதிதர்மரை பார்த்தவுடன், " நான் புத்த மதத்திற்காக நிறைய பணிகள் செய்துருக்கிறேன் . அதற்கு பதிலாக எனக்கு என்ன வெகுமதி கிடைக்கும் ?" என்று கேட்டார்

உடனே போதிதர்மர் கடும் கோபத்துடன் சீற்றமாக "உனக்கு ஏழாவது நரகம் தான் கிடைக்கும்" என்று சொன்னார்

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பேரரசர் "நான் என்ன தவறு செய்தேன். என்னால் முடிந்த அளவுக்கு நற்காரியங்களைத் தானே செய்து கொண்டிருக்கிறேன்" என்று கேட்க

"என்ன வெகுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்பதே ஒருவித பேராசைதான். உன்னுடைய உள்குரலை நீ கேட்டிருந்தால், இந்த கேள்வியை கேட்க துணிந்திருக்க மாட்டாய். இதற்கு உனக்கு யாரும் உதவ முடியாது. நீயே தான் முயரற்சிக்க வேண்டும்" என்றார்.

பேரரசர் அதிர்ந்து போனார் . அவர் அதுவரை இந்தியாவில் இருந்து வந்த புத்த பிட்சுகளை எல்லாம் பார்க்கும் போது, அவர்களுடைய கனிவான குரலையும், எளிய உபதேசங்களை தான் கேட்டு இருந்தார். இதுபோன்ற அதிரடியான பேச்சுக்களை கேட்டதில்லை எனவே அவர் போதிதர்மனை பார்த்து "மன்னியுங்கள் .எனக்கு எப்போதும் இடைவிடாத எண்ணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் தான் என் மனதில் இருந்து வரும் குரலை என்னால் கேட்க முடியவில்லை என்று தெரிகிறது அதனை அமைதியாக்க என்ன செய்யவேண்டும் என்ற உபாயம் எனக்கு தெரியவில்லை" என்றார்

இதைக் கேட்ட போதிதர்மர், தான் ஊருக்கு வெளியே தங்கியிருக்கும் கோயிலுக்கு, மறு நாள் காலை நாலு மணிக்கு தனியாக வரச்சொன்னார் அப்படி வந்தால் "உன் மனதை நான் அடக்கி காட்டுகிறேன்" என்றார்

இரவு முழுதும் பேரரசருக்கு இதே சிந்தனைதான் "ஆளைப் பார்த்தால், காட்டுமிராண்டி போலத் தெரிகிறார் இவரை நம்பி தனியே போனால் என்ன ஆகும்? மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்ய முடியும் …நம்மை கொலை செய்து விடலாம் ஆனால் அதே சமயம், அவர் தான் நம்முடைய மனத்தை அடக்கி காட்டுகிறேன் என்றும் சொல்லியிருக்கிறாரே. அதனால் முயற்சித்துப் பார்ப்போம்" என்று ஒரு வித தைரியத்துடன் கிளம்பிப் போனார் இவர் செல்லும்போது கோயிலின் வாசல் படியில் நின்று இருந்த போதிதர்மர் இவரைப் பார்த்து "என்னை சந்திக்க வருவதற்காக அவ்வளவு யோசித்து இருக்கிறாயே அதுவே உன்னுடைய பயத்தை காட்டுகிறது ஒரு புத்தபிட்சு ஆகிய நான் உன்னை என்ன செய்துவிட முடியும்" என்றார். அப்போது அவர் கையில் ஒரு தடியை வைத்து இருந்தார்

சிறிது வெட்கமுற்ற பேரரசரை அங்கிருந்த கோவிலின் நீண்ட தாழ்வாரத்தில் அமரவைத்து அவர் எதிரே உட்கார்ந்து கொண்டார் போதிதர்மர். தன் அருகில், கை தடியை வைத்துக் கொண்டார் பிறகு இவரை பார்த்து "நீ உன் கண்ணை மூடிக்கொள் உள்ளே போய் உன்னிடம் இருந்து நழுவிக் கொண்டு ஓடும் அந்த மனதை பிடி .அது உன் கைக்கு அகப்பட்ட உடன், என்னிடம் சொல் " என்று , தன் பக்கத்தில் இருந்த தடியில் கையை வைத்தார் .

அரசருக்கு ஒன்றும் புரியவில்லை . தடியை வைத்து அடித்தால், உடம்பு தானே காயப்படும். இதில் மனதை என்ன செய்ய முடியும். ஆனாலும் இவரைப் பார்த்தால் சற்று கிறுக்குப்பிடித்தவர போல இருக்கிறது எதற்கு வம்பு . அவர் சொல்லியபடியே செய்து பார்ப்போம்" என்று கண்ணை மூடிக்கொண்டு மனதை தேட ஆரம்பித்தார்

மனது என்பதே, நாம் தேடாது இருக்கும் வரை தான் உள்ளே இருக்கும்… எண்ணற்ற எண்ணங்களுடன் .

எப்பொழுது நாம் விழிப்புற்று, அதை தேட ஆரம்பிக்கிறோமோ, அப்போது அந்த விழிப்புணர்வே, அந்த மனதை கொன்று விடுகிறது. பேரரசர் மனதை தேடிக் கொண்டே இருந்தார் .எதிரே போதிதர்மர் காத்துக்கொண்டு இருக்கிறாரே.ஆனால் அவர் தேடத் தேட, அது தட்டுப்படவே இல்லை.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. பொழுதும் புலர ஆரம்பித்தது போதிதர்மர் பேரரசரை உலுக்கி, " என்ன மனது உங்கள் கைக்கு இன்னும் அகப்படவில்லையா. விடிந்துவிட்டது " என்றார் அப்போது கண்ணை திறந்து பார்த்த பேரரசர் , "நானும் எவ்வளவோ தேடிப் பார்த்தேன்.மனது என் கைக்கு அகப்படவில்லை" என்றார் . இதை சொல்லும்போது அவர் தன் உள்ளே, பேர் அமைதி நிலவுவதையும் உடலெல்லாம் தளர்வாகி, ஒரு இனிமையான அனுபவம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார் .தன் உள் குரலை அவரால் கேட்க முடிந்தது.அது போன்ற ஒரு அனுபவம் அவருக்கு அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. அவர் போதிதர்மரை பார்த்து, " நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கும் அல்லது செய்யாமல் விடுவதற்கும் வெகுமதி தேவையில்லை அந்த செயலை செய்வது மட்டுமே நமக்கான வெகுமதி என்பதை நன்றாக உணர்த்துக் கொண்டேன் " என்று சொன்னார்

இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, வெகுமதி என்று தனியாக ஒன்றே கிடையாது அது ஆத்மார்த்தமான ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன், நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே நமக்கு கிடைக்கும் வெகுமதி தான் .

எழுத்தாளர் சுஜாதா எழுதிய "ஆ" என்ற நாவலில் இப்படி வரும்…

"வாழ்க்கையில் சில விஷயங்கள் ஓசைப்படாமல் அறிமுகமாகின்றன,சில திருப்பங்கள் அறிவிப்பில்லாமல் நுழைகின்றன. சில மாறுதல்கள் அனுமதியில்லாமல் தம்மை நுழைத்துக்கொண்டு விடுகின்றன."

அது போல ஓசைப்படாமல் எனக்கு அறிமுகமாகி, எந்தவித அறிவிப்புமில்லாமல் பல திருப்பங்கள் உள்ள என் கோரா பயணத்தில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சக பயனாளர்கள் பங்களிப்புடன் நடத்தி வரும்

சங்கடம்  தவிர்க்கும் சட்டம் க்கான ஐகான்
Kavin Ganes இன் தற்குறிப்பு போட்டோ
Nageshwaran Bjlc இன் தற்குறிப்பு போட்டோ
சுல்பிர் சாதாத் இன் தற்குறிப்பு போட்டோ
Kavin GanesNageshwaran Bjlcசுல்பிர் சாதாத் உள்பட மேலும் 180 பேர் பங்களிப்பாளர்களாக உள்ளனர்

என்ற களத்தில் இடும் பதிவுகளால், நிறைய பேர் பயனடைந்தனர் என்று கோரா மேலாளர் திரு செல்வ கணபதி மூலம் அறிந்ததே எனக்கான வெகுமதி தான்.!!

தனியாக ஒரு வெகுமதியை நான் எதிர் பார்க்கவேயில்லை

படித்தமைக்கு நன்றி

ஸ்ரீஜா .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக