ஞாயிறு, 27 ஜூன், 2021

விநாயகர் நான்மணிலை

  

        விநாயகர்நான்மணிலை


பாடல் : மஹாகவி சுப்ரமணிய பாரதியார்






வெண்பா

 சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்

சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்
இன்றிதற்குங் காப்பு நீயே.

கலித்துறை

 நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்

நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

விருத்தம்

 செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;

சீர்பெற்றிட நீ யருள் செய்வாய், வையந் தனையும் வெளியினையும்
வானத்தையு முன் படைத்தவனே! ஐயா, நான் முகப் பிரமா,
யானைமுகனே, வாணிதனைக் கையாலணைத்துக் காப்பவனே,
கமலா சனத்துக் கற்பகமே.

அகவல்

 கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!

சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்பபுக் கிறையவன் பண்ணவர் நாயகன் 5
இந்திர குரு என திதயத் தொளிர்வான்
சந்திரமவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பல வாம்; கூறக் கேளீர்;
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்; 10
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்ச மென்றெண்ணித் துயரிலா திங்கு 15
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி யோங்கும்;
அமரத் தன்மையு மெய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இ·துணர் வீரே. 20
கமலா சனத்துக் கற்பகமே.

வெண்பா

 உணர்வீர், உணர்வீர் உலகத்தீரிங்குப்

புணர்வீர் அமரருறும் போகம் - கணபதியைப்
போதவடி வாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்.
கமலா சனத்துக் கற்பகமே.

கலித்துறை

 காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி

நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்

வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனு நாட்டி னிறுத்தல் குறியெனக்கே.
கமலா சனத்துக் கற்பகமே.

விருத்தம்

 எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி,மனத்திற் சலன மில்லாமல், மதியிலிருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம் நூறு வய திவையுந்தர நீகடவாயே.
கமலா சனத்துக் கற்பகமே.

அகவல்

 கடமை யாவன தன்னைக் கட்டுதல்,

பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி, 5

அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும்
தேவருந்தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல்
இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும் 10

கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில், 15

எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்;
அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே. 20

வெண்பா

 களியுற்று நின்று கடவுளே யிங்குப்

பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமை யெலா நன்காற்றித்
தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து.

கலித்துறை

 துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்

குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களு நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.

விருத்தம்

 தவமே புரியும் வகை யறியேன், சலியா துற நெஞ்சறியாது,

சிவமே நாடிப் பொழுதனைத்துந் தியங்கித் தியங்கி நிற்பேனை,
நவமா மணிகள் புனைந்த முடி நாதா, கருணாலயனே, தத்
துவமாகியதோர் பிரணவமே, அஞ்சேல் என்று சொல்லுதியே.

அகவல்

 சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்

பல்லுருவாகிப் படர்ந்த வான் பொருளை,
உள்ளுயிராகி உலகங் காக்கும்
சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப் 5

பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று,
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் மினியனாய், 10

வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீ யிதை
ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க்கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறி, நான் சித்திபெற்றிடவே, 15

நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னா லுனக் கொரு கோயில் புனைவேன்;
மனமே, எனை நீ வாழ்த்திடுவாய்
வீணே உழலுதல் வேண்டா,
சக்திகுமாரன் சரண் புகழ்வாயே. 20

வெண்பா

 புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந்

திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண்
வல்லபை கோன் தந்த வரம்.

கலித்துறை

 வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்

கரவும் புலமை விருப்பமுமையமுங் காய்ந்தெறிந்து
சிரமீது நங்கள் கணபதி தாண்மலர் சேர்தெமக்குத்
தரமேகொல்வானவர் என்றுளத்தேகளிசார்ந் ததுவே

விருத்தம்

 சார்ந்து நிற்பா யெனதுளமே, சலமுங்கரவுஞ் சஞ்சலமும்

பேர்ந்து பரம சிவானந்தர் பேற்றை நாடி,நாடோறும்
ஆர்த்த வேதப் பொருள் காட்டும் ஐயன்,சக்திதலைப்பிள்ளை,
கூர்த்த விடர்கள் போக்கிடு நங் கோமான் பாதக் குளிர் நிழலே.

அகவல்

 நிழலினும் வெயிலினு நேர்ந்தநற் றுணையாய்த்

தழலினும் புனலினு மபாயந் தவிர்த்து
மண்ணினுங் காற்றினும் வானினு மெனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
உள்ளத்தோங்க நோக்குறும் விழியும் 5

மௌன வாயும் வரந்தரு கையும்
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ்பதியும் பிரமனும் யாவுந் 10

தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள் 15

ஏழையர்க் கெல்லாம் மிறங்கும் பிள்ளை
வாழும்பிள்ளை மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே 20

வெண்பா

 முறையே நடப்பாய் முழுமுட நெஞ்சே,

இறையேனும் வாடா யினிமேல் - கறையுண்ட
கண்டன் மகன் வேத காரணன் சக்தி மகன்
தொண்டருக் குண்டு துணை.

கலித்துறை

 துணையே, யெனதுயி ருள்ளே யிருந்து சுடர் விடுக்கும்

மணியே, யெனதுயிர் மன்னவனே, யென்றன் வாழ்வினுக்கோர்
அணியே, யெனுள்ளத்தி லாரமுதே, யெனதற்புதமே,
இணையே துனக்குரைப்பேன், கடைவானில் எழுஞ்சுடரே.

விருத்தம்

 சுடரே போற்றி, கணத்தேவர் துரையே போற்றி, எனக்கென்றும்

இடரே யின்றிக் காத்திடுவாய், எண்ணா யிரங்கால் முறையிட்டேன்;
படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பல்கோடி
இடரா தோடுமண்டலங்க ளிசைத்தாய், வாழி யிறைவனே.

அகவல்

 இறைவி இறையவ னிரண்டு மொன்றாகித்

தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள் ளொளியாகி யுலகெலந் திகழும்
பரம் பொருளேயோ! பரம்பொருளேயோ!
ஆதிமூலமே! அனைத்தையுங் காக்கும் 5

தேவ தேவா, சிவனே, கண்ணா,
வேலா, சாத்தா, விநாயகா, மாடா,
இருளா, சூரியா, இந்துவே, சக்தியே,
வாணீ,காளீ, மாமகளேயோ,
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள 10

தியாதுமாய் விளங்கு மியற்கைத் தெய்வமே;
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; 15

உடைமை வேண்டேன்,உன்துணை வேண்டினேன்
வேண்டா தனைத்தையு நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.

வெண்பா

 கடமை தானேது கரிமமுகனே வையத்

திடநீ யருள் செய்தா யெங்க - ளுடைமைகளு
மினங்களு மெல்லா மீந்தாய் நீ யாங்களுனக்
கென்புரிவோம் கைமா றியம்பு.

கலித்துறை

 இயம்பு மொழிகள் புகழ் மறை யாகு மெடுத்தவினை

பயன்படும் தேவர்இருபோதும் வந்து பதந்தருவார்
அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறு மேன்மைகளே.

விருத்தம்

 மேன்மைப் படுவாய் மனமே கேள் விண்ணி னிடிமுன் விழுந்தாலும்

பான்மை தவறி நடுங்காதே, பயத்தா லேதும் பயனில்லை,
யான் முன் னுரைத்தேன் கோடிமுறை இன்னுங்கோடி முறைசொல்வேன்
ஆன்மாவான கணபதியின் அருளுண் டச்ச மில்லையே.

அகவல்

 அச்ச மில்லை, அமுங்குத லில்லை,

நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்; 5

யார்க்கு மஞ்சோம்,எதற்கு மஞ்சோம்;
எங்கு மஞ்சோம்,எப்பொழுது மஞ்சோம்;
வான முண்டு மாரி யுண்டு,
ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும்
தீயு மண்ணுந் திங்களு மீன்களும் 10

உடலு மறிவு முயிரு முளவே;
தின்னப்பொருளுஞ் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டுங் காண நல்லுலகும்
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்று மிங்குளவாம்; சலித்திடாய், ஏழை 15

நெஞ்சே; வாழி, நேர்மையுடன் வாழி,
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ'
தஞ்ச முண்டு, சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.

வெண்பா

 நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.

கலித்துறை

 செய்யுங் கவிதை பராசக்தியாலே செய்யப்படுங்காண்

வையத்தைக் காப்பவ ளன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்திலுந் துரிதத்திலுஞ் சிந்தி யழிவதென்னே
பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே.

விருத்தம்

 பக்தி யுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன்

வித்து முளைக்குந் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே யனைத்து மெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

அகவல்

 எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!

பொறுத்தா ரன்றே பூமியாள்வார்;
யாவு நீயாயி னனைத்தையும் ஒறுத்தல்
செவ்விய நெறி யதிற் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறை யெனக்கீவாய்; 5

மங்கள குணபதி மணக்குளக் கணபதி
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையா ளாசை மகனே.
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றி 10

ஆள்வதும் பெரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாகக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;
காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
காத்தருள் புரிக,கடவுளே யுலகெலாம் 15

கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே
அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
எங்குல தேவா, போற்றி!
சங்கரன் மகனே தாளினைப் போற்றி.

வெண்பா

 போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே

ஆற்ற லருளி யடியேனைத் - தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள்
வீணையொலி என்னாவில் விண்டு.

கலித்துறை

 விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே

தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி
யென்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடலொரு கோடி
மேவிடச் செய்குவையே.

விருத்தம்

 செய்யா ளினியாள் ஸ்ரீ தேவி செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்

கையா ளெனநின் றடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்; புகழ்சேர்வாணியு மென்னுள்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள், சக்தி துணைபுரிவாள், பிள்ளாய், நின்னைப் பேசிடிலே.

அகவல்

 பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே 5

இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ் 10

சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை 15

அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரண மிங்குனக்கே.

வெண்பா

 உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன்

மனக்கேதம் யாவினையும் மாற்றி - எனக்கே
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.

கலித்துறை

 விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா

குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன்
அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
வரங்கள் பொழியும் முகிலே! என்னுள்ளத்து வாழ்பவனே!

விருத்தம்

 வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே;

ஆழ்க வுள்ளஞ் சலனமிலா தகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க; துயர்கள் தொலைந்திடுக; தொலையா இன்பம் விளைந்திடுக
வீழ்க கலியின் வலியெல்லாம் கிருதயுகந்தான் மேவுகவே.

அகவல்

 மேவி மேவித் துயரில் வீழ்வாய்,

எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்; எதற்கு மினியஞ்சேல்;
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் 5

அபய மிங்களித்தேன்.. நெஞ்சே
நினக்கு நானுரைத்தன நிலை நிறுத்திடவே
தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன். மேதினி யழிப்பேன்;
மூடநெஞ்சே, முப்பது கோடி 10

முறையுனக் குரைத்தேன்; இன்னுமொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே;
ஏது நிகழினு 'நமக்கேன்' என்றிரு;
பராசக்தி யுளத்தின்படி யுலக நிகழும்;
நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள் 15

இல்லை; நானெனும் எண்ணமே வெறும் பொய்'
என்றான் புத்தன்; இறைஞ்சுவோ மவன்பதம்.
இனி யெப்பொழுது முரைத்திடேன். இதை நீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!
கவலைப்படுதலே கரு நரகம்மா! 20

கவலையற்றிருத்தலே முக்தி;
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே.

வெண்பா

 செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்

எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு.

கலித்துறை

 இயல்பு தவறி விருப்பம் விளைத லியல்வதன்றாம்

செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
பயிலு நல்லன்பை யியல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலு வினகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.

விருத்தம்

 மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி

எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி யுடலை யிருப்புக் கிணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான் கொன்று, பூலோகத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியி·தே.

அகவல்

 விதியே வாழி, விநாயகா வாழி,

பதியே வாழி, பரமா வாழி,
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கு மன்னே, போற்றி! 5

இச்சையுங் கிரியயு ஞானமு மென்றாக்கு
மூல சக்தியின் முதல்வா, போற்றி!
பிறைமதி சூடிய பெருமாள் வாழி,
நிறைவினைச் சேர்க்கு நிர்மலன் வாழி,
கால மூன்றையுங் கடந்தான் வாழி! 10

சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி, வீரம் வாழி!
பக்தி வாழி, பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர் 15

பதங்களாம் கண்டீர், பாரிடைமக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரத நான் கொண்டனன்; வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!


வெள்ளி, 25 ஜூன், 2021

அருணாசல அக்ஷரமணமாலை

 




ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய





அருணாசல அக்ஷரமணமாலை மாண்பு


பகவான் ரமணர் விரூபாக்ஷ குகையில் (1900-1916) வாசம்
செய்த காலத்தில் உடனிருந்த அடியார்கள், தாம் பிக்ஷை எடுக்கச்
செல்லும்போது பாட வேண்டிய ஒரு துதிநூலை இயற்றித்
தரும்படி கேட்டனர். இதுபற்றி எந்த நினைப்பும் பகவானது
மனதில் எழவில்லை. ஆயினும் இறைவன் திருவருளால்
ஒருநாள் கிரிவலம் செய்யும்போது ஆங்காங்கே அமர்ந்து,
தனக்கும் அருணாசலனுக்கும் ஏகாந்தத்தில் நிகழ்ந்த
அதிசயத்தை பக்திப் பரவசத்துடன், கிரிவலம் செய்து
முடிப்பதற்குள் 108 மந்திரங்கள் அடங்கிய இத்துதி நூலை
பகவான் இயற்றியருளினார்.

 இதற்குப் பொருள் என்ன என்று ஸ்ரீ
பகவானிடம் அடியார்கள் கேட்டபோது, அதற்குப் பொருள் அதைப்
பாராயணம் செய்வதுதான் என்று விடையருளினார்.

வட இந்திய முகம்மதியப் பேராசிரியர் ஹபிஸ் யைத்
ஸ்ரீபகவானிடம் ஒருசமயம் வினவியதாவது: 

"அத்வைதியாகிய(தனக்கு அன்னியமாக ஒன்றுமற்ற தங்கள் உங்களுக்கு
அன்னியமாய் அருணாசலத்தை உருவரித்துப் பாட எவ்வாறு
 முடிந்தது?

இக்கேள்விக்கு ஸ்ரீபகவான் கூறியதாவது: "பக்தன்.
கடவுள், துதி அனைத்துமே பரமான்மாதான். நீங்கள் உங்களை,
பங்களுடைய தேகத்துடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் போது,
ஒரு பக்தன் தன்னை ஏன் அருணாசலத்துடன் ஐக்கியப்படுத்தி
துதிக்கக் கூடாது?"


நூல் வரலாறு

ரமண பகவான் அருணாசல பகவான் மீது இயற்றிய பாடல்கள் என்பதால் அருணாசல அக்ஷரமணமாலை என்ற பெயர் நிலைத்தது. இதன் ஒப்பில்லாத சிறப்பு எது எனின் தெய்வமே (ரமண பகவானே) தெய்வத்தின் மேல் இயற்றிய பாடல்கள் என்பதாம். அதனால்தான் இப் பூரண தெய்வத்தன்மையும், அழிவில்லா சிரஞ்சீவித் தன்மையும் உடையவையாகும்.

அன்பர்கள் இப்பாடல்களின் பொருளைக் கேட்டறிய விரும்பியபோது பகவான், “நீர்தான் அவற்றின் பொருளைச் சொல்லுமே! ஏதாவது நினைத்து எழுதியிHருந்தால் அதற்கான பொருளைக் கூறலாம். எப்படியோ எழுந்தவை அவை" என்று கூறிவிட்டார். பிறிதொரு சமயம் பகவான், “அதற்குஅர்த்தம் அதைப் பாராயணம் செய்வதுதான்” என்று அருளுபதேசம் செய்தார். எனவே பக்தர்கள் அருணாசல அக்ஷர மணமாலையை வேதமாகப் போற்றி, தினம் ஓதி, நீங்காத செல்வமும், நிறைவான மனநிம்மதியும், சாந்தியும் அடைந்து வருகின்றனர். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் நோக்கத்தோடு, அனைவரும் எளிதில் இதன் பொருளை உணர்ந்து ஓதுவதற்கு ஏதுவான சிற்றுரையுடன் கூடிய  இந்தத் தோத்திரத்தைத் தினம் மனம் உருகிப் பாடுவோர் இக, பரசுகங்கள் அடைவது சர்வ நிச்சயம் என்பது அனுபவ  உண்மை.


அருணாசல அக்ஷரமணமாலை 

அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமண மாலைசாற்றக்

கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.


பொருள்:

கருணையே உருவான கணபதியோ அருணாசல

அகர வரிசை நாயகனுக்கு உகந்த அக்ஷரங்களால்,

எழுத்துக்களால், புனைந்த மணமாலையைச் சூட்ட உன்

திருக்கரத்தைக் கொடுத்துக் காப்பாயாக!

வெள்ளி, 18 ஜூன், 2021

பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

 பிருந்தாவனத்துக்கு போன மீரா அங்கிருந்த தலைவர் ஜீவா கொசைன் என்பவரை பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. தன்னுடைய இடத்திற்கு எந்த ஒரு பெண்ணையும் அனுமதிப்பதில்லை என்று மீராவிற்கு பதில் வந்தது. கோபத்தில் மீரா, “கண்ணனின் அடிமைகள் அனைவரும் பெண்களே. கிரிதரனான கோபாலன் மட்டுமே புண்ணிய புருஷன். அவனைத் தவிற, இன்னொரு கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருப்பது எனக்கு இன்றுதான் தெரியும் "என்று” பதிலளித்தாளாம். ஜீவா கொசைன் தன் செய்கைக்காக வெட்கப்பட்டு, நீயே என் குரு" என்று வனங்கியதாக புராணம் சொல்லும்.

மீரா மட்டுமா இப்படி சொன்னாள்.. அப்பர், சுந்தரர். என்று கடவுளை பாட வந்த பெரியவங்க எல்லாம் கூட தன்னை பெண்ணாய் நினைச்சு தான் பாடி இருக்காங்க..என்னன்னா பெண்ணுக்கு தான் மற்றவரை காதலிக்க, அன்பு செய்ய முடியுமாம்..

பெண்களாக மாறி பாடி உருகும் போது தான் ஆண்டவனே இரங்கி வருவான்ங்கிற போது, இது மிகப் பெரிய பாதிப்பு இல்லையா ஆணுக்கு?

சரி..அவர்களால் தன்னை பெண்ணா கற்பனை செய்து பார்க்க முடியும்போது, நாமும் தான் மனசளவில் ஆணாக கொஞ்சம் நினைச்சுப் பார்ப்போம்..

அப்படி ஆண்களுக்கு இந்த பெண்களால் ஏற்படும் பாதிப்பு தான் என்னென்ன?

ஒண்ணா ரெண்டா எக்கச்சக்கம்..இல்லையா?!

என்ன பிறந்தப்ப, அப்பா "எனக்கு பையன் பிறந்துட்டான்"னு பெருமையடிச்சிரூப்பார்..ஆனால் உண்மையிலே தனியே கஷ்டப்படுற தனக்கு ஒரு கூட்டாளி கிடைச்சுட்டான்னு தான் சந்தோஷப்பட்டிருப்பார்ன்னு நினைக்கிறேன்.

இந்த பொண்ணுங்க கூட வந்த போட்டி, படிக்கிற காலத்திலேயே ஆரம்பிச்சுருச்சு..இத்தனைக்கும் இவங்களாம் படிக்க ஆரம்பிச்சதே இந்த இருநூறு வருஷமாத்தான்..

எப்படி அப்படி சொல்லலாம். ஒவ்வையார் இல்லையா காரைக்கால் அம்மையார் இல்லையா ஆண்டாள் இல்லையா? எவ்ளோ சங்க பெண் புலவர்கள் இருந்துருக்காங்கன்னு கேட்கலாம்.

சங்க கால அவ்வை 2ம் நூற்றாண்டில் இருந்தார்ன்னு சொல்றாங்க..அந்த சங்க காலத்து பெண் புலவர்கள் 41 பேர்ன்னு பெரியவர் ஒவ்வை நடராஜன் ஆய்வு செஞ்சு சொல்லியிருக்கார்.

அப்புறம் பார்த்தா பெரிய..இடைவெளி..

பின்னர் காரைக்கால் அம்மையார் வரும் போது.3ம் நூற்றாண்டு பிற்பகுதி..அப்புறம் பெயர் சொல்லும் வண்ணம் வந்த புலவர்னா ஆண்டாள் தான்.அது 8ம் நூற்றாண்டு..

நடுவிலே எத்தனையோ ஆண் புலவர்கள் வந்து போயிருக்காங்க..ஆனா ஏன் பெண் புலவர்கள் அவ்வளவாக இல்லை? இல்லே சுத்தமாவே இல்லையா? ன்னு கேள்வி வருது இல்லையா? சங்க கால பெண் புலவர்கள் 41னு இருந்தது எப்படி மாறிப் போனது?

பெருங் காப்பியம் ஆன சிலப்பதிகாரமும் அதே 8.ம்.நூற்றாண்டு தான்.அதுலே கண்ணகிக்கு திருமணம் 12 வயதில் ஆகுதுன்னு சொல்ற இளங்கோவடிகள் அவள் படிச்சதா சொல்லலை..ஆனா மாதவி படிச்சிருக்கான்னு தெரியுது..அதான் கோவலனுக்கு லெட்டர் குடுத்து அனுப்புறாளே..!!

கலையும் கல்வியும் குல மகளிருக்கு இல்லைன்னு ஆகிப் போன காலம் அதுன்னு தெரியுது..

இப்படி 200 வருஷத்துக்கு முன்னாடி தான் படிக்க ஆரம்பிச்சுட்டு, இந்த பெண்கள் போடுற போட்டி இருக்கே..எல்லா பாடத்திலும் அவங்க தான் முதல்..நல்ல வேளை இந்த கோரானா காலத்தில் தான் அது இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருக்கு இல்லையா?!!

சரி அங்கே முடிச்சு வேலைக்கு போனா, அங்கியும் போட்டி..கம்மியா சம்பளம் குடுத்து நிறைய வேலை வாங்கினாலும் கேள்வி கேட்காம செய்வாங்கன்னு, சித்தாள் வேலையிலேயிருந்து ceo வரைக்கும் வரைக்கும் அவங்களுக்கு தான் டிமாண்ட்..இதுலே அவங்களுக்குண்ணு இட ஒதுக்கீடு..

போதாக்குறைக்கு இனிமே பெண்கள் பள்ளினா பெண்கள் தான் ஆசிரியராம்..அட.. பெண் போலீஸுன்னா கூட தனி சலுகை..கேட்டா அரசியல் அமைப்பு சட்டத்திலேயே பெண்களுக்கு சலுகை குடுத்து, அவர்கள் நலம் காக்க, தனி சட்டம் இயற்றச்சொல்லி இருக்குன்னு கை காட்டுறாங்க..!!

சரி..எப்பிடியோ 'தம்' பிடிச்சு வேலைக்கு சேர்ந்தா, வீட்டிலே கல்யாண பேச்சு ஆரம்பிக்கும்..

ஐய்யயோ ..எங்க அப்பா தாத்தா காலத்திலே பொண்ணு பார்க்க போறோம்ன்னு அவங்க அடிச்ச லூட்டியை எல்லாம்..இப்போ இவங்க பண்றாங்க…இன்னும் கொஞ்ச காலத்திலெ 'மஞ்சு'வை விரட்டினது போய், 'மஞ்சுவிரட்டிலே' ஜெயிக்கறவனுக்கு தான் பொண்ணுன்னு திரும்ப வந்தாலும் வரும்..ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

அப்படியே வீட்டுக்கு மனைவியை கூட்டிட்டு வந்துட்டா, வீடே மாறிப் போகுது..அப்பா, அம்மாலாம் ரொம்ப பேச முடியலை..முதலேயே தனிக்குடித்தனம் வச்சுட்டு டீசண்டா நகர்ந்துக்கிறாங்க

நம்ம பாடு தான் மோசம் . அது தான் அவங்களுக்கு துணையா தான் சட்டங்கள் இருக்கு.,மகளிர் நீதிமன்றம், இருக்கே..ஆண்கள் நீதிமன்றம் இருக்கா?.

என்ன முnனாடியெல்லாம் மனுவோட சட்ட திட்டம்ன்னு இருந்தது. எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். அது இல்லாம நம்ம கூட வச்சிக்கலாம்.இல்லே அவளை கூட்டிட்டு தனியா போய் வாழலாம்..யாரும் எதுவும் கேட்க முடியாது..ஆனா நம்ம சொத்துண்ணு நம்ம மனைவி வீட்டிலே பத்திரமா இருப்பா..

கண்ணகி கூட, திரும்பி வந்த கோவலனை பார்த்து, இன்னொருத்தி கூட குடித்தனம் பண்ணிட்டு, இப்ப அன்னக்காவடியா வந்து நிற்கிறியேன்னு சண்டை போடலைஅ. வன் பிரிந்து சென்ற காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினரை போற்ற முடியவில்லையே என்று தான் வருந்தினாலாம்.அப்பேற்பட்ட கணவனை கொன்றதற்கு தான், அவளுக்கு கோபம் வந்தது..கற்புக்கரசியானாள்!!

அதாவது கணவன் தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தினாலும் அதை ஒரு பெண் குற்றம் சுமத்தி, கேள்வி கேட்கக் கூட தோன்றாத நிலையில்தான் இருந்திருக்கிறாள்..ஆனால் இப்போ..அவனை மாதிரியே மனைவியும் தொடர்பு வச்சிக்கிட்டா குற்றமில்லைன்னு கோர்ட்டு சொல்லிடுச்சு..இதை எங்கே போய் சொல்லி அழுவ?

அதே போல, முன்னெல்லாம், கோபம் வந்து, கணவன், மனைவிக்குள் சண்டை வந்து, அவளை ரெண்டு தட்டு தட்டினா கூட, யாரும் குறுக்க வரமாட்டாங்க..அவன் பொண்டாட்டி அவன் அடிக்கிறான்னு போயிடுவாங்க..

ஆனால் இப்போ குடும்ப வன்முறை தடுப்பு சட்டமாம். பத்து ஊரு தாண்டி இருக்கிற பத்மாக்காவையும் சேர்த்து 'உள்ளே' போடுறாங்க.அதுவும் இந்த மகளிர் போலீஸ் ஸ்டேஸன் இருக்கே..ஸ்ஸ்ஸ்..மாட்டினா குஷ்டம்டா சாமி..

சரி..நம்ம ஏரியா "தலை"யை பார்த்து நம்ம கஸ்டத்தை சொல்லி ஹெல்ப் கேட்கலாம்னா,இது ரிசர்வ் தொகுயில்லே..அதுவும் பொண்ணு தான்!!

குழந்தைகள்ன்னு பார்த்தால், "ஈன்று புறம் தள்ளுதல்" தான் அவள் கடமையாம்...சான்றோன் ஆக்குவது தந்தையின் கடனையாம்.

ஆசைக்கு பொண்ணு, ஆஸ்திக்கு ஒரு புள்ளைன்னு சொன்னதும் போச்சு!! பொம்பளை புள்ளைக்கும் ஆஸ்தியிலே பங்கு குடுக்கணுமாம். அதுவும் அவளுக்கு நகை, நட்டு போட்டு கல்யாணம் பண்ணிக் குடுத்தும்!!

எப்படி பார்த்தாலும் பெண் இம்சை(அது சநதோஷமோ கஷ்டமோ) கொடுக்கிறவளா தான் இருக்கிறா..ஆனா அவள் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியலை..

இவளை நினைச்சு படுற கஷ்டத்தில் உடம்பு கெட்டு போறதை பைபிளும் சொல்லுதே!!

Drooping hands and week knees are caused by the wife who does not make her husband Happy's

..Sirach 26:23

இவள் பிரியமும் ஆபத்துன்னு தானேஇந்த ஷேக்ஸ்பியர் கிண்டல் செய்றார்..

"a light wife doth make a heavy husband" சொல்றாரே!!☺️

பின்னே "ஏறு போல பீடு நடை" கலோகியலா சொல்லனும்னா. "சிங்க நடை போட்டு சிகர்த்தில் ஏறணும்"னா, அதுக்கு நல்ல மனைவி வேணும்னு சொல்லிட்டார் தாடிக்காரர்..அதாங்க திருவள்ளுவர்

ஒரு பெண் தான் "சக்தி"ன்னு சொல்லாம, சொல்ற மாதிரி, சாமியே கூட தன் இதயத்தில் வச்சிருக்க, இன்னொருத்தர்தன் மனைவியை தன் பாதியா வச்சிக்கிட்டார்.. அதுவும் பத்தலைன்னு, தலைக்கு மேல ஒருத்தி!!

ஆனா இந்த பெண்களை பார்த்து ஏன் ஆண்களுக்கு பயம் ஏற்படுதுன்னு கூர்ந்து பார்த்தா தெரியும் அவர்கள் காட்டும் "அந்நியோனியம்"

இதோ ஓஷோ சொல்கிறார்

"அந்நியோன்யம் குறித்து அனைவருக்கும் பயம், அனைவருக்கும் அந்நியோன்யம் தேவைப்படுவதால் இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலானதாக மாறுகிறது. அனைவருக்கும் அந்நியோன்யம் தேவைப்படுகிறது, ஏனென்றால், அது இல்லையெனில், இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் தன்னந்தனியாக - ஒரு நண்பர் இன்றி, ஒரு காதலர் இன்றி, நீங்கள் நம்பிக்கையுணர்வு கொள்ளக்கூடிய ஒருவரும் இன்றி, உங்களுடைய காயங்களையெல்லாம் வெளிப்படுத்தக்கூடிய ஒருவரும் இன்றி இருக்கிறீர்கள். காயங்கள் திறந்த நிலையில் இருந்தால் அன்றி அவற்றினால் குணமடைய முடியாது. நீங்கள் அவற்றை எவ்வளவு அதிகமாக மறைக்கிறீர்களோ, அவ்வளவு ஆபத்தானவையாக அவை மாறுகின்றன. அவை புற்றுநோய் தன்மையுடையவையாக மாறிவிடக்கூடும்.

ஒரு விதத்தில் பார்த்தால் அந்நியோன்யம் ஒரு அத்தியாவசியத் தேவை. அதனால் அனைவரும் அதற்காக ஏங்குகின்றனர். அடுத்தவர் அந்நியோன்யமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். அவர் தன்னுடைய தற்காப்பு ஏற்பாடுகளையெல்லாம் விட்டுவிட்டு பாதுகாப்பின்றி இருக்க வேண்டும். தன்னுடைய காயங்களையெல்லாம் வெளிப்படுத்த வேண்டும், தன்னுடைய முகத்திரைகளை மற்றும்

பொய்யான முகங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும், உள்ளபடியே எதையும் மறைக்காமல் உங்களிடம் முழுவதும் வெளிப்படையாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் மற்றொருவிதத்தில் பார்த்தால், அனைவருக்கும் அந்நியோன்யம் குறித்து பயம் - நீங்கள் அடுத்தவருடன் அந்நியோன்யமாக இருக்க விரும்புகிறீர்கள், ஆனால், உங்களுடைய தற்காப்பு நடவடிக்கைகளை நீங்கள் விடுவதில்லை. நண்பர்களிடையே, காதலர்களிடையே உள்ள போராட்டங்களுள் இது ஒன்றாகும்: யாருக்கும் தன்னுடைய தற்காப்பு நடவடிக்கைகளை விட்டுவிட விருப்பமில்லை, யாருக்கும் முற்றிலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், திறந்த இதயத்துடனும் இருப்பதற்கு விருப்பமில்லை இருப்பினும் இருவருக்கும் அந்நியோன்யம் தேவைப்படுகிறது.

உங்களுடைய மதங்கள், உங்களுடைய கலாச்சாரங்கள், உங்களுடைய சமுதாயங்கள், உங்களுடைய பெற்றோர், உங்களுடைய கல்வி - இவையெல்லாம் உங்களுக்கு அன்பளிப்பாக அளித்துள்ள கட்டுப்பாடுகளையும், உணர்ச்சிகளை அடக்கி உங்களால் வைக்கின்ற உங்களுடைய தன்மையையும் நீங்கள் விடாதவரையில் எப்பொழுதும் வேறொருவருடன் அந்நியோன்யமாக இருக்க முடியாது. மேலும், அதற்கு நீங்கள் தான் முன்முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் உணர்ச்சிகள் எதையும் நீங்கள் கட்டுப்படுத்தவில்லை அல்லது அடக்கவில்லை என்றால், அப்பொழுது உங்களிடம் காயங்கள் எதுவும் இருக்காது.

நீங்கள் ஒரு எளிமையான, இயற்கையான வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அந்நியோன்யம் குறித்து எந்த பயமும் இருக்காது - இரு ஒளிச்சுடர்கள் கிட்டத்தட்ட ஒரே சுடராகி விடுமளவு மிகவும் நெருங்கி வருகின்ற மிகப்பெரிய ஆனந்தம் மட்டுமே இருக்கும். அந்த சந்திப்பு மிகப்பெரிய திருப்தியை, மகிழ்ச்சியை, நிறைவை அளிப்பதாக இருக்கும்"

ஆனால், நீங்கள் அந்நியோன்யமாக இருப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்னால், நீங்கள் உங்களுடைய இல்லத்தை முழுவதும் துாய்மைப்படுத்த வேண்டும்."

அப்போ தவறு நம் மீது தான் இருக்கிறதா?

நம் மன வீட்டை சுத்தம் செய்யாமலா, மற்றவரை குறை காண்கிறோம்..

இருக்கட்டும்..

காரணம் தெரிந்தபிறகு, களைவது..எளிதல்லவா?!!

தவறுகள் குற்றங்கள் ஆகாது!!

வியாழன், 17 ஜூன், 2021

எந்த ஒரு விஷயத்திலும் குறை கண்டுபிடிப்பவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

 எந்த ஒரு விஷயத்திலும் குறை கண்டுபிடிப்பவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

நாம என்ன செய்தாலும், அது ஆபீஸோ இல்லே உறவுகளிடமோ, குற்றம் குறை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பாங்க சிலர்.

உறவுகள்ன்னு எடுத்துகிட்டா, பெண்களை பொறுத்துவரையில், புகுந்த வீட்டு உறவுகளோட வரும் அனுபவமே சொல்லி மாளாது!!

இப்படித்தான்  கல்யாணம் ஆன புதுசில, , ஊருக்கு போகும்போதெல்லாம், என் நாத்தனார், ஓரகத்திகளுக்கு, புதுப் புடவை எடுத்துக்கிட்டு போய் குடுத்துக்கிட்டு இருந்தேன்..

நம்ம முன்னாடி ஒன்னும் பேசாம வாங்கிக்கிறவங்க, அதுக்கப்புறம் அதை பத்தி  குறை சொல்லி பேசுனது, அப்டியே நம்ம காதுக்கு வரும்..

சரின்னு புடவையை விட்டுட்டு, ஏதாவது வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்கிட்டு போவேன்.அதுக்கும் பின்னாடியே குறை தான்.பிறகு சென்னையிலேயிருந்து ஸ்ரீ மிட்டாய் ஸ்வீட்ஸ் கொண்டு போனோம்..இப்பல்லாம் அங்கே போய் பழங்கள் வாங்கி குடுத்துடறது..ஆனாலும்..😃

"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை"னு ஒவ்வையார் சொன்னது அவங்களுக்கு மட்டும் பொருந்தாதான்னு சில சமயம் தோணும்..

எதுக்கு இவங்களுக்கு எல்லாம் செய்யணும்ன்னு எரிச்சல் ஏற்படும் போது எல்லாம் , மஹாபார்தத்துலே வந்த ஒரு கதையை நினைச்சுக்குவேன்..

தேவ்ரத் என்கிற பீஷ்மரை பத்தி நமக்கு தெரியும்..தந்தைக்காக, கல்யாணமே செய்துக்காம, சந்திர குலம் அரியணையில் இருக்க, தன் வாழ்நாள் முழுசும் துணை இருப்பேன்ன்னு சபதமே எடுத்துகிட்டவர்!!

இப்படி ஒரு பிள்ளை, தன் அப்பாவையே பிள்ளையா பார்த்து, அவர் ஆசைக்காக, தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர் வேறு யாரும் இதுவரைக்கும்.நாம் கேள்வி கூட பட்டுரிக்க மாட்டோம்.

ஆனால், அவர் தன் அப்பா ஆசைப்பட்ட சத்யவதியை திருமணம் செய்துக்க உதவி செய்றார்.. ஆனா விதி பாருங்க..சத்யவதி தன் பிள்ளைகள் அரசாளனும்னு சத்தியம் வாங்கியும், ஒருவன் இறந்து போறான்.இன்னொரு மகன் விசித்திர வீரியன், பேருக்கேத்த மாதிரி, எழுந்து நிற்கக்கூட வீரியம் இல்லாதவன்னா இருக்கான்.பட்டத்துக்கு வரணும்னா கல்யாணம் ஆகணும்..ஆனா யாரு இவனுக்கு பொண்ணு குடுப்பா?

கடைசியா, ராஜமாதா கேட்டுகிட்டாங்கன்னு, பீஷ்மர் காசியில் நடக்கும் அரசக்குமரிகள் சுயம்வரத்துக்கு, தம்பிக்கு பெண் கொண்டு வர போறார்..இளவரசிகள் அம்பா, அம்பாலிகா, அம்பிகாவின் சுயம்வரத்தில் நுழைந்து, அவர்களை கவர்ந்து கொண்டு கிளம்புறார். இது பொறுக்க முடியாம, தன் தங்கைகள் அழுது கொண்டிருக்கும் போது, அம்பா மட்டும் பீஷ்மரை வழியிலே நிறுத்தி கேள்வி கேட்கிறாள்.அவரால் தன் காதலனுக்கு மாலை போட முடியாததை சொல்ல, அவரும் அவளை அவன் நாட்டிற்கு திருப்பி அனுப்புறார்.அவள் கதை தனி டிராக்..

இங்கே ஹஸ்தினாபுரத்தில் எல்லோரும் மணப்பெண்களை வரவேற்க காத்திருக்கிறார்கள்..விசித்திர வீரியன் தன் அறையில், இருக்கிறான்.தேர் அரண்மனை வாசலில் வந்து நிற்க, ஆரத்தி எடுக்க வேண்டி, ராஜ மாதா முன்னே வருகிறாள்.விசித்திர வீரியனும், எழுந்து நிற்க முடியாமல், மற்றவர் கைத்தாங்களாக பிடித்து நடத்தி வர, ஜன்னல் அருகில் சென்று, தேரில் இருந்து இறங்கும் இலவரசிகளை பார்க்கிறான்.அதற்கு பிறகு, திரும்பி, மற்றவரிடம் என்ன சொன்னான் தெரியுமா?

தன் அண்ணன், தனக்காக காசிக்கு போய், சுயம்வரம் தடுத்து, மணப்பெண்களை அழைத்து வந்திருக்கிறான்னு அண்ணனை பாராட்டினான்"ன்னு தானே இருக்கும்ன்னு நினைச்சா ஏமாந்து போவீங்க!!

அவன் கேட்டது "மூன்று இலவரசிகளை கூட்டி வருவதாக சொன்னார்கள்..ஆனால் இரண்டு பேர் தானே வந்திருக்கிறார்கள். அந்த இன்னொருவர் எங்கே?"

உடனே உங்களுக்கு ரஜினி சந்திரமுகி படத்திலே வடிவேலுக்கிட்டே சொன்னது ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்பில்லே!!

சோ.. சிலரோட இயல்பே அது தான்.குறை கண்டுக்கிட்டே இருப்பாங்க!!

சுற்றத்தாரிடம் குற்றமே பார்க்கக் கூடாதுன்னு ஒவ்வையார் சொல்லியிருக்கும் போது, குறையை?!!

அதுக்காக, சட்டம் ஒத்துகாத குற்றத்தை செய்துட்டு வந்தாலும் சுற்றத்தை ஏத்துக்கனும்னு அர்த்தம் இல்லே...உடனே போலீஸ்கிட்டே ரிப்போர்ட் பண்ணனும்!!

கட்டுப்படுத்துவதா ??

சர்க்கரை வியாதி ஒரு குறை தான்.அதை கட்டுப்படுத்தலாம்ன்னு டாக்டர் சொன்னதை வச்சு, அப்டியே இதையும் கட்டுப்படுத்தலாம்ன்னு நினைசீங்களா?

அப்ப தான் அதிகம் ஆகும்.

அப்படியே கண்டுக்காம விடுங்க.. இன்னொருத்தரோட சுபாவத்தை நாம மாற்ற நினைப்பதை விட, தாண்டி போறது நல்லது..அதே சமயம், செய்துக்கிட்டு இருக்கிற நம்ம சுபாவத்தை விட்டுறவும் கூடாது..பீஷ்மரை போல!!

ஏனென்றால், நம்முடைய குறைகளை கண்டும் காணாமல் இருன்னு கடவுளையே கேட்கிறவங்க தானே நாம!!

"எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்

பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!"

திங்கள், 14 ஜூன், 2021

பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?

  பெற்றோர் என்ற முறையில் நான் என் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது..


  1. கீழே விழும் போது அழலாம்.தப்பில்லை..ஆனால் அங்கேயே விழுந்து கிடப்பதும் சரியல்ல.எழுந்திரு..முகத்தை கழுவு..அந்த இடத்தை விட்டு நீங்கு….
  2. நீ ஒரு பெண், உனக்கு ஒரு ஆண் துணை தேவையில்லை, உன்னால் தனித்து இயங்க முடியும். ஒரு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும் போது, உன் வாழ்க்கையை முற்றிலும் அனுபவிக்கலாம்.
  3. மகிழ்ச்சி என்பது ஒரு நிரந்தர நிலை அல்ல. ஆனால் முழுமை...இவற்றைக் குழப்ப வேண்டாம்.
  4. ஒருபோதும் ஒரு சந்து வழியாக தனியாக நடக்க வேண்டாம்.
  5. ''முடியாது' - இது கிடையாது
  6. உன் ஹீரோக்களை உயர் தரத்தில் வைத்திரு.. சரி தான்..ஆனால் நீயே உன் ஹீரோவாக முதலில் இரு.
  7. உன் கண்களால் சிரிக்க முடியாவிட்டால், சிரிக்க வேண்டாம். நேர்மையற்ற தன்மை என்பது விரும்பக்கூடியது இல்லை.
  8. எப்போதும் உனக்கு உண்மையாக இரு.

9. உன் உடல், உன் விதிகள்.

10. உனக்கு ஒரு கருத்து இருந்தால், அதற்கான காரணம் உனக்குத் தெரியும்.

11. உன் ஆர்வங்களை பயில்.

12. உனக்கு என்ன வேண்டும் என்று கேள். அவர்கள் சொல்லக்கூடிய மிக மோசமான விஷயம் "இல்லை"என்பது மட்டுமே..

13. நட்சத்திரங்களை பெற விரும்பு. பின்னர் அவற்றை பெற, முயற்சி செய்.

14. உன்னைப் போலவே இனிமையாக இரு.

15. எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் தயங்காமல் சொல் "தயவுசெய்து", "நன்றி", மற்றும் "என்னை மன்னியுங்கள்"

16. நீ உண்மையிலேயே உணரும்போது, "மன்னிக்கவும்" என்று சொல்

17. எல்லாவற்றையும் கேள்வி கேள் ... உன் சொந்த உள்ளுணர்வு தவிர.

18. நீ ஆச்சரியப்படத்தக்கவள். நீ அப்படி இல்லை என்று வேறு யாரும் உன்னை உணர வைக்க அனுமதிக்காதே.யாராவது அப்படி செய்தால் ..அவர்களை விட்டு விலகிச் செல். அவர்களை விட தகுதியானவர் கிடைக்க நீ தகுதியானவன்

19. நீ எங்கிருந்தாலும், இது உன் வீடு.இங்கு நீ எப்போதும் வரலாம்

20. மகிழ்ச்சியாக இரு, உன் வேர்களை நினைவில் கொள்.

21. நீ என்ன நினைக்கிறாயோ அதையே சொல்.., நீ சொல்வதை மட்டுமே அர்த்தப்படுத்து.

22. கனிவாக இரு; மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படியே அவர்களை நடத்து.

23. சந்தேகம் இருந்தால், நீ யாருடைய மகள் என்பதை நினைவில் கொள். உன் கிரீடத்தை சரி செய்துக் கொள்..

ஞாயிறு, 13 ஜூன், 2021

ஆதித்ய ஹ்ருதயம் பாடல் வரிகள்

 ஆதித்ய ஹ்ருதயம் பாடல் வரிகள்:




ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்

ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்


தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: (1)

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி(2)

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் (3)

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம் (4)

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் (5)

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: (6)

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி: (7)


பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர: (8)

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர: (9)

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் (10)

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன: (11)

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம: (12)

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ: (13)

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே (14)

நம: பூர்வாய கிரயே 
பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே 
தினாதிபதயே நம: (15)

ஜயாய ஜயபத்ராய 
ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ 
ஆதித்யாய நமோ நம: (16)

நம உக்ராய வீராய 
ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய 
மார்த்தாண்டாய நமோ நம: (17)

ப்ரஹ்மேசானாச்யுதேசாய 
ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய 
ரௌத்ராய வபுஷே நம: (18)

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: (19)

தப்தசாமீகராபாய 
வஹ்னயே விச்வகர்மண
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே (20)

நாசயத்யேஷ வை பூதம் 
ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ 
வர்ஷத்யேஷ கபஸ்திபி: (21)

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி 
பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச 
பலம் சைவாக்னிஹோ த்ரிணாம் (22)

வேதாச்ச க்ரதவைச்சைவ 
க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு 
ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: (23)

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு 
காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ: (24)

பூஜயஸ்வை நமேகாக்ரோ 
தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா 
யுத்தேஷு விஜயிஷ்யஸி (25)


அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் (26)

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான் (27)

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா 
தனுராதாய வீர்யவான் (28)

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா
 யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா 
வதே தஸ்ய த்ருதோ பவத் (29)

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி (30)






















சனி, 12 ஜூன், 2021

நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் மூழ்கி இறந்து போவது எவ்வாறு? என்னதான் நடக்கின்றது அவர்களுக்கு? நாம் நீரில் மூழ்கி இறக்காமல் இருக்க எடுக்கக்கூடிய தற்காப்பு நடவடிக்கைகள் எவை?

 பசங்களுக்கு நீச்சல் சின்ன வயசிலேயே கத்துக்குடுக்கணுங்கிற ஆசை நிறைய பெத்தவங்களுக்கு வந்தாலும் வந்துச்சு,நிறைய ஸ்கூலில் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ்ன்னு நீச்சலும் கத்துக் குடுக்கிறாங்க.

சில வருஷங்களுக்கு முன்னால சென்னையிலே ஒரு ஸ்கூலில் நடந்தது இது…ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அந்த பையன் வழக்கமா ஸ்கூலில் இருந்து திரும்பி வரும் நேரத்திலே வரலை...ஸ்கூல்லே விசாரிச்சா அவனை கடைசியா ஸ்கூல் டைம் முடிஞ்சதுகப்புறம் நீச்சல் குளத்திலே நீச்சல் அடிச்சுக்கிட்டு இருந்ததை பார்த்திருக்காங்க..நல்லா நீச்சல் அடிக்கிற பையன் போட்டியிலே எல்லாம் கலந்துக்கிட்டு ஜெயிச்சுருப்பான்..அதான் நீச்சல் அடிச்சு முடிச்சுட்டு கிளம்பிட்டு இருப்பான்னு நினைச்சுருக்காங்க…

இப்ப காணோம்ன்னு சொன்னாவுடனே, எதுக்கும் அங்கேயும் பார்ப்போம்ன்னு நம்பிக்கை இல்லாம தான் நீச்சல் குளத்தில் தேடியிருக்காங்க..

அங்கே தான் அதிர்ச்சி…குளத்து அடியில் அவன் உடல் இருந்திருக்கிறது.

அதுக்கப்புறம்…என்ன…பிரேக்கிங் நியூஸ்..தடை…

எல்லாம் கொஞ்சம் நாள் தான்.வழக்கம் போல ஸ்விம்மிங் கிளாஸ் ஸ்கூல்லே ஆரம்பிச்சுருச்சு…

என் பசங்களுக்கும் ஸ்விம்மிங் கத்துககொடுக்க எங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கிற ஸ்விம்மிங் பூல்க்கு போக ஆரம்பிச்சோம்.. அப்படியே trainer எங்க மூணு பேருக்கும பாக்கேஜ்லே போட்டுட்டார்…

ஆனா அங்கேயும் வந்து நம்ம உ.ச..(உடன்பிறவா சகோதரிகள்😊) பண்றது இருக்கே..பிள்ளைங்க நீச்சலடிக்க, இங்கே உட்கார்ந்து கதை பேசுரதை..

அப்பப்ப, நீச்சல் பயிற்சியாளர் எங்களுக்கு சொன்ன, நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை இங்கே உங்க கூட ஷேர் பண்றேன்.

தண்ணியில மூழ்கிற ஒருவர் எப்படி இருப்பார்? இப்படியா..

இல்லை..

இதோ இது போல.

  • சினிமால காட்டுற மாதிரி தண்ணியை கையால அடிச்சுக்கிட்டு கத்திட்டெலாம் இருக்க மாட்டாங்க..
  • அது ரொம்ப சைலண்டா நடக்குற விஷயம் .உன்னிப்பா பார்த்தா மூழ்கும் போது அவங்க ஏதோ விளையாடிட்டு இருக்கிறமாதிரி இருக்கும்.

இங்கே இருக்கிற காணொளியிலே யார் மூழ்கிறானு பார்த்துட்டு வந்து சொல்லுங்க..

மூழ்க ஆரம்பிக்கும்போது அவங்க உடல் செய்யிற அனிச்சை செயல்கள் தான் அதெல்லாம்..

இந்த சமயத்திலே கை ரெண்டும் மேல நேரா தூக்கி தண்ணி மேல்பரபரப்பு மேல இருந்து கீழ் தள்ள ஆரம்பிப்பாங்க.. இது வாயை தண்ணிக்கு மேல் கொண்டு வரதுக்கான ஒரு முயற்சி..அப்படி வாயை தண்ணிக்கு மேல கொண்டு வந்துட்டங்கன்னா , மூச்சை வெளியே விட்டு, உள்ளே இழுத்து, காற்றை நிரப்பிக்க..

  • அவர்களால் யாரையும் சத்தம் போட்டு கூப்பிடலாம் முடியாது.. மேலே சொன்ன இந்த அனிச்சை செயலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாம உடம்பு களைச்சு போயிருக்கும்.
  • இந்த வேலைகள் 20_60 நொடிகள்குள்ள நடந்துடும். அதோட அவங்க இதிலேயிருந்து தவறி குளத்துக்கு அடியில போக ஆரம்பிச்சுறுவாங்க….திரும்ப மேலே வர……

கண்டிப்பா. தண்ணீரிலே மூழ்குறதை தடுக்க முடியும்..ஆனால் அவங்களோட செயல்களை கவனிச்சால் மட்டுமே..

இதிலே இன்னொரு முக்கிய ஆபத்து.இருக்கு.

எல்லோராலும் மூழ்கிக்கிட்டு இருக்கிறவங்களை காப்பாற்ற முடியாது. தண்ணியில் தத்தளிச்சுக்கிட்டு இருக்கிறவங்களை கவணமாத்தான் அணுகனும்

என்ன காரணம் தெரியுமா?

பயம், அதிர்ச்சியோட தண்ணியில தத்தளிச்சுக்கிட்டிருக்கிறவர அனிச்சை செயலா, காப்பத்தப்போறவரையும் தண்ணிக்கு அடியில் அழுத்தக் கூடும்.

கையிலே கிடைக்கிற எதயாவது பிடிக்க முயற்சி செய்ற அந்த நேரத்திலே மிதக்கக் கூடிய ஒன்றை அவர்கள் பிடிக்குமாறு செஞ்சு, பின்னாலே கிட்ட போகலாம். ஆனாலும் அப்படி போகும்போது முன்புறமா போகாம, பின்னாடி போய் அவங்க arm pits பிடிச்சுத் தான் காப்பாத்த முயற்சிக்கணும்.

இதெல்லாம தெரிஞ்சுகிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துட்டு, நீச்சல் அடிச்சு பாருங்க…

ஆனந்தம்..பேரானந்தம் அதுவே..

The Deceptive Signs Of Drowning

Drowning Doesn’t Always Look Like Drowning - Learn How to Spot It!

Instinctive drowning response - Wikipedia

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1730951/pdf/v009p00163.pdf

Drowning - StatPearls - NCBI Bookshelf

Instinctive Drowning Response: Know More