ஞாயிறு, 30 மே, 2021

அனாதையாக வளர்வது எப்படி இருக்கும்?

 அனாதையாக வளர்வது என்பது எப்படி இருக்கும்?

அது ரொம்ப கொடுமையா இருக்கும்னு சொல்லிட்டு போயிடலாம்…

ஆனா அந்த கொடுமைங்கிறது எப்படி இருக்கும்ன்னு உணர்தல் இருந்தா தான் அது புரியும்…

நான் பள்ளியில் படிச்சுக்கிட்டு இருக்கும்போது தான் என் அப்பா இறந்து போனார்..ஆஸ்பத்திரிக்கு வண்டியில் கிளம்பிப் போன அவரை , திரும்பத் தூக்கிட்டுத் தான் வந்தாங்க..

உண்மையா..படத்திலெல்லாம் காட்றது போல, ஓடிப் போயி, அப்பா மேலே விழுந்து அழத் தோணவேயில்லை..

அப்பாவின் உடல் நடுக்கூடத்தில் இருக்குது. ஒரு பக்கமா நாங்க எல்லாம் உட்கார்ந்துருக்கோம்..யார்யாரோ வராங்க…எங்க கிட்டே பேசுறாங்க. .அழுவுறாங்க..எனக்கு கண்ணிலே தண்ணியே வரலை..

அப்படியே எல்லாக் காரியமும் முடிஞ்சுது..கொஞ்ச நாளில் நாங்களும் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டோம்..

ஒருநாள், பரீட்சைக்கு படிக்க வழக்கம் போல, ராத்திரி உட்கார்ந்து, படிக்க ஆரம்பிக்கிறேன். நடுவிலே தண்ணீர் குடிக்க ரூமை விட்டு வெளியே வர்றேன்..எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க...தண்ணியை எடுத்து குடிக்கப் போகும்போது தான் நினைவுக்கு வருது..அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போன சில காலமா, அவர் சரியா தூங்கிறதில்லை..

நோயின் தீவிரத்தோட அவருக்கு மன வலி இருந்திருக்கு..

நான் ராத்திரி படிச்சுட்டு இருக்கும்போது, நடுவில் நிறுத்திட்டா, எழுந்து வந்து, சாப்பிட எதுவும் வேணுமான்னு கேட்பார்…

அது நினைவுக்கு வந்து, அய்ய்யோ…இப்போ அப்பா இல்லையேன்னு நினைப்பு வந்து சுட்டபோது, அழுகை வந்தது பாருங்க..அப்படியே பொங்கி பிரவாகவா, எல்லோரும் ஓடிவந்து ஆறுதல் சொல்லியும் நிற்காமல்,ஓடி வந்துகிட்டே இருந்த சுண்ணீர்..

இந்தப் பிரிவு துயர் என்பது ...யாரிடமும் வெளியே சொல்ல முடியாமல் மனசுக்குள்ளே பூட்டி வச்சுக்கிட்டு இருக்கிறது .அது, எப்ப அணையை உடைச்சுக்கிட்டு சுனாமி போல வரும்ன்னு சொல்ல முடியாது..

அதற்கு பிறகு வந்த இராத்திரிகளில், என் கண்ணீரே, என் தூக்கத்தை தூக்கிப் போனபோது,…இதே போலத் தானே அப்பாவும் தூக்கம் வராம தவிச்சுட்டு இருந்துருப்பார்ன்னு நினைப்பு வந்து இன்னும் அதிகமாக்கிரும்.

அந்த தூக்கம் தொலைந்த இரவுகள் எப்டி இருக்கும்ன்னு நான் தனியா சொல்ல வேண்டியிருக்காது..ஏன்னா எல்லோருக்கும் ஒரு காலக்கட்டத்தில் அந்த தருணத்தை அனுபவிச்சிருப்போம்..

வலி, வேதனை, அவமானம், நிராசைன்னு பல காரணத்தினாலே தூக்கம் வராம தவிக்கும் போது, , மத்தவங்க எல்லாம் நிம்மதியா தூங்கிக்கிட்டு இருக்கும் போது..

இது போன்ற ஒரு நிலையை. அவ்வையார் குறுந்தொகையில் ஒரு பாட்டில் விவரித்திருப்பார்…

அன்பால் ஒன்று சேர்ந்த தலைவனை விட்டு பிரிந்திருக்கும் தலைவி, அந்த பிரிவு தாங்காம .ஆற்றாமையால் புலம்புவாளாம்…

"முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்

டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்

அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே"

."யாரிடம் சென்று முட்டிக்கொள்வேன்? யாரைக் குறை கூறித் தாக்குவேன்? நானோ ஒருத்தி. ஏதாவது ஒரு காரணம் சொல்லி 'ஆ'ன்னு திடீரெனக் கூவிவிடலாமான்னு தோணுது..என் துன்பக் காற்றலைதான் என்னையே தாக்கி. என்னையே அலைக்கழிக்கிறது. என் மனநோயைத் தெரிந்துக்கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த ஊரிடம் முட்டிக்கொள்வதாலோ, தூங்கும் ஊரைத் தாக்கிப் பேசுவதாலோ என்ன வந்து விடப்போகிறது?"

இதை படிச்ச போது, இவ்ளோ ஒரு ஆற்றாமையாக் கூட என் அப்பா யாரிடமும் புலம்பக்கூட இல்லையேன்னு இன்னும் கண்ணீர் அதிகமாத் தான் வரும்..

இப்படி விவரம் தெரிஞ்ச நிலையிலேயே, பிரிவுத்துயரை தாங்க முடியலையே..

விவரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் அநாதையாகிப் போவதென்றால்? யோசிச்சு பார்க்கவே பயமாயிருக்கு…

இந்த கோரானாவின் பிடியில் சிக்குண்டு இறப்பவர்களை பற்றி தினமும் செய்திகளில் படிச்சுக்கிட்டிருக்கோம். ஆனால் அவர்கள் நிராதரவாக விட்டுப்போற அந்த குடும்பத்தின் நிலை? கண்ணீரும் கம்பலையுமாக பரிதவிக்கும் அவர்கள்..விவரம் தெரியாத குழந்தைகள் என்னும்போது…?

48 மணிநேரமாக இறந்து கிடந்த ஒரு தாய்க்கு பக்கத்தில் ஒரு குழந்தை இருப்பது தெரிந்தது. ஆனால் சொந்தக்காரர்கள் எல்லாம், நாமளும் கோரானா வைரஸால் பாதிக்கப்பட்டுவிடுவோமோன்னு பயந்து அந்த குழந்தையை தொடக்கூட இல்லையாம்.!! என்ன செய்வது…எல்லோருக்கும் உயிர் என்றால் வெல்லக்கட்டி தானே!!

அதே போல டெல்லியில் நடந்தது இது. .மூன்று நாள் முன்னாலே, கோரானாவில் அப்பா இறந்திருக்க, அம்மாவுடன் படுத்து தூங்கிக்கிட்டிருந்த அந்த 6 வயது இரட்டை பெண்குழந்தைகளுக்கு தெரியாது..அவர்கள் அம்மாவும் இறந்துட்டான்னு !!

வீட்டின் கதவு திறக்கப்படாமலேயே இருக்க, சொந்தக்காரர்கள், ஜன்னல் வழியா தண்ணீரை பிள்ளைகள் மீது ஊற்றி, கதவை திறக்க வச்சாங்களாம்..!!.கணவர் இறந்த துக்கம் தாளாமல், சாப்பிடாமல் இருந்து, அவர்கள் தாய் இறந்து போயிருக்க, திடீரென அநாதையாகிப் போயினர் இவர்கள்!!

இந்த தொற்றுநோய் - ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவிக்கிறது - அதே சமயம், மற்றவர்களை, கவனித்து கொள்ள ஒருவரும் இல்லாமல் விட்டுவிடுகிறது.

இதுவரைக்கும் உத்தேசமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2,70,000 ன்னு சொல்றாங்க.. அதிகமான மக்கள் மருத்துவமனைக்கு வெளியேயும் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட இறப்பினை விட இரண்டு மடங்காக இருக்கும் என்கின்றனர். இது குறித்த சரியான புள்ளிவிவரம் அரசிடம் இல்லை..அது தெரிந்தால் தானே, எத்தனை குழந்தைகள் அனாதையாக இருக்கிறார்கள் என்பதே தெரியும்?" என்கிறார் குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்திய இணைய பாதுகாப்பு நிபுணர் அகஞ்சா ஸ்ரீவாஸ்தவா.

சட்டப்படி, ஒரு அனாதைக் குழந்தையை ஒரு அரசாங்க அதிகாரி நேரில் பார்த்து, அவர்களைப் பராமரிக்க உறவினர்கள் இல்லாவிட்டால், ஒரு இல்லத்தில் வைக்கப்படுவார்கள்.ஆனால் கொடுமையாக, இந்த குழந்தைகள் சட்டவிரோதமா தத்தெடுக்கப்படுகிறார்கள்.. அம்மாக்களை இழந்த கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் மற்றும் உணவுக்காக சமூக ஊடகங்களில் கோரிக்கை வைக்கிறாங்க...

நிலைமையின் வீரியத்தை உணர்ந்த அரசுகள், இந்த குழந்தைகளுக்குன்னு சிறப்பு திட்டம் கொண்டுவந்திருக்கு.... மத்திய அரசு, ரூ .10 லட்சம் வைப்பீடும், அதன் வட்டி,யை, ஐந்து ஆண்டுகளுக்கு உதவித்தொகையாகவும், அவர்களுக்கு 18 வயசு ஆகும்போது, அந்த முதல் ஒப்படைக்கப்படும்ன்னும் அவர்களின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு. செய்யப்படும்ன்னும் சொல்லியிருக்கு…அதேபோல தமிழ அரசு 5 லட்ச ரூபாயும் பட்டப்படிப்பு வரைக்கான கல்வி உதவியும் அறிவிச்சுருக்கு..

ஆனால் அறிவிக்கப்பட்டவை எல்லாம், கோவிட் காரணமா சான்றளிக்கப்பட்ட இறப்புகளுக்கு மட்டும் தான் இருக்கும் -இப்போதைக்கு மாநிலங்களின் அறிக்கையின் படி 577 குழந்தைகள் அனாதையாகி இருக்கங்களாம. ஆனால், . குஜராத் போன்ற சில மாநிலங்களில், காட்டப்பட்ட கோவிட் இறப்புகள், உண்மையான இறப்புகளில் வெறும் 10% மட்டுமே என்று நம்பப்படும் போது, எந்த அளவிற்கு, உண்மையாகவே பாதிக்கப்பட்ட குழந்தைகளை போய், இந்த திட்டங்கள் போய் சேரும் என்பது தெரியவில்லை.!!

ஆனால் என்ன செஞ்சு என்ன..

இது போன்ற குழந்தைகள் வாழ்க்கை முழுசும் சோகத்தோடு வாழ வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல, உறவினரின் புறக்கணிப்பு, துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் போன்ற ஆபத்தில் அதிகம் இருக்கின்றனர்" ..இப்படி சொன்னது யுனிசெப் இந்தியாவின் தலைவர் யாஸ்மின் ஹக்.

சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் இந்த தலைமுறை குழந்தைகள்…அதுவும் கடுமையான அதிர்ச்சியை எதிர்கொண்ட இவர்கள் மனமுடைந்த பெரியவர்களாகத் தான் வளருவார்கள் "என்கிறார் ஒரு குழந்தை உரிமை ஆர்வலர்.

ஏனென்றால் தான் இழந்த அந்தக் காலத்தை எண்ணும்போதெல்லாம் எப்படி இருக்கும்? இதோ அந்த உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறார் அவ்வையார்

"உயர்ந்த மரத்தின் கிளையைத் தொட்டுப் போகும் அளவிற்கு இருந்த தண்ணீர், பின்னர் கையால் ஊற்றிக்கொள்ளும் அளவு
குறுகி போனது போல இருந்தது. ஆனாலும், எப்பொழுதும் நினைத்திருந்தேன்".

இந்த பொருள் பொதிந்த பாடல் இது தான்..

“உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே".
- .
ஆனால், உண்மையான அனாதை யார் தெரியுமா? எனக் கேட்கிறார் அறிவுக் கருவூலம் என முஸ்லிம்களால் அழைக்கப்படும் அலி (ரலி)

‘பெற்றோரை இழந்தவன் உண்மையான அனாதை இல்லை. உண்மையான அனாதை என்பவன் கல்வியும், ஒழுக்கத்தையும் இழந்தவன் தான்’.

உண்மை தான்….

ஆதியும் அந்தமும் இல்லாத ஈசனை "அனாதை" என்றா அழைக்கிறோம்??

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக