ஞாயிறு, 16 ஜனவரி, 2022

கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி?..3 கார் வாங்குவது லாபமா நஷ்டமா?

 என் ஸ்நேகிதியின் வீட்டில் நடந்த கதையை கேளுங்கள். இவளுக்கு வேலை கிடைத்தவுடனேயே, வீட்டின் சுமையை குறைக்க, தன் திருமணத்திற்கு தேவையான நகையை சேர்க்க ஆரம்பித்தாள்.. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு சக்கர வாகனம் பத்தாது என்று காரை சீதனமாக கேட்க, கொடுக்கும் காலம்..!! சரி எப்படியும் காரை வாங்கினால் வீட்டில் இருப்பவரும் கொஞ்சம் நாள் உபயோகம் செயதுகொள்ளலாம் என்று முடிவு செய்து, தவணை முறையில் கார் வாங்கினார்கள்.☺️ வீட்டில் யாருக்கும் கார் ஓட்டத் தெரியாது. .கார் ஓட்ட அவளும் அவள் தம்பியும் பழகியாயிற்று. ஆனாலும் வண்டியை எடுத்து ஓட்ட பயம்.ஏதாவது வண்டிக்கு விபத்து? பிறகு பெண்ணுக்கு எப்படி?

ஒவ்வொரு வார இறுதியில், பொடிநடையாக 2 கி.மீ தூஏத்தில் உள்ள காரை அடைந்து, (மற்ற இடத்திலெல்லாம் வாடகை அதிகம்!!) கியரை திருகி சிறிது நேரம் எஞ்சினை ஓட விட்டு…

ஆயிற்று திருமணம்… கார் கிடைத்தும் மாப்பிள்ளைக்கு திருப்தியில்லை.. பழைய வண்டியாம்!!

அதை விற்றுவிடலாம் என்றால் தோழிக்கு மனமில்லை…அதற்கு செலவு செய்ய அவருக்கு பிரியமில்லை.!!

இதுவாவது பரவாயில்லை. இன்னொரு தோழியின் வீட்டில் சீர்பொருட்களை சேர்க்கிறேன் என்று அவள் பெற்றோர் வாஷிங் மெஷின் கூட வாங்கி வைத்துவிட்டார்கள்.உறை கூட பிரிக்காமல் வைத்ததை திருமணத்திற்கு பிறகு பிரித்தால் ஓடவில்லை. !!

இப்படி கார் வாங்கிய கதை கலர் கலராக இருக்கும்!!

இன்றைய தேதியில் கார் வாங்குவது அத்யாவசியம் என்பதிலிருந்து "அநாவசியம்" என்று ஆகிவிட்டது.

ஏன் என்று கேளுங்கள்..

  1. அதன் பராமரிப்பு செலவு அதிகம். ஓட்டுகிறோமோ இல்லையோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். அது யாரது வணடியையும் மனைவியையும் ஒப்பிட்டு பார்த்தது??!!
  2. வண்டியோட்ட தெரிந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் டிரைவருக்கு சம்பளம் கொடுக்க பர்ஸ் "கனமாக" இருக்கவேண்டும்
  3. வண்டியின் இன்சூரன்ஸ் .அது வேறு வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது..வண்டியின் மதிப்பு என்னவோ குறைந்தாலும்.!!.இதில் வண்டியின் உரிமையாளர் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அதற்கு தனி சட்டம். டிரைவர் ஓட்டினால் வேறு கதை!!
  4. நாம வாங்கும் "பிளாட்டி"ல் கார் நிறுத்தவென்று தனியாக ஒரு "தண்டம்" அழ வேண்டும்!!
  5. ஊரில், உறவில் வண்டியை இரவல் கேட்டு, கொடுக்காவிட்டால் பொல்லாப்பு..கொடுத்தால்.. "காயத்துடன்" வருவதை பார்த்து மனதுபதைபதைக்கும்..
  6. நமக்கு திடீர் தேவை ஏற்பட்டு திருப்பி கேட்டால், உன் வீட்டில் சும்மா தானே நிற்கும். இங்கேயும் கொஞ்ச்ம நிற்கட்டுமே" என்று வசனம் படிப்பார்கள்.
  7. விதவிதமான ஓலா. ஊபேர் வண்டிகளில், சக ஆட்கள் பயணிக்க, இந்த ஒரு காருடன் மல்லுக்கட்டிக்கொண்டு…
  8. எந்த மாடல் கார் வாங்கினாலும். சில மாதத்தில் அது "பழைய மாடல்"
  9. எங்கேயும் "மால்" போனால், மணிக்கொரு பார்க்கிங் சார்ஜ் எகிறுவதை பார்த்து, மூளை கிறுகிறுத்து போகும்!!

சில காலத்திற்கு முன், சிட்டி பிளாசாவில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க போயிருந்தேன். படம் முடிந்து காரை பார்க்கிங் இடத்திலிருந்து எடுக்கப் போனால், மூன்று மணி நேர வாடகை கேட்டார்கள்.நான் ஷாப்பிங் செய்ய வரவில்லை. படம் தானே பார்த்தேன்.அதற்கு எப்படி இவ்வளவு அதிகம் கொடுக்க வேண்டும்? என்றால், சரியான பதிலில்லை. "நீங்கள் தியேட்டரை உள்ளே கட்டி வைத்துக்கொண்டு அதற்கு வருபவருக்கு மணிக்கணக்கில் வசூல் செய்வது நியாயமில்லை" என்று சொல்லிவிட்டு வந்தேன்.இதில் என்னவொரு எரிச்சல் என்றால், மற்றவர்கள் யாரும் இந்த அதிக வசூலை எதிர்த்து கேட்பதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை..ஏதோ தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல, அந்த கட்டணத்தை கொடுத்து விட்டு, .அதுவும் நம்மை ஒரு "பார்வை° பார்த்துக்கொண்டே..நகருவார்கள்.!! எல்லோருக்கும் பொதுவான ஒன்றை பற்றி தானே கேட்கிறார்கள்..நாமும் இதில் உடன்படவேண்டுமே என்றில்லாமல், ஏதோ அந்த முப்பது ரூபாயை கொடுக்க நமக்கு "நாதியில்லை" என்பது போல!!

இந்த விதத்தில் கேரளாக்காரர்கள் "முன்மாதிரி"

இது போன்ற அநியாய பார்க்கிங் வசூலை எதிர்த்து வழக்கே போட்டுவிட்டார் ஒருவர். இத்தனைக்கும் அந்த மால் அவரிடம் வசூலித்தது இருபது ரூபாய் தான்..வணிக கட்டிடம் ஒன்று கட்டும் போதே பார்க்கிங் இடம் ஒதுக்கினால் தான் அனுமதியே கிடைக்கும்.இதில், அந்த மாலுக்கு வருவோரிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தவறு " என்று கேஸ் போட்டிருக்கிறார்.Pauly Vadakkan v. Lulu International Shopping Mall Pvt Ltd.

ஏற்கெனவே மாண்புமிகு குஜராத் உயர்நீதிமன்றம் 2019ல் , இது போன்ற ஷாப்பிங் மால்கள் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது, அவ்வாறு இடம் ஒதுக்கி தரவேண்டியது அவர்கள் கடமை" என்று தீர்ப்பு அளித்திருக்கிறது..

ஆனால் இதே போன்ற ஒரு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், "அந்த பார்க்கிங் இடத்தை பராமரிக்க செலவு ஆகும்போது, அதை எப்படி இலவசமாக அளிக்கமுடியும்?" என்று கேட்டு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

நம் ஊரில்…??!!

நமக்கெல்லாம் இதை கேள்வி கேட்க ஏது நேரம்?? டோல்கேட் கட்டி பல வருடம் ஆனாலும், அவர்களும் வசூலித்துகொண்டே இருப்பார்கள்..நாமும் கொடுத்துக் கொண்டே இருப்போம்.!! இதையெல்லாம் "தட்டிக் கேட்க" யாராவது ஒருவர் எங்கிருந்தாவது வருவார்" என்ற நப்பாசையுடன்!!

இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு கார் வாங்குவதில்..

அது தான் ரயிலில் " பறக்கும் ரயில்", "மெட்ரோ ரயில்" என்று மத்திய அரசு அந்த பக்கம் , பேருந்துகள் என்று மாநில அரசு இந்த பக்கம்....ஏறி அமர்ந்தோமா. இடம் வந்தவுடன் பணத்தை கொடுத்தோமா இறங்கிப்போனோமா" என்று தொல்லை கொடுக்காத ஓலாவும் உபேரும்..

இவ்வளவு இருக்கும்போது, இந்த "அக்கப்போர்" வேறு எதற்கு?