என் வளர்ப்பு மகன் சிட்டு என்னும் லட்டு'
எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் தான் அவன் பெயர் இல்லை.மற்றபடி, அவன் வீட்டின் ஒரு முக்கிய நபர்!!
ஆனால் பாருங்க..
'சிட்டு' ஒரு க்ராஸ் வகையை சேர்ந்தவன். டாஷ் வகை நாயும் இந்திய வகையும் சேர்ந்த ரகம்.அவன் . அவனின் வித்தியாச உருவத்தை பார்ப்பவர்கள், அடுத்த கேட்கும் கேள்வி தான் ஆச்சரியம்!!
"நீங்க ஏன் ஒரு வெளிநாட்டு வகையை வளர்க்கலை?"
நம்ம ஆட்களுக்கு, தன் இனத்தை சேர்ந்தர்வர்கள் தான் சுற்றமும் நட்புமாக வேண்டும்..ஆனால் வெளிநாட்டு ஜாதி வளர்ப்பு நாய்ன்னா தான் கவுரவமாம்!!
காட்டு விலங்கான நாய்கள், இவனை நம்பி, நாட்டிற்குள் வந்து, இவனுக்கு விசுவாசத்தோடு இருந்தும், அதை புறக்கணித்து விட்டு, அனாதையாய போன நம் நாட்டு நாயை பார்த்து "தெரு நாய்" என்கிறான்!!
பெரும்பாலும் செல்லப் பிராணிகளுக்கு அவர்களை வளர்ப்பவர்கள் மூலம் அன்பு, ஆதரவு, அரவணைப்பு எல்லாம் கிடைக்காமல் போகாது..
ஆனால் அவைகளுக்கு வயதாகும் போது, நிறைய பேருக்கு "செல்லப் பிராணி" என்பது "செல்லா பிராணி"யாகிறது என்பது தான் நிதர்சனம்.
அது ஒரு காலத்தில் செல்லப்பிராணியாக இருந்த அடையாளமாக, கழுத்தில் காலருடன், உடல் நலம் குன்றியவுடன், தெருவில் கொண்டு வந்து விட்டுப் போகும் 'மாக்கள்' ஏராளம்!!
உங்களுக்கு தெரியுமா..கொடுமையிலும் கொடுமையானது "வளர்த்தவர்களின் புறக்கணிப்பு" தான்..
அந்த அன்பு மறுக்கப்பட்டதாலேயே மாண்டு போகிறார்கள் இந்த வாயில்லாத ஜீவன்கள்..
தன்னுடன் வந்த நாயிற்கு சொர்க்கத்தில் இடம் இல்லையென்றால், தனக்கும் தேவையில்லை என்றார் தருமர்ன்னு மஹாபாரதம் சொல்லும்.!!
செல்லப் பிராணி வளர்ப்பாளர்களுக்கு ஒரே வேண்டுகோள் தான்..உங்களால் ஒரு பிராணியை அதன் வாழ்நாள் முழுதும் வளர்க்க முடிகிறதென்றால் மட்டுமே வளர்க்க முற்படுங்கள்…இல்லையென்றால் வேண்டாம்!!
இன்னொரு வகையினர் இருப்பர்.
ஒரு நாள் என் "சிட்டு"வுடன் நடைபயிற்சியில் இருந்தேன்.எனக்கு முன்னால் ஒருவர் தன் வளர்ப்பு .நாயுடன் நடந்துக்கொண்டிருதார்..அமைதியாக போய் கொண்டிருந்த அது, திடீரென அவர் கை சங்கிலியிலிருந்து விலக்கி கொண்டு ஓடிப் போய் எதிரில் ஒரு பெண்மணியுடன் வந்துக்கொண்டிருந்த அவர் வளர்ப்பு நாயிடம் குறைத்துக்கொண்டே போய் நின்றது..
உடன் நான் பார்த்த காட்சி என்னை கோபத்திற்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது .அந்த பெண்மணி தன் கையில் வைத்திருந்த கொம்பை வைத்து, இதை கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தார்.. நாங்கள் ஓடிப்போய் தடுக்கப் போய் நான் நிலை தடுமாறிவிட்டேன். அத்தோடு நில்லாமல், காது கூசும் அரச்சனையை தாராளமா குடுத்துட்டு நகர்ந்துட்டார்.. நாங்கள் அதை பார்த்தால். ,பாவம்.. .அந்த குச்சி அதன் கண்ணில் பட்டு துடித்துக் கொண்டிருந்தது..பின்னர், அதற்கு சிகிச்சை கொடுத்து, சரி செய்யப்பட்டது.
எனக்கு ஆச்சரியம் என்னென்னா..
தன் செல்லப் பிராணிக்கிட்டே இருக்கிற அன்பு பிரியம் மற்ற ஜீவன்களை பார்க்கும்போது, வரலைனா, அது என்ன மாதிரி பிரியம்?
மூன்றாம் வகையினர் ....இந்த ' பிராணி நல ஆர்வலர் போல காட்டிக்கிட்டே அந்த பக்கம், சிக்கன் ஃபிரை, மட்டன் வறுவல் செய்முறை சொல்றது இருக்கே!!😀
அதற்காக நான் அசைவம் சாப்பிடுவதற்கு எதிரி என்று முத்திரை குத்தவேண்டாம்.
யார் என்ன உணவு சாப்பிடுவது என்று மற்றவர் தீர்மானிக்க கூடாது…அவர் மருத்துவர் தவிர!!
இயற்கையாக உள்ள உணவு சங்கிலியில், செயற்கை சேருவதை தான் எதிர்க்கிறேன்!!
இந்த கோரானா காலத்தில், மக்களுக்கே தேவையான உணவு இல்லாத போது, தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு?
இதில் ஊரடங்கு வேறு..
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட, ஒரு பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது என்று படித்தேன். தெரு நாய்களுக்கு உணவு கொண்டு போக, ஊரடங்கு காலத்தில் போலீசார் தடுக்க கூடாது என்றது அது..
இந்த காலக்கட்டத்திலும் இது போன்ற சேவை செய்துக்கொண்டு, முட்டுக்கட்டை வந்தாலும், அதை தவிர்க்க முயற்சி செய்பவர்களையும் பார்க்கும் போது, உண்மையில் நான் எல்லாம் ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஏக்கம் எழத்தான் செய்கிறது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக