பூமிக்கு அருகில் இருக்கும், அதை சுற்றி வரும் சந்திரன் இல்லை என்றால் என்ன நடக்கும்?
ஒன்றும் நடக்காது!!
உண்மை தான்...
பூமியில் உயிர்கள் இருக்காது..
பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு, சூரியனை வலம் வரும்போது, சூரியனின் ஒளியில் இருந்து மறையும் போது ஏற்படும் இருளை போக்குவது சந்திரன் தானே..
தான் சூரியனிடம் பெற்ற ஒளியை பூமிக்கு கொடுக்கிறது.அதைக் கொண்டு தான் பூமி, தான் மீண்டும் சூரியனின் ஒளிப்பாதைக்கு வரும் வரையில், கிட்டத்தட்ட 12 மணி நேரம், , உயிர்களின் இயக்கம் தொடர்கிறது..
ஒரு இரவில் சில மணித்துளிகள் கரண்ட் போனாலே நம்மால் சமாளிக்க முடியாமல் தினறுகிறோம்.அப்படியிருக்க, சந்திரன் இல்லையேல்..அனைத்து உயிர் இயக்கமும் அப்படி அப்படியே நின்று போய் நிலைகுலைந்து விடும்.
இது அறிவியல் பூர்வமாக சொல்லக்கூடியது..
இன்னொரு விதத்திலும் பாருங்கள்..நம் மனதை முழுமையாக ஆள்வது இந்த பவுர்ணமி சந்திரன் தானே!!
மொட்டை மாடியில் நானும் சந்திரனும் தனித்திருக்க, அந்த ஏகாந்தமான நிமிடங்கள்..இதோ என்னோடு கொஞ்சிக் கொண்டிருந்ததை படம் பிடித்தது
சந்திரனை பார்த்துக்கொண்டிருக்கும் ,போது தான் , அம்மாவின் ஞாபகமும் சேர்ந்து வந்து விடுகிறது..
இப்போது போல மாடி வீடு அப்போது இல்லை. வீட்டின் நடுவில் பெரிய முற்றம் உண்டு.அம்மா அதன் ஒரு மூலையில் பீர்க்கஙகாய், புடலஙகாய் கொடி பந்தலும் போட்டிருப்பார். வீட்டில் எப்போதும் கோழிகளும் அதன் குஞ்சுகளும் ஓடிக் கொண்டு திரியும்.
காலையில் எழுந்தவுடன், மலர்ந்து கிடக்கும் அந்த மஞ்சள் பூக்களை பறிக்கும் போது, கோழிக்குஞ்சுகள் அதை கொத்த வர, அதை துரத்த என்று காலையின் ஆரம்பமே ஆனந்தமா இருக்கும்….😆
அதுவே கோடைக்காலமா இருந்தா, சாயந்திரமே முற்றத்தில் தண்ணீர் தெளித்து விட்டு வைத்து விடுவோம்..ராத்திரி தூக்கம் அந்த முற்றத்தில் தான்..அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் பெரிய மச்சு வீடுகள் இல்லை.இருந்தாலும் யாரும் எட்டிப்பார்க்கும் பழக்கமும் கிடையாது.. தெருவில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்ப நெருக்கமும் கூட..எந்த வித்தியாசமும் தெரியாது..
அந்த முற்றத்தில் பாய், ஜமுக்கலாம் விரித்துக்கொண்டு, அம்மாவுக்கு பக்கத்தில் படுத்துக்கொள்ள ஒரு போட்டியே நடக்கும்.. எப்படியோ, அம்மா எல்லோரும் தனக்கு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்..😂
அம்மாவை போலவே அம்மா சொல்லும் கதைகளும் ரொம்ப சுவாரசியமா இருக்கும்...மல்லாக்க படுத்துக்கொண்டு அந்த வானத்தையம், சந்திரனையும் பார்த்துக்கொண்டே, கதையை கேட்டுக்கொண்டு..எப்போது தூங்கிப்போவோம் என்றே தெரியாது!!
அந்த நாட்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது..இப்போதும் நிலா இருக்கிறது. இந்த மொட்டை மாடி இருக்கிறது. ஆனால் கதை கேட்க தான் பிள்ளைகளுக்கு ஆர்வமில்லை!! அவர்கள் படிக்கும் க்ரீக் மிதாலஜி கதைகளுடன் அவை ஓடடவில்லையாம்!☺️
அட.. நமக்கு மட்டுமா குறை இருக்கும்..நிலவுக்கும் கூட உண்டு தான்..என்ன தான் புதன் கிரகத்தை தன் மகனாக பிரியம் காட்டினாலும், புதன் சந்திரனை எதிரியாக தான் நினைக்கிறது என்கிறது புராணம் !!
அத்தோடு மட்டும் விட்டதா..தன் பிறப்பில் ஏற்பட்ட பழியின் காரணமாக குருவின் மீது கோபம் கொண்டு, தானே கலைகளை கற்றுக்கொண்டதாம்….
இருக்காதா..புதன் நாராயணனின் அம்சம் ஆச்சே!!
இதை ஜோதிடமும் ஆமோதிக்கும் விதமா, புதனின் ஆட்சிக்குட்பட்ட கன்னி ராசிக்கு குரு வரும்போது நீச்சம் அடைகிறார்! சந்திரனின்புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.
புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.
புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.
புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.
மேலே சொன்ன குறைபாடுகளை உடையவர்கள் ஜாதகத்தை பார்க்கும்போது ஒத்துப்போகிறது!!
ஜோதிடம் ஒரு அறிவியல் என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!!
இவர்கள் பிரச்சினைக்கு நாம் ஒவ்வொருவருமே சாட்சி..இல்லையா?
பின்னே.சந்திரன் ஆளும் நம் மனசு ஒரு பக்கமும், புதனின் ஆளுகைக்கு உட்பட்ட புத்தி இன்னோரு புறமும் பியத்துக்கொண்டு போய், நம்மை சமயத்தில் தலையை பிய்த்துக்கொண்டு உட்கார வைப்பதில்லையா!!
என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஊருக்கே குளுமை கொடுக்கும் சந்திரனுக்கும் கவலை உண்டு தான் போலும்!!
சந்திரனுக்கு 27 மனைவிகள் உள்ளனர். என்றும் அதில் ரோகினியின் மீது தான் அவருக்கு பிரியமும் அதிகமாம்!
வானவியல் ஆராய்ச்சியும் அதைத்தானே நிரூபிக்கிறது…27 நட்சத்திரங்கள் புடை சூழ இருக்கும் சந்திரன், ரோகிணி நட்சத்திரத்தில் தான் தன் பூரன அழகை ..பொலிவை காட்டுகிறது!!
இதற்கு சாட்சி அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பார்த்துக்கொள்ளுங்கள்!!
இதோ நம் மனம் கவர்ந்த சந்திரனின் மனம் கவர்ந்த தேவதை!!
ஆனாலும் சந்திரனை என்னால் ஒரு ஆணாக நினைத்து கூட பார்க்கமுடியலை..😁
அது என்னுடைய சிறு வயதிலிருந்து கூட வரும் தோழி…நிலா நிலா ஓடிவான்னு நான் பேச பழகிய காலத்திலுருந்து என் கூட ஓடி வரும் தோழி!!
மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டுமல்ல…என் சோகத்தையும் பகிர்ந்து கொண்டது..
எத்தனையோ காலம் காலமாய் சோகத்தை வெளிப்படுத்தும் பெண்களுக்கு அந்த சந்திரன் தான் ஆறுதலை கொடுத்திருக்கிறது…
பாரி மகள்கள் , தந்தையின் சோகத்தை நிலவிடம் தானே சொன்னர்!!
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
இப்படி பெண்களின் வாழ்வின் ஏற்றத் தாழ்விற்கு மட்டும் துணை நிற்கவில்லை சந்திரன்.தமிழர்களின் வாழ்வின் அங்கமாகவே ஆனதே!!
ஒருவர் பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற கட்டமே அவரின் ராசியாகி, வாழ்வை தீர்மானிக்கிறது..
தமிழ் மாதங்கள் அதை கொண்டே !!
அதன் மறையும் அமாவாசையும் உச்சமான பவுர்ணமியும் நம் வாழ்வோடு மட்டுமா கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது
பெளர்ணமி தினங்களில் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படுவதும், அன்னதானம் நடைபெறுவதும் வழக்கம்.இல்லையா?
அதுவும் இந்த சித்ரா பவுர்ணமியில், திருவண்ணாமலையில் நடக்கும் விஷேஷத்தை கேட்கவே வேண்டாம்!
சாபம் பெற்ற சந்திரனின் துயர் போக்க தன் தலையில் சூடி, அதை காத்த "சந்திரசேகரன்" ஆயிற்றே!!
ஆமாம்..சந்திரனை முதன் முதலில் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங் என்று தான் நாம் நினைத்திருந்தோம்….
வைரமுத்து தான் அதில் ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டார்!!