வெள்ளி, 26 நவம்பர், 2021

கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி??

 கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி??

நண்பர்களுக்கு வணக்கம்.

நான் கல்லூரியில் படிக்கும் போது அங்கே சாதரணமாக ஒரு ஜோக் சொல்லப்படுவதை கேட்டிருக்கிறேன். "ஒரு ஆண் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்றால் கஷ்டப்பட்டு உழைக்கணும்.ஆனால் ஒரு பெண் கோடீஸ்வரி ஆகவேண்டும் என்றால்….?

ஒரு கோடீஸ்வரனை திருமணம் செய்துக்கொண்டால் போதும்"" என்று..

இந்த மனப்பான்மை இன்றைய நாள் வரையில் நிறைய பேருக்கு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் நான் பார்த்த தொலைகாட்சி நிகழ்வில் , பெண்கள் தங்களுக்குள் உள்ள ஷாப்பிங் செய்யும் ஆர்வத்தை பற்றி மிக ஆர்வமாக விளக்கிக் கொண்டிருன்தனர். ஒருவர் பல விதமான ஹேர் கிளிப்புகள் வைத்திருப்பதாக பெருமையடித் தபோது, இன்னொருவர் இன்னொரு வித பொருளை தான் வாங்கி குவித்துக் கொண்டிருபதை சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் …

தேவையேயில்லாமல் இவர்கள் வாங்கும் சுதந்திரத்தை இவர்கள் கணவர்கள் கொடுத்திருகிறார்கள் என்பது தெரிகிறது.!!

பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீர்கள்…'சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு செய்து பக்குவமா அம்மா கையிலே கொடுத்து போடு சின்னககண்ணு. அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு '

அதே போல மனைவி தான் மதிமந்திரி என்றதும் இதற்குத்தான்…

ஆனால் பெண்களின் சேமிப்பு பழக்கம் எல்லாம் என்னானது??

சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த ஒரு சர்வே முடிவை பற்றி நீங்கள் படித்திருக்கலாம்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) ஐந்தாவது பதிப்பு, இந்தியாவில் மக்கள்தொகை மாற்றத்திற்கான அறிகுறிகளை உறுதிப்படுத்தியுள்ளது . 1992 இல் NFHS தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, பெண்களின் விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது. அதாவது 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2015-16ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 991 பெண்கள் இருந்தனர்.

இது வேறு விதத்தில் சில பிரச்சினைகளை கொண்டு வந்தாலும், பெண்கள் அதிக அளவில் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கி உள்ளது.

விழிப்புணர்வு என்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி தான் சொல்லவருகிறேன் என்று நினைப்பவர்கள் நிற்க. தலைப்பு அது இல்லையே….

பெண்களுக்கு இருக்கவேண்டிய பொருளாதார நிர்வாகம் …

நான் செய்த ஒரு தவறை சொல்கிறேன்.

என்னுடைய நெடுநாளைய ஆசையாக டூர் போகும்போது புகைப்படம் எடுக்கவென்று ஒரு காமிரா ஆசைஆசையாக வாங்கினேன். அது இருக்கும் ஒரு இந்து வருடம் முன்னாள்…யோஷிகா மாடல்.. அப்போது அதன் விலை இருபதாயிரம் சொச்சம்…. எனக்கு தெரிந்து அதை நாலைந்து முறை தான் உபயோகித்திருப்பேன்.. இப்போது வீட்டின் ஒரு பீரோவின் உள்ளே கிடக்கிறது. இப்போது யோசித்து பார்க்கும்போது, சராசரியாக ஒரு முறை உபயோகமாக போட்டோ எடுக்க கிட்டத்தட்ட ரூபாய் ஐந்தாயிரம் செலவளித்திருக்கிறேன் .. அதற்கு பதிலாக ஒரு காமிராவை நான் வாடகைக்கு எடுத்திருந்தால் கூட இவ்வளவு ஆகியிருக்காது அத்தோடு செலவாக டீவீக்கு பக்கத்தில் பல ஆயிரங்களை முழுங்கிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது விசிடி.

இப்போதெல்லாம் செலவழிப்பதில் ஒரு நிதானம் வந்திருக்கிறது. நீங்கள் சொல்லலாம்.. ஏதோ ஆசைக்கு கூட வாங்காமல், எதற்கு தான் சம்பாதிப்பது என்று?"

என் ஓரகத்தியும் இப்படி தான்…. கொரானா முதல் அலை வருவதற்கு முன்னால், உலகம் அழியப்போகிறது என்று ஒரு வதந்தி கிளம்பியதே நினைவிருக்கிறதா>>> "நாமே இருக்கப்போகறோமோ இல்லையோ இதில் மாடுகளை வைத்துககொண்டு என்ன செய்வது" என்று, அதை விற்றுவிட்டு "ஆசை தீர அனுபவிக்கப்போகிறேன்" என்று பட்டுப்புடவைகள் வாங்கினார். கொரானா வந்தது..பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துவிட்டு ரசம் சாதம் சாபிட்டுக் கொண்டிருக்கிரார்கள்!!

இது போன்ற அளவுக்கு அதிகமான, தேவையேயில்லாத பொருட்களை வாங்க அவர்களை தூண்டுவது எது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அதில் சம்பந்தப்பட்ட பெரும்பான்மையோர் சொன்ன காரணம்…எப்போதெல்லாம் சோகமாக, மனது சரியில்லாமல் இருக்கிறதோ அப்போது ஷாப்பிங் செய்யக் கிளம்பி விடுவோம்" என்றது…

இப்படி ஷாப்பிங் செய்துவிட்டு வரும்போது தங்கள் மனது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சொன்னார்கள்..…

அதாவது அவர்களுக்கு முதலில் ஏற்படுவது வருத்தம் அதை தொடர்ந்து செய்வது ஷாப்பிங்.. அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி….

மகிழ்ச்சியை அடைவதற்காக ஷாப்பிங் செய்கிறார்கள்.. வருத்தத்தை மாற்றி சந்தோஷமாக இருக்க நினைப்பது தான் அவர்கள் நோக்கம். அதை ஷாப்பிங் செய்து நிறைவேற்றுவதை விட சற்று மாற்றி வேறு சில செயல்களை செய்யலாம்.

எனக்கு மனது சரியில்லை என்றால், படிக்க ஆரம்பித்துவிடுவேன்…சரியாக இருந்தாலும் படிப்பது தான்…இல்லையென்றால் வெகு தூர பயணம் என் வண்டியில் போகப் பிடிக்கும்…

மனதை சந்தோஷ நிலைக்கு மாற்ற ஷாப்பிங் தவிர்த்த அவரவரர் பிடித்த விஷயத்தை செய்துப் பார்க்கலாம். இது போல செய்வதால் தேவையில்லாமல் வாங்கிக குவிக்கும் பழக்கம் மாற ஆரம்பிக்கும்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்.

இது போன்ற தேவையில்லாத ஹோட்டல் செலவுகள், ஷாப்பிங் செலவுகளை குறைத்து அந்த பணத்தை, கடுகு டப்பாவில் போட்டு வைக்க வேண்டாம்…… சரியான விதத்தில் முதலீடு செய்தாலே தேவையான சமயத்தில் அது கைகொடுக்கும்.

அதுவும் இந்த கொரானா காலத்தில், ஒவ்வொருவரின் பொருளாதார பங்களிப்பும் ஒரு குடும்பத்துக்கு தேவை. என்னை பொறுத்தவரை பெண்களும் ஏதாவது வேலைக்கோ அல்லது ஒரு தொழிலை தொடங்கியோ நடத்துவது முக்கியம் என்பேன். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய ஏராளமான தொழில்கள் இப்போது உள்ளது.

அப்படி செய்யும்போது, தேவையில்லாமல் செலவழிக்கும் பழக்கம் வருமா என்ன? ஏனென்றால் ஒவ்வொரு காசும் நம்முடைய கடின உழைப்பில் கிடைத்ததாயிற்றே!! இன்னொன்று அதற்கெல்லாம் எது நேரம்?!!

இப்படி பார்த்து பார்த்து சேமிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதில் ் தான் சூட்சமமே இருக்கிறது….

பின்னே…கோடீஸ்வரியாவது என்பது சாதரணமானதா?

அதை தெரிந்துககொள்ளும் ஆர்வம் யாருக்கெல்லாம் i இருக்கிறதோ அவர்களுக்கு வருமான வரியை குறைக்கும் விதத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட் டுவது பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…

சனி, 20 நவம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 30 இறுதி பகுதி... கணவனும் மனைவியும் எப்போதும் ஏன் எதிர்த்தன்மையுடன் இருக்கின்றனர்?

 Men are from Mars, Women are from Venus".

"ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள்.பெண்கள் சுக்கிர கிரகத்தில் இருந்து வந்தவர்கள்" என்றொரு கூற்று உண்டு..

செவ்வாய் கிரகத்தின் காரகத்துவம் என்று ஆண்களின் முக்கிய குணங்களான வேகம், வீரம் போன்றவற்றை சொல்லும் போது, சுக்கிரன், பெண்கள் அழகுணர்ச்சி, கலைகளில் காட்டும் ஈடுபாட்டை காரகத்துவமாக கொண்டது.

இத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் செவ்வாய் குரு அணியிலும் அதன் எதிர் அணியின் தலைவராக சுக்கிரன் இருந்தாலும் இரண்டும் பகைத்தன்மை கொண்டவை அல்ல. இரண்டும் சம தன்மையானது..அது தான் ஆண் பெண் உறவுக்கும் சொல்லப்படுகிறது!!

.ஆனாலும் ஒரே தாயின் வயிற்றில் பிரந்தவர் எண்றாலும் ஒரு பெண்ணின் மனதை ஆணால் உணர முடியாதது ஏன்?

மூளையின் வலது புறம் தான் கலைகளுக்கு தேவையான கற்பனை வளத்தை கொடுக்கிறது. என்றால் அதன் இடது புறம், எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மையை கொடுக்கிறது.

ஆனாலும் பாருங்களேன்..அங்கேயே ஒரு மாறுபட்ட தன்மையை மூளையின் வலது பக்க செயல்பாட்டை இடது கை தான் செயல்படுத்துகிறது. வலது கையின் செயல்பாடு, இடது மூளையின் கட்டுப்பாட்டில்..இதுவே எதிர் தன்மை தானே?

ஒளியினால் உயிர் வாழும் இந்த பிரபஞ்சத்தின் நாயகனாக இருக்கும் சூரியனும் அதன் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் அம்மையப்பன் எனப்படுகின்றனர்.

அதாவது இந்த உலகத்தின் தலைவனான சூரியனின் தலைவி சந்திரன்…அவர்களின் வழியாகவே, , கணவன் மனைவிக்கு இடையே உள்ள தாத்பர்யம் சொல்லப்படுகிறது.

சித்திரை மாதத்தில், .சூரியன் மேஷ ராசியில் உச்சமடையம் போது, அதன் அடுத்த ராசியான ரிஷபத்தில் தான்,அதாவது அடுத்து வரும் தமிழ் மாதமான வைகாசியில் தான், சூரியனின் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் உச்சமடையும். அதாவது தனி ஒளியுடன் பிரகாசமாக இருக்கும்.

கணவனும் மனைவியும் ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது?!!

நிறைய வீடுகளில், இப்போதெல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பொது அறையை ஒட்டியே, அவர்களுக்கு தனித்தனியறையம் உள்ளது!!

ஆனால் புதிதாக திருமணமானவர்களும் திருமணம் செய்ய இருப்பவர்களும், தன் வாழ்க்கைத்துணையான மனைவி தன்னை சார்ந்தே இருக்கவேண்டும், தன்னிடம் மட்டுமே வெகு நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கும் ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறார்கள்கள் அம்மையப்பர்.

அடூத்தடுத்த இராசியில் உச்சமான ஒளியை வெளிப்படுத்தும் சூரியனும் சந்திரனும்., ஒரே இராசியில் ஒன்று சேரும் போது இருளான “அமாவாசை”யாகிறது..

“நெருக்கம் அதிகமானால் புழுக்கம் அதிகமாகும்” என்று சொல்வதில்லையா? அது இதைத்தான்!!

ஆத்மகாரகன் என்னும் சூரியனிடம் ஆழ்மனோகாரகனான சந்திரன் சரணடையும் அந்த தருணத்தை, ஆண்மீகத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது!!

.இல்லறம் சிறக்காதபோது மனம் ஆன்மீகத்தை தேடுகிரது இதனால் தான் போலும்!

அதனால் தான் தம்பதிகள் ஒன்றிணைவது என்றாலும், அவர்களுக்குள் சற்று இடைவெளியும் வேண்டும் என்கிறார்கள்.

சூரியன் உச்சமடையம் இராசிக்கு அடுத்துள்ள இராசியில் சந்திரன் உச்சமடைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அங்கு சூரியனின் கிருத்திகை நட்சத்திரக்கூட்டம் மட்டுமல்ல சந்திரனின் சொந்த நட்சத்திரக் கூட்டமான ரோஹிணியில் தான் நிற்கும் என்பதால்…

.எவ்வளவு பாசமான கணவனின் சொந்தங்கள் உடன் இருந்தாலும், பிறந்த வீட்டு உறவும் உடன் இருக்கும்போது பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேது!! மாதாகாரனாகிய சந்திரனும் இதை தான் உணர்த்துகிறது!!

உச்சத்தை போலவே சூரியன் துலாத்தில் நீச்சம் அடையும்போது, அடுத்த இராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசம் அடைவதும் இதன் அடிப்படையிலேயே!!

அதே போல, ,சூரியனை விட்டு எவ்வளவு தூரம் சந்திரன் விலகி இருக்கிரதோ அந்தளவிற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மையும் அதிகம் இருக்கிறது. சூரியனுக்கு நேர் எதிரில் அதாவது ஏழாம். பாவத்தில் சந்திரன் இருக்கும் போது ஒளி வீசும் முழு நிலவான “பவுர்ணமி”யாகிறது.

அதாவது சூரியனுக்கு எதிரில் இருப்பதால் அது “எதிரி”அல்ல .அதன் ஒளியை முழுதாக பெற்று பிரதிபலிக்கத் தான்...

இதை தான் தம்பதிகளாக இருப்பவர் உணர்ந்துக்கொள்ள வேண்டியது..ஏனெனில், ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் ஜாதகரை குறிக்கும் என்றால், அதற்கு நேர் எதிரே உள்ள ஏழாம் பாவம் அவர் வாழ்கைத் துணையை குறிக்கிறது.

என்ன சொன்னாலும் முழுதாக உள்வாங்கிக்கொள்ள கொள்வதில்லை என் மனைவி என்று ஆண்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

அந்த பவுர்ணமி சந்திரனே சூரியனுக்கு நேரெதிராக நின்று சூரியனின் ஒளியை உள் வாங்கினாலும் வெளிப்படுத்துவதென்னவோ சூரியனின் பாதி அளவை தானாம்!!..இதை நான் சொல்லவில்லை. மகா புருதர் காளிதாசர் தனது “உத்தர கலா மருதம்”என்னும் நூலில் கிரகங்களின் ஒளி அளவை பதிவு செய்துள்ளார்.அதில் சூரியனுடையது 30 என்றவர் சந்திரனுக்கு ஒளி அளவு 16 என்றதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம்!!

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஜோதிடத்தில், ஒவ்வொரு லக்கினத்திற்கும் வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் பாவம், லக்கினத்திற்கு பகையான கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது! அதனால் தான் கணவன்/மனைவி எதிர் தன்மையுடன் இருப்பதும் நடக்கிறது.

இருந்தாலும், களத்திரகாரகனான சுக்கிரன் இருவரிடத்திலும் உள்ள ஈர்ப்புத் தன்மையை ஏற்படுத்தி, காமத்தீயை அணைக்காமல் இருவருக்கும் இடையே உள்ளே நெருக்கத்தை கூட்டி உறவை வளர்க்கிறார்..

இதைத் தான், கிரகங்களின் உறவுக்கு ஒளியம் அவற்றிற்கு இடையே உள்ள தூரம் மட்டுமல்லாமல் அவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்புவிசை சுட்டிக்காட்டுகிறது. .

கிழக்கில் உள்ள சூரியன் சிம்மத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருக்கும் போது, வட மேற்கில் உள்ள சந்திரன் கடகத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருப்பது இப்படித் தான்!!,

ஆனால் இந்த ஈர்ப்பை ஏற்படுத்தும் சுக்கிரன் நீச்சமாக இருந்தாலோ, பாவக்கிரகங்களுடன் சேர்ந்தாலோ, இந்த காதல் உணர்வே அற்றுப் போய் விடும்.

இந்த ஏழாம் பாவத்தில் சுக்கிறனுடன் சனியும் இராகுவும் சேர்ந்தால் மனைவி கணவனை விடுத்து வேற்று ஆணுடன் நாட்டம் கொள்வதும், .அதுவே நீச்ச சுக்கிரன், சனி, செவ்வாய், இராகுவோடு சேரும் போது, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தன்மையை கொடுப்பதுமாய் இருக்கும். ஒரு பெண்ணை கதறக் கதற பாலியல் ரீதியான துன்பத்துக்கு ஆளாக்குபவனின் ஜாதகத்தில் இந்த அமைப்பே இருக்கும்.அதில் தான் அவனுக்கு காமக்கிளர்ச்சியே உண்டாகும்..மனைவியிடம் அளவுக்கு மீறிய காமக்களியாட்டடம் கொள்வதும் இது போன்ற அமைப்பினால் தான்.

ஆனால் குருவின் பார்வை இதை அப்படியே மாற்றிவிடும்..

அது போலவே, சுக்கிரன் சுபத்துவமாக தனித்திருக்கும் போது, அவன் பெண்களுக்கு பிரியமானவனாய் அவன் அருகாமைமை பாதுகாப்பாய் பெண்கள் உணரும் விதமாய் இருப்பான்..

பெண் தன் கணவனிடம் எதிர்பார்ப்பதே இதைத் தானே…காதலுடன் கூடிய காமத்தை தரும் கணவனுக்கு என்றுமே அவள் சரணாகதி தான்..அவன் அவளுடைய ஆத்மாவாக இருக்கும் போது, இவள் அவனுடைய ஆழ்மனதாகிறாள்!!

இதைத் தான் ஜோதிடம் நமக்கு வாழ்க்கை தத்துவமாக உணர்த்துகிறது!

வெள்ளி, 12 நவம்பர், 2021

புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய பெண் ஆபத்தானவள் என்று சொல்லப்படுவது சரியா?

 

இந்த புத்தகம் எழுதியது ஸ்டீபன் போல்ல்மன். புத்தகம் படிக்கும் பெண்களை பற்றிய வரலாற்றை சித்தரிக்கும் புத்தகம் இது.

பல நூற்றாண்டுகளாக,பெண்களிடம் எப்படி படிப்பறிவு, எதிர்ப்புகளுக்கிடையில் வளர்ந்து வந்தது என்று இந்த புத்தகத்தின் முன்னுரை, விளக்குகின்றது.

சிலர் அது பெண்களுக்கு நன்மை செய்வதாக பார்க்கும்போது மற்றவர்கள் பெண்களின் நடத்தை மற்றும் சமூக ஒழுங்கிலும் இறக்கம் ஏறப்பட்டதன் காரணமாக இதை பார்த்தனர்.

புத்தகம் படிப்பது என்பதே ஆழமான, தனிப்பட்ட ஒரு செயலாகும். அறிவை வளர்ப்பதோடல்லாமல், தனிப்பட்ட சந்தோஷத்தை அது ஏற்படுத்துகிறது. படிப்பவருக்கும் புத்தகத்திற்கும் இடையே ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தும். அவள மட்டுமே நுழையக்கூடிய ஒரு கற்பனை உலகம்.

படிப்பது என்பது அறிவை புத்திசாலித்தனத்தை வளர்க்கத்தான் . ஒருவர் புத்திசாலியாக மாறுவதே அதிகம் படிக்கும்போதுதான். அதுவும் அந்த மற்றொரு உலகிற்கு போகும்போது தான், அதனால் தான் வெளியிடங்களுக்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்ட அந்த காலத்தில் பெண்கள் அதிகம் நாவல்கள் படித்தனர். புத்தகம் படிப்பதில் அவள நாட்டம் கொண்டது அப்போதுதான்.

இப்படியும் கூட சொல்லலாம். கட்டுப்பாடுகளுக்கு எதிராக தன எதிர்ப்பை தெரிவிக்க அவள புத்தகம் படிப்பதன் மூலம், மற்றொரு உலகத்தை தனக்காக சிருஷ்டி செய்து கொண்டாள் என்று .

அது. பிடிக்குமா ஆணுக்கு? …….அதுதான் படிக்கும் பெண்களை ஆபத்தானவர்களாக பார்க்க வைப்பது.

ஏனென்றால், தன்னுடைய மனதில் கற்பனையாக ஒரு உலகத்தை உருவாக்கும் ஒரு பெண் அதனை நனவாக்க நினைப்பாள். பிறகு அதற்கு முயலுவாள். எவ்வளவு பெரிய ஆபத்து…..

இன்றும் பல நாடுகளில் பெண் கல்வி எப்படி ஒதுக்கப்படுகின்றது என்று நாம் கண்கூடாக பார்க்கிறோமே? வளர்ச்சியடையாத நாடுகளில் மட்டுமல்ல. வளர்ந்த நாடுகளிலும் பல இடங்களில் இன்றும் இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் ….. மனமுதிர்ச்சியுடன், ஒரு பெண் பேசினாலோ அல்லது எழுதினாலோ, அவர்கள் எதிர்கொள்ளுகின்ற எதிர்ப்புகளை தான் நாம் பார்க்கிறோமே?

இந்த புத்தகம் படிக்கும் போது மட்டுமல்ல, இந்த கேள்வி கேட்டதன் மூலமும் நாம் தெரிந்து கொள்ளலாம், பெண்கள் புத்தகம் படிப்பது என்பது எதிர்ப்பிற்குரிய விஷயம் என்று எண்ணுகின்ற மனிதர்களுக்கு இடையில் தான் நாமும் வாழந்துக் கொண்டிருகிறோம் என்று.


வியாழன், 4 நவம்பர், 2021

பாதசாரிகள் கடக்கும் இடத்திற்கு zebra crossing என்ற பெயர் எப்படி வந்தது?

 சென்னை அண்ணாபல்கலைக்கழகம் அருகேயும் ராஜ் பவன் அருகிலும்" இங்கு மான்கள் கடக்குமிடம். பார்த்து வண்டியோட்டவும்" என்ற அறிவிப்பு பலகை உள்ளதை பார்த்திருக்கிறீர்களா?

கிண்டி உயிரியல் பூங்காவில் இருந்து வெளியே வந்துவிடும் மான்களை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு!!

இந்த "ஜீப்ரா கிராசிங் " கை பார்க்கும் போதெல்லாம் எனக்கு, zebraa எனும் வரிக்குதிரைகள் அல்ல.. அந்த மான்கள் நினைவு தான் வரும்..

எத்தனை அறிவிப்பு பலகை இருந்தும் என்ன? சீறி வரும் வண்டிகளின் நடுவே அகப்பட்டு, அடிபட்டு இறக்கும் மான்கள் அதிகம்!!

இதே போலத் தான் சாலையை கடப்பவைகள்/கடப்பவர்கள் இடத்துக்கு, அந்த அற்புதமான கோடிட்ட விலங்கான. வரிக்குதிரையின் பெயரை இட்டு "வரிக்குதிரை கடப்பு "என்கிறார்களோ?

அந்த பெயர் ஏன் வந்தது? என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் பள்ளிக்காலத்திலேயே இதன் விடையை தேடியிருக்கிறோம்.

சாலைகளில், குறிப்பாக போக்குவரத்து சிக்னல்களில் உள்ள வெள்ளைக் கோடுகளைக் குறிக்கும் இது, . பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க செய்யப்பட்ட ஏற்பாடு..

இந்த யோசனை எங்கிருந்து வந்தது? என்று சரித்திரத்தை புரட்டினால், அதன் ஆரம்பம் லண்டலிருந்து துவங்குகிறது...

1930களில், லண்டனின் போக்குவரத்து மிகவும் குழப்பமாக இருந்ததாலும், மக்கள் கடந்து செல்வதற்கு முறையான வழியோ இடமோ இல்லாததாலும், பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதற்கு இங்கிலாந்தில் இது ஒரு பரிசோதனை முயற்சியாக , செய்தார்கள்.

ஆரம்பத்தில், கருப்பு தார் சாலைகளில் வரையப்பட்ட இந்த அப்பட்டமான வெள்ளை கோடுகள் "ஜீப்ரா கிராசிங்குகள்" என்று அழைக்கப்படவில்லை.

ஒரு நாள், ஒரு ட்ரையல் கிராசிங்கிற்குச் சென்ற பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், தன்னிச்சையாக அவர்களை ‘ஜீப்ரா கிராசிங்’ என்று அழைத்தார் என்பதால், அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டது!!!

ஜீப்ரா கிராசிங்குகள் இன்று உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போக்குவரத்து சிக்னலாக, மற்ற கிராசிங்குகளுக்கு ஊக்கமளித்துள்ளது..

ஆஸ்திரேலியாவில், ஒரு தட்டையான கூம்பின் மேல் வரிக்குதிரை கடப்பது "வொம்பாட் கிராசிங்ஸ்" என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளை கருப்பு கோடிட்ட புலிகள் உள்ளபோது, "புலி குறுக்குவெட்டு"

அது தான் சரியான தமிழ் சொல் இல்லையா?

என்று ஏன் சொல்வதில்லை? என்று சிலர் கேட்கலாம்.

ஏனெனில் வெள்ளை புலி இனம் ஒரு அரிய வகை . வங்காளத்தில் மட்டுமே இது காணப்படுகிறது. அது மட்டுமல்ல, அது அசல் இனம் அல்ல, ஒரு கலப்பு வகை!!

ஆனாலும், மஞ்சள் கருப்பு வரிகள் கொண்ட புலியையும் இதில் புகுத்தி, ஹாங்காங்கில், மஞ்சள் மற்றும் கருப்பு வடிவமானது "புலி குறுக்குவெட்டு" என்று அழைக்கப்படுகிறது !!

நியாயமாக பார்த்தால், புலி நம் தேசிய விலங்கு என்பதால், இங்கும் அப்படி செய்திருக்க வேண்டும்!☺️

பசுக்கள் கடப்பதற்கு கூட கிராசிங் உள்ளதே.

.

அடிக்கடி தலைப்பு செய்தியில் வரும் "பெகாசஸ்" பெயரில் கூட கிராசிங் உள்ளது!!

ஆனாலும் இதன் ஆரம்பகர்த்தாவான இங்கிலாந்தில், இப்போது இந்த வார்த்தை பிரயோகம் பெரும்பாலும் இல்லையென்றாலும், இந்தியாவில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது.

தூரத்தில் இருந்து வரும்போதே வண்டியோட்டிகளின் கவனத்தை ஈர்த்து சாலையை கடப்பவர்கள் கடந்து முடிக்கும் வரை, வண்டியை நிறுத்திவைக்க, இந்த வெள்ளை கருப்பு கோடுகள் உதவுகிறது.

வரிக்குதிரைகளுக்கு உள்ள வரிகள் ஜெனெட்டிகலாக வந்தது ஏன்? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போது தான், இதிலுள்ள சுவாரசியமான தகவல் தெரிந்தது.

இது வேட்டையாடுபவர்களுக்கு தெரிந்திருக்கும்..

வரிக்குதிரையின் வாழ்விடத்தில் அவற்றை தொந்தரவு செய்யும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ள, இந்த மாதிரியை அவை ஜெனெட்டிகலாக உருவாக்கின என்று கருதுகின்றனர். அதற்காக நடத்திய ஆய்வில், குதிரைகளை வரிக்குதிரையின் வரிகள் போன்ற ஒரு துணியால் மூடி வைத்தபோது, குதிரை அருகில் ஈக்கள் வந்தாலும், கருப்பு-வெள்ளை கோடுகள் அவர்களை குழப்பியதனால் ஈக்கள் குதிரை உடலில் படவே இல்லையாம். அதற்கு பதிலாக மறைவில் மோதினவாம்.!!

இந்த வரிகள் பூச்சிகளை குழப்ப இயற்கையாகவே அவர்களுக்கு கிடைத்த ஒரு அணி!!

மேலும் இவை கூட்டமாக மேயும் போது, அதன் எதிரிகளான சிங்கம், புலி இந்த மொத்த வரிகளை ஒரேயிடத்தில் பார்க்கும்போது குழம்பி விடுமாம்.!!அத்தோடு "விடு ஜுட்" தான்!!

இந்த மின்னல் வேகமுள்ள வரிக்குதிரை பெயரில் உள்ள ஜீப்ரா கிராசிங், போக்குவரத்தை நிறுத்தி மக்கள் சாலையை கடக்க ஏற்ற பகுதிகளாக இருக்கலாம் தான்…. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த விதியை நாம் சரியாக பின்பற்றுவதில்லை..!!

முறுக்கிக் கொண்டிருக்கும் ஆக்சிலேட்டர்களின் சத்தம், சீறிப் பாய துடித்துக் கொண்டிருக்கும் வேகம், சாலையை கடந்துக் கொண்டிருக்கும் பாதசாரிக்கு உள்ளே ஒரு அச்சத்தையே எப்போதும் கொடுகும்.

இது அதன் நோக்கமில்லையே?!

கடப்பது பாதசாரிகளா அல்லது அந்த வண்டிகளா..இல்லையில்லை …அந்த வண்டியோட்டிகளா என்று நினைக்க வைக்கும்.!!

ஆஹ்..சொல்ல மறந்துவிட்டேனே..

வரிக்குதிரைகளின் இயல்புகளில் முக்கியானவை என்ன தெரியுமா?

  • மற்ற குதிரை, கழுதையை போல வீட்டின் வளர்ப்பு ப்பிராணியாக இருக்காது.

அதனால் தான் இந்த வரிக்குதிரைக்கும் குதிரை, கழுதையுடன் கலப்பினம் செய்கிறார்கள் இப்போது!!

  • நெடும் தூரம் சலிப்பில்லாமல் ஓடக்கூடியது
  • எப்போதும் கவனமாக இருப்பது..மின்னல் வேக பாய்க்ச்லில் தன்னுடைய இன விலங்கு ஒன்றுக்கு துன்பம் என்றாலும் நிற்காமல், தன் நலம் ஒன்றே கருத்தாக சிதறி ஓடுவது!!

நேற்று ஒரு காணொளியை காண நேர்ந்தது.நெரிசல் மிகுந்த அண்ணாசாலையில், நடந்த வாகன விபத்து குறித்தது..

Horrific, road mishap, Chennai, Anna Salai, caught, on cam, techie’s life | TOI Original - Times of India Videos
In a horrific road mishap, a pothole on the Anna Salai in Chennai claimed the life of a software engineer on Monday morning. The youth riding on a two-wheeler lost his balance after hitting the pothole on the road and fell under the wheels of an MTC bus. The accident happened at Little Mount at 8.45am. The deceased has been identified as Mohammad Younus, who was working in a tech company. The traffic investigation wing of police rushed to the spot. CCTV footage revealed that Younus lost his balance after his bike hit a pothole. The two-wheeler dashed against the MTC moving on his left side. He fell under the rear wheel and died on the spot.

இதை பார்க்கும்போது தெரிந்தது

  1. வண்டியோட்டிகளின் அதீத வேகம்,
  2. சாலையில் உள்ள பள்ளத்தில் வண்டியொட்டி ஒருவர் சிக்கி விபத்து ஏற்பட்டது அறிந்தும் தாங்கள் "அலெர்ட்"டாக அந்த இடத்தில் இருந்து விலகி, விரைவது,
  3. எத்தனை தடவை விதிகள் சொல்லிக்கொடுத்து, மீறினால் தண்டித்து.. என்றாலும் கட்டுக்குள் அடங்காத தன்மை.

இதில் வீட்டு வளர்ப்பு பிராணியாய் இருந்தும் என்ன பயன்?

மேலே சொன்ன வரிக்குதிரை குணத்தோடு பொருந்தி போகிறதா?

அப்படியானால்…

அந்த zeebraa crossing பாதசாரி கடக்க இல்லையா?😐

புதன், 3 நவம்பர், 2021

என் மாமனாருக்கு என்னை பிடிக்காது. என் மனைவியும் அவர் பேச்சை கேட்டு கொண்டு விவாகரத்து கேட்கிறார், நானோ அவள் மேல் அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். நான் என்ன செய்வது?

 மனைவிக்கு ஒரு துரோகம் செய்துவிட்டேன். மன்னிக்க முடியாத குற்றம். அவர் விவாகரத்து செய்யப்போகின்றார். இந்த குற்ற உணர்வில் இருந்து எப்படி வெளிவருவது? மனைவியின் மனதை எப்படி மாற்றுவது அல்லது நீதிபதியிடம் எப்படியான கேள்விகள் கேட்பது?

என் மாமனாரின் பேச்சை கேட்டு கொண்டு என் மனைவி விவாகரத்து கோரப் போவதாக சொல்கிறாள், எனக்கோ அவளை பிரிய மனமில்லை. இதில் சட்டம் யாருக்கு சாதகமாக அமையும்?

இது போன்ற கேள்விகளை அதிகம் பார்க்க நேர்ந்ததால் சற்று விளக்கமாக பதில் எழுதலாம் என்று நினைக்கிறன்.

முதலில் ஒன்று சொல்ல வேண்டும். கணவனாலும் சரி மனைவியானாலும் சரி ஒருவர் மீது உணமயான அன்பை வைத்தவர்களால், அவர்களின் மறுதலிப்பு தாங்க முடியாத வேதனை தரும். அது அனுபவவித்தவர்களுக்கே புரியும்.

அதே போல தவறு செய்ததற்கு மனம் வருந்தி ஒன்று சேர நினைப்பதிலேயே ஒருவரின் நல்ல குணம் தெரிகிறது. இப்போதெல்லாம் இந்த குற்ற உணர்ச்சி மனப்பான்மை அரிதாகத் தான் காணப்படுகிறது.

உங்களுக்கு முதலிலேயே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஆண்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறையும் பெண் அதை கையாள்வதும் வேறு வேறு வகை. அதனால் தான் ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், பெண்கள் சுக்கிர கிரகத்திலிருந்து…Men are From Mars Women are from Venus. இது குறித்து ஏற்கெனவே ஒரு பதிவில் எழுதியுள்ளேன். இரண்டு தரப்பினரின் அடிப்படையான, முரண்பாடான குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சரி. இந்த கேள்விகள் அனைத்திலும் உள்ள பொதுவான அம்சம் மீண்டும் உங்கள் மனைவியை எப்படி திரும்ப காதல் வாழ்க்கைக்குள் கொண்டு வருவது என்று . அதைப் பார்ப்போம்.

பிரிவிற்கு பின் உங்கள் மனைவியை ஜெயிப்பது என்பது ஒவ்வொரு படியாக போகவேண்டிய அணுகுமுறையாகும்.

நீங்கள் முதலில் என்ன செய்திருப்பீர்கள்? கெஞ்சியிருப்பீர்கள். வாதாடி பார்த்திருப்பீர்கள். முடியாது என்று அவர் மறுத்த போது, உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும்.

யோசித்துப் பாருங்கள். எங்கு தவறு நடந்திருக்கும்? நீங்கள் அவர் மீது குறையை சுமத்தும்போது தான் பிரிவை அதிகப் படுத்தியிருக்கும். அவர் இன்னும் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பார். நீங்கள் அவரை மேலும் கவரக்கூடிய நபராக இல்லாதவராக மாறிியிருப்பீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்று அவரை நினைக்க வைக்கும். இப்போது நான் மாறுகிறேன் என்று நீங்கள் சொன்னாலும், அவரை அது மேலும் கோபப்படுத்தும். .தான் தற்போது செய்வது நியாயம் தான் என்று அவர் தன்னைக் தானே நினைக்க வைக்கும்.

இது தான் பெரும்பாலோரின் பிரச்சினையில் நடப்பது.

சரி மன்னிப்பு கேட்டும் ஏன் அவர் சமாதானம் ஆகவில்லை, என்ன தவறு நடந்தது. நான் சொல்லட்டுமா?

அவரை முன்னிலைப் படுத்தாமல் விட்டுவிட்டு, அவர் மனதை மாற்ற முயன்றீர்கள். இந்த உங்கள் செயல் தான் உங்களை சுயநலக்காரராக அவருக்கு காட்டியிருக்கிறது.

இங்கு உள்ள பல பதில்களிலும் உங்கள் மனைவியின் மனதை மாற்ற முயலுமாறு சொன்னதை தான் பார்த்தேன். அந்த யோசனை பலன் அளிக்காது. அதே போல இது ஒத்து வரவில்லை என்று மற்றதைத் தேட இது சட்டையும் அல்ல.

"தாய்க்குப் பின் தாரம்" தானே தவிர மற்றவர் அல்ல. மேலும், சரியில்லை என்று மனைவியை மாற்றி கொண்டே இருப்பவருக்கு சமூகத்தில் என்ன மதிப்பு என்பதும் சொல்லத் தேவையில்லை.

பெண்களின் உளவியல் ரகசியல் தெரிந்தவள் என்பதால் நான் உங்களுக்கு அந்த ரகசியம் சொல்லித தருகிறேன்.

உங்கள் மனைவி உங்களை பிரிவதாக சொன்னபோது, உங்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியமாகத் தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அது தான் அவர் எடுத்து வைத்த கடைசி அடி என்று. சாதரணமாக பெண்கள் பிரிவது என்று சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். அவர் பல காலம் உங்களுக்கு பிரியமானவராக இருக்க முயற்சி எடுத்திருப்பார் என்றே நினைக்கிறன். ஆனால் ஏதோ ஒரு குறை உங்கள் திருமனத்தில் அவருக்கு இருந்திருக்கிறது.

அவர் அதை சரி செய்ய முயற்சித்திருப்பார். அமைதியாக இருக்க முயற்சித்து இருப்பார், உங்கள் மீதான் அவர் அன்பு குறையும் வரை. இப்போது உங்களிடமிருந்து பிரிந்து நிறைய மாற்றங்களை தனக்குள் பார்த்து, அதுவே போதும் என நினைக்க துவங்கியிருப்பார்.

நீங்கள் எதையும் உணர்திருக்க மாட்டீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக போவதாகத் தான் எண்ணிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இப்போது நீங்கள் அவரிடம் பிரியம் காட்டினாலும் , அவருக்கு அந்த கடினமான நாட்கள் தான் ஞாபகத்திற்கு வரும். அதை மீண்டும்அனுபவிக்க அவர் தயாராய் இருக்க மாட்டார்.

நீங்கள் தொடர்து சமாதானம் செய்ய முயற்சிக்க அவர் மனது பிடிவாதமாக மாறி விடும். உங்கள் தேவைக்காகத் தான் அவரை நீகள் கூப்பிடுகிறீர்கள் என்று எண்ணத் தொடங்குவார். நானே பார்த்திருக்கிறேன், நிறைய கணவன்மார்கள் பிள்ளைகளை காட்டி கூபிடுவர். ஆனால் அதுவே, அவர் தன சுயநலலத்திற்காகத் தான் செய்கிறார் என்று அவரை எண்ண வைக்கும். அவர் மன வேதனை குறித்து நீங்கள் கவலைப் படவில்லை என எண்ணுவார்.

முதலில் அதை நிறுத்துங்கள்.

திரும்ப சேருவதற்கு தடையாக உள்ள விஷயங்கள் என்னென்ன ?:

  1. திருமண உறவை நீடிக்க அவரை சமாதானப்படுத்துவது அல்லது கவுன்சிலிங்கிற்கு கூப்பிடுவது.
  2. வாதாடுவது;
  3. பொறாமையின் காரணமாக மற்ற ஆணுடன் சேர்த்து பேசுவது. குழந்தைகளில் தேவைகளை அவர் முன் வைப்பது.
  4. அவர் குற்றவாளி போலோ அவமானப்படுவது போலோ உணர வைப்பது
  5. அவர் மத நம்பிக்கையை விமர்சனம் செய்வது'
  6. தான் மன உளைச்சலில் இருப்பது போலவும் அவர் தேவை இருப்பது போலவும் நடப்பது.
  7. பரிசுகள் கொடுக்க முனைவது.
  8. அவர் விரும்பாத நடவடிக்கையில் ஈடுபடுவது.

இவை எல்லாம் அவரை கவர உதவாமல் மேலும் உங்களிடம் மிருந்து அதிக தூரம் செல்ல வைக்கும்.

உங்கள் மேல் அவருக்கு உள்ள அன்பை அவர் உணர அவருக்கு உதவுவதே அவரை சமாதானப்படுத்துவதை விட சரியானதாகும்

நான் உங்கள் மனைவியிடம் உங்களை அவர் விரும்புகிறாரா என்று கேட்டால் உண்மையில் அவருக்கு சொல்லத் தெரியாது. விரும்புகிறேன் என்றும் சொல்லுவார். விரும்பவில்லை என்றும் சொல்லுவார். இதுவரை உங்களுக்குள் என்ன பிரச்சினை நடந்திருந்தாலும் இந்த எண்ணம் தான் உங்கள் இருவரையும் சேர்க்க தடை போடும் விஷயம்.

ஞாபகம் இருக்கிறதா? திருமணம் ஆன புதிதில் அவருக்கு உங்கள் மீதிருந்த பிரியத்தை எப்படி வெளிபடுத்தினார் என்று…அதே போன்ற உணர்வை தான் திரும்ப பெற முடியுமா என்று அவருக்கே தெரியாது. நீங்கள் பேசும் வார்த்தைகளால், அல்லது செயல்களால் திரும்ப அந்த உணர்வு கிடைக்குமா என்றும் தெரியாது.

நீங்கள் மன்னிப்பு கேட்பதாலோ அல்லது சமாதானப்படுத்த முனைவதாலோ, உங்களைப் பற்றி அவர் உணர்வது எதுவும் மாறாது. ஆனால் நீங்கள் முயன்றால் அவருக்கு அந்த பழைய காதல் அன்பை திரும்ப கொண்டு வர முடியும்.

உங்கள் உறவை முதலில் சீர் செய்ய முனையுங்கள். உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதை சற்று ஒத்துக்கி வையுங்கள். அவர் திருமணமாகதவர் என்றும் உங்களை விரும்பாதவர் என்றும் அவர் மீது உங்களுக்கு மட்டுமே ஒரு தலை காதல் உள்ளது என்று நினையுங்கள். அப்போது, என்ன செய்வீர்கள்? முதன் முதலில் அவர் மீது காதல் வந்த போது என்ன செய்தீர்கள்? அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள் அல்லவா. அதை செய்ய ஆரம்பியுங்கள்.

என்ன சினிமா போல நான் சொல்கிறேன் என்கிறீர்களா"? எல்லோருடைய வாழ்க்கையில் நடப்பதை தானே காட்டுகிறோம் என்கிறார்கள்?

உங்கள் மீது பிரியம் இல்லாத பெண்ணை பிரியம் கொள்ள வைப்பது எவ்வளவு கடினம் என்பது நிறைய ஆண்களுக்கு தெரியாது. ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள அந்த கலையில் வல்லவர்கள் ஆக இருப்பார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை மறைக்கத் தெரியாது. அதை மெதுவாக சரியான திசையில் அவள் உணர்வுகளை கொண்டு செல்ல வேண்டும். சில ஆண்கள் இதையும் அதிகமாக செய்து பாழடித்து விடுவார்கள்.

சரி எப்படி சரியான அளவில் செய்வது?

உங்களுடன் இருக்கும்போது, அவர் தற்காப்பில் ஈடுபடத்தேவையில்லை என்ற எண்ணத்தை உருவாக்குவது.

அவர் தேவைகளையும் ஆசைகளையும் உணர அவருக்கு உதவுவது. உங்கள் துணையோடு அதை அடைய முடியும் என்று அவரை எண்ண வைப்பது.

அவரை நீங்கள் மேலும் சமாதானப்படுத்த முனையவில்ல என்று அவர் நினைக்கத் துவங்கும்போது, அவரை எளிதில் அணுக முடியும். அவருக்கும் உங்களுக்கும் இடையேயான இடைவெளி குறையலாம். ஆனால் உங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு இன்னும் காலம் வரவில்லை. இந்த நேரத்தில் அவரிடம் சமாதானப் படுத்த முயலாதீர்கள். அது எப்படி இருக்கும் தெரியுமா?

பசியில்லாத நேரத்தில் சாப்பிட வற்புறுத்துவது போல அவருக்கு தோன்றும்.

உங்களை பற்றி மட்டுமே பேசாதீர்கள். நான் என்ற வார்த்தையை ஆண்கள் அதிகம் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். "நான் இதை செய்தேன்" " நான் அதை செய்தேன்"……………….அது அவருக்கு விருப்பமில்லாத விஷயங்கள்.

அவருக்கு அவர் வாழ்வின் மீதியில் தான், இப்போது விருப்பம் இருக்கும். அவர் எதிர்காலம்…அதுவும் முக்கியமாக நீங்கள் இல்லாத எதிர்காலம்…….

அவருடன் உரையாடலை ஆரம்பியுங்கள்.அவர் சொல்வதற்கு பதில் சொல்லுங்கள். அவருடைய யோசனைகளை நீங்கள் பரிகாசம் செய்தால், அவரை மேலும் பேச வைக்க முடியாது. உங்களுடன் பேசுவதற்கான ஆர்வத்தை தான் தூண்டவேண்டுமே, தவிர உங்களை பற்றிப் பேச அல்ல.

நேருக்கு நேர் பேசுவதை நீங்கள் அதிகப்படுத்துவதன் மூலம் அதிகபட்சமாக உங்களோடு பேசத் தடை இல்லாமல் இருப்பதை அவர் விரும்ப ஆரம்பிக்கலாம், அதற்கு மேல் இல்லை.

இங்கு நீங்கள் சக மரியாதை கொடுப்பது முக்கியமான அம்சம். அதேபோல அவருக்கு தேவைப்படுவதையேல்லாம் வாங்கி கொடுபதாலேயே உங்கள் மீது அவருக்கு விருப்பம் வராது. உங்களை அந்தத் தேவைக்காக மட்டும் எதிர்பார்க்க ஆரம்பிக்கலாம், அதனால் அது வேண்டாம்.

ஆனால் உங்களுடனான பழக்கத்தை அவர் புதுப்பித்த பிறகு உங்களை விட்டு பிரிய எடுத்த முடிவைக் குறித்து அவருக்கு சந்தேகம் தோன்றும். அவருக்குள் இது அமைதியின்மையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும். உங்களை மோசமாக நடத்தி உங்களை தூண்ட முயற்சிப்பார். ஏன் அப்படி? தான் எடுத்த முடிவு சரிதான என நிரூபிக்க முயலுவார்

உங்களை அவர் பழைய மாதிரி தாக்கி பேச ஆரம்பித்தால். சரியான பாதையில் தான் செல்லுகிறோம் என்று திருப்தி அடையுங்கள்., உங்களை விட்டு பிரிய நினைப்பவரின் மனது, அதை ஏற்று கொள்ள முரண்டு பிடிக்கும் . சற்று குழப்பமான நேரம் இது. அதனால் அடிக்கடி மனோ நிலை அவருக்கு மாறி கொண்டிருப்பது சரியான திசையில் செல்கிறோம் என்பதற்கான அறிகுறி.

ஆனால் ஒன்றே ஒன்று ……..அவர் செயலுக்கு எதிர் வினை ஆற்றாமல் இருங்கள், அதுவொன்றே உங்கள் மனைவியை திருமபக் கொண்டு தரும் .

இப்போது பாதி தூரம் வந்துள்ளோம். மீதி பாதி உங்களுக்குள் செய்ய வேண்டிய மாற்றம். முன்னர் இருந்ததை விட சிறந்தவராக மாறுவது. உங்கள் மனைவி நினைப்பது போல அல்ல.

நேற்றைய உங்களை விட இன்றைய நீங்கள் ரசிக்கத்தகுந்த ஆணாக மாற முயலுங்கள். வெற்றியடைந்த, சுய மரியாதையுள்ள வாழ்வில் எதன் மீதான ஆர்வம் கொண்ட ஆணை ஒரு பெண் விரும்புவாள்.

உங்கள் உறவு மேம்பட கவனம் செலுத்தி இருப்பது உங்கள் உறவைக் காப்பாற்றும்.

இதை எல்லாம் செய்தால் எவ்வளவு நாட்களுக்குள் வெற்றி கிட்டும் என்பது தானே?

உங்கள் உறவிற்குள் ஏற்கெனவே எவ்வளவு சேதம் எற்பட்டிருக்கிறது , எந்த அளவிற்கு நீங்களும் உங்கள் மனைவியும் திரும்ப பேசுகிறீர்கள், நேருக்கு நேர் உரையாடுவதை சேதமடையாமல் எவ்வளவு தடுக்கிறீர்கள் எனபதைப் பொறுத்தும் உள்ளது.

உங்களுடைய மனோ நிலை, தேவை மற்றும் பழைய நடத்தை ஆகிவை தாமதப்படுத்தலாம் அல்லது மொத்தமாக சேதப்படுத்தலாம்.

உங்களால் இதெல்லாம் முடியுமா? என்று மலைக்காதீர்கள். உங்கள் துணையின் மீதுள்ள உங்கள் அன்பு இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வைக்கும்.

உங்கள் சக்தி உங்களுக்கு தெரியாது.

அனுமனுக்கே அவர் சக்தியை அந்த ஜாம்பவான் தானே எடுத்து சொன்னது? வெற்றி பெற வாழ்த்துக்கள்.