செவ்வாய், 27 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி 04...ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ராகு கேது தோஷம், பித்ரு தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இவையெல்லாம் இருந்தால் அப்பெண்ணுக்கு திருமணமே நடக்காது என்றும், அப்படியே ஆனாலும் திருமண வாழ்க்கை நிலைக்காது என்கிறார்களே, அது உண்மையா?

 ஓட்டக்கூத்தனின் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்….

இந்த சொல்வடையை கேட்டுரூப்பீங்க... இது தான் இந்த வினாவை படிக்கும்போது தோன்றியது.   

அடேங்கப்பா.......ஒரு பெண்ணு`க்கு கல்யாணம் ஆகணும்ன்னா, தோஷம் என்ற பேரில் இருக்கும் இத்தனை தடைகளை தாண்டி வரணும்!!

ஒரு ஜாதகத்திலே  மொத்தமே பன்னிரண்டு கட்டம் தான் இருக்கு. அதில் இரண்டாம் பாவம் எனும் குடும்ப ஸ்தானம், நான்காம் பாவம் எனும் பெண்ணின் ஒழுக்கம் குறித்தது, ஏழாம் பாவம் எனும் திருமண வாழ்க்கை, எட்டாம் பாவம் குறிக்கும் கணவனின் ஆயுள் ,ஒன்பதாம் பாவம் என்னும் முன்னோர் ஆசீர்வாதம், ஐந்தாம  பாவம் தரும் குழந்தை பாக்கியம் …கடைசியா இல்லற சுகம் கொடுக்கும் பன்னிரண்டாம் பாவம் .இவற்றில் உள்ள செவ்வாய், ராகு, கேது சனி இணைவு, பார்வை இதை மட்டுமே வைத்து தோஷம்னு ஒதுக்குவது என்பது ……..

என்னடாது சட்டத்தை பத்தி பேசிக்கொண்டிருந்தவள்  தோஷத்தை பற்றி பேச வந்திருககாலேன்னு நீங்க முனுமுனுக்கிறது கேக்குது...'தோஷம்' ன்னா 'குற்றம்' ன்னு தானே அர்த்தம்...அப்ப நான் வராம வேறு யாரு வறது?!!

ஓட்டக்கூத்தனின் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்…ன்னு சொல்லும் கதை தான் ஞாபகத்துக்கு வருது.!!

ஒரு பெண்ணிற்கு திருமணத்திற்கு வரன் தேட ஜாதக க்கட்டை எடுக்கும்போது தான் இந்த செவ்வாய் தோஷம் பெரிதாக பேசப்படுது.

இதில் பெரும்பான்மையானவை தோஷமே கிடையாதுன்னு தான் நம் வேத கால ஜோதிடமும், பெரியவர்களும் சொல்லியுள்ளனர்..  ஆனாலும் நம் ஜோதிடர்கள் இருக்கிறாங்களே...

ஒரு விதத்தில் இந்த தொழில் முறை ஜோதிடர்கள் நிறைய பேர், வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன், இந்த சான்றிழ் படிப்பு படித்துவிட்டு ஜோதிடரானவர்களாக இருக்கிறார்கள்.. இவர்களின் வயதை பார்த்துவிட்டு ஜோதிடத்தில் அவர்கள் அனுபவம் உள்ளவர்களாக நினைத்து ஏமாந்து போகும் நபர்கள் தான் அதிகம் என்று தான் ஆதித்ய குருஜி அவர்களும் விளாசியிருக்கிறார்!!

 ஒரு விதத்தில் இதையே தான் சட்டப்படிப்பிலும் பெரும்பாலான அரசு அலுவலர்கள் கையாள்கிறார்கள்.  பணிக்காலத்திலேயே  தபாலிலும் மாலை நேர வகுப்பிலும் சட்டத்தை படித்து விட்டு, ஓய்வு பெற்றவுடன், வக்கீலாக ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர்.   

அதுவும் அவர்கள் துறையில் நடக்கும் ஓட்டை உடைசல் எல்லாம் ஏற்கெனவே அத்துபடி.. 

அந்த டிப்ளோமா ஜோதிடர்கள் போல தான், மக்களும், இவர்களின் நரைத்த தலையை பார்த்துவிட்டு, ஏதோ சட்டத்தையே இவர்கள் கரைத்து குடித்துவிட்டது போல நினைத்து  ஏமாந்து போகிறார்கள்..

இப்போது அது போன்ற மாலை நேர சட்ட கல்வி இல்லையென்றாலும்  திருப்பதி இருக்கிறதாமே!!\ நம்பி போபவர்களை  மொட்டை அடிக்காமல் இருந்தால் சரி தான்!!

பெண்ணின் திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை என்று போடுவது 'செவ்வாய்' தோஷத்தை தான்!!


முருகன் தான் தமிழர்களின் முழு முதல் கடவுள் என்னும் நாம் தான் செவ்வாயை 'வெறும் வாய்'  ன்னு ஒதுக்கி தள்றவங்க!! இத்தனைக்கும் ஹிந்திக்காரர்கள் அந்த நாளை 'மங்கள் கார்கா"ன்னு பெருமையா தான் வைத்திருககிறார்கள்!!

லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டு ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அது செவ்வாய் தோஷமாம்.  அப்புறம்,  சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டில் இருந்தாலும் செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் தோஷமாம்..

செவ்வாய் ஒரு பாபக்கிரகம் என்பதால் அவர் இருக்கும் இடம் அவரது பார்வை படும் இடங்கள் பலவீனம் அடையும். என்ற கருத்தில் இந்த தோஷம் சொல்லப்பட்டது. ஆனாலும் ஜோதிடத்தில் விதிகளை  விட விதிவிலக்குகளைத்தான் அதிகம் கவனிக்க வேண்டும்..

மேலே சொன்ன பாவங்களில்  இருக்கும் செவ்வாய் சுப பார்வையோடு இருக்கிறாரா?  அந்த லக்னங்களுக்கு தீமை செய்பவரா? கெடுதல் செய்யும் அமைப்பில் இருக்கிறாரா? வலுவாக இருக்கிறாரா? எந்தெந்த கிரகத்துடன்  இணைந்திருக்கிறார்? சூட்சும வலு இருகிறதா?  கெடுதல் செய்வார் என்றால் எந்த வயதில் எப்போது செய்வார் ? அவருடைய தசை எப்போது வரும்..அத்தோது, கூடவே இருந்து திருமணத்தை கெடுககிறாரா? .இதையெல்லாம் பார்த்துவிட்டே தோஷம் இருக்கிறதா என்று கணிக்க வேண்டும். 

அந்த விதிவிலக்குகளை இங்கே பாருங்க...

 ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய் குருவுடனோ, சந்திரனுடனோ இணைந்து அல்லது அவர்களின் பார்வையில் இருந்தாலோ அல்லது வேறு வகைகளில் சுபத்துவமோ அல்லது சூட்சும வலுவோ அடைந்திருந்தால் மட்டுமே தோஷமில்லை என்று துல்லியமாகச் சொல்லப்பட வேண்டும்.

2.   குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றோ செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

3.   சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தால் தோஷம் இல்லை.

4.   சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.

5.   மேற்கண்ட வீடுகளில் செவ்வாய், சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.

6.   ராகு-கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

7.   மேஷம், விருச்சிகம், கடகம், சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை

8.   சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

9.   செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை

10. அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.

11. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை

அசுப கிரகங்கள் என்ற சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது தேய்பிறைச் சந்திரன் இவைகளில் சனி மட்டும தான் முழுமையான பாபக் கிரகம்.  

சூரியன் அரைப் பாபர்.  ராகு,கேதுக்கள் முழுப் பாபர்கள் என்றாலும் தான் இருக்கும் வீட்டின் அதிபதி, தன்னோடு இணையும் மற்றும் பார்க்கும் கிரகங்களைப் போலவும் செயல்படுவார்கள் .பவுர்ணமிக்குப் பிறகு உருப்பெறும் தேய்பிறைச் சந்திரன் படிப்படியாக தனது சுபத் தன்மையை இழந்து  அமாவாசையன்று முழுப் பாபராவார். சனி மட்டும் தான் , ஆதிபத்திய சுபராகவும், லக்னாதிபதியாகவும் இருக்கும்போது கூட, ஸ்தான பலம் மட்டும் பெற்று சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாமால் ஆட்சி, உச்சம் அடைந்தாலும் கெடுபலன்களையே செய்வார்.  அந்த ஜாதகருக்கு தாமத திருமணம் அல்லது திருமணமே ஆகாத நிலை உண்டாகும். 

லக்னாதிபதியாகவோ ஆதிபத்தியச் சுபராகவோ இருந்தாலும் செவ்வாய் இரண்டு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் கெடுபலன்கள்தான். இது செவ்வாய் தோஷம்தான் என்கிறார் குருஜி.. இதில் சனி சேர்ந்தால கேட்கவே வேண்டாம்.   செவ்வாய் சுபத் தன்மையோ சூட்சும வலுவோ பெற்றிருந்தால் மட்டுமே இந்த பலன் மாறும். 

சரி இதுபோன்ற அமைப்புடையவர்களுக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்?

பெண்ணாக இருந்தால் முப்பது வயதிற்கு அருகிலும், ஆணாக இருந்தால் முப்பத்தி ஐந்து வயதிற்கு அருகிலும் திருமணம் நடக்கும்.தாமதமாக திருமணமானாலும் நல்ல வாழ்க்கையே அமையும்.

இது ஒரு விதத்தில் நல்லது தான்..தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அலைவது நேராது!! கெட்டதிலும் ஒரு நன்மை!!

அதனால், செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறது என்பதாலேயே திருமணம் நடக்காது என்றில்லை. முறையான இறை வழிபாடுகள் மூலம், திருமணத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்.